ஜுன் 04

அர்ச். கராச்சியோலோ பிரான்சிஸ். துதியர் (கி.பி. 1608) 

இவர் நேப்பிள்ஸ் நாட்டில் பிரபுக்கள் கோத்திரத்தில் பிறந்தார். சிறு வயதில் விளையாட்டு வேடிக்கையை விட்டு, புண்ணிய வழியில் நடந்து, அடிக்கடி ஜெபமாலை ஜெபித்து தேவநற்கருணையைச் சந்தித்து பல முறை தமது போசனத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பார்.

இவரைப் பாதித்த குஷ்டரோகம் அற்புதமாய் குணமானபின், உலக இன்பங்கள் வீண் என்று உணர்ந்து, அதை வெறுத்துத் தள்ளி குருப்பட்டம் பெற்று முதற் பூசை செய்தபோது ஒரு பக்திசுவாலகரைப் போல் காணப்பட்டார்.

தேவ ஏவுதலால் ஒரு புது சந்நியாச சபையை ஸ்தாபித்து, ஜெபத் தியானத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் சர்வேசுரனுக்கு உத்தமமாய் ஊழியஞ் செய்துவந்தார்.

தமது சந்நியாசிகளும் அவ்விதமே கடின தபம் செய்யும்படி புத்தி சொல்லி, தமது மடத்துக் கோவிலில் இரவும் பகலும் தேவநற்கருணையை ஸ்தாபித்து சகலரும் முறையே இடைவிடாமல் நற்கருணைநாதரைச் சந்திக்கும்படி ஏற்பாடு செய்தார்.

இவர் தமது சபைக்கு அதிசிரேஷ்டராக ஏற்படுத்தப்பட்டபோது இடைவிடாமல் ஜெபஞ் செய்தும், அருந் தவம் புரிந்து தமது மடத்திலுள்ள தாழ்ச்சிக்குரிய வேலைகளைச் செய்தும் மற்றவர்களுக்கு நன்மாதிரிகையாய் விளங்கினார்.

இதனால் இவர் அற்புதங்களைச் செய்யவும் தீர்க்கதரிசனங்களை உரைக்கவும் வரம் பெற்றார். இவர் பாப்பாண்டவராலும் அரசராலும் கனமாய் மதிக்கப்பட்ட போதிலும் தம்மை ஒன்றுக்கும் உதவாதவரென்று எண்ணினார்.

தமது மடத்திற்காக கால்நடையாய் நடந்து கடின பிரயாணங்களை மேற்கொண்டு, கடைசியாய் அவர் அறிவித்த நாளில் பாக்கியமான மரணமடைந்தார்.

யோசனை 

நாமும் தேவநற்கருணை மீது அதிக பக்தி வைத்து நாள்தோறும் தேவநற்கருணையைச் சந்திக்கப் பழகுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். குயிரினுஸ், மே.வே..
அர்ச். ஒப்தாதுஸ், மே.
அர்ச். வால்டர், ம.
அர்ச். பெட்ராக், ம.
அர்ச். ப்ரேயாக்கா, க.
அர்ச். பூரியன், க.
அர்ச். நெனாக். க.