ஸ்நாபக அருளப்பர் ஆண்டவரை ஆர் என்று ஆராயத்தக்கதாகச் சீஷரை அனுப்பினார்!

சுவிசேஷக மத்தேயு பதினோராம் அதிகாரத்தில் எழுதிவைத்த வாக்கியமாவது:

அந்தக்காலத்திலே அருளப்பர் கிறீஸ்துநாதருடைய செய்கைகளைப் பற்றிச் சிறைச்சாலையில் கேள்விப்பட்டபோது தம்முடைய சீஷர்களில் இருவரை அனுப்பி வரவேண்டியவர் நீர் தாமோ, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமோ என்று கேட்பித்தார். யேசுநாதர் அவர்களுக்கு மறு மொழியாகச் சொன்னதாவது: நீங்கள் போய், கேட்டவைகளையும், கண்டவைகளையும் அருளப்பருக்கு அறிவியுங்கள். குருடர் காண்கிறார்கள், முடவர் நடக்கிறார்கள், குஷ்ட ரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிர்த்தெழும்புகிறார்கள், ஏழைகள் சுவிசேஷம் போதிக்கப்படுகிறார்கள், என் மட்டில் இடறல்படாதவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போன பின்பு யேசுநாதர் அருளப்பரைக் குறித்து ஜனக்கூட்டத்தை நோக்கிச் சொல்லத் துவக்கினதாவது:- நீங்கள் கானகத்தில் எதைப் பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசைந்தாடுகிற நாணலையோ? பின்னை எதைத்தான் பார்க்கப் போனீர்கள் ? மெல்லிய உடைகளை அணிந்த மனிதனையோ! இதோ மெல்லிய உடையணிகிறவர்கள் இராஜமாளிகைகளில் இருக்கிறார்களே. அல்லவென்றால் எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்க தரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியிலும் மேற்பட்டவரைத்தான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால் இதோ என் தூதனை உமது சமுகத்துக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே உமது வழிகளை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதப்பட்டது இவரைப்பற்றித்தான் - என்று திருவுளம் பற்றினார்.

பிரசங்கம்.

இந்தச் சொல்லப்பட்ட வாக்கியத்திலே விசாரிக்கும் விசேஷமாவது : ஸ்நாபக அருளப்பர் ஆண்டவரை ஆர் என்று ஆராயத்தக்கதாகச் சீஷரை அனுப்பினார் என்று சொல்லப்பட்டதே. அதுக்குக் காரணம் ஏதென்றால் : அவர் கிறீஸ்துநாதரை அறியாமல் இருந்ததினால் கேட்டனுப்பினதல்ல. தேவகுமாரன் மனுஷரை ஈடேற்றத்தக்கதாக மனுஷனாய்ப் பிறந்துவந்தார் என்று தாய்வயிற்றினின்று தானே தேவவரத்தால் அறிந்திருந்தார். ஆனால் தம்முடைய சீஷர்கள் அந்தவகை அறியாமல் இருந்ததினால் மோசம் போகாமல் அவர்கள் தங்கள் கண்ணாலே ஆண்டவரைக் கண்டறிந்து விசுவாசியாய்ப்போக வேண்டும் என்பதற்கு அவர்களை அனுப்பினார் என்று அறியவும்.,

ஆனால் அத்தால் எங்களுக்குள்ள படிப்பினையாவது: இந்த லோகத்திலே நடக்கப்பட்ட வேதம், குரு, தெய்வம் முதலானதுகள் எல்லாம் கண்ட மாத்திரத்திலே உண்மை என்று விசுவசிக்கக்கடவதல்ல. அதேதெனில், நல்ல பணத்தோடே செல்லாப்பணமும் நடக்குமாப்போலே சர்வேஸ்பரனுடைய சத்திய வேதத்தோடே பொய்மதம், அசத்தியகுரு, தெய்வம் முதலானதுகள் பூலோகத்திலே மிகுதியும் நடக்கிறதுண்டு. ஆனதினால் பொன், வெள்ளியை அறவைத்தும், கல்லில் உரைத்தும் தெரிந்தெடுக்குமாப்போலே வேதமும், குருவும், தேவனும் புத்தியினாலே நன்றாய் விசாரித்து, கேட்டு அறியவேண்டும் என்று படிப்பித்தார். அப்படியே தேவசுபாவத்துக்கடுத்த இலக்ஷணங்களுண்டானவர் தேவன் என்றும், அவர் அருளிச்செய்த சுகிர்த நெறியுண்டானால் வேதம் என்றும், ஏழுபட்டந் தரித்து அந்த வேதம் படிப்பிக்கிறவன் குரு என்றும் கண்டுபிடிக்கிறதல்லாதே அப்படிக்கொத்த அடையாளம் இல்லாமல் யாதொருத்தன் தன் வாக்கால் தன்னைத் தேவன் என்றும், குரு என்றும் சொன்னதினால் மாத்திரம் அங்கீகரிக் கக்கடவதல்ல. 

ஆகையால் ஆண்டவர் ஸ்நாபக அருளப்பர் கேட்டனுப்பின வார்த்தைக்கு மறுமொழியாக, தாம் கிறிஸ்து என்று தம்முடைய திருவாக்கினாலே சொல்லாமல் தம்மாலே செய்யப்பட்ட கிருத்தியங்களை அதாவது: பிறவிக்குருடர், செவிடர், முடவர் முதலானவர்கள் சுகமாய்ப் போகிறதையும் செத்தவர்கள் எழும்புகிறதையும், தாங்கள் கண்ட கேட்ட பிரகாரம் அறிவிக்கச் சொன்னார். இப்படிப்பட்ட கிரியைகள் சர்வேஸ்பானுடைய வல்லமையினால் அல்லாதே பேய் மாய்கையினாலும், மனுஷர் தந்திரத்தினாலும் செய்யக்கூடாததினால் அத்தால் தாம் சர்வேஸ்பரனுடைய குமாரனே என்று அறியும் மேரை காண்பித்தார்.

அதின் பின் ஸ்நாபக அருளப்பர்பேரில் வசனித்த வசனமாவது: அவர் காற்றினால் அசைபட்ட நாணல் போலேயும் சுக வஸ்திரம் அணிந்த இராசமாளிகைவாசிகள் போலேயும் அல்ல என்ற வசனத்துக்கு அபிப்பிராயம் ஏதென்றால் காற்றால் அசைகிற நாணல் என்பது, விரோத துரிதங்களால் வேத உறுதியிலே தத்தளிக்கிறவனாம். சுகவஸ்திரம் அணிந்தவனாவது: லவுகீக செல்வங்களைச் சுகிக்கிறவனாம். ஸ்நாபக அருளப்பர் அப்படிக்கொத்தவர் அல்ல. தம்முடைய பிராணனைச் செலவழிக்குந்தனையும் வேத நீதி தவறாதவராய்ச் சகல லோக செல்வங்களையும் வெறுத்து, மெய்மறந்து, கடின தபசுபண்ணியிருந்தார் என்றும் ஆகையால் சகல திவ்விய தீர்க்கதரிசிகளிலும் மிக்கானவர் என்றும், லோகமனுஷரில் மகத்தானவர் என்றும், மனோ ரூபிகளுக்குச் சமானம் என்றும் அறிவித்தார். அப்படியே நாங்கள் பயங்கரத்தினால் எங்கள் வேதவிசுவாசத்தையும், தர்ம நடக்கையையும் கைவிடாமல் அவர் நடந்த சுகிர்தவழியைப் பின் சென்று நடப்போமாகில் அவருக்குக் கிடைத்த மகத்தான வரப்பிரசாதங்களையும் மோக்ஷமுடியையும் நாங்களும் அடைவோமென்று அறியக்கடவோம்.

திருச்சபைச் செபம்

ஆண்டவரே! நாங்கள் தேவரீருடைய ஏக பேறான திருச்சுதனானவர் எங்களிருதயங்களில் எழுந்தருளிவருவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யும்படி அவ்விருதயங்களைத் தூண்டியருளும். அதனால் நாங்களும் அவருடைய வருகையின் நிமித்தம் பரிசுத்தமாக்கப்பட்ட மனதோடு தேவரீருக்கு ஊழியஞ்செய்யத்தக்கவர்களாவோம். அவரே தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலஞ் சீவியராய் இராச்சியபாரம் பண்ணுகிறவர், 

ஆமென்யேசு.