திருச்சபையின் தொடக்க காலம்: கி.பி. 34-312

தொடக்க காலக் கிறித்தவம் (கி.பி. 34 - கி.பி. 312)

கி.பி. சுமார் 34ஆம் ஆண்டு: புனித ஸ்தேவான், கிறித்துவின் பொருட்டு உயிர்துறந்த முதல் மறைச் சான்றாளர் (martyr). எருசலேமில் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார் (திருத்தூதார் பணிகள் 6:8-7:60)

கி.பி. சுமார் 34-36ஆம் ஆண்டு: இயேசுவின் சீடர்களைத் துன்புறுத்திய சவுல் இயேசுவைக் காட்சியில் காண்கின்றார்; இயேசுவின் ஆர்வமிகு சீடராக மாறுகின்றார் (கலாத்தியர் 1:13-14; பிலிப்பியர் 3:6; திருத்தூதர் பணிகள் 8:1-3)

கி.பி. சுமார் 50ஆம் ஆண்டு: எருசலேமில் திருச்சங்கம் கூடுகிறது. கிறித்துவின் சீடராக விரும்பி திருச்சபையில் இணைவோர் புற இனத்தவராயினும் யூத சமயத்தின் பழக்கங்களை (விருத்தசேதனம், உணவு சார்ந்த விதிகள் போன்றவை) கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்னும் முடிவு எடுக்கப்படுகிறது. கிறித்தவத்துக்கும் யூத சமயத்துக்கும் இடையே நிலவும் வேறுபாடு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது(காண்க:திருத்தூதர் பணிகள் 15:1-35).

கி.பி. சுமார் 52ஆம் ஆண்டு: உறுதியான மரபுப்படி, இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவராகிய புனித தோமா இந்தியா சென்று சேர்கிறார். அவர் கேரளத்தில் இன்றைய திரிஸ்ஸூர் மாவட்டத்தில்.உள்ள கொடுங்கல்லூர் ("கிராங்கனூர்") என்னுமிடத்தில் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது.

கி.பி. 64ஆம் ஆண்டு: உரோமை நகரில் நீரோ மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்துகிறான். உரோமை நகர் தீக்கிரையானதற்கு கிறித்தவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள். கிறித்தவர்கள் கி.பி. 313ஆம் ஆண்டுவரை பலமுறை துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

கி.பி. 70ஆம் ஆண்டு: தீத்து என்னும் உரோமைத் தளபதியும் உரோமைப் படைகளும் எருசலேம் கோவிலைத் தரைமட்டமாக்குகிறார்கள்; பலரைச் சிறைப்பிடிக்கிறார்கள்; எருசலேம் கோவிலிலிருந்து சூறையாடப்பட்ட பொருள்கள் உரோமைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.

கி.பி. சுமார் 72ஆம் ஆண்டு: உறுதியான மரபுப்படி, புனித தோமா கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மயிலாப்பூரில் ஈட்டியால் குத்திக் கொல்லப்படுகிறார்.

கி.பி. சுமார் 96ஆம் ஆண்டு: கொரிந்து நகர் திருச்சபைக்குத் திருத்தந்தை முதலாம் கிளமெண்ட் முதல் திருமுகம் எழுதுகிறார்.

கி.பி. சுமார் 100ஆம் ஆண்டு: இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் இறுதியானவராக யோவான் எபேசு நகரில் இறக்கிறார்.

கி.பி. சுமார் 110ஆம் ஆண்டு: இயேசுவின் திருச்சபை எல்லா இடங்களிலும் பரவிவருவதைக் குறிக்கும் விதத்தில் கத்தோலிக்க திருச்சபை (கத்தோலிக்க திருச்சபை) என்னும் சொல்முறையை முதன்முதலாகப் புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்பவர் பயன்படுத்துகிறார். இவர் அந்தியோக்கு நகரத் திருச்சபையின் ஆயர். திருச்சபையில் ஆயர்கள் தலைவர் ஆவர் என்று வலியுறுத்துகிறார். உண்மையான கிறித்தவக் கோட்பாட்டை ஏற்க மறுப்போரையும் யூத சமயப் பழக்கங்களைக் கிறித்தவத்தில் புகுத்துவதை ஆதரிப்போரையும் எதிர்க்கிறார்.

கி.பி. சுமார் 150ஆம் ஆண்டு: பழைய இலத்தீன் பெயர்ப்பு (Vetus Latina) என்று அழைக்கப்படுகின்ற விவிலிய மொழிபெயர்ப்பு தோன்றுதல். கிரேக்கத்திலிருந்து பெயர்க்கப்பட்ட படைப்பு இது.

கி.பி. சுமார் 155ஆம் ஆண்டு: கிறித்தவக் கொள்கைகளுக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்த மார்சியன் (பழைய ஏற்பாட்டுக் கடவுள் வேறு, புதிய ஏற்பாட்டுக் கடவுள் வேறு என்று கூறியவர்), வலந்தீனசு (ஞானக்கொள்கையை (Gnosticism) ஆதரித்தவர்), மற்றும் மொந்தானுசு கொள்கை கிறித்தவ சமூகத்திடையே பிளவுகளைக் கொணர்கின்றன. கிறித்தவரைத் துன்புறுத்தும் செயல் தொடர்கிறது.

கி.பி. சுமார் 180ஆம் ஆண்டு: இரனேயசு என்னும் ஆயர் "வேற்றுக் கொள்கையினருக்கு எதிராக" என்னும் நூலை எழுதுகிறார். அக்கால உரோமைப் பேரரசின் கீழ் அமைந்த, இன்றைய பிரான்சு நாட்டின் லியோன் நகர, ஆயராகப் பணியாற்றிய இவர் ஞானக்கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறார்.

கி.பி. சுமார் 195ஆம் ஆண்டு: திருத்தந்தை முதலாம் விக்டர் இயேசுவின் உயிர்த்தெழுதல் திருவிழா யூதரின் நிசான் மாதத்தின் 14ஆம் நாளில் கொண்டாடப்பட வேண்டும் என்று வாதாடியவர்களைச் சபை நீக்கம் செய்கின்றார். திருச்சபை முறைப்படி, நிசான் 14ஆம் நாளுக்குப் பின் வரும் ஞாயிறு உயிர்த்தெழுதல் திருவிழா ஆகும். ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த முதல் திருத்தந்தை விக்டர் ஆவர். அவர் காலத்தில் திருப்பலி கிரேக்க மொழியிலிருந்து மாறி, இலத்தீன் மொழியில் கொண்டாடப்பட்டது.

கி.பி. சுமார் 200ஆம் ஆண்டு: தெர்த்தூல்லியன் (கி.பி. 160-220) என்னும் முதல் மாபெரும் இலத்தீன் இறையியல் வல்லுநர் கிறித்தவ இறையியல் கருத்துகளை எடுத்துரைக்க கீழே வருவதுபோன்ற பல இலத்தீன் சொற்களைப் புதிதாக ஆக்குகிறார்: ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கின்றார் என்பதைக் குறிக்க Trinitas (திரித்துவம், மூவொரு கடவுள்); தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆள்கள் (Personae) ஒரே பொருளாய் (consubstantialis/-es) இருக்கின்றார்கள். இச்சொற்கள் இறையியல் கோட்பாடுகளைத் துல்லியமாக வரையறுக்க இன்றுவரை பயன்படுகின்றன.

கி.பி. சுமார் 250ஆம் ஆண்டு: திருத்தந்தை ஃபேபியன் என்பவர் அக்கால ஃபிரான்சு நாட்டின் பல பகுதிகளுக்குக் கிறித்தவ மறைப் போதகர்களை அனுப்புகிறார்.

சனவரி 20, கி.பி. 250ஆம் ஆண்டு: உரோமைப் பேரரசின் டேசியசு (Decius) மன்னன் கிறித்தவர்களைக் கொடுமைப்படுத்தத் தொடங்குகிறான். திருத்தந்தை ஃபேபியன் கொல்லப்படுகிறார். கொடுமைகளுக்குப் பயந்து தம் கிறித்தவ நம்பிக்கையைக் கைவிட்டவர்களை மீண்டும் திருச்சபையில் சேர்ப்பது பற்றிய சர்ச்சை எழுகிறது.

அக்டோபர் 20, கி.பி. 312ஆம் ஆண்டு: உரோமை நகர் மில்வியோ பாலத்தில் நடந்த போரில் காண்ஸ்டண்டைன் பேரரசன் வெற்றி பெறுகிறார். அவர் இயேசு கிறித்துவின் பெயரால் போரிட்டு வெற்றியடைந்தார் என்று மரபு கூறுகிறது. அவருடைய போர்வீரர்கள் கிறிஸ்து என்னும் சொல்லுக்கான கிரேக்க மூலத்தின் முதல் இரு எழுத்துக்களைத் தங்கள் கேடயங்களில் பொறித்துக்கொள்கின்றனர் (கிரேக்கம் ΧΡΙΣΤΌΣ = Christos. முதல் இரு கிரேக்க எழுத்துக்கள்: ΧΡ)