நன்மை, தீமையின் வேர்களைக் கண்டுகொள்ள உதவும் திருநாள்(அமல அன்னை திருநாள்) ***

இறைவனுக்கும் மனிதருக்கும் உள்ள உறவை விளக்கவும், நன்மை, தீமை இவற்றின் வேர்களைக் கண்டுகொள்ளவும், அமல அன்னையின் திருநாள் நமக்கு உதவுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார்.

டிசம்பர் 8, வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அமல அன்னை பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, இவ்விழாவின் திருப்பலியில் வாசிக்கப்பட்ட வாசகங்களை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தொடக்க நூலில் கூறப்பட்டுள்ள முதல் மனிதனும், பெண்ணும், தங்களைப் படைத்தவரைச் சார்ந்திராமல், தங்களையேச் சார்ந்திருந்ததால், இறைவனுடன் கொண்டிருந்த உறவை இழந்தனர் என்று கூறியத் திருத்தந்தை, தன்னைவிட்டுப் பிரிந்தவர்களை, பெற்றோருக்குரிய கனிவுடன் இறைவன் தேடி வந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மனிதர்கள் மேல் விண்ணகத் தந்தை கொண்டிருந்த அன்பு, தன் மகனை நம்மிடையே அனுப்பியதன் வழியே இன்னும் உறுதியானது என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை, இயேசு மனிதராக நம்மிடையே வருவதற்கு, பாவமேதும் அறியாத மரியாவை, தந்தை தேர்ந்தெடுத்தார் என்று மூவேளை செப உரையில் வலியுறுத்திக் கூறினார்.

மரியா கூறிய 'ஆம்' என்ற சம்மதம், மீட்பின் வாயிலாக அமைந்தது என்று குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஒவ்வொருவரின் மீட்பு வரலாற்றிலும் 'ஆம்' என்பதும், 'இல்லை' என்பதும் பலமுறை நிகழ்ந்துள்ளன என்று எடுத்துரைத்தார்.

இறைமகனின் வரவை எதிர்பார்த்து, காத்திருக்கும் இந்த திருவருகைக் காலத்தில், நமது பதிலிறுப்பு 'ஆம்' என்பதாகவே அமைவதற்கு அன்னை மரியாவின் பரிந்துரையைத் தேடுவோம் என்று, அமல அன்னை பெருவிழாவின் மூவேளை செப உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி