ஜுலை 12

அர்ச். குவால்பெர்ட் ஜான் - மடாதிபதி (கி.பி. 1073) 

இவர் ஆயுதப்பயிற்சிப் பெற்று, உலகநாட்டமுள்ளவராய்க் கீர்த்தி மகிமை பெற விரும்பி, யுத்தப்பிரியரோடு சேர்ந்து வீரியத்துடன் சண்டை புரிந்து வந்தார். இவருடைய சகோதரன் வேறொரு துரையால் கொல்லப்பட்டதை அறிந்த ஜான் அந்தத் துரையைக் கொல்லும்படி சமயம் தேடிக்கொண்டிருந்தார். 

இவர் பெரிய வெள்ளிக்கிழமை அன்று ஆயுதபாணியாய்ப் பிரயாணஞ் செய்கையில் தன் சகோதரனைக் கொன்றவன் ஆயுதமின்றி தனியாக வருவதைக் கண்டு அவனைக் கொல்லும்படி வாளை ஓங்கினார். உடனே அவன் தாழப்பணிந்து கர்த்தருடைய பாடுகளின் பேரில் தன்னை மன்னிக்கும்படி மன்றாடினான். 

அக்கணமே ஜான் அவனுக்கு மன்னிப்பு அளித்து, அவனுடன் சமாதானமாய்ப் போனார். இவர் அங்கே அருகாமையிலிருந்த கோவிலில் பிரவேசித்து, பாடுபட்ட சுரூபத்திற்கு முன் வேண்டிக்கொண்டிருக்கையில் அந்தச் சுரூபம் தன் பக்கமாய்த் தலை குனிகிறதைக் கண்டு, அதிசயித்து, அன்றே உலகத்தைத் துறந்து துறவியானார். 

பிறகு இவர் ஒரு சந்நியாச மடத்தை ஸ்தாபித்து அதில் சேர்ந்த அநேக துறவிகளுக்கு சிரேஷ்டராகி அமைதியாய் வாழ்ந்தார். ஒரு நாள் இவர் வெளியூருக்குப் போயிருந்தபோது இவருடைய விரோதிகள் இவருடைய மடத்தைக் கொள்ளையடித்து, சந்நியாசிகளை அடித்து அவமானப்படுத்தி மடத்தைக் கொளுத்திவிட்டுப் போனார்கள். 

ஜான் மடத்திற்குத் திரும்பினபோது அங்கு நடந்த சம்பவத்தையறிந்து, சந்நியாசிகளை நோக்கி: "சகோதரர்களே, நீங்கள் இப்போது கர்த்தருடைய மெய்யான சீஷர்களாகையால் சந்தோஷமாயிருங்கள்'' என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். இவர் இந்த மடத்தை வெகு காலம் திறமையுடன் நடத்தி ஒருபோதும் அழியாத மோட்ச சம்பாவனையைப் பெற்றார்.

யோசனை 

நாம் நமது விரோதிகளால் உண்டாகும் தீமைகளைப் பொறுத்து அவர்களுக்கு பதில் தீமை செய்யாதிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். நாபோரும் பெலிக்ஸம், வே.