மார்ச் 29

அர்ச். ஜோனாஸம் துணைவரும். வேதசாட்சிகள் (கி.பி. 859)

பாரசீக தேசத்தின் அரசனான சாப்போர் என்பவன் தன் தேசத்தில் கிறீஸ்தவர்கள் அதிகரிப்பதைக் கண்டு கோபவெறி கொண்டு, பயங்கரமான வேதகலாபனையை உண்டாக்கினான்.

இதனால் அத்தேசமெங்கும் கிறீஸ்த வர்கள் பிடிபட்டு சிறைப்படுத்தப்பட்டார்கள்.

சகோதரர்களான ஜோனாஸும் பராகீசியூசும் ஊரூராய்ச் சென்று வேதத்தில் உறுதியாயிருக்கும்படி கிறீஸ்தவர் களுக்குப் புத்தி சொல்லிக்கொண்டு வருகையில் அவர்களிருவரும் வேதத்திற் காகப் பிடிபட்டார்கள்.

அவ்விருவரையும் அதிபதி விசாரணை செய்து சூரியன், சந்திரன், நெருப்பு, ஜலம் முதலியவற்றை ஆராதிக்கும்படி கட்டளையிட்டான்.

இவை படைக்கப்பட்ட வஸ்துக்களாகையால் அவைகளை ஆராதிப்பது பாவம் என்றும், சத்திய கடவுளை மாத்திரம் ஆராதிப்போமென்றுக் கூறியதைக் கேட்ட அதிபதி ஜோனாஸை சாட்டைகளால் அடிப்பித்து குளிர்ந்த ஜலத்தில் அவரை அமிழ்த்தும்படி கட்டளையிட்டான்.

பராகீசியூசின் விலா பக்கங்களை பழுக்கக் காய்ச்சிய இரும்பு தகட்டால் சுட்டு, அவர் கண்களிலும் நாசித் துவாரங்களிலும் உருகின ஈயத்தை ஊற்றும்படிச் செய்து, ஒரு காலை மேலே தூக்கிக் கட்டி தொங்க வைத்தான்.

பிறகு பயங்கரமான ஆயுதங்களால் இவ்விருவரையும் நிஷ்டூரமாய் உபாதித்து சித்திரவதை செய்யும்போது உயிர் துறந்து வேதசாட்சி முடி பெற்றார்கள்.

இவர்களுடன் வேறு சிலரும் வேதத்திற்காகக் கொல்லப்பட்டார்கள்.

யோசனை

நமக்கு உண்டாகும் வியாதி துன்பதுரிதமாகிற சிலுவைகளைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். அர்மொகாஸ்தெஸும் துணை., வே.
அர்ச். கண்ட்லேயுஸ், து.
அர்ச். மார்க், மே.