இயேசு கடல் மீது நடந்த இந்த நற்செய்தியில் புனித ராயப்பரின் விசுவாசமும், அபிவிசுவாசத்தையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம் ***


1. ஆண்டவரைப்போல் நாமும் கடலில் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

2.ஆண்டவர் இயேசுவால் என்னையும் கடல் மீது நடக்க வைக்க முடியும் என்று விசுவசித்தார். 

3. துணிச்சலோடு கடலில் இறங்கினார்.

4. ஆனால் காற்று பலமாயிருப்பதைக் கண்டவுடன் விசுவாசத்தை இழந்தார். அச்சம் கொண்டார். அதனால் கடலில் மூழ்க துவங்கினார்.

5. " ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் " என்று கூவி அழைத்துப் பிழைத்துகொண்டார். அட்லீஸ்ட் கையறு நிலையிலாவது ஆண்டவரை கூவியழைத்ததால் காப்பாற்றப்பட்டார்.

ஆண்டவர் அருகில் இருக்கும்போதே ஐயப்பட்டார் அதுதான் அவர் கடலில் மூழ்கக்காரணம்.

அதுபோல்தான் நாமும் உயிருள்ள ஆண்டவர் நமக்கு துணையிருக்கிறார் என்பதை நாம் நன்றாக இருக்கும்போது விசுவசிக்கிறோம். ஆனால் நமக்கு ஒரு சோதனை வரும்போது, இழப்பு வரும்போது, துன்பம் வரும் போது விசுவாசத்தை இழந்து விடுகிறோம்.

நமக்கு ஆசீர் கொடுத்த அதே கடவுள் நமக்கு ஆறுதல் கொடுக்க மாட்டாரா? நமக்கு நன்மை கொடுத்த கடவுள் தீமையை விலக்கி மீண்டும் நன்மை தர மாட்டாரா? இன்ப வேளையைவிட துன்ப வேளையில்தானே கடவுள் நமக்கு அதிக தேவை. நாம் நன்றாக இருக்கும்போது ஆண்டவர் ஆண்டவர் என்று சொல்கிறோம் ( பல பேர் சொல்லுவதில்லை).

துன்பம், கஷ்ட்டங்கள் வரும்போது தேற்ற ஆவலோடு நம் அருகில் ஆண்டவர் இயேசுவை தேட மறுப்பது ஏனோ? ஆண்டவரைத்தூற்றுவதும் ஏனோ?

நற்செய்திக்கு செல்வோம்.

மத்தேயு 14 : 22-33

தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகிலேறிக் கடலைக் கடந்து தமக்குமுன் அக்கரைக்குப்போகும்படி இயேசு வற்புறுத்தினார்.

கூட்டத்தை அனுப்பியதும் செபிக்க தனியாக மலைமீது ஏறினார். இரவாயிற்று; அங்குத் தனித்திருந்தார்.படகோ, எதிர்காற்றடித்தபடியால் அலைகளால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

நான்காம் சாமத்தில் அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்.சீடரோ, அவர் கடல்மேல் நடப்பதைக் கண்டு கலங்கி, "ஐயா! பூதம்" என்று அச்சத்தால் அலறினர்.

உடனே இயேசு, "தைரியமாயிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, நீர்தாம் என்றால், நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வரக் கட்டளையிடும்" என்றார்.

அவர், "வா" என்றார். இராயப்பரும் படகினின்று இறங்கிக் கடல்மீது நடந்து இயேசுவை நோக்கி வந்தார்.காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப்போகையில், "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்.

உடனே இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, "குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?" என்றார்.

அவர்கள் படகில் ஏறியதும் காற்று ஓய்ந்தது.படகில் இருந்தவர்கள் வந்து அவரைப் பணிந்து, "உண்மையாகவே நீர் கடவுள்மகன்" என்றனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.