ஜுன் 18

அர்ச். மார்குஸும் மார்செல்லியானுஸும். வேதசாட்சி (கி.பி. 286)

இரட்டைப் பிள்ளைகளான மார்குஸ், மார்செல்லியானுஸ் ஆகிய இவ்விரு சகோதரர்களும் உரோமையில் உத்தம கோத்திரத்தில் பிறந்த அஞ்ஞானிகள். வாலிபத்தில் இவர்கள் சத்திய வேதத்தை அறிந்து ஞானஸ்நானம் பெற்று, உத்தம கிறிஸ்தவர்களாய் புண்ணிய வழியில் நடந்தார்கள்.

அக்காலத்திலுண்டான வேத கலாபனையில் இவ்விரு சகோதரரும் பிடிபட்டு உபாதிக்கப்பட்ட போது இவர்கள் வேதத்தில் உறுதியாயிருந்தமையால் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அஞ்ஞானிகளான இவர்களுடைய பெற்றோர் வேதசாட்சிகளின் மனைவிகளையும், குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு சிறைக்குள் சென்று தலைமயிரை விரித்துப்போட்டுக்கொண்டு பெருங் கூச்சலுடன் அழுது புலம்பி வேதத்தை மறுதலிக்கும்படி மன்றாடினார்கள்.

இதைப் பற்றி கேள்விப்பட்ட அர்ச். செபஸ்தியார் சிறைக்குப் போய் அங்கு கூடியிருந்த அஞ்ஞானிகளுக்கு சத்திய வேதத்தின் சிறப்பையும் பொய் மதத்தின் அபத்தத்தையும் வெளிப்படுத்தி, இவ்வுலகில் சிறிது கால கஷ்டத்திற்குப் பின்னால் கிடைக்கும் நித்திய பேரின்ப பாக்கியத்தைப்பற்றி பேசி, அங்கிருந்த ஒரு ஊமை ஸ்திரீயின்மேல் சிலுவை அடையாளம் வரையவே அவள் பேசத் தொடங்கினாள்.

அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு, அவருடைய அற்புதத்தைக் கண்ட அஞ்ஞானிகள் எல்லோரும் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள். அதற்குப் பின் இவ்விரு வேதசாட்சிகளும் சிறு தூண்களில் கட்டப்பட்டு ஈட்டியால் குத்தப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்கள்.

யோசனை

தேவ கற்பனையை மீறும்படி துர்ப்புத்தி சொல்லும் பெற்றோர், மனைவி, பிள்ளைகளுக்கு இணங்குகிறவன் தமது சீஷனாக மாட்டானென்று நமது கர்த்தர் வசனித்திருப்பதால், இரத்த பாசத்தைவிட விசுவாச பாசத்தைச் சகலத்திற்கும் மேலானதாக எண்ணுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். மரினா, க.
அர்ச். எலிசபெத், க.
அர்ச். ஆமாண்ட், மே.