ஞானஸ்நானம் என்னும் முதல் திருவருட்சாதனம்.

இன்று பெரும்பாலான கிறித்தவ சபைகள் ஞானஸ்நானம் வழங்குகின்றன என்பதற்கு வரலாற்றுத் தொலைநிலை ஆதாரம் யூத சமயத்தில் உள்ளது. அங்கே "மிக்வா" (Mikvah) என்னும் சடங்கு தூய்மைப்படுத்தும் சடங்காகவும், யூத மதத்திற்கு மாறி வருவோரை ஏற்கும் சடங்காகவும் நிகழ்த்தப்பட்டது.

புதிய ஏற்பாட்டில், ஸ்நாபக அருளப்பர் யோர்தான் ஆற்றில் மக்களுக்குத் ஞானஸ்நானம் வழங்கினார் (மத்தேயு 3:1-12; மாற்கு 1:1-8; லூக்காஸ் 3:1-9, 15-17; அருளப்பர் 1:19-28).

இயேசு ஸ்நாபக அருளப்பரிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றார் (மத்தேயு 3:13-17; மாற்கு 1:12-13; லூக்காஸ் 4:1-13).

ஆதிகாலத் திருச்சபையில் ஞானஸ்நானம் வழக்கத்தில் இருந்தது என்பதற்கான சான்றுகள் அப்போஸ்தலர் பணிகள்  நூலிலும், புனித பவுல் எழுதிய திருமுகங்களிலும் உள்ளன.

இடைக்காலத்தின் முற்பகுதியில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிக்கும் பழக்கம் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டது.12ஆம் நூற்றாண்டில், திருமுழுக்கு இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய ஏழு அருள்சாதனங்களுள் முதலாவது என்னும் அடிப்படையில் அருள்சாதனம் பற்றிய கொள்கை விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

15ஆம் நூற்றாண்டில், மார்ட்டின் லூதர் திருமுழுக்கு இயேசுவால் நிறுவப்பட்ட ஓர் அருள்சாதனம் என்னும் கிறித்தவக் கொள்கையை ஏற்றார். குழந்தைத் திருமுழுக்கும் ஏற்புடையதே என்று கூறினார்.

ஆனால் சுவிங்கிலி என்னும் சீர்திருத்தவாதி திருமுழுக்கு ஒரு புகுமுகச் சடங்கு மட்டுமே ஒழிய, அருள்சாதனம் இல்லை என்று கூறினார். சீர்திருத்த சபைகளாக எழுந்த பாப்திஸ்து, பெந்தகோஸ்து போன்ற சபைகள் குழந்தைத் திருமுழுக்கை ஏற்பதில்லை.

ஞானஸ்நானம்(Baptism)என்பது கிறித்தவத்தில் நீரைப் பயன்படுத்தி செய்யப்படும் சமயம் சார்ந்த கழுவுதல் சடங்காகும். மிகப் பெரும்பான்மையான கிறித்தவ திருச்சபைகள் திருமுழுக்குச் சடங்கைக் கடைப்பிடிக்கின்றன.

இது ஒருவரின் பிறப்புநிலைப் பாவத்தையும், செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு ஒருவரை இணைத்து, அவரைக் கடவுளின் பிள்ளையாகவும், திருச்சபையின் உறுப்பினராகவும் ஆக்குகின்ற அருட்சாதனமாகக் கருதப்படுகின்றது.

திருமுழுக்கு என்னும் சொல் Βάπτισμα (baptisma) என்னும் கிரேக்கச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். அதற்குக் கழுவுதல், குளிப்பாட்டுதல், நீராடல் என்னும் பொருள் உண்டு. திருமுழுக்குப் பெறுவோரைத் தண்ணீரில் முழுவதுமாக அமிழ்த்தி இச்சடங்கைச் சில சபைகள் நிகழ்த்துகின்றன.

கத்தோலிக்க திருச்சபையில்குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கும் பழக்கம் நீடித்துவந்துள்ளது. திருமுழுக்குப் பெறுவோரின் தலைமீது தண்ணீர் வார்க்கும் பழக்கம் இச்சபையில் பரவலாக உள்ளது. திருமுழுக்குப் பெறுவோரின் தலையைத் திருமுழுக்குத் தொட்டியில் உள்ள நீரில் அமிழ்த்தி, அல்லது அவரை முழுதுமாக அந்நீரில் அமிழ்த்தி இச்சடங்கை நிகழ்த்தும் முறையும் கத்தோலிக்க திருச்சபையில் ஆங்காங்கே பரவிவருகிறது.

இவ்வாறு பாவக்கறை கழுவப்பட்டு, தூய்மை அடைந்து இறையருளைப் பெறுகின்ற செயல் அடையாள முறையில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.

திருமுழுக்குப் பெறுவோரின் தலைமீது நீரைத் தெளித்து, திருமுழுக்கு வழங்குவதும் உண்டு.

திருமுழுக்கு என்னும் அருள்சாதனத்தின் அடிப்படையான கூறுகள் இரண்டு. அவை, நீரால் கழுவப்படுதலும், அப்போது சொல்லப்படுகின்ற வாய்பாடும் ஆகும். கத்தோலிக்க திருச்சபையும் வேறு பல கிறித்தவ சபைகளும் "தந்தை (பிதா), மகன் (சுதன்), பரிசுத்த ஆவியின் பெயரால்" திருமுழுக்கு வழங்குகின்றன. இதற்கு ஆதாரமாக மத்தேயு நற்செய்தியில் இயேசு சீடர்களுக்குக் கட்டளை கொடுத்து அனுப்பும் பகுதி (மத்தேயு 28:16-20).

அதன்படி, “இயேசு பன்னிரு சீடர்களையும் அணுகி, 'விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும்.எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே, நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்: தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்' என்றார் (மத் 28:18-19).”

"ஒருமை பெந்தகோஸ்து சபையினர்" (Oneness Pentacostals) மூவொரு இறைவன் என்னும் கோட்பாட்டை ஏற்காததால், "இயேசுவின் பெயரால்" மட்டுமே திருமுழுக்கு அளிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் காட்டுகின்ற விவிலிய ஆதாரங்களில் ஒன்று:

அதற்கு இராயப்பர், 'மனந்திரும்புங்கள், பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள். (அப்போஸ்தலர் பணிகள் 2:38).”