131, 132, 133ம் சங்கீதம்

131ம் சங்கீதம்

தாவீதையும் அவனுடைய பெரிய சாந்தத்தையும் நினைத்தருளும்.  

அவன் ஆண்டவருக்குக் கொடுத்த பிரமாணிக்கத்தையும், யாக்கோபின் தேவனுக்குச் செய்த பொருத்தனையையும் நினைத்தருளும்.  

நான் ஆண்டவருக்கு ஓரிடத்தையும், யாக்கோபின் தேவனுக்கு ஒரு கூடாரத்தையும் ஏற்படுத்துகிற வரையிலே, என் வீட்டின் வாசஸ்தலத்தில் நான் பிரவேசிப்பதில்லை, 

என் படுக்கையாகிய மஞ்சத்தில் யான் ஏறுவதுமில்லை, என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் கொடுப்பதுமில்லை என்றான்.  

எப்பிராத்தாவில் கடவுளின் பேழை இருப்பதாகக் கேள்விப்பட்டோம். இயார் என்னும் வயல்வெளிகளில் அதைக் கண்டு கொண்டோம்.  

அவருடைய கூடார ஸ்தலத்தில் நுழைவோம். அவருடைய திருப்பாதங்கள் பட்ட இடங்களிலே அவரை வணங்குவோம்.  

ஆண்டவரே, உமது பரிசுத்தம் விளங்கும் பேழையுடன் உமது வாசஸ்தலத்தில் எழுந்தருளும்.

உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்துக் கொள்ளட்டும்.  உம்முடைய பரிசுத்தவான்கள் அகமகிழட்டும்.  

உமது தாசனாகிய தாவீதினிமித்தம் உமது அபிஷேகமானவருடைய முகத்தைப் புறக்கணியாதேயும்.  

ஆண்டவர் தாவீதுக்கு உண்மையான ஆணையிட்டார். அதை அவர் மறந்து போவதில்லை.  

அதாவது உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தில் வைப்போம். உன் பிள்ளைகள் நமது உடன்படிக்கையையும் நாம் அவர்களுககுப் போதிக்கும் நியாயப் பிரமாணங்களையும் அனுசரித்து அவர்களுடைய பிள்ளைகளும் அப்படியே நடந்தால் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றார்.  

ஏனென்றால் ஆண்டவர் சீயோனைத் தேர்ந்து கொண்டார்.  அதைத் தமது வாசஸ்தலமாக நியமித்துக் கொண்டார்.  

அது என்றென்றைக்கும் நமது வாசஸ்தலமாகும். நாம் அதைத் தெரிந்து கொண்ட படியால் அவ்விடத்தில் வாசம் பண்ணுவோம். 

அதின் விதவைக்குப் பூரண ஆசீர்வாதம் கொடுப்போம்.  அதின் ஏழைகளுக்குத் திருப்தியாக அப்பம் கொடுப்போம். 

அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை ஆடையாகத் தருவோம். அதிலுள்ள பரிசுத்தவான்கள் கெம்பீரித்து அகமகிழ்வார்கள்.

அவ்விடத்தில் தாவீதின் வல்லமையை ஓங்கப் பண்ணுவோம்.  நமது அபிஷேகருக்கு ஒரு தீபத்தை ஆயத்தம் பண்ணினோம்.  

அவன் சத்துருக்கள் வெட்கமடையப் பண்ணுவோம்.  அவன் பேரிலோவென்றால் பரிசுத்ததனம் விளங்கப் பண்ணுவோம்.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....


132ம் சங்கீதம்

சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் இன்பமுமாயிருக்கின்றது.  

அது ஆரோனுடைய சிரசின் மேலே ஊற்றப் பட்டு அவனுடைய தாடியின் மேல் வடிந்து வஸ்திரத்தின் ஓரத்திலே இறங்குகிற ஸ்தலத்திற்கும், எர்மோன் பர்வதத்திலிருந்து சீயோன் மலைக்கு இறங்குகிற பனிக்கும் ஒப்பாயிருக்கிறது.

ஏனென்றால் ஆண்டவர் அங்கே ஆசீர்வாதத்தையும் சதாகாலத்திற்குச் சீவனையும் கட்டளையிட்டிருக்கிறார்.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....


133ம் சங்கீதம்

இதோ ஆண்டவருடைய வீட்டிலே நம்முடைய சர்வேசுரனுடைய வாசஸ்தலத்தின் தலைவாசல்களிலே பிரவேசித்திருக்கும் ஆண்டவருடைய சகல ஊழியர்களே! கர்த்தரை இப்போது வாழ்த்துங்கள்.

இராக்காலங்களிலே பரிசுத்த ஸ்தலங்களை நோக்கி உங்கள் கைகளை ஏறெடுத்து ஆண்டவரைத் தோத்தரியுங்கள்.  

பரமண்டலத்தையும், பூமண்டலத்தையும் படைத்த ஆண்டவர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....

முன்னிசை வாக்கியம்: ஓ கன்னிமரியாயே, பூலோகத்தில் பெண்ணிடமிருந்து பிறந்தவர்களுள் ரோஜாவைப் போல் செழிப்பும், லீலியைப் போல் சுகந்தமுமுள்ள உம்மைப் போல் வேறு ஒருவரும் இல்லை.  ஓ சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.