ஜுன் 25

அர்ச். மாக்ஸிமுஸ். மேற்றிராணியார் (கி.பி. 466) 

மாக்ஸிமுஸ் 5-ம் நூற்றாண்டில் தூர்நகர் மேற்றிராணியாராக நியமிக்கப் பட்டு அக்காலத்தில் ஒரு ஞான ஆபரணம் போல் பிரகாசித்து வந்தார்.

வேதசாஸ்திரங்களில் தேர்ந்திருந்த இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் மிலானிலும் உரோமையிலும் கூடின திருச்சங்கத்திற்குச் சென்று உரோமைச் சங்கத்தின் தீர்மானச் சட்டத்தில் அர்ச். பாப்பாண்டவர் கையெழுத்திட்டபின் தானும் கையெழுத்திட்டார்.

இவர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்ற திருநாட்களிலும் பிரசங்கம் செய்வார். வேதசாட்சிகளின் திருப்பண்டங்களை வணங்குவதால் ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் பல நன்மைகளுண்டாகுமென்று விசுவாசி களுக்கு அறிவிப்பார்.

சர்வேசுரன் நமக்கு இடைவிடாமல் செய்துவரும் நன்மை உபகாரங்களுக்காக அவருக்கு நன்றி கூறி, விசேஷமாக நித்திரைக்கு முன்பும் நித்திரையினின்று எழுந்திருக்கும்போதும், உருக்கமுள்ள ஜெபத்தால் கர்த்தருக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செய்யும்படி சொல்லுவார்.

உண்பதற்கு முன் ஜெபத்தால் தேவாசீர்வாதத்தை மன்றாடக் கற்பித்தார். மேலும் சேசு கிறிஸ்து நாதருடைய அடையாளமாகிய திருச்சிலுவை அடையாளத்தால் நாம் தொடங்கும் சகல காரியங்களுக்கும் தேவாசீர்வாதம் உண்டாவதால் ஒவ்வொரு வேலை தொடங்குவதற்குமுன் சிலுவை அடையாளத்தை வரைந்து கொள்ள அசட்டை செய்யக் கூடாதென்று புத்திமதி சொன்னார்.

இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் வாக்காலும் எழுத்தாலும் திருச்சபைக்காக உழைத்து, 466-ம் வருடம் இவ்வுலகை விட்டு பேரின்பப் பாக்கியத்திற்குள்ளானார்.

யோசனை 

நாமும் காலை மாலை குடும்ப ஜெபத்தையும் அசன ஜெபத்தையும் மறக்கலாகாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ப்ராஸ்பெர், து.
அர்ச். வில்லியம், ம.
அர்ச். அல்டெபெர்ட், து.
அர்ச். மாலக், மே.
அர்ச். அகார்டும் துணை., வே.