மே 07

அர்ச். ஸ்தனிஸ்லாஸ். மேற்றிராணியார், வேதசாட்சி (கி.பி. 1079)

ஸ்தனிஸ்லாஸ் பெற்றோர் புத்திர பாக்கியமில்லாத குறைவால் வேதனைப்பட்டு ஜெப தபத்தால் சர்வேசுரனைப் பார்த்து பிள்ளை வரத்திற்காக மன்றாடினதின் பேரில் ஸ்தனிஸ்லாஸ் பிறந்தார்.

இவர் இளம் வயதில் கல்வியில் தேர்ந்து புண்ணிய வழியில் வாழ்ந்து குருப்பட்டம் பெற்றார். இவருக்குண்டா யிருந்த அரியப் புண்ணியங்களையும் கல்வி சாஸ்திரங்களையும் குறித்து கிராக்கோ நகருக்கு மேற்றிராணியாரானார்.

இந்த புண்ணியப் பட்டத்திற்கு இவர் உயர்த்தப்பட்டபின் ஜெப தபங்களையும் ஒறுத்தல் முயற்சிகளையும் வெகுவாக அனுசரித்து, தமது மேற்றிராசனத்திலுள்ள கிறிஸ்தவர்களின் ஊர்களுக்குச் சென்று பிரசங்கத்தாலும் புத்திமதியாலும் பாவிகளை மனந்திருப்பினார்.

ஆனால் அத்தேசத்து அரசனான போலெஸ்லாஸ் என்பவனுடைய காமாதுர நடத்தை யால் அத்தேசத்தில் துர்மாதிரிகை உண்டானதைப்பற்றி ஸ்தனிஸ்லாஸ் அவனுக்குப் பலமுறை கூறிய புத்திமதிக்காக, அவன் இவர் மட்டில் கோபங் கொண்டு பலமுறை அவரைப் பழிவாங்க முயற்சித்தான்.

மேற்றிராணியார் ஒருவனிடத்தில் வாங்கிய நிலத்திற்குரிய பணத்தைக் கொடுக்கவில்லையென்று அரசன் அநியாயமாகத் தீர்ப்பு கூறும் நேரத்தில் இவர் ஜெபத்தாலும் ஒருசந்தி யாலும் சர்வேசுரனை மன்றாடித் தமக்கு நிலம் விற்பனை செய்து இறந்துபோன பீற்றர் என்பவனைக் கல்லறையிலிருந்து எழுப்பி, அரசனிடம் அழைத்துச் சென்ற போது, மேற்றிராணியார் நிலத்தின் கிரயத்தை தனக்குக் கொடுத்ததாக பீற்றர் சாட்சி கூறினான்.

இதைக் கண்ட அரசன் அதிசயித்த போதிலும் முன்னிலும் அதிக தீய வழியில் நடந்தபடியால் ஸ்தனிஸ்லாஸ் அவனுக்கு சாபமிட்டார். இதனால் அரசன் கோப வெறிகொண்டு 3 பட்டாளங்களைக் கூட்டிக்கொண்டு கோவிலில் பூசை செய்யும் மேற்றிராணியாரை கொல்லும்படிக் கட்டளையிட்டான்.

ஒவ்வொரு சேவகனும் பீடத்தினருகில் சென்றபோது அங்கு காணப் பட்ட மோட்ச பிரகாசத்தால் பின்வாங்கியதைக் கண்ட கொடுங்கோலன் மேற்றிராணியாரைத் தானே கத்தியால் குத்திக் கொன்றான்.

யோசனை

ஒரு சபை அல்லது குடும்பத்தின் தலைவர், தம் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் தம்முடைய புத்திமதிக்கு அடங்காமல் துர்மாதிரிகை வருவிக்கும்போது அவர்களைக் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.