மறு உருவாக...!! சினம் தவிர்த்து… மனம் திறப்போம்…

மதுரை இயேசுசபை இளவல்கள் முன்னெடுக்கும் தவக்காலச் சிந்தனைகள்!!*

நாள்: 10
சினம் தவிர்த்து… மனம் திறப்போம்…

அருள்:
அனைவரையும் நேசித்து வாழ வரம் கேட்போம்

இறைவார்த்தை:

நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,  அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத்தேயு 5:23-24)

சிந்தனை:

“வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்” என்று அன்னை தெரேசா அவர்கள் கூறியிருக்கிறார்கள். இன்றைய உலகில் நாம் நம் சகோதர,  சகோதரிகளுடன் எளிதாக கோபப்படுகிறோம் அல்லது திட்டிவிடுகிறோம். ஆனால், திட்டிய அவர்களிடம் மன்னிப்பு கேட்கவோ அல்லது நல்லுறவு கொள்ளவோ தயங்குகிறோம். காரணம் நம் மனதில் இருக்கும் ‘நான்’ என்ற செருக்கும், ஆணவமும். எனவே தான் இன்றைய நற்செய்தியில் இயேசு, இறைவனுக்கு காணிக்கை செலுத்த வரும்போது மனத்தாங்கல் நிறைந்த இதயத்தோடு வராமல், நல்லுறவு கொண்ட இதயத்தோடு வர அழைப்புவிடுக்கிறார். இந்த தவக்காலத்தில் நம்மை நாமே கேட்டுப்பார்ப்போம். பிறர்மீது கோபம் கொள்வதால் அல்லது அவர்களைத் திட்டுவதால் நாம் சாதித்துவிடுவது என்ன? சில நேரங்களில் நாம் கோபப்பட்டு பேசாமல் இருப்பதையே பெருமை பாராட்டுகின்றோம்.  இருப்பது ஒரு வாழ்க்கை அதை மகிழ்ச்சியோடு, மனம் திறந்து வாழ்வோமே!

செபம்:

அன்பின் ஊற்றே எம் இறைவா! எங்கள் சகோதர, சகோதரிகளிடமோ அல்லது பிறரிடமோ சண்டை, சச்சரவுகள் வரும்போது அவற்றையே தூக்கிப் பிடிக்காமல் அவர்களுடன் நல்லுறவு கொண்டு எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வரம் அருளும். ஆமென்.

இளவல். பிரவின் குமார் சே.ச

*இத்தவக்காலம் இறையருளால் இனிதே சிறக்கட்டும்..!!!*