மே 30

அர்ச். ஃபெர்டினாண்ட். இராஜா (கி.பி. 1252) 

ஸ்பெயின் தேசத்து அரசனான ஃபெர்டினாண்ட், பிரான்ஸ் தேசத்து இராஜாவாகிய அர்ச். லுாயிஸ் என்பவரின் தாயாருடன் கூடப்பிறந்தவர். தமது பக்தியுள்ள தாயின் புத்தி படிப்பினையால் ஃபெர்டினாண்ட் புண்ணிய வழியில் சிறந்து விளங்கினார்.

தமது தாயாருடைய ஆலோசனைப்படி இவர் ஜெர்மனி தேசத்து சக்கரவர்த்தியின் குமாரத்தியை விவாகஞ் செய்துகொண்டு தன் பிரஜைகளை மிகவும் அன்புடன் பரிபாலித்து வந்தார்.

நாள்தோறும் ஜெப் தியானங்களைச் செய்து அடிக்கடி ஒருசந்தி இருந்து, மயிர்ச்சட்டை அணிந்து, மயிரொட்டியாணந் தரித்து சரீரத்தைச் சங்கிலியால் அடித்துக்கொள்வார்.

தேவ தாயார்மேல் இவர் மிகுந்த பக்தி வைத்து அவள் சுரூபத்தைத் தமது மார்பில் தரித்துக்கொண்டு வேறொரு சுரூபத்தைத் தாம் போகும் இடத்திற்கெல்லாம் கொண்டுபோய் அப்பரம் ஆண்டவள் மூலமாய்த் தமது ஜெபங்களை சர்வேசுர னுக்கு ஒப்புக்கொடுப்பார். ஸ்பெயின் தேசத்தில் அநேக சிறந்த பட்டணங்களை ஏற்கனவே கைப்பற்றி ஆண்டு வந்த முகமதியருடன் ஃபெர்டினாண்ட் அரசர் போர் செய்து ஒவ்வொரு பட்டணமாய்ப் பிடித்து தன் வசப்படுத்திக்கொண்டார்.

பெரும் படையை இவர் எதிர்த்தபோது, அத்தேசத்துப் பாதுகாவலராகிய அர்ச். யாகப்பர் ஒரு வெள்ளைக் குதிரைமேல் ஏறி வருகிறதைப் போல காணப் பட்டு, முகமதியர்மேல் பாய்ந்து அவர்கள் பாளையத்தை முறியடித்ததனால் கிறீஸ்தவர்களுக்கு ஜெயம் உண்டாயிற்று.

இவ்விதமாகப் பிடித்த நகரங்களி லுள்ள கோயில்களைச் சுத்தப்படுத்தி, அபிஷேகம் செய்து அவைகளில் தேவாரதனை நடக்கும்படி செய்தார். இப்பரிசுத்த இராஜா அநேக கோவில 'களையும் மடங்களையும் மருத்துவமனைகளையும் கட்டுவித்து, தேசத்தை நீதியுடன் ஆட்சி செய்து, பின்பு தாம் வியாதியுற்றபோது தரையில் தம்மைக் கிடத்தச் சொல்லி, மகா பக்தியுடன் கடைசித் தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று, தன் பிரிய பத்தினிக்கு ஆறுதல் கூறி, பிள்ளைகளுக்குப் புத்திமதி சொல்லி உலக முடிக்குப் பதிலாக மோட்ச முடியைப் பெற்றார்.

யோசனை

சகலரும் தங்கள் தங்கள் அந்தஸ்தின் கடமைகளைப் பிரமாணிக்கமாக அனுசரிப்பார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பெலிக்ஸ், பா.வே.