மனந்திரும்பிய திருடர்கள்

களவு செய்யாமல் இருப்பாயாக என்பது பத்துக் கற்பனைகளில் ஒன்று. பிறர் பொருளைக் கவர்வதால், பிறருக்கு ஏற்படுவது இழப்பு; இதனை ஈடு செய்வதுவரையில் தண்டனைக்கு ஆளாக வேண்டும். பல சமயங்களில் திருட்டால் கொலை நடைபெறுவதும் உண்டு. ஒன்றும் அறியாதவர்கள், கொடூரமாய் தாக்கப்பட்டு குற்றுயிராய் கிடக்கும் நிலையும் வருகிறது.

திருட்டுத்தொழில், முதல் இல்லா வியாபாரம் என எண்ணி அதைச் செய்து வந்த கொள்ளைக் கும்பலொன்று அந்தோனியார் பிரசங்கம் செய்யும் இடம் சென்றது. மறை உரை கேட்க வரும் திரளான மக்களிடம் வழிப்பறி செய்யலாம் என்பது. இவர்கள் திட்டம். கூட்டத்தோடு கூட்டமாய் இவர்கள் கலந்து விட்டனர். இதை அந்தோனியார் பார்த்து விட்டார். திருட்டின் இழி நிலையையும் அது கொண்டு வரும் நித்திய தண்டனையையும் எடுத்துக் கூறினார். சிலுவையில் அறையப்பட்ட கள்வன் தீஸ்மாஸ் ஆண்டவரிடம் இரந்து மன்றாடி பரம் அடைந்ததை விளக்கி, மனம் வருந்தினால் மன்னிப்பு உண்டு என்று உருக்கமாய்ச் சொன்னார்.

திருடர்கள் பலர் அவர் பிரசங்கம் கேட்டு மனம் திரும்பினர். அந்தோனியாரிடம் சென்றனர். மீண்டும் திருடச் சென்றால் மடிவது உறுதி என அந்தோனியார் புத்தி சொன்னார். சிலருக்கு அது செவிடர் காதில் ஊதிய சங்கு போலாயிற்று. பழைய தொழிலுக்கே திரும்பினர் அவ்வாறு சென்றவர்கள் மற்றொரு கொள்ளைக் கூட்டத்தாரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மற்றவர் பிழைத்தனர். இவ்வரலாற்றை, தப்பிய ஒரு திருடனே வெளியிட்டான். இல்லாததை உள்ளதாக கற்பனை செய்து பேசுபவர் அந்தோனியார் அல்லவே!

அவன் இதனை 1292 ஆம் ஆண்டு, ஒரு அசிசியார் சபைத் துறவியிடம் வெளியிட்டான். அந்தோனியார், அவன் பாவப்பரிகாரமாக 12 முறை உரோம் தூய இராயப்பர், சின்னப்பர் கல்லறையை ஆண்டு தோறும் சந்தித்து வரவேண்டும் எனக் கட்டளையிட்டதாயும், இதை தான், இப்பொழுது முடித்து விட்டதாகவும் உரைத்தான். தன் பழைய வாழ்வை நினைக்கும் போது கண்ணீர் வடித்து வருந்துவதாயும் அறிக்கையிட்டான். இப்பொழுது தனக்கு மன அமைதி உள்ளதாகவும் உரைத்து தன்னை நல்வழிப்படுத்திய அந்தோனியாரை நெஞ்சாரப் புகழ்ந்தான்.

பாப்பிறையின் திருமுகம் -பயா பாப்பிறை 9வது கிரகோரியார் அந்தோனியாருக்கு ஒரு திருமுகம் அனுப்பினார். அவர் எழுதிய ஞாயிற்றுக்கிழமைப் பிரசங்கங்கள் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தமையால் முக்கிய திருநாட்களின் போது ஆற்ற வேண்டிய பிரசங்கங்களையும் அவரையே எழுதிட அவ்வாணையில் பணித்திருந்தார்.

"அன்புச் சகோதரர் அந்தோனியாரே! நீர் திருச்சட்ட கற்பலகை, ஞானத்தின் கருவூலம், உண்மையான வாக்குத்தத்த பெட்டகம், உமது சபை விதிக்கும் பணிகள் அனைத்திலிருந்தும் உம்மை விடுவிக்கிறேன். நீர் ஏனைய சகோதரர்களின் முன்மாதிரிகையாக நம்மால் நியமிக்கப்பட்டுள்ளீர். இது முதல் செபம், பிரசங்கங்களை எழுதுதல், மறை உரை ஆற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவீராக. நீர் விரும்பும் இடமெல்லாம் போகலாம், போதிக்கலாம்'' எனத் திருமுகத்தில் எழுதியிருந்தார்.

1231ஆம் ஆண்டு பாப்பிறை பணித்த பணியைத் தொடங்கினார். தூய சின்னப்பர் திருநாள்வரை எழுதி முடித்தார். இவ்வேலையை தான் இவ்வுலகில் முடிக்கப் போவதில்லை என அவர் அறிந்தார். பாவிகளை கரை சேர்ப்பதில் அவர் அதிக ஆன்ம தாகம் உடையவராய் இருந்தார். இது என்றுமே அவரில் தணியவில்லை . ''நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்ற ஆண்டவரின் அருள் வாக்கை தன் நெறி எனக் கொண்டார்.

"முடிவில்லா வாழ்வை பெறும் பொருட்டு அந்த ஒரே பேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” (அரு 3:16)