ஏப்ரல் 16

அர்ச். ஜொவாக்கீம். துதியர் (கி.பி. 1305) 

இவர் சீயென்னா நகரில் பிரபுக்களின் குடும்பத்தினின்று பிறந்து சிறு வயதிலேயே தேவ பக்தியுள்ளவரானார்.

தேவதாயார் மீது இவர் அதிக பக்தி வைத்து அவளுடைய சுரூபத்திற்கு முன் அடிக்கடி மங்கள வார்த்தை மந்திரத்தைச் சொல்லி வேண்டிக்கொள்வார்.

சிறு வயதில் இவர் ஏழைகள் மட்டில் இரக்கம் கொண்டு தனக்குக் கொடுக்கப்படும் தின்பண்டங்களையும் பணத்தையும் அவர்களுக்கு கொடுப்பார்.

மேலும் தன் பெற்றோரிடம் ஏழை களுக்குச் சகாயம் செய்யும்படி மன்றாடுவார்.

இரவு வேளையில் வீட்டார் நித்திரை செய்யும்போது ஜொவாக்கீம் எழுந்து மகா பக்தியுடன் ஜெபத் தியானங்களைச் செய்வார்.

14-ம் வயதில் உலகத்தைத் துறந்து சந்நியாசி யாகி அம்மடத்தார் அதிசயிக்க சகலப் புண்ணியங்களையும் உத்தம விதமாய் அநுசரித்தார்.

இவர் தாழ்ச்சியினிமித்தம் குருப்பட்டம் பெற சம்மதியாமல், தம்மை நீசனாகவும் அற்பனாகவும், ஒன்றுக்கும் உதவாதவனாகவும் எண்ணி வந்தார்.

மடத்தில் தாழ்ந்த வேலைகளை அதிக ஆசையுடன் செய்து வருவார்.

இவருடைய புண்ணியங்களையும் புதுமைகளையும் கண்ட ஜனங்கள் இவரை மேலாக எண்ணியபடியால் இவர் சிரேஷ்டருடைய உத்தரவுடன் துார நாட்டிலுள்ள வேறு மடத்திற்கு போன போதிலும், அங்கேயும் இவருடைய அர்ச்சிய சிஷ்டதனத்தைக் கண்ட ஜனங்கள் இவரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.

இவர் பூசை உதவி செய்வதில் அதிக பிரியங்கொண்டு, அநேக பூசைகளைக் கண்டு அவைகளுக்கு உதவி செய்யும்போது பரவசமாவார்.

கடைசியாய் சகல புண்ணியங்களையும் அநுசரித்து அர்ச்சியசிஷ்டவராகக் காலஞ் சென்றார்.

யோசனை 

பூசைக்கு உதவி செய்வது சம்மனசின் வேலையாதலால் அதை ஆசையோடும் பக்தியோடும் செய்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

18 வேதசாட்சிகள்
அர்ச். துரிபியுஸ், மே.
அர்ச். புருக்துவோசுஸ், அதிமே.
அர்ச். மான்ஸ், வே.