பிப்ரவரி 26

அர்ச். போர்பீரியுஸ். மேற்றிராணியார். (கி.பி. 420)


திரண்ட செல்வந்தரான இவருக்கு 21 வயதானபோது உலகத்தைத் துறந்து காட்டிற்குச் சென்று தவம் புரிந்தார். சிரேஷ்டருடைய உத்தரவின்படி இவர் ஜெருசலேமுக்குச் சென்று, திருத்தலங்களைச் சந்தித்து, கர்த்தருடைய பாடுகளைப்பற்றி தியானித்து புண்ணிய வழியில் வாழ்ந்து வந்தார்.

இவர் வியாதியாய் விழுந்த சமயத்தில் மெல்ல மெல்ல நகர்ந்து திருஸ்தலங்களில் வேண்டிக்கொள்கையில் கர்த்தர் நல்ல கள்ளனுடன் அவருக்குத் தரிசனையாகி, கர்த்தருடைய கட்டளைப்படி நல்லக் கள்ளன் இவரைக் குணப்படுத்தினார்.

சூரியன் அஸ்தமித்தபின் மாத்திரம் கொஞ்சம் புசிப்பார். தமது திரண்ட ஆஸ்தியை விற்றுத் தரித்திரருக்கு கொடுத்துவிட்டு கடுந்தவம் செய்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்தார்.

இவர் காசா பட்டணத்திற்கு மேற்றிராணி யாராக நியமிக்கப்பட்டபோது முன்னிலும் அதிக ஜெப தபங்களைப் புரிந்து, இடைவிடா பிரசங்கத்தாலும் புதுமைகளாலும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த அப்பட்டணத்தாரை கிறிஸ்தவர்களாக்கினார்.

அங்கிருந்த அநேக பசாசு கோவில்களை இடித்து சர்வேசுரன் பேரால் தேவாலயங்களைக் கட்டி வைத்தார். இவர் 43 வயது வரை மிகவும் கடினமாக உழைத்து மோட்ச பிரவேசமானார்.

யோசனை 

நமது கர்த்தரின் திருப்பாடுகள் மட்டில் அதிக பக்தி வைப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். அலெக்ஸாண்டர், பிதா.
அர்ச். விக்டர், ம.