உம் உறவினருக்கு அறிவியும் *** மறையுரை சிந்தனைகள்


இறைவார்த்தையை அறிவித்ததால் ஏற்பட்ட மாற்றம்:

சார்லஸ் டார்வின் (1809-1882) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடித்துக்கொண்டு தன் சொந்த நாட்டிற்குத் திரும்பியபின், ஒரு மிகப்பெரிய உரையை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர், தான் தென் அமெரிக்காவில் உள்ள பாண்டகோனியா என்ற இடத்திற்குச் சென்றதாகவும், அங்குள்ள மக்கள் ஆடையே உடுத்துவதில்லை என்றும், அவர்கள் விவசாயம் செய்வதில்லை என்றும், இறக்கும் தங்கள் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் புதைப்பதற்குப் பதில் அவர்களைச் சாப்பிட்டுவிடுவார்கள் என்றும், தெரு நாய்களைக்கூடத் திருத்திவிடலாம், அவர்களைத் திருத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தாமஸ் பிரிட்ஜஸ் (Thomas Bridges 1842-1898) என்பவர் தன்னோடு ஒருசில பொருள்களை எடுத்துக்கொண்டு பாண்டகோனியாவிற்குச் சென்றார். அங்கு அவர் கடவுளின் வார்த்தையை அறிவித்துக்கொண்ட அவர்களுக்கு விவசாயம் செய்யக் கற்றுக்கொடுத்தார்; அவர்களுக்கு வீடுகட்டிக் கொடுத்தார். அவர்கள் நாகரிமாக வாழ்வதற்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார். இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சார்லஸ் டார்வின் அங்குச் சென்றபொழுது, அவர்களிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டு, ‘நற்செய்தி அறிவிப்பால் இவ்வளவு பெரிய மாற்றமா?’ என்று மிகவும் வியந்தார். மட்டுமல்லாமல், அவர் அவர்களுக்கு தான் இறக்கும்வரைக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார்.

ஆம், யாராலும் மாற்ற முடியாது என்றிருந்த பாண்டகோனியா மக்களை தாமஸ் பிரிட்ஜஸ் கடவுளின் வார்த்தையை அறிவித்து, அவர்கள் நடுவில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இன்றைய நற்செய்தியில் இயேசு தீயஆவி பிடித்திருந்த மனிதரிடமிருந்து தீய ஆவியை விரட்டியபின், “.....உம் உறவினருக்கு அறிவியும்” என்கிறார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்று சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

பொதுவாக இயேசு தாம் செய்யும் வல்ல செயல்களுக்கு பின், தன்னிடமிருந்து நலம்பெற்றவரிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்...” என்றே சொல்வார் (மாற் 1: 43-45, 5:42); ஆனால், இன்றைய நற்செய்தியில் அவர் தன்னிடமிருந்து நலம் அல்லது புதுவாழ்வைப் பெற்ற மனிதரிடம், “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங்கொண்டு உமக்குக் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்கின்றார். இயேசு இவ்வாறு சொல்லக்காரணம், தெக்கப்பொலியைச் சார்ந்த அந்த மனிதர், அங்குள்ள மக்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவிக்க வேண்டும் என்பதற்குத்தான். நாமும் கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெற்றிருக்கின்றோம் எனில், அதை மக்களுக்கு அறிவித்துக் கடவுளின் பெருமையைப் பறைசாற்றவேண்டும். நற்செய்தியின் தூதுவர்களாய் வாழவேண்டும்.

சிந்தனைக்கு:

 ஆண்டவர் நம்மீது இரக்கங்கொண்டு செய்யும் வல்ல செயல்களை ஒருநாளும் மறக்கவேண்டாம்.

 நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியை, நன்மைகளை மற்றவர்களுக்கு அறிவிப்பது நமது தலையாய கடமை.

 புது வாழ்வைத் தந்த கடவுளுக்கு நாம் என்ன தரப்போகின்றோம்?

இறைவாக்கு:

‘அவரிடம் வாழ்வு இருந்தது. அது மனிதருக்கு ஒளியாய் இருந்தது’ (யோவா 1: 4) என்பார் யோவான். எனவே நமக்கு வாழ்வை வழங்க இயேசுவை எல்லாருக்கும் அறிவித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.