நரகம்!

கத்தோலிக்கத் திருச்சபை நான்கு இறுதிக் காரியங்களை அடிக்கடி தியானிக்கும்படி நம்மை எப்போதும் அழைக்கிறது. அவை: மரணம், தீர்வை, மோட்சம், நரகம் ஆகியவை. ஆனால் நாமோ, ஆன்ம வாழ்வை மறந்து உலக வழியில் பணம், பதவி, அதிகாரம் என்னும் உலகக் குறிக்கோள்களுடன் வாழவே விரும்புகிறோம்.

இதனால் உலகில் எல்லாப் பாவங்களையும் எளிதாகக் கட்டிக்கொள்ளும் ஆபத்தில் நாம் எப்போதும் இருக்கிறோம். பாவத்திற்குத் தண்டனையான நித்திய நரகத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி, நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே நமதாண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் உலகிற்கு வந்தார். எனவே மோட்சம் செல்ல வேண்டும் என்னும் ஆசை நம்மில் இருக்க வேண்டும். அதுவே நமது நிரந்தர வாசஸ்தலம், அதுவே நம் நித்தியப் பேரின்பம். அதை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லவே கத்தோலிக்கத் திருச்சபையை ஆண்டவர் ஏற்படுத்தினார்.

எனவே நரகத்தைப் பற்றி ஆழ்ந்து தியானிக்கவும், மோட்சத்தை ஏக்கத்தோடு தேடவும், அர்ச். அவிலா தெரேசம்மாள் கூறியபடி, இறுதி வரை தேவசிநேகத்துடனும், தெய்வ பயத்துடனும் வாழவும் ஆன்மாக்களைத் தூண்டும் நோக்கத்தோடு ஜனவரி - பிப்ரவரி மாதா பரிகார மலர் நரகத்தைப் பற்றிய ஒரு முழுமையான கட்டுரையாக வெளியிடப்படுகிறது. இதை வாசித்து தியானிக்கிறவர்கள் இந்தப் பத்திரிகையை மற்றவர்களும் வாசித்துப் பயனடையும்படி செய்யத் தூண்டும்படி அன்புடன் வேண்டுகிறோம். நரகத்திலிருந்து நம்மால் முடிந்த வரை ஆன்மாக் களைக் காப்பாற்றும்படி ஜெப, தவ, பரித்தியாகங்கள் செய்ய முன்வருவோம். இத்தகைய உள்ளங்களே சேசு மரிய இருதயங்களுக்கு உண்மையான ஆறுதல் தருகின்றன. இவர்களையே சேசுமரிய இருதயங்கள் அதிகமாக நேசித்து ஆசீர்வதிக்கிறார்கள்.