ஜுன் 08

அர்ச். மெடார்ட். மேற்றிராணியார் (கி.பி. 561)

பிரான்ஸ் தேசத்திலிருந்த சிறந்த மேற்றிராணிமார்களில் மெடார்ட் என்பவரும் ஒருவர். மகா பக்தியுள்ள தாயாரால் புண்ணிய வழியில் வளர்க்கப் பட்ட இவர், இளம் வயதிலேயே நன்னெறியில் நடந்தார்.

ஏழைகள் மட்டில் இவருக்கிருந்த இரக்கத்தால் வஸ்திரமில்லாத ஒரு குருடனுக்குத் தாம் தரித் திருந்த வஸ்திரத்தைக் கொடுத்தார். தமது போசனத்தைப் பிச்சைக்காரருக்குப் பலமுறை பரிமாறுவார்.

ஒருவனுடைய குதிரை இறந்ததினால் அவனுக்குப் பிழைக்க வழியில்லாததை இவர் அறிந்து, தமது தகப்பனாருடைய குதிரைகளில் ஒன்றை அவனுக்குக் கொடுத்த பிறகும் அக்குதிரைகளின் எண்ணிக்கை குறையாமலிருப்பதைக் கண்டவர்கள் அதிசயித்தார்கள்.

இவர் சிறுவராயிருந்த போது வெயிலில் நடக்கையில் அவர் மேல் வெயில் படாதபடி ஒரு கழுகு அவருக்கு மேல் பறந்துகொண்டிருந்தது.

இவர் வெகு நேரம் ஜெபம் செய்வார். இரவிலும் சர்வேசுரனை மன்றாடுவார். அடிக்கடி கடின ஒருசந்தி உபவாசம் இருப்பார். தேவதாயார் மட்டில் விசேஷ பக்தி வைத்தார்.

அவர் குருப்பட்டம் பெற்றபின் மேற்கூறிய புண்ணியங்களில் அதிகரித்து ஆத்தும இரட்சண்யத்திற்காக கடினமாய் உழைத்தார். அவ்வூர் மேற்றிராணியாருக்குப்பின் மெடார்ட் அந்த பட்டத்திற்குத் தெரிந்துகொள்ளப்பட்டார்.

இவர் இன்னும் அஞ்ஞானத்தில் மூழ்கியிருந்த அத்தேசத்தாருக்குப் புத்திமதி சொல்லி, அநேகம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

இவரால் தங்கள் மதம் அழிவதைக் கண்ட அஞ்ஞானிகள் இவரைக் கொல்ல முயற்சித்தபோது இவர் புதுமையாகத் தப்பித்துக்கொண்டார்.

இந்த அர்ச்சியசிஷ்டவர் தமது புண்ணியங்களாலும் அற்புதங்களாலும் பிரசித்தி பெற்று, இரு மேற்றிராசனங்களைப் பரிபாலித்து, ரெடேகாண்டஸ் என்னும் இராணிக்கு கன்னியாஸ்திரி பட்டம் கொடுத்தபின் தமது 88-ம் வயதில் வியாதியுற்று, பிரஜைகளும் பிரபுக்களும் துக்கித்து அழ, இவ்வுலகத்தை விட்டு மோட்ச சம்பாவனைக்குள்ளானார்.

யோசனை 

தேவ பக்தர் ஜெப தபத்தாலும் ஏகாந்தத்தாலும் அர்ச்சியசிஷ்டவர்கள் ஆகிறார்கள் என்று அறிந்து, நாமும் அவற்றை கடைப்பிடிக்க முயற்சிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். கில்டர்ட், மே.
அர்ச். மாக்ஸிமினுஸ், மே.
அர்ச். வில்லியம், அதிமே.