நவம்பர் 08

அர்ச். உவில்லாட் ஆயர் - (கி.பி. 789).

உவில்லாட் என்பவருடைய அரிதான புண்ணியங்களையும் தபசையும், தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலியவைகளையும் கண்ட இவருடைய ஆயர் இவருக்குக் குருப்பட்டம் கொடுத்தார். அக்காலத்தில் அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த ஜெர்மன் தேசத்திலேயே வேதம் போதிக்கும்படி இவர் புறப்பட்டுப் போனார்.

அந்நாட்டின் கரையை இவர் அடைந்தவுடன், அந்த தேசத்தார் தமது ஞானப் போதனையைக் கேட்டு சத்திய வேதத்தில் சேரும்படி கண்ணீர் அழுகையுடன் ஆண்டவரை மன்றாடி, தமது ஞான வேலையை துவக்கினார். அந்நாட்டு மக்களில் அநேகர் ஆண்டவருடைய விசேஷக் கிருபையால் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இவர் அந்நாட்டை விட்டு, வேறு நாட்டில் பிரசங்கம் செய்தபோது, தீய மனதுள்ள பசாசால் ஏவப்பட்ட பிறமதத்தினர், இவரையும் இவருடைய தோழர்களையும் தாக்கி, இவரைக் கத்தியால் வெட்டினார்கள். ஆனால் இவர் புதுமையாக சாவிலிருந்து தப்பியதைக் கண்ட அவர்கள், அதிசயித்து இவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

அதற்குப்பின் இவர் ஆயராக அபிஷேகம் பெற்று அத்தேசத்தில் வேதம் போதித்தார். முன்னிலும் அதிக புண்ணிய காரியங்களைச் செய்து, அதிகமாய் ஜெபித்து, பிறருடைய ஆன்ம இரட்சணியத்திற்காக உழைத்துவந்தார்.

இவர் அநேக தேவாலயங்களைக் கட்டி, குருக்களை ஏற்படுத்தி, அவ்விடத்தில் சத்திய வேதம் செழித்தோங்கும்படி செய்தபின் பாக்கியமான மரணமடைந்து மோட்சத்தைச் சுதந்தரித்துக்கொண்டார்.

யோசனை

நமது ஞான எதிரிகள் நமக்கு விரோதமாய் எழும்பி நம்மைக் கெடுக்கப் பார்க்கும்போது, ஜெபத்தாலும் ஒறுத்தல் முயற்சியாலும் அவைகளை வெல்லுவோமாக.