உறுதிப்பூசுதலின் தன்மை

1. உறுதிப் பூசுதல் ஆவதென்ன?

உறுதிப்பூசுதல் புதிய திருச்சட்டத்தின் ஒரு தேவத்திரவிய அனுமானமாகும். அது நம் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதரால் ஏற்படுத்தப்பட்டது. அது நம்மில் இருக்கிற தேவ உயிரைப் பலப்படுத்துவதோடு, ஞானஸ்நானம் பெற்ற அனைவருக்கும் இஸ்பிரீத்து சாந்துவானவரை அவரது சகல கொடைகளோடும் வழங்குகிறது.


2. அது ஏன் உறுதிப் பூசுதல் என்று அழைக்கப் படுகிறது?

ஏனென்றால் அது ஞானஸ்நானத்தில் சேசுக்கிறீஸ்து நாதரின் வரப்பிரசாதமானது ஆத்துமத்தில் பொழிகிற புதிய உயிரை உறுதிப்படுத்தி, அதைப் பூரணப் படுத்துகிறது.


3. இந்தத் தேவத்திரவிய அனுமானத்திற்கு திருச்சபைத் தந்தையர்கள் தந்துள்ள சில பெயர்களைக் கூறு.

(1) கரங்களை விரித்தல்.

(2) பரிசுத்த தைலத்தின் தேவத் திரவிய அனுமானம்.

(3) நம் ஆண்டவரின் முத்திரை.

(4) ஞான முத்திரை.

(5) இஸ்பிரீத்து சாந்துவானவர் பெறப்படுவதன் அடையாளம்.


4. உறுதிப் பூசுதல் எவ்வாறு மெய்யான தேவத்திரவிய அனுமானமாக இருக்கிறது? 

(1) ஒரு வெளியரங்க அடையாளம், 

(2) ஓர் உள்ளரங்க வரப்பிரசாதம் மற்றும் 

(3) சேசுக் கிறீஸ்து நாதரால் ஸ்தாபிக்கப் படுதல் 

ஆகிய தேவத்திரவிய அனுமானத்திற்குரிய அனைத்து நிபந்தனைகளையும் தன்னுள் கொண்டுள்ளதால் அது மெய்யான தேவத் திரவிய அனுமானமாக இருக்கிறது.


5. உறுதிப் பூசுதலின் வெளியரங்க அடையாளம் யாது?

அது ஒரு தேவத்திரவிய அனுமானம் வழங்கப் படுவதற்கான காணக் கூடிய செயல்முறை ஆகும். அதில் அனுமானப் பொருள் மற்றும் வார்த்தை ஆகியவை அடங்கியுள்ளன. இவை இந்தத் தேவத் திரவிய அனுமானத்தைப் பெறுபவரின் மீது பொழியப் படுகிற வரப்பிரசாதத்தின் அடையாளங்களாக இருக்கின்றன.


6. உறுதிப் பூசுதலின் பொருள் மற்றும் வார்த்தை வடிவம் யாவை?

(1) பொருள் என்பதில் ஆயரின் கரங்கள் அனுமானத்தைப் பெறுபவர் மீது விரிக்கப் படுவதும், அவர் கிறீஸ்மா தைலத்தால் பூசப் படுவதும் அடங்கியிருக்கின்றன.

(2) வார்த்தை வடிவம் என்பது ஆயரால் உச்சரிக்கப் படும் பரிசுத்த வார்த்தைகளைக் குறிக்கிறது. இஸ்பிரீத்து சாந்துவானவரைப் பெற்றுக் கொள்ளுதல், மற்றும் சேசுக்கிறீஸ்து நாதரில் ஆத்துமம் முத்திரையிடப் படுதல் ஆகியவை அந்த வார்த்தைகளில் வெளிப்படுகின்றன.


7. பரிசுத்த கிறீஸ்மா தைலம் என்பது என்ன? அந்தத் தைலம் எதைக் குறித்துக் காட்டுகிறது?

(1) ஒலிவ எண்ணெயும் வாசனையுள்ள பரிமளவர்க்கமும் கலந்து பரிசுத்த கிறீஸ்மா தைலம் தயாரிக்கப்படுகிறது. இது பெரிய வியாழன் அன்று மேற்றிராணியாரால் மந்திரிக்கப் படுகிறது.

(2) இஸ்பிரீத்து சாந்துவினால் ஆத்துமத்தின் மீது பொழியப் படுகிற உள்ளரங்க பலத்தை இந்தப் பரிசுத்த தைலம் குறித்துக் காட்டுகிறது.


8. ஒலிவ எண்ணெயுடன் பரிமளம் கலக்கப்படுவது எதைக் குறித்துக் காட்டுகிறது?

கிறீஸ்மா தைலம் மேற்றிராணியாரால் மந்திரிக்கப்படும்போது பரிமளம் ஒலிவ எண்ணெயுடன் கலக்கப் படுகிறது. இதன் மூலம், உறுதிப் பூசுதல் பெறுகிறவர் பாவக் கேட்டினின்று தம்மைக் காத்துக் கொள்ளவும், ஒரு பரிசுத்த சீவியத்தின் சுகந்தத்தை எங்கும் பரப்பவும் தேவையான வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்கிறார் என்பது குறித்துக் காட்டப் படுகிறது.


9. கிறீஸ்மா தைலத்தை மந்திரிக்கும் போது மேற்றிராணியார் கூறுவது என்ன?

“கிறீஸ்மா தைலத்தால் வழங்கப்படும் அர்ச்சிப்பின் வழியாக முதற் பிறப்பின் கேடு அகற்றப் படுவதும், ஒவ்வொருவருடையவும் பரிசுத்த தேவாலயமானது, ஒரு மாசற்ற சீவியத்தின் இனிய சுகந்தத்தை சுவாசிப்பதுமாகிய வரத்தை சர்வேசுரன் இஸ்பிரீத்து சாந்துவின் இந்தக் கிறீஸ்மாவுக்கு வழங்குவாராக” என்று கூறுகிறார்.


10. உறுதிப்பூசுதல் இரட்சணியத்திற்கு அவசியமானதா?

ஞானஸ்நானத்தைப் போல உறுதிப்பூசுதல் இரட்சணியம் பெறுவதற்கு முற்றிலும் அவசியமானதல்ல. ஆனாலும் அது தேவத் திரவிய அனுமான வரப்பிரசாதத்தை வழங்குவதால், சகல கத்தோலிக்கர்களும், வாய்ப்புள்ள போது இதைப் பெற்றுக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறார்கள்.


11. உறுதிப் பூசுதலை அலட்சியம் செய்வது பாவமா?

உறுதிப்பூசுதலை அலட்சியம் செய்வது பாவம். அதுவும் விசுவாசமும் நல்லொழுக்க விதிகளும் இவ்வளவு அதிகமானதும் இவ்வளவு வன்மையானதுமான சோதனைகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் தீய காலத்தில் அதை அலட்சியம் செய்வது பெரும் பாவமாகும்.