மரிக்கப்போகும் பாவியின் மனக்குமுறல்!

மரிக்கப்போகும் பாவியின் மனவேதனைகள் ஒன்று இரண்டல்ல, ஏராளமானவை. ஒருபக்கம் கொடிய எண்ணம் கொண்ட பிசாசுக்கள் அவனுடைய மரண வேளையில் அவன் ஆத்துமம் இந்த உலகைவிட்டுப் போகிறபோது அந்த ஆத்துமம் எல்லாவிதத்திலும் கெட்டுப்போகும்படி தங்களால் இயன்றதைச் செய்யும். இன்னும் கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கிறதென்றும், இதற்குள் அந்த ஆத்துமத்தை இழந்துவிட்டால் இனிமேல் ஒருபோதும் தங்களுக்கு அது கிடைக்காமல் போகுமென்றும் நன்கு அறியும். ஆகவே, அப்போது மரிக்கப் போகிறவனுடைய படுக்கையைச் சுற்றி ஒன்றல்ல, கணக்கற்ற பிசாசுக்கள் வந்து கூடியிருக்கும்.

ஒரு பிசாசு "பயப்படாதே, சுகம் பெற்றுவிடுவாய்" என்று சொல்லும். மற்றொன்று "இத்தனை வருடங்களாய் நீ  கடவுளுடைய சித்தத்திற்கு செவி சாய்க்காதிருந்து விட்டு இப்பொழுது அவர் உனக்கு இரக்கம் காட்டுவார் எண்ணுகிறாயா?" என்று கேட்கும். இன்னொன்று "இதுவரையில் நீ செய்து வந்திருக்கும் பாவங்களுக்கும், அடுத்தவரின் பெருமை புகழ். மகிமை, நல்ல பெயரையெல்லாம் புறணி பேசிக் கெடுத்ததற்கும் எப்படி பரிகாரம் செய்வாய்?" என்று வினவும் வேறொன்று "நீ செய்துவந்த பாவசங்கீர்த்தனங்களெல்லாம் உண்மையான மனஸ்தாபமும், உறுதியான தீர்மானம் இல்லாமையால் எல்லாம் வீணாகிவிட்டது. பார்! அவற்றுக்குப் பதிலாகப் பரிகாரம் செய்ய இப்போது உன்னால் ஆகக்கூடிய காரியமா?" என்று கேட்கும்,

மற்றொரு பக்கத்தில் மரிக்கப்போகிறவனை அவன் பாவங்களே வந்து சூழ்ந்து நிற்கும். புனித பெர்னார்து கூறுவதைப்போல, பிசாசுக்கள் அவனை நெருங்கி காவலரைப்போல அவனை எட்டிப் பிடித்துக்கொண்டு, "நாங்களெல்லாம் உன்னுடைய ஊழியர்கள். உன்னை விட்டுப் பிரியமாட்டோம். உன்னோடு மறுவுலகிற்கும் வந்து எல்லாம் வல்ல நீதிபதி முன் நிற்போம்" என்று சொல்லும், கெடுதல் நினைக்கும் இந்தப் பிசாசுக்களை விட்டுப் பிரிந்துவிட அவன் விரும்புவான். இவன் அவற்றை முழுதும் வெறுத்துப் பகைத்து முழுமனதோடு மனஸ்தாபப்பட்டு கடவுளிடம் மனம் திரும்பினாலொழிய அது நடக்கக்கூடிய காரியமல்ல. ஏனெனில் அவன் புத்தியும் அறிவும் இருளடைந்து இருதயம் கடினப்பட்டிருக்கின்றது.

கடின இருதயத்திற்கு இறுதியில் கேடு நிகழும். ஆபத்தை நேசிப்பவன் அதிலே கெட்டழிவான். புனித பெர்னார்து கூறுவதைப்போல வாழ்நாளில் பாவத்தினால் கடினமாயிருந்த இருதயம் முடிவில்லாத நரக நெருப்புக்கு அப்பொழுது தப்பித்துக் கொள்ளும்படியாக முயற்சிகளெல்லாம் செய்யும். ஆயினும் அது ஆகக் கூடிய காரியமல்ல. அவனுடைய தீயப் பழக்கங்களே அவனை இப்போது கைவிடப்பட்ட நிலைமைக்கும், முடிவுக்கும் உள்ளாக்கும், அதுவரையில் பாவியானவன் பாவத்தை நேசித்து வந்தமையால் பாவத்தின் முடிவாகிய நித்திய கேட்டையுமே நேசித்திருக்கிறான். இதன்பொருட்டே எல்லாம் வல்ல இறைவன் அவன் நேசித்த கேட்டிலேயே அவனை கெட்டழிய விட்டுவிடுவார், புனித அகுஸ்தீன் கூறுவதாவது: "ஒரு பாவி தன் பாவத்தை வெறுத்துத் தள்ளுமுன் பாவமே அவனை வெறுத்து  விட்டுப்போக நேரிடுமானால்  மரண வேளையில் வேண்டிய அளவு அவன் அதைத் தள்ளுவது கடினம்" ஏனெனில்  இப்பொழுது அவன் அவசரத்தின் பொருட்டே இதையெல்லாம் செய்கிறான்,

ஆகவே, கடவுளின் அழைப்புக்கு செவி கொடாமல் கடின மனதோடு உள்ள பாவிக்கு ஐயோ கேடு! ஓயாமல் சுத்தியடிக்கப்படும்  இரும்புப் பட்டறை அதிகமாய் இறுகிக் கடினப்பட்டுப்  போவதுபோல, கடவுளின் அழைப்புக்கு செவிசாய்த்து மனமிளகிப் போவதற்குப் பதிலாக அதிக நன்றி கெட்டவனாகவும் நாளுக்கு நாள் அதிகக் கடினமுள்ளவனுமாகின்றான்.

"அவன் இருதயம் கல்லைப்போல் கடினமாயும், திரிகையின் அடிக்கல்போல் திண்மையாயும் உள்ளது" (யோபு 41:24) ஆதலால் அவனுக்கு கிடைக்கும் தண்டனை என்ன? அந்தக் கடைசி நேரத்திலும் மாறாமல் அதே நிலையில் இருப்பதுதான். பாவிகள் உலகக் காரியங்களில் பற்றுக் கொண்டதால் என்னைவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் ஆபத்து நேரத்தில் ஆண்டவரே ஓடி வாரும், எங்களை மீட்டு இரட்சியும் என்று கூவுவார்கள்.

"உனக்கென நீ செய்து கொண்ட தெய்வங்கள் எங்கே? உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில் முடிந்தால் அவை எழுந்து வந்து உன்னை விடுவிக்கட்டுமே" (எரேமியா 2:28) மரண நேரத்தில் இந்தப் பாவிகள் கடவுளை நோக்கிக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர் "இப்போதா என்னைத் தேடுகிறீர்கள்? நீங்களே செய்து கொண்ட உங்கள் தெய்வங்களை தேடிக் கூப்பிடுங்கள்" என்பார். இப்படி ஆண்டவர் சொல்லக் காரணம் என்னவென்றால், மனஸ்தாபப்பட உண்மையான விருப்பமில்லாமல் அவர்கள் அவரைத் தேடுவதுதான். இதனாலேயே புனித ஜெரோம் திட்டவட்டமாகச் சொல்வதாவது. "கடைசிவரையும் கெட்ட வழியில் நடப்பவன் நல்ல முடிவை அடைவது ஒருக்காலும் நடக்கக் கூடிய காரியமல்ல என்று நான் அனுபவத்தாலறிந்து நிச்சயமாகச் சொல்கிறேன் என்றார்

புனித அல்போன்ஸ் மரிய லிகோரியாரின் மரண ஆயத்தம் என்ற தியான நூலின் பதிவு இந்த புத்தகம் நன்மரண ஆயத்தமாய் அமைந்த மோட்சத்தின் திறவுகோல்!