அர்ச். சார்லஸ் பொரோமெயோ பேராயர் - (கி.பி. 1584).
இத்தாலி தேசத்தில் உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்த சார்லஸ், சிறுவனாயிருக்கும்போதே அர்ச்சியசிஷ்டதனத்தில் சிறந்து விளங்கினார். இவர் தனிமையில் மனித நடமாட்டமில்லாத இடத்தில் |அமர்ந்து, ஜெபத் தியானங்களைச் செய்வார்.
தமது கைக்கு கிடைக்கும் பணத்தைப் பிச்சைக்காரருக்குக் கொடுப்பார். கற்பென்னும் புண்ணியத்தை சிறிதும் பழுதின்றி காப்பாற்றினார். இவர் மேலான சாஸ்திரங்களைப் படித்து முடித்தபின், இவருக்கு பாப்பரசர் கர்தினால் பட்டம் கொடுத்தார். சில காலத்திற்குப் பின் இவர் மிலான் பட்டணத்திற்கு பேராயராக நியமிக்கப்பட்டார்.
அநேக வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட திரிதெந்த் என்னும் சங்கம் இவருடைய முயற்சியால் அனுகூலமாய் முடிவடைந்தது, இதில் தீர்மானிக்கப்பட்ட திருச்சபை சட்டதிட்டங்களைத் தமது மறைமாவட்டக் கிறீஸ்தவர்கள்; அனுசரிக்கும்படி சகல முயற்சிகளையும் மேற்கொண்டார்.
இந்தச் சட்டங்களுக்கு உட்பட மனமில்லாத சில துஷ்டர், இவர் உயிரைப் பறிக்க சமயம் பார்த்திருந்தார்கள். வேறு சில துஷ்டர் இவரைத் துப்பாக்கியால் சுட்டார்கள். ஆனால் சார்லஸ் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டார்.
இவர் தமது கிறீஸ்தவர்களை பிரசங்கத்தாலும், தர்ம மாதிரிகையாலும் நல்ல கிறீஸ்தவர்களாக்கினார். அநேக பதிதரை மனந்திருப்பினார். ஏழைகளுக்கு ஏராளமாய் தர்மம் கொடுத்துவந்தார். கடின ஒருசந்தி இருந்து, இரத்தம் வரத் தம்மை அடித்துக்கொள்வார்.
கொள்ளை நோய் பரவிய காலத்தில், இவர் வீடு வீடாகப் போய் உதவி செய்து, தமது கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டிக்கொண்டு தேவ கோபம் அமரும்படி மன்றாடுவார். சேசுநாதர் பாடுகளின் மட்டில் அதிக பக்தி வைத்து அதைக் குறித்துக் கண்ணீர் அழுகையுடன் தியானம் செய்வார்.
இவர் திருச்சபைக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, ஆண்டவருடைய திருப்பாடுகளைத் தியானித்து, வியாதியுற்று, "இதோ வருகிறேன்" என்று உச்சரித்து பாக்கியமான மரணமடைந்தார்.
யோசனை
நமக்குரிய கடமைகளைப் பிரமாணிக்கமாய் அனுசரிக்க, நாள்தோறும் பிரதிக்கினை செய்வோமாக.