மறையுரை சிந்தனைகள் - கடவுளே காணிக்கையாக...

இன்றைய நாள் மூன்று நிகழ்வுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது: (அ) ஆண்டவராகிய இயேசுவுக்குப் பெயரிடும் அல்லது விருத்தசேதன நிகழ்வுளூ (ஆ) தலைப்பேறு ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்யப்படும் நிகழ்வுளூ மற்றும் (இ) பேறுகாலத்திற்குப் பின் தாயின் தூய்மைச் சடங்கு நிகழ்வு.

'விருத்தசேதனம்' என்பது இஸ்ரயேல் மக்களோடு ஆண்டவராகிய கடவுள் செய்துகொண்ட உடன்படிக்கையின் அடையாளமாக இருந்தது. இரண்டாவதாக, எகிப்தில் ஆண்டவராகிய கடவுள் நிகழ்த்திய பத்தாவது அடையாளமான தலைப்பேறு மகன் அழிதல் நிகழ்வின் பின்புலத்தில், பிறக்கின்ற தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு உரியது. ஆண்டவருக்கு உரியதாகப் பிறக்கின்ற அக்குழந்தையை அதன் பெற்றோர்கள் காணிக்கை செலுத்தி திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இரண்டு புறாக்குஞ்சுகளைக் கொடுக்கின்றனர் இயேசுவின் பெற்றோர். மூன்றாவதாக, ஆண் குழந்தை பிறந்தால் பெண் 40 நாள்கள் தீட்டானவர் என்றும், பெண் குழந்தை பிறந்தால் 80 நாள்கள் தீட்டானவர் என்று கருதப்பட்டார். அந்த வகையில் 40 நாள்கள் கழித்து இயேசுவின் தாயும் தன் தூய்மைச் சடங்குக்காக ஆலயம் வருகின்றார். இந்த 40 நாள்கள் இடைவெளி அல்லது ஒதுக்கம் என்பது குழந்தைக்காக தாய் முழுமையான நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதற்காகவும், வெளியிலிருந்து குழந்தைக்கு நோய்த்தொற்று எதுவும் வந்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காகவும்தான்.

மேற்காணும் மூன்று நிலைகளிலும் இயேசுவின் பெற்றோர் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களாக இருக்கிறார்கள். 

ஆக, அவர்கள் வானதூதர் வழியாகவும், கனவுகள் வழியாகவும் வெளிப்படுத்தப்பட்ட இறைத்திருவுளத்துக்குக் கீழ்ப்படிந்ததோடு மோசேயின் சட்டத்துக்கும் கீழ்ப்படிபவர்களாக இருக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில், 'நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்' என இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி.

இங்கே மூன்று விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன:

(அ) கோவில் தலைவருடையது.

(ஆ) அவர் திடீரெனக் கோவிலுக்கு வருவார்.

(இ) அவரைத் தேடுபவர்கள் மட்டுமே அவரைக் கண்டுகொள்ள முடியும்.

இன்று நாம் இந்த நிகழ்வை வாசிக்கும்போது, இந்தத் திருவிழாவை ஒவ்வொரு வருடம் கொண்டாடும்போது இது நமக்கு ஆச்சர்யம் தருவதில்லை. முதன்முதலாக இந்த நிகழ்வு நடந்ததை எண்ணிப் பார்த்தால், சிமியோனும் அன்னாவும் பெற்ற அந்த முதல் அனுபவத்தை நாம் எண்ணிப்பார்த்தால் ஒன்று தெளிவாகிறது.

ஒவ்வொருவரும் தாமாகவே இந்தக் கடவுளைக் காணிக்கையாக ஏற்க வேண்டும்.

கடவுள் காணிக்கையாக வருகின்றார். இன்றும்!

தம் கோவிலாகிய நம் ஒவ்வொருவரிடமும் அவர் வருகின்றார்.

ஆனால், நாம் அவரைத் தேடாததால் அவரைக் கண்டுகொள்ள முடியவில்லை.