மார்ச் 27

அர்ச். அருளப்பர். வனவாசி (கி.பி. 394) 

அருளப்பர் எஜிப்து தேசத்தில் பிறந்து தன் தந்தையுடன் தச்சுத் தொழிலைச் செய்து வந்தார்.

இவர் ஏகாந்தியாய் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய ஆசித்து, தன் வீட்டை விட்டு மலை காட்டுக்குச் சென்று ஒரு வனவாசிக்குச் சீஷரானார்.

வனவாசி அருளப்பருடைய பக்தி பொறுமையையும் விசேஷமாக தாழ்ச்சியையும் கண்டு அதிசயித்தார்.

சில வருடங்களுக்குப்பின் அருளப்பர் அவ்விடத்தினின்று ஒரு உயர்ந்த மலைக் கெடுக்குப் போய் ஜெப தபஞ் செய்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்துவந்தார்.

சூரியன் அஸ்தமித்த பின் ஒரு முறை மாத்திரம் கீரை கிழங்கு முதலியவற்றைப் புசிப்பார்.

இவரிடம் ஆலோசனை கேட்க வரும் திரளான ஜனங்களிடம் சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் மட்டும் பேசுவார்.

இவருடைய விசேஷ புண்ணியங்களினிமித்தம் அநேக புதுமைகளைச் செய்யவும் தீர்க்கத்தரிசனங்களைக் கூறவும் வரம் பெற்றிருந்தார்.

மற்றவர் மனதிலுண்டாகும் எண்ணங்களையும் அறிவார்.

தெயதோசியஸ் அரசனுக்கு உண்டாகப்போகும் அநேக விசேஷங்களைப் பற்றியும் அவருடைய மரணத்தைப்பற்றியும் முன்னதாக அறிவித்தார்.

ஸ்திரீகள் தமது கெபிக்கு வர ஒருபோதும் சம்மதித்தவரல்ல. ஆகிலும் ஒரு புண்ணியவதிக்கு ஒரு தரிசனத்தில் காணப்பட்டு, அவளுக்குண்டாயிருந்த வியாதிகளை செளக்கியப்படுத்தினார்.

ஓர் மந்திரியின் மனைவி அவரைக் கண்டு பேச எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதற்குச் சம்மதியாமல், இரவில் அந்தப் பெண்ணிற்குத் தரிசனையாகி ஆறுதல் வருவித்தார்.

இவ்விதமாக அருளப்பருக்கு 90 வயது நடக்கும்போது, முழந்தாளிலிருந்து ஜெபித்துக்கொண்டிருக்கும் போதே அவர் ஆத்துமம் அவர் உடலை விட்டுப் பிரிந்து மோட்சானந்தத்தில் பிரவேசித்தது.

யோசனை 

நாம் வனவாசிகள் ஆகாவிடினும் நமது அந்தஸ்தின் கடமைகளைப் பிரமாணிக்கமாய் அநுசரித்தால் இரட்சணியமடையலாம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ரூபெர்ட், து.