மே 16

அர்ச். நெபோமுசென் ஜான். வேதசாட்சிகள் (கி.பி. 1383)

இவர் தாய் தந்தையரின் மன்றாட்டுக்கு இரங்கி சர்வேசுரன் இவர் களுக்கு ஜான் (அருளப்பர்) என்ற ஆண் குழந்தையை அருளச் சித்தமானார். அவர்களும் தங்கள் பிள்ளையை சர்வேசுரனுடைய ஊழியத்திற்கு ஒப்புக் கொடுத்தார்கள்.

ஜான் சிறு வயதில் கல்வி சாஸ்திரங்களைக் கற்று, குருப் பட்டம் பெற்று, தமது ஞான அலுவலை சுறுசுறுப்புடன் செய்து வந்தார். இவருடைய மேலானப் பக்தியையும் அறிவையுங் கண்ட பொயேமியா தேச சக்கரவர்த்தியான வென்செஸ்லாஸ் என்பவன் சந்தோஷித்து அவரைத் தனது அரண்மனைக்கு விசாரணைக் குருவாகத் தெரிந்துகொண்டான்.

ஜான் குருவானவர் அரண்மனையிலுள்ள பிரபுக்களுடையவும் மற்ற உத்தியோகஸ்தர்க ளுடைய நடத்தையை விடாமுயற்சியாலும் பிரசங்கத்தாலும் சீர்படுத்தி, தம்மை ஆத்தும் குருவாக நியமித்துக்கொண்ட இராணியை புண்ணிய வழியில் பயிற்று வித்து வந்தார்.

தன் இராணியின் நடத்தையை அறிய நூதனப் பிரியங்கொண்ட சக்கரவர்த்தி அவள் பாவசங்கீர்த்தனத்தில் கூறிய பாவங்களைத் தனக்கு அறிவிக்கும்படி ஜான் சுவாமியாரைக் கேட்டான்.

ஆனால் அவர் பாவசங்கீர்த்தன இரகசியத்தை அறிவிப்பது பெருந் துரோகமென்று அவனுக்கு உணர்த்தியும் சக்கரவர்த்தி அதற்கு செவிசாய்க்காமல் சுவாமியாரை சிறைப்படுத்தி அவரைச் சித்திரவதைச் செய்தும், அவர் அதற்கு இணங்கவில்லை .

பிறகு அவருக்குச் சிறந்த கொடை வெகுமானங்களைத் தருவதாக வாக்களித்து, இராணியின் பாவங்களைத் தனக்கு அறிவிக்கும்படி கேட்டான். குருவானவர் அதற்குச் சம்மதியாததினால் அவரை நதியில் தூக்கி எறியும்படி கட்டளையிட்டான்.

வேதசாட்சியின் சரீரம் அதிசய பிரகாசத்தால் சூழப்பட்டு ஜலத்தில் மிதப்பதைக் கண்ட கிறிஸ்தவர்கள் அதை எடுத்துப் பக்தியுடன் ஒரு பெட்டியில் வைத்து அடக்கம் செய்தார்கள்.

அவர் இறந்த 330 வருஷங்களுக்குப்பின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது, அவருடைய சரீரம் அழிந்துபோன போதிலும், அவருடைய நாக்கு மாத்திரம் தேவ கிருபையால் அழியாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.

யோசனை

நாவால் ஒரு நாளைக்கு எத்தனையோ விசை சர்வேசுரனுக்கும் பிறருக்கும் விரோதமாய்ப் பாவம் கட்டிக்கொள்கிறோம். இனி அத்தீங்கைத் திருத்திக்கொள்வோமாக.