பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான் ***


 பெர்சியா நாட்டு மக்களிடையே மறைப்பணியையும் மருத்துவப்பணியையும் செய்தவர் டொனால்ட் கார் (Dr. Donald Carr) என்பவர். ஒருசமயம் இவருக்கு நன்கு அறிமுகமான ஒருவர் இவரிடம், “பெர்சியாவிற்கு வந்து மறைப்பணியையும் மருத்துவப்பணியையும் செய்வதற்கான அழைப்பினை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்?” என்று கேட்டதற்கு, அவர், “நான் என்னுடயை மண்ணில் மருத்துவப்பணியைச் செய்துகொண்டிருந்தபொழுது, ‘நீ சென்று பெர்சிய மக்கள் நடுவில் பணிசெய்’ என்று ஆண்டவரிடம் அழைப்பு வந்தது. ஆண்டவரிடமிருந்து இப்படியோர் அழைப்பு வரும்பொழுது, அதனைத் தட்டிக்கழிக்க முடியுமா...? ஏற்கத்தானே வேண்டும்...! அதனால்தான் இங்கு நான் பெர்சியாவிற்கு வந்து மறைப்பணியையும் மருத்துவப்பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றேன்” என்றார். 

 ஆண்டவர், டொனால்ட் காரைத் தன்னுடைய பணியைச் செய்வதற்கு அழைத்த நாளிலிருந்து இறுதிவரைக்கும் அவர் ஆண்டவருக்குத் தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்து, அர்ப்பண உள்ளத்தோடு பணிசெய்தார். 

ஆண்டவர் எப்படி தன்னுடைய பணியைச் செய்ய டொனால்ட் காரை  அழைத்தாரோ, அதுபோன்று நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். அவர் அழைக்கின்றபொழுது, அவருடைய குரலுக்குச் செவிமடுத்து, அவருக்கு முழுவதும் நம்மை அர்ப்பணித்து, வாழ்வது நல்லது. இன்றைய முதல் வாசகம் ஆண்டவருக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ அழைக்கப்பட்ட சிம்சோனின் பிறப்பைக் குறித்து வாசிக்கின்றோம். சிம்சோன் உண்மையாகவே தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ்ந்தாரா? அவருடைய வாழ்க்கை உணர்த்தும் செய்தி என்ன? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.   

வயது முதிர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்த சிம்சோன்

 நீதித்தலைவர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வயது முதிர்ந்த தம்பதியரான மனோவாகுக்கும் அவருடைய மனைவிக்கும் (பெயர் குறிப்பிடப்படவில்லை) மகனாகப் பிறந்த சிம்சோனின் பிறப்பைக் குறித்து வாசிக்கின்றோம். 

 திருவிவிலியத்தில் வயது முதிர்ந்தவர் குழந்தையைப் பெற்றெடுப்பது புதில்லை. சாரா, அன்னா, புதிய ஏற்பாட்டில் வருகின்ற எலிசபெத் இவர்கள் யாவரும் தங்களுடைய முதிர்ந்த வயதில்தான் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். இப்படி இவர்களால் முதிர்ந்த வயதில் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகள் யாவரும் இறைவனின் மீட்புத் திட்டத்தில் ஒரு முக்கிய இடம் வகித்தார்கள்; முக்கியமான பணியை ஆற்றினார்கள் என்பதுதான் உண்மை. அந்த வகையில் சோராவைச் சார்ந்த, தாண் குலத்தில் பிறந்த சிம்சோன், பெலிஸ்தியகளிடமிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிப்பதற்காக ஆண்டவரால் தேர்ந்துகொள்ளப்பட்டார் அல்லது ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்டார்.

நாசீர் என்றால் ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்டவர் என்பது பொருள். ஆண்டவருக்காக அர்பணிக்கப்பட்ட சிம்சோன், இறுதிவரை ஆண்டவருக்கு அர்ப்பண உள்ளத்தோடு பணிசெய்தாரா? என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம். 

ஆண்டவரின் ஆசியை பெற்ற சிம்சோன்

 பிறப்பிலிருந்து இறக்கும்வரை நாசீராக இருக்கப் பணிக்கப்பட்ட சிம்சோன்மீது ஆண்டவர் தன்னுடைய ஆசியை அபரிமிதமாய்ப் பொழிந்தருளினார். இதனால் சிம்சோன் மிகவும் வலிமை வாய்ந்தவராய் விளங்கினார். குறிப்பாக பெலிஸ்தியர்களைப் பந்தாடினார். 

 இது ஒருபுறமிருக்கையில், சிம்சோன், இஸ்ரயேல் மக்கள் எப்படி யாவே இறைவனுக்கு உண்மையில்லாமல், பிற தெய்வங்களைத் தேடி அலைந்தார்களோ, அதுபோன்று ஆண்டவருக்குத் தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழவேண்டிய சிம்சோன் பெலிஸ்தியப் பெண்ணை மணந்து கொண்டும் பெலிஸ்தியப் பெண்ணான தெலிலாவைக் காதலித்தும் வந்தார். முடிவில் தெலிலாவின் மாய வலைக்குள் சிக்கி, தன்னுடைய வலிமையை இழந்து இறந்துபோகின்றார்.  

பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப வாழவேண்டும் 

 ஆண்டவருடைய அருளால் வயது முதிர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து, ஆண்டவருடைய அருளை நிரம்பப் பெற்ற சிம்சோனின் வாழ்க்கை நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு உண்மையுள்ளவராய் இருக்கவேண்டும் என்பதாகும். புனித பவுல் எபேசியருக்கு எழுதிய மடலில், “நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்” (எபே 4:1) என்று இதே கருத்தினைத்தான் வலியுறுத்திக் கூறுகின்றார். 

 ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாசீரான சிம்சோன் இறுதிவரை ஆண்டவருக்கு உண்மையாய் இருந்திருக்கவேண்டும்; ஆனால், அவர் பிற இனத்துப் பெண்களைத் தேடிச் சென்று, பாவத்தில் வீழ்ந்து, தான் பெற்றுக்கொண்ட அழைப்பினைப் பாழாக்கினார். சிம்சோனைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் நாம், கடவுள் நமக்குக் கொடுத்த அழைப்பிற்கு ஏற்ப வாழ்கின்றோமா? அல்லது பாவத்தில் வீழ்ந்து கிடக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

 ‘நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் பிடிப்புள்ளவர்களாய் இருங்கள்’ (திவெ 2:25) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்பவும் போதனைக்கு ஏற்பவும் பிடிப்புள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.  

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்