ஜுன் 10

அர்ச். மார்கரெத்தம்மாள். இராணி (கி.பி.1093)

முத்து என்னும் அர்த்தமுள்ள மார்கரெத் என்னும் பெயர் கொண்ட பெண்மணி இங்கிலாந்து தேசத்தின் இராஜாவான அர்ச். எட்வர்டின் பேத்தி.

இம் மாது இளம் வயதில் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு, அவளுக்குண்டாயிருந்த சரீர அழகிலும் ஆத்தும் செளந்தரியம் அவளிடத்தில் அதிகமாகப் பிரகாசித்து தாழ்ச்சி, பொறுமை, கற்பு, பிறர் சிநேகம் முதலிய புண்ணியங்களில் சிறந்து விளங்கினாள்.

இப்பேர்ப்பட்ட புண்ணியவதியை ஸ்காட்லாந்து தேசத்து அரசன் மணமுடித்துக்கொள்ள பாக்கியம் பெற்றதினால் அத்தேசம் இப் பரிசுத்தவதியால் ஆசீர்வதிக்கப்பட்டு செழித்தோங்கினது.

தன் குடும்பத்தைக் கவனித்து தெய்வ பயமற்ற தன் புருஷனை உத்தம கிறீஸ்தவனாகச் செய்தாள். தன் எட்டு குழந்தைகளையும் தர்ம வழியில் வளர்த்தாள்.

அரண்மனையில் வேலைக்காரர் களை மறந்தவளல்ல. இந்த நல்ல இராணி தன் கணவனுக்கு அரசாங்க விஷயத்திலும் நல்ல ஆலோசனைக் கொடுப்பாள். ஓய்வு நேரத்தில் பீடத்திற்கு வேண்டிய வஸ்திரங்களையும் பூசைப் பட்டுகளையும் தைப்பாள்.

தன் தேசத்தாரில் அநேகர் ஞாயிறு வாரங்களை அனுசரியாமலும் தபசு காலத்தின் ஒழுங்குகளை அசட்டை செய்து பாஸ்குக் கடனைத் தீர்க்காமலும் இருந்ததை அறிந்த இப் புண்ணியவதி, இவர்களைத் திருத்த எவ்வளவு பிரயாசைப் பட்டாளெனில் சில வருஷத்திற்குள் அத் தேசத்தார் வேதக் கட்டளைகளை வெகு நுணுக்கமாய் அனுசரிக்கத் தொடங்கினார்கள்.

இராணியின் அரண்மனை நாள்தோறும் ஏழைகள், கைம்பெண்கள், அநாதைப் பிள்ளைகள் முதலியவர் களால் நிறைந்திருக்கும். அநேக வருடம் இப்புண்ணியவதி நல்ல மனைவி யாகவும் உத்தம் தாயாகவும் விவேகமுள்ள இராணியாகவும் ஜீவித்து நன் மரணமடைந்து மோட்ச முடியைப் பெற்றாள்.

யோசனை 

தேவ காரியங்களுக்கு வேண்டிய வஸ்திரம், பொருட்கள் முதலியவற்றைக் கோவிலுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்க மறக்கக் கூடாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஜெத்தூலியுஸும் துணை., வே.
அர்ச். லாண்ட்ரி , து.
அர்ச். ஹென்றி, து.