பிப்ரவரி 01

அர்ச். இஞ்ஞாசியார். வேதசாட்சி (கி.பி. 107). 

இவர் அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் ஞானஸ்நானம் பெற்று, அவருக்கு சீஷனாகி, அந்தியோக்கியா நகரின் மேற்றிராணியாராக நியமிக்கப் பட்டார். சக்கரவர்த்தியான தொமீஷியன் காலத்தில் நடந்த பயங்கரமான வேத கலாபனையில், இவருடைய மேற்றிராசணக் கிறிஸ்தவர்கள் இவர் புரிந்த ஜெபதபத்தால் காப்பாற்றப்பட்டார்கள்.

ஆனால் திராஜான் என்பவன் சக்கரவர்த்தியானபின் அந்தியோக்கியாக்குச் சென்று, கிறிஸ்தவர்களை வேதத்தின் நிமித்தம் உபாதிக்கையில், அவன் அர்ச். இஞ்ஞாசியாரைப் பார்த்து "நீ யார்? பேயனே” என்றதற்கு, “சர்வேசுரனை என்னில் கொண்டிருக்கும் என்னைப் பேயன் என்று அழைக்க வேண்டாம்” என்றார். இவர் கிறிஸ்தவ வேதத்தை மறுதலித்து, பொய்த் தேவர்களை ஆராதியாததைக் கண்ட இராயன் இவரைத் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடும்படி தீர்ப்பு கூறினான்.

அவ்வாறே, இவர் காவல் சேவகருடன் உரோமைக்குக் கொண்டுபோகும் வழியில் ஆங்காங்கு சிதறிப்போயிருந்த கிறிஸ்தவர்கள் இவருடைய புத்திமதிகளைக் கேட்கவும், இவர் ஆசீர் பெறவும் கூட்டங்கூட்டமாய் இவரிடம் போவார்கள். இவர் உரோமையை அடைந்து அரங்கத்தில் நிறுத்தப்படவே, “சர்வேசுரனுடைய கோதுமையாகிய நான் அவருக்கு உகந்த அப்பமாகச் சமர்ப்பிக்கப்பட சிங்கங்களின் பற்களால் அரைக்கப்படப் போகிறேன்” என்றார்.

உடனே அவர் மேல் விடப்பட்ட சிங்கங்கள் அவரைக் கடித்துக் குதறி விழுங்கின. அங்கு மீதமிருந்த அவருடைய சில எலும்புகளை விசுவாசிகள் பக்தியோடு எடுத்துக்கொண்டுப் போனார்கள்.

யோசனை

இவர் எழுதிய நிருபங்களில் திருச்சபைக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஐக்கியம் இருக்க வேண்டுமென்று உணர்த்தியதுபோல், நாம் திருச்சபைக்கு உகந்த பிள்ளைகளாய் நடப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பியோனியுஸ், வே.
அர்ச். பிரிஜிட், க.
அர்ச். கின்னியா, க.
அர்ச். சிஜ்பெர்ட், து. இ.