அக்டோபர் 03

அர்ச். ஜெரார்ட் - மடாதிபதி (கி.பி. 459) 

ஜெரார்ட் பிரான்ஸ் தேசத்தின் சிறந்ததோர் பிரபுவின் சேனாதிபதி. இவருக்குண்டாயிருந்த பக்தி, புத்தி, பிறர்சிநேகம், எதார்த்தம், பிரமாணிக்கம் முதலிய நற்குணங்களினால் சகலரும் இவரை நேசிப்பார்கள். 

பிரபுவோவெனில் புண்ணியவாளரான ஜெரார்ட் மட்டில் அதிக நேசங்கொண்டு அவருடைய பிரமாணிக்கத்தைப் புகழ்ந்து, முக்கியமான வேலைகளை அவரிடம் ஒப்படைப்பார். ஜெரார்ட் தருமத்தில் மிகுந்த பணத்தை செலவு செய்ததினால், அதற்குக் கைம்மாறாக சர்வேசுரன் அவருக்கு விசேஷக் கொடைகளை அளிக்கச் சித்தமானார். 

ஜெபத்தின் மட்டில் இவருக்கு எவ்வளவு பிரியம் இருந்ததென்றால், வேலையில்லாத பொழுது வெகு நேரம் கோவிலில் ஜெபஞ் செய்வார். 

ஒருநாள் பிரபுவின் கட்டளைப்படி ஜெரார்ட் பிரான்ஸ் அரசரிடம் ஒரு முக்கியமான விஷயமாகச் சென்று, அங்கிருந்த சன்னியாச மடங்களிலுள்ள புண்ணியவாளரைக் கண்டு பேசிய போது, அவருக்கு தேவ அழைத்தல் உண்டாகி, தன் பிரபுவின் உத்தரவு பெற்று, ஆசீர்வாதப்பர் மடத்தில் சேர்ந்து, சகல புண்ணியங்களையும் உத்தம விதத்தில் நடத்தி, உலகத்தை முற்றும் துறந்து, தேவ ஊழியத்தில் மிகவும் கவனத்துடன் நடந்து வந்தார். 

ஜெபத்தில் வெகு நேரம் செலவழிப்பார். தேவநற்கருணைக்குமுன் அத்தியந்த பக்தியுடன் ஜெபிக்கும்போது பரவசமாவார். தேவதாயாரை மகா அன்புடன் நேசித்து, அப்பரம நாயகியின் சுரூபத்திற்குமுன் வெகு நேரம் வேண்டிக்கொள்வார். 

இவர் புதுமை வரம் பெற்றார். இவர் அநேக புது மடங்களை ஸ்தாபித்து, வெகு திறமையுடன் சன்னியாசிமாரை நடத்தி, அவர்களுக்கு தேவையானப் புத்திமதி களைச் சொல்லி, அர்ச்சியசிஷ்டதனத்தில் அதிகரிக்கும்படி செய்து, தளர்ந்த வயதில் பாக்கியமான மரணமடைந்து மோட்ச சம்பாவனையைக் கைக் கொண்டார்.

யோசனை

புண்ணியத்தில் ஆசைகொள்வது மாத்திரம் போதாது. அந்த ஆசையை நிறைவேற்றவும் வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். டியோனீசியுஸ், மே.வே. 
அர்ச். ஈவால்ட்ஸ் , வே.