கடவுளின் தாய் புனித கன்னி மரியா ***


  ஒருநாள் கடவுள் வானதூதர் ஒருவரை அழைத்து அவரிடம், “நீ போய் மண்ணகத்தில் மிகவும் அழகானதும் இனிமையானதுமான ஒன்றைக் கொண்டு வா” என்றார். வானதூதரும் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து மண்ணகத்திற்கு வந்தார். காடு, மலை, ஆறு, கடல் என்று பல இடங்களை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த அந்த வானதூதரின் பார்வையில் மலர் ஒன்று தென்பட்டது; அது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருந்தது. உடனே வானதூதர் அந்த மலரைப் பறித்து தன்னுடைய கையில் வைத்துக் கொண்டார். 

இன்னும் சிறிதுதூரம் அவர் சென்றபோதும், குழந்தை ஒன்று இங்கும் அங்கும் ஓடி ஆடி  சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் சிரிப்பு வானதூதருக்கு மிகவும் பிடித்துப்போனது. ‘இவ்வுலகில் மழலையின் சிரிப்பைவிட மிகவும் அழகானதும் இனிமையானதுமாக என்ன இருந்துவிடப் போகிறது’ என்ற என்று நினைத்த வானதூதர், அந்தக் குழந்தையின் சிரிப்பை எடுத்துக்கொண்டார். வானதூதர் இன்னும் சிறிதுதூரம் சென்றபொழுது குடிசை ஒன்று இருக்கக்கண்டார். அந்த குடிசைக்கு முன்பாக ஒரு தாய் தன்னுடைய மடியில் தன் குழந்தையை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார். இக்காட்சி வானதூதரை மிகவும் தொட்டது. ‘இவ்வுலகில் தாயின் அன்பைவிட சிறந்த ஒன்று இருக்க வாய்ப்பு இல்லை’ என்று நினைத்த வானதூதர் தாயன்பைத் தன்னோடு எடுத்துக்கொண்டு, விண்ணகம் நோக்கிப் பறந்துசென்றார். 

வழியில் அவரிடமிருந்த மலர் வதங்கிபோனது; குழந்தையின் புன்னகையோ அழுகையாக மாறியது; ஆனால் தாயின் அன்பு மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. இதை பார்த்த வானதூதருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அப்பொழுது வானதூதருக்குப் புரிந்தது, தாயின் அன்பைவிட சிறந்த ஒன்று பூவுலகில் இல்லை என்று. பின்னர் அவர் தாயின் அன்பை மட்டும் கடவுளிடம் எடுத்துச் சென்று காட்டினார். கடவுளும் தாயின் அன்பை கண்டு வியந்து நின்றார். ஆம். உலகத்தில் இருக்கும் எல்லாம் மாறலாம். தாயின் அன்பைத் தவற. தாயின் அன்பு ஒருபோதும் மாறாது. அதனாலேயே அது மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருக்கின்றது. 

இன்று தாயாம் திருஅவை நம்மீது மாறா அன்புகொண்டிருக்கும் கடவுளின் தாய் புனித கன்னிமரியாவின் பெருவிழாவைவைக் கொண்டாடி மகிழ்கிறது. ஆண்டின் முதல்நாளான இந்த  நாளை அன்னையின் பெருவிழாவோடு தொடங்குவது என்பது உண்மையிலேயே நமக்கு கிடைத்த மிகப்பெரிய பேறு. இப்படிப்பட்ட தருணத்தில் நாம் கொண்டாடக்கூடிய இந்தப் பெருவிழா நமக்கு உணர்த்தக்கூடிய உண்மைகள் என்ன? இவ்விழாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மரியா இயேசு மட்டுமல்ல இறைவனுக்கும் தாய்

இன்று நாம் கொண்டாடக்கூடிய கடவுளின் தாய் புனித கன்னிமரியா என்ற இந்தப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற முதன்மையான செய்தி, மரியா இயேசுவுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் தாயாக இருக்கிறார் என்பதுதான். கிபி ஐந்தாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற இடத்தில் பேராயராக இருந்த நொஸ்டோரிஸ் என்பவர், “மரியா இயேசுவின் தாய்தானே ஒழிய, இறைவனின் தாய் அல்ல” என்று சொல்லி வந்தார். இவருடைய இக்கருத்து திருஅவையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 431 ஆம் ஆண்டு எபேசு நகரில் கூடிய பொதுச்சங்கம், “இயேசுவில் மனிதத் தன்மையும் இறைத் தன்மையும் முழுமையாக குடிகொண்டிருப்பதால், மரியா இறைவனின் தாய்” என்ற மறையுண்மையைப் பிரகடனம் செய்தது. இதற்கு பின்பு மரியா இறைவனின் தாய் என்ற விழா திருஅவை முழுவதும் கொண்டாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு, அப்பொழுது திருத்தந்தையாக இருந்த ஆறாம் பவுல் என்பவர், மரியா இறைவனின் தாய் என்ற இப்பெருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளில் கொண்டாட பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியா இறைவனின் தாய் என்ற இப்பெருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மரியா இறைவனின் தாய் என்பது மிகப்பெரிய பேறு. இப்படிப்பட்ட பேறு அவர் இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டும் கிடைத்துவிடவில்லை. மாறாக இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடந்த வாழ்க்கை அவருக்கு இப்படிப்பட்ட ஒரு பேற்றினைப் பெற்றுத் தந்தது. மரியா எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்? அவருடைய வாழ்க்கை நமக்கு எப்படியெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறது? ஆகியவற்றைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நிகழ்ந்தவற்றை எல்லாம் தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்த மரியா

கடவுளின் தாய் புனித கன்னி மரியா என்ற பேறு, கடவுள் மரியாவுக்கு கொடுத்த மிகப்பெரிய பேறு. இத்தகைய பேற்றினை அவர் இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டும் அடைந்துவிடவில்லை. மாறாக அவர் நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்ததாலும் அடைந்தார் என்றால் அது மிகையில்லை.

இன்றைய நற்செய்தியில், வானதூதர்கள் தங்களுக்கு அறிவித்த செய்தியைக் கேட்டு இடையர்கள், குழந்தை இயேசுவைக் காண வருகிறார்கள் அங்கு வந்ததும், அவர்கள் வானதூதர்கள் தங்களுக்கு சொன்னதையெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொல்கின்றார்கள். வானதூதர்கள் அவர்களிடம், “ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” என்ற செய்தியை சொல்லியிருந்தார்கள். இச்செய்தியை அவர்கள் அங்கிருந்தவர்களிடம் சொன்னபோது, அங்கிருந்தவர்கள் வியப்படைகிறார்கள் மரியாவோ இவற்றையெல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்தி சிந்திக்கத் தொடங்குகிறார்.

நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்திச் சிந்திப்பது என்பது அல்லது இறைத் திருவுலத்தைச் சிந்திப்பது என்பது இறைத்திருவுளமே தன்னுடைய வாழ்க்கையாகக் கருதுவதற்கு ஒப்பாக இருக்கிறது. இறை திருவுளமே தன்னுடைய வாழ்க்கையாக கருதியதால்தான் வானதூதர் வானதூதர் கபிரியேலிடம், “நான் ஆண்டவரின் அடிமை; உம்முடைய சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்று சொல்லமுடிந்தது. மரியா இறைத்திருவுளத்தை தன்னுடைய திருவுளமாக மாற்றிக் ண்டார் அதனால்தான் கடவுள் அவருக்கு மிகப்பெரிய பேற்றினை அளித்தார். அது எத்தகைய பேறு என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இன்னும் அதிகம் பேறுபெற்ற மரியா

மரியா இறைத்திருவுளத்தைத் தன்னுடைய நிறைவேற்றி வாழ்ந்து வந்ததால், அவர் மிகப்பெரிய பேற்றினைப் பெற்றுக்கொண்டார். அதுதான் கடவுளின் தாயாகும் பேறு. மரியா இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டும் இறைவனுக்குத் தாயாகிவிடவில்லை. மாறாக, இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்றி, இன்னும் அதிகம் பேறுபெற்றவர் ஆனார். 

லூக்கா நற்செய்தியில் பன்னிரண்டாவது அதிகாரத்தில் வரக்கூடிய ஒரு நிகழ்வில்,  மக்கள்கூட்டத்திற்குப் போதித்துக்கொண்டிருக்கும் இயேசுவைப் பார்த்து, ஒரு பெண்மணி இயேசுவிடம், உம்மைப் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உன் தாய் பெயர் பெற்றவர் என்பார்.  உடனே இயேசு அவரிடம், இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் என்பார். இங்கு மரியாவை ஒருபடி உயர்த்திப் பேசுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். எப்படியென்றால், கூட்டத்திலிருந்து பேசிய அந்தப் பெண்மணி, மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால்தான் பேறுபெற்றவர் என்று சொன்னார். இயேசுவோ, மரியா தன்னைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்ல, இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்ததனாலும் பேறுபெற்றவராகிறார் என்கின்றார். இவ்வாறு மரியா இயேசுவின் உண்மையான தாயாக மாறுகிறார் (மத் 12:50)

கடவுளின் தாய் புனித கன்னிமரியா என்ற இந்தப் பெருவிழாவை கொண்டாடுகின்ற நாம் இறைவனுடைய திருவுளத்தின்படி நடக்கிறோமோ என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம்முடைய விருப்பம் அல்லது நம்முடைய திருவுளம் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோம். இதனால் கடவுளுடைய திருவுளம் இந்த மண்ணுலகில் நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கின்றோம். ஆகவே, நாம் கடவுளின் தாய் புனித கன்னி மரியாவினுடைய முன்மாதிரியைப் பின்பற்றி, இறைத்திருவுளத்தின்படி நடக்க முயற்சிசெய்வோம். அதன்மூலம் மரியாவைப் போன்று இறைவனின் திருப்பெயர் விளங்கச் செய்வோம்.

சிந்தனை

இளைஞன் ஒருவன் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று, “இவ்வுலகில் என்னை அன்புசெய்ய யாருமே இல்லையா?” என்று கத்தியபொழுது, பின்னாலிருந்து ஒரு குரல், “மகனே! நான் இருக்கின்றேன்... நான் இறக்கின்றவரைக்கும் உன்னை அன்புசெய்துகொண்டே இருப்பேன்” என்று ஒலித்தது. அக்குரல்தான் வேறு யாருடைய குரலுமல்ல, அவனுடைய தாயின் குரல்தான். தாயே நம்மைத் தள்ளிவிடாதே தெய்வம்.

எனவே, இறைவன் நமக்கெனக் கொடுத்திருக்கும் தாயாம் மரியின் அன்பினை உணர்ந்து, அவரைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ் 

பாளையங்கோட்டை மறைமாவட்டம்.