டிசம்பர் 03

அர்ச். பிரான்சிஸ் சவேரியார். கி.பி. 1552.

இந்திய தேசத்திற்கு அப்போஸ்தலரான பிரான்சிஸ் சவேரியார், ஸ்பெயின் தேசத்தில் பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்து, பாரிஸ் நகரில் உயர்ந்த சாஸ்திரங்களைக் கற்பிக்கையில், அர்ச். இஞ்ஞாசியார் பலமுறை சவேரியாரைப் பார்த்து, ‘’ஒருவன் உலகமெல்லாம் தனக்கு ஆதாயமாக்கிக்கொண்டாலும், அவன் தன் ஆத்துமத்தை இழந்துபோனால்  அதனால் அவனுக்கு என்ன பயன்?’’ என்னும் சுவிசேஷ வாக்கியத்தைச் அடிக்கடி சொல்வார்.

சவேரியார் இந்த வாக்கியத்தின் அர்த்தத்தை உணர்ந்து உலகத்தை வெறுத்து, அர்ச். இஞ்ஞாசியாருடன் சேசு சபையில் சேர்ந்தார். இவர் அரிதான புண்ணியங்களைச் செய்து, இந்திய தேசத்திற்கு வேதம் போதிக்கும்படி புறப்பட்டு வந்தார்.

பிற மதங்கள் நிறைந்த இத்தேசத்திற்கு வந்தபின், பக்தியான ஜெபத் தியானங்களாலும், கடுந்தவத்தாலும் வேதம் போதிக்க முயன்றார். பசி தாகத்தையும் கடும் பிரயாணங்களையும் பொருட்படுத்தாமல் தூர தேசங்களுக்குச் சென்று பிரசங்கம் பண்ணுவார்.

இரத்தம் வரத் தம்மை அடித்துக்கொண்டு ஒரு சந்தி பிடித்து, தாழ்ச்சி, தலைவணங்குதல், தரித்திரம் முதலிய புண்ணியங்களை உத்தமமாய் அனுசரித்து பிற மதத்தினரை சத்தியவேதத்தில் சேர்க்கவும், பாவிகளை மனந்திருப்பவும் வேண்டிக்கொள்வார்.

இறந்துபோன அநேகருக்கு உயிர் கொடுத்து, கணக்கற்ற நோயாளிகளை சுகமாக்கி, பசாசை ஓட்டி, உப்பு நீரை நல்ல நீராக மாற்றி, அறியாத பாஷைகளில் பேசி, காற்றையும் புயலையும் அமர்த்தினார். இவ்வாறு கணக்கற்ற அற்புதங்களைச் செய்ததைக் கண்ட திரளான ஜனங்கள், சத்தியவேதத்தில் சேர்ந்தார்கள்.

அநேக அரசரும் மந்திரிகளும் கிறீஸ்தவர்களானார்கள். அநேக லட்சம் பேருக்கு சவேரியார் தமது கையால் ஞானஸ்நானம் கொடுத்தார். ஒருநாள் இவர் படகில் செல்லும்போது, கையிலிருந்த பாடுபட்ட சுரூபம் தவறி கடலில் விழுந்தது.

சில நாட்கள் கழித்து இவர் கரை சேர்ந்தபின், ஒரு நண்டு அந்தச்  சிலுவையைக் கௌவிக்கொண்டு இவர் அருகில் வந்தபோது, இவர் அதை எடுத்துப் பக்தியுடன் முத்தி செய்தார். அர்ச். சவேரியார் சீன தேசத்திற்கு வேதம் போதிக்கப் போவதற்காக ஒரு தீவில் தங்கியிருக்கையில், மரணமடைந்து நித்திய பாக்கியத்தைக் கைக்கொண்டார்.

யோசனை

ஒருவன் உலகமெல்லாம் தனக்கு ஆதாயமாக்கிக்கொண்டாலும், அவன் தன் ஆத்துமத்தை இழந்துபோனால் அதனால் அவனுக்கு என்ன பயன்? என்னும் வாக்கியத்தை அடிக்கடி நினைவு கூறுவோமாக.