அக்டோபர் 23

அர்ச். தெயோடேர்ரேட் - வேதசாட்சி (கி.பி. 362) 

வேத துரோகியான ஜுலியான் என்னும் சக்கரவர்த்தி திருச்சபையை துன்புறுத்திய காலத்தில் தன் சிறிய தந்தையான ஜுலியான் பிரபுவை கீழ்த்திசை நாடுகளுக்கு தேசாதிபதியாக நியமித்திருந்தான். 

இந்தப் படுபாவி கிறீஸ்தவர்களைப் பிடித்து கொடூரமாய் வதைத்துக் கொன்றான். அக்காலத்தில் அநேக கோயில்களைக் கட்டி வேதம் போதித்து அநேக அஞ்ஞானிகளை சத்திய வேதத்திற்கு திருப்பின தெயோடேர்ரேட் என்னும் குருவானவரை ஜுலியான் பிரபு பிடித்து சிறைப் படுத்தினான். 

பிறகு அவரை அவன் குரூரமாய் அடித்து சித்திரவதை செய்யும்படி கற்பித்தான். அவர் வேதத்தில் தைரியமாயிருப்பதை அவன் அறிந்து எரியும் பந்தங்களால் அவரைச் சுடச் செய்தபோது வேதசாட்சி சர்வேசுரனைப் பார்த்து மன்றாடி தேசாதிபதிக்கும் இராயனுக்கும் வரவிருக்கும் பயங்கரத்திற்குரிய ஆக்கினையையும் அவமான மரணத்தையும் பற்றி தீர்க்கதரிசனமாயறிவித்தார். 

அவர் கூறியபடி சகலமும் சம்பவித்தது. வேதசாட்சியை கொடூரமாய் வதைத்த பின் கொடுங்கோலன் அவரை சிரச்சேதம் செய்வித்தான். இதற்குப்பின் ஜுலியான் இராயன் கட்டளைப்படி, தேசாதிபதி கோவிலிலிருந்த பாத்திரம் முதலிய பொருட்களை கொள்ளையடித்து இராயனுக்கு அனுப்பி வைத்தான். 

அன்று இரவே ஜுலியான் பிரபுவுக்கு வயிற்று நோய் கண்டு சொல்லமுடியாத வேதனைப்பட்டான். கைதேர்ந்த வைத்தியர் பட்ட பாடெல்லாம் வீணாகி, அவர் குடல் அழுகி, பூச்சியரித்து அதனாலுண்டான துர்நாற்றத்தை அவன் சகிக்க முடியாமல் பித்தனைப் போல புலம்பி அழுது தன் தேவர்களைச் சபித்துத் திட்டி, வேதசாட்சிகளைக் கொன்று, கோவில் பொருட்களைக் கொள்ளையடித்ததினால் இப்படிப்பட்ட வியாதி உண்டானதென்று கூறி அவலமாய் மாண்டான்.

யோசனை 

கோவில் சொத்துக்களையாவது திருப்பணிவிடைக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பொருளையாவது, நிலத்தையாவது அபகரிப்பது பெருந் தேவதுரோகம் என்று எண்ணுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ரோமானுஸ், அதிமே. 
அர்ச். ஜான் கபிஸ்ரான், து. 
அர்ச். இக்னேசியஸ், மே. 
அர்ச். செவெரின், மே.