மே 01

அர்ச். பிலிப்பும் ஜேம்ஸம். (அப்போஸ்தலர்கள்) 

நமது கர்த்தர் பெத்சாயிதா என்னும் ஊரில் பிலிப் என்பவரை தம்மைப் பின்செல்லும்படி அழைத்தார். அதற்கு அவர் நான் என் வீட்டுக்குப் போய் என் தகப்பனை அடக்கஞ் செய்துவிட்டு வருகிறேன் என்றார். மரித்தவர்கள் மரித்தவர் களைப் புதைக்கட்டும், நீ நம்மைப் பின்செல் என்ற மாத்திரத்தில் பிலிப் கர்த்தரைப் பின்சென்றார்.

பிறகு பிலிப், நத்தானியேல் என்பவரை சேசுநாதரிடம் அழைத்துக்கொண்டு வந்தார். இவர் கர்த்தருடைய பிரசங்கங்களைக் கேட்கவும் புதுமைகளைப் பார்க்கவும் பாக்கியம் பெற்றார்.

இராப்போசனத்திற்குப்பின் சேசு நாதர் தமது பிதாவைப்பற்றி பிரசங்கித்தபோது, சுவாமி பிதாவை எங்களுக்குக் காட்டும். அதுவே போதுமென்று பிலிப் சொன்னதை நமது கர்த்தர் கேட்டு, பிதாவோடு நானும் என்னோடு பிதாவும் இருக்கிறாரென்று அறிவாயாக என்றார்.

அர்ச். பிலிப் தரிஜியா தேசத்தில் வேதம் போதித்து முதிர்ந்த வயதில் மரித்து நித்திய சம்பாவனையைப் பெற்றார்.

ஜேம்ஸ் அல்லது சின்ன யாகப்பர் என்பவர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவர். கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் ஜேம்ஸ் ஜெருசலேம் நகருக்கு மேற்றிராணியாரானார்.

இவர் ஒருசந்தி உபவாசமிருந்து பெருந் தபசியாய் இருந்தார். இவர் இடைவிடாமல் சாஷ்டாங்கமாய் விழுந்து ஜெபஞ் செய்தமையால் இவருடைய இரு முழங்கால்களும் நெற்றியும் ஒட்டகத்தின் குளம்பு போல உறுதியாய் காய்த்துப் போயின.

மழையின்மையால் பஞ்சமுண்டான போது, ஜேம்ஸ் தமது கைகளை விரித்து ஜெபித்த மாத்திரத்தில் பெரும் மழை பெய்தது.

இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்ட யூதர்கூட இவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைப் பக்தியுடன் தொடுவார்கள். இவர் ஒரு பொது நிருபம் எழுதினார்.

இவருடைய ஜெபத்தையும் தபத்தையுங் கண்ட யூதர் இவரை நீதிமான் என்பார்கள். அர்ச். சின்னப்பர் யூதர் கையினின்று தப்பித்துக்கொண்ட போது, துஷ்ட யூதர் தங்கள் கோபத்தை ஜேம்ஸ்மேல் காட்டி அவரைக் கல்லாலெறிந்து கொன்றார்கள்.

யோசனை

யாதொருவனுக்கு தேவ அழைத்தல் உண்டாகும்போது இரத்தப் பாசத்தையும் முகத்தாட்சண்யத்தையும் பாராமல் தேவ அழைப்புக்குக் காது கொடுக்க வேண்டும்.