119, 120, 121ம் சங்கீதம்

119ம் சங்கீதம்

என் துன்ப வேளையில் நான் ஆண்டவரை நோக்கி அபய சத்தமிட்டேன்.  அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார். 

ஆண்டவரே, அநியாயம் பேசுகிற உதடுகளுக்கும் கபடுள்ள நாவுக்கும் என்னைத் தப்புவியும். 

கபடுள்ள நாவே, உனக்கு என்ன கிடைக்கும்?  உனக்கு என்ன பலனுண்டாம்?

வல்லபம் பொருந்திய அவருடைய கூர்மையான அம்புகள் உன்னை எய்யும்.  பற்றிக் கொண்ட கரிகள் உன்னைச் சுடும்.  

ஐயோ! என் பரதேச காலம் நீடித்துப் போயிற்றே! கேதார் நாட்டு வாசிகளோடு நான் குடியிருந்தேன்.  என்னுடைய ஆத்துமா மெத்தவும் தனிமைப் பட்டிருந்தது.  

அவர்களோடுகூட நான்  சமாதானமாய்ப் பேசும்போதும் அவர்கள் சமாதானத்தை வெறுத்து, காரணமின்றி என்னை விரோதித்தார்கள்.
     
பிதாவுக்கும் சுதனுக்கும்....


120ம் சங்கீதம்

பர்வதங்களை நோக்கி என் கண்களை ஏறெடுத்தேன்.  அங்கிருந்து எனக்குச் சகாயம் வரும்.

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து எனக்கு உதவியுண்டாகும்.

அவர் உன் கால் தடுமாற விட மாட்டார். உன்னைக் காக்கிற அவர் நித்திரை செய்கிறதில்லை.

இதோ இஸ்ராயேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை, அயர்ந்து போவதுமில்லை.

ஆண்டவர் உன்னைக் காக்கிறார்.  ஆண்டவர் உன் வலது புறத்தில் உன் அடைக்கலமாயிருக்கிறார்.

பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் உனக்குத் தீங்கு செய்வதில்லை.  

ஆண்டவர் சகல தின்மைகளிலும் நின்று உன்னைக் காக்கிறார்.  

ஆண்டவர் உன் சீவியத்தையும் மரணத்தையும் இப்போதும் எப்போதும் காப்பாராக.

பிதாவுக்கும் சுதனுக்கும்....


121ம் சங்கீதம்

ஆண்டவருடைய வீட்டுக்குப் போவோமென்று எனக்குச் சொல்லப் பட்டவைகளைப் பற்றிச் சந்தோஷப் பட்டேன்.  

எருசலேம் நகரே, எங்கள் பாதங்கள் உன் வாசல் முற்றங்களில் நின்று கொண்டிருந்தன. 

எருசலேம் தன்னில் இசைவிணக்கமுள்ள பட்டணமாகக் கட்டப் பட்டிருக்கிறதாமே.  

இங்கே கர்த்தருடைய கோத்திரங்கள் இஸ்ராயேலுக்கு இடப்பட்ட கட்டளையின்படியே கர்த்தருடைய நாமத்தைத் தோத்தரிப்பதற்கு ஏறிப் போயின.  

ஏனெனில் அங்கே தாவீதுடைய வீட்டின் மேலான ஆசனங்களாகிய நியாய ஆசனங்கள் ஸ்தாபிக்கப் பட்டன. 

எருசலேம் நகருடைய சமாதானத்திற்கானவைகளை மன்றாடிக் கேளுங்கள். உன்னை சிநேகிக்கிறவர்களுக்குப் பூரிப்பு உண்டாகக் கடவது.

உன் வீரத்தில் சமாதானமும், உன் கோட்டைகளில் சம்பூரணமும் உண்டாவதாக.  

என் சகோதரரையும் என்னைச் சேர்ந்தாரையும் பற்றி உனக்காக சமாதானம் பேசினேன்.  நம்முடைய  ஆண்டவராகிய சர்வேசுரனுடைய தேவாலயத்தின் நிமித்தமாக உனக்குச் சகல நன்மையும் தேடினேன்.

பிதாவுக்கும் சுதனுக்கும்....