அக்டோபர் 29

அர்ச். நார்சிஸ்சுஸ் - மேற்றிராணியார் (2-ம் யுகம் ) 

நார்சிஸ்சுஸ் தமது 80-வது வயதில் ஜெருசலேம் பட்டணத்திற்கு மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். இவரிடமிருந்த அர்ச்சியசிஷ்டதனத்தால் அநேக புதுமைகள் செய்தார். 

ஒரு நாள் எண்ணெய் தேவைப்பட்டதால் தண்ணீரை எண்ணெயாக மாற்றினார். இவர் தயவுடனும் அன்புடன் கிறீஸ்தவர்களை சந்தித்து, சகலரும் வேத கட்டளைகளைக் கண்டிப்பாக அனுசரிக்கும்படி கற்பிப்பார். 

இந்த நல்ல ஆயன் மட்டில் சகல கிறீஸ்தவர்களும் அன்பு வைத்து மதித்த போதிலும், கீழ்படியாத மூன்று போக்கிரிகள் இவரை விரோதித்து, இவர் பெருங் குற்றத்தைக் கட்டிக்கொண்டாரென்று பிரசித்தஞ் செய்து, தங்கள் சாட்சியம் பொய்யாயிருந்தால் சர்வேசுரன் தன்னை நெருப்புக்கு இரையாக்குவாராக என்று ஒருவனும், தன்னைக் குஷ்டத்தால் தண்டிப்பாராக என்று இன்னொருவனும், தன் கண் அவிந்து போகக்கடவதென்று மூன்றாவது மனிதனும் ஆணையிட்டுக் கூறினார்கள். 

இந்த அர்ச்சியசிஷ்டவர் மேல் கூறப்பட்ட அவதூறுகளை மற்ற கிறீஸ்தவர்கள் நம்பவில்லை. ஆனால் சர்வேசுரன் தமது தாசன் மீது அவதூறு கூறினவர்களைத் தண்டித்தார். 

எவ்வாறெனில், முதல் மனிதன் வீடு நெருப்பு பிடித்து அவனும் அவன் குடும்பத்தாரும் மாண்டார்கள். இரண்டாம் மனிதனுக்கு சடுதியில் குஷ்டங் கண்டது. இதைக் கண்ட மூன்றாம் மனிதன் பயந்து தானும் மற்ற இருவரும் மேற்றிராணியார் மேல் சுமத்திய குற்றம் சுத்தப் பொய் என்று சொல்லி அதற்காக எவ்வளவு துக்கித்து அழுதானெனில், அதனால் அவன் கண் பார்வை போயிற்று. 

மேற்றிராணியாரோ சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து நித்திய சம்பாவனையை அடைந்தார்.

யோசனை

நாம் ஒருபோதும் யார் பேரிலும், விசேஷமாக குருக்கள் பேரில் அவதுாறு கூறக்கூடாது. அப்படிச் செய்கிறவர்களை சர்வேசுரன் இம்மையிலும் மறுமையிலும் தண்டிப்பார்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ச்செப், ம.