125, 126, 127ம் சங்கீதம்

125ம் சங்கீதம்

ஆண்டவர் சீயோனைச் சேர்ந்தவர்களை அடிமைத்தனத்தில் நின்று மீட்டருளிய போது நாங்கள் சந்தோஷ ஆறுதலடைந்தோம். 

அப்போது எங்கள் வாயில் சந்தோஷப் பாட்டும், எங்கள் நாவில் அகமகிழ்ச்சியும் மெத்தவுண்டாயிற்று.  

ஆண்டவர் அவர்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்தாரென்று மக்களினத்தார் பேசிக் கொள்வார்கள்.  

ஆண்டவர் எங்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தமையால் நாங்கள் வெகு சந்தோஷப் பட்டோம்.  

ஆண்டவரே, தட்சண தேசத்து வெள்ளம் திரும்புவது போல் எங்கள் அடிமைத்தனத்தைத் திருப்பியருளும்.  

கண்ணீர் சொரிந்து கொண்டு விதைக்கிறவர்கள் சந்தோஷப் பட்டுக் கொண்டு அறுப்பார்கள்.  அவர்கள் விதைகளை அள்ளித் தெளிக்கையில் அழுது கொண்டு போனார்கள்.  ஆனால் தாங்கள் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு வருகையில் கம்பீரத்தோடு வருவார்கள்.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....


126ம் சங்கீதம்

ஆண்டவருக்கு ஒரு வீட்டைக் கட்ட சித்தமில்லாவிடில், அதைக் கட்டுகிறவர்கள் வீணாய் உழைக்கிறார்கள்.  

ஆண்டவருக்கு ஒரு பட்டணத்தைக் காக்கப் பிரியம் இல்லாவிடில், அதைக் காக்கிறவன் வீணாக விழித்திருந்து பராமரிக்கிறான்.

விடிகிறதற்கு முன் நீங்கள் எழுந்திருக்கிறது வியர்த்தம்.  துயரமுள்ள அப்பத்தைச் சாப்பிடுகிறவர்களே, நீங்கள் இளைப்பாறின பின்பு எழுந்திருங்கள்.

தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரை தந்தருளின பின்பு, இதோ, (அவர்களுடைய) குழந்தைகள் கர்த்தருடைய பரம்பரைச் சொத்தும், வெகுமதியும், உதரத்தின் கனியுமாம்.

இளமையில் பிறக்கும் புத்திரர் போர்வீரனின் கையிலுள்ள அம்புகளுக்குச் சமானம்.  அவர்களைக் கொண்டு தன் அம்புக் கூட்டை நிரப்புகிற மனிதனே பாக்கியவான்.  

கோட்டை வாசலில் தன் சத்துராதிகளோடே பேசும்போது அவன் வெட்கத்துக்கு உளளாகான்.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....


127ம் சங்கீதம்

ஆண்டவருக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடக்கிறவர்களே பாக்கியவான்கள்.  

நீ உன் கைகளால் உழைத்துச் சாப்பிடுவாய்.  அதனால் நீ பாக்கியவானாயிருக்கிறாய்.  எல்லாம் உனக்கு அனுகூலமாய் இருக்கும்.  

உன் மனைவி உன் வீட்டினுள் மிகுந்த கனி தரும் திராட்சைகொடி போல் இருப்பாள்.  உன் பிள்ளைகளோ உன் மேசையைச் சுற்றியுள்ள ஒலிவக் கன்றுகள் போலிருப்பார்கள். 

இதோ ஆண்டவருக்குப் பயப்படுகிற மனிதன் இப்படித்தான் ஆசீர்வதிக்கப்படுவான்.  நீ உன் வாழ்நாட்களிலே எல்லாம் எருசலேமின் நன்மைகளைக் காணும்படியாகவும், 

நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ராயேலுக்கு உண்டாகும் சமாதானத்தையுங் காணும்படியாகவும் ஆண்டவர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

பிதாவுக்கும், சுதனுக்கும் ....

ஆரம்ப வாக்கியம்: சர்வேசுரனுடைய திருமகளாக இருந்து கொண்டே அவருக்குத் தாயாராகவும், குழந்தைப் பேற்றிலும் ஒரு கன்னிகையாகவும் இருக்கிற எங்கள் ஆண்டவரின் கன்னித் தாயாரே! அகமகிழ்ந்து களிகூர்வீராக.