நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்வோம் *** மறையுரை சிந்தனைகள்


நிகழ்வு

கடலில் பயணம் செய்துகொண்டிந்த பெரிய கப்பல் ஒன்று, திடீரென்று வீசிய பெரும்புயலில் சிக்கிச் சின்னாபின்னமானது. இதனால் கப்பலில் பயணம் செய்த பலர் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தார்கள். ஒருசிலர் மீன்களுக்கு இரையானார்கள். அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் மட்டும் எப்படியோ தப்பித்து அருகில் இருந்த தீவில் ஒதுங்கினார். தீவில் இருந்தவர்களோ பழங்குடி மக்கள்; ஆனாலும் அவர்கள் அவரை நல்லமுறையில் உபசரித்தார்கள். பின்னர் அவர் அவர்களோடு பேசும்பொழுதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று.

இது தெரிந்ததும் அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். மதம் என்பது போதை என்பதும், மூட நம்பிக்கைகளின் மொத்த வடிவம் என்பதும், அது உங்களைக் சோம்பேறிகளாக்கிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?” என்று சீறினார். அதற்கு அந்தப் பழங்குடி மக்களின் தலைவர் அவர்களிடம், “ஐயா! நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்கு விளங்கவில்லை; ஆனால், ஒன்று மட்டும் உறுதி. ஒருகாலத்தில் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்களாக இருந்த எங்களுக்கு இங்கு வந்த அருள்பணியாளர் ஒருவர் தம் உயிரைப் பணயம் வைத்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, எங்களை நல்லவராக்கினார். ஒருவேளை அவர் மட்டும் இங்கு வராமலும், நற்செய்தி அறிவிக்காமலும் இருந்திருந்தால், நாங்கள் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடுபவர்களாகவே இருந்திருப்போம். நீங்களும் இந்நேரம் வரைக்கும் இங்கு உயிரோடு இருந்திருக்க மாட்டீர்கள்” என்றார்.

ஆம். யாரோ ஓர் அருள்பணியாளர் தம் உயிரையும் பயணம் வைத்து நற்செய்தி அறிவித்ததால்தான், தீவில் இருந்த மனிதமாமிசம் சாப்பிடுபவர்கள் நல்லவர்களாக மாற முடிந்தது. பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நற்செய்திக்காக யாவற்றையும் அல்லது எல்லாவற்றையும் செய்வோம் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஊர்கள் தோறும் நற்செய்தி அறிவித்த இயேசு:

மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் பணிவாழ்வில் ஒருநாள் எப்படி இருந்தது என்பதை எடுத்துச் சொல்கின்றது. இதில் குறிப்பாக நாம் கவனிக்கவேண்டியது, இயேசு தன் சீடர்களிடம் சொல்கின்ற, “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்றவேண்டும். ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கின்றேன்” என்ற வார்த்தைகளாகும். திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின் (மாற் 1: 14) நற்செய்தியைப் பறைசாற்றத் தொடங்கி இயேசு, ஊர்கள் தோறும் நற்செய்தி அறிவித்தார். மட்டுமல்லாமல், “நற்செய்தி அறிவிப்பதற்காகவே வந்திருக்கின்றேன்” என்கின்றார்.

இயேசு ஏன் தன் சீடர்களிடம் இவ்வாறு சொல்லவேண்டும் என்ற கேள்வி எழலாம். இந்தக் கேள்விக்குப் பதிலாய் இருப்பதுதான் இன்றைய முதல் வாசகமும், இன்றைய நற்செய்தியின் முதற்பகுதியும் ஆகும். முதல் வாசகத்தில் யோபு தனது பிள்ளைகள், உடைமைகள் யாவற்றையும் இழந்தபின்பு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவராய் தன் நாள்கள் எப்படி வேதனையோடு கழிகின்றன என்பதைப் பற்றிப் பேசுகின்றார். யோபுவைப் போன்று மனத்தளவிலும், இன்றைய நற்செய்தியில் வருகின்ற பலவிதமான நோயாளர்களைப் போன்று உடலளவிலும் பலரும் இன்றைக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு ஆறுதலையும், உடல் உள்ள நலனையும் அளிக்க இயேசு ஊர்கள்தோறும் நற்செய்தி அறிவித்தார்.

நற்செய்திப் பணியை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்யவேண்டும்

ஊர்கள் தோறும் நற்செய்தி அறிவித்த இயேசு, தன் சீடர்களையும் ஊர்கள்தோறும் நற்செய்தி அறிவிக்க அனுப்பி வைக்கின்றார். அத்தோடு அவர் அவர்களிடம், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்கு 16: 15) என்ற கட்டளையைக் கொடுக்கின்றார். இயேசுவின் இந்தக் கட்டளைக்கேற்ப அவருடைய சீடர்கள், அவர்களுடைய வழிவந்தவர்கள் யாவரும்... உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவித்தார்கள். அப்படிப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்தியை அறிவித்தவர்தான் திருத்தூதர் புனித பவுல். இவர் இன்று நாம் படிக்கக்கேட்ட இரண்டாம் வாசகத்தில், நற்செய்தியை அறிவிக்கின்றபொழுது ஒவ்வொருவரும் எத்தகைய மனநிலையோடு அறிவிக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்.

“நான் நற்செய்தியை அறிவிக்கின்றேன் என்றாலும், அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை” என்று சொல்லும் புனித பவுல், “இதைச் செய்யவேண்டிய கட்டாயம் அல்லது பொறுப்பு எனக்கு உள்ளது” என்கின்றார். அப்படியெனில், நற்செய்தியை அறிவிப்பது ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கின்றது. இன்றைக்கு ஒருசிலர் நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது அருள்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் துறவிகளும் மட்டுமே செய்யவேண்டிய பணி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார். உண்மையில் நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் செய்யவேண்டிய பணியாகும். இம்மாபெரும் பணிக்காக ஒருவர் புனித பவுல் சொல்வது போன்று யாவற்றையும்; ஏன் உயிரையும் இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.

நன்மைகளைப் பெற்றோர் அவற்றைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும்

தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து பலரும் அறிவித்த நற்செய்தியைக் கேட்போர் அல்லது கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெறுவோர், அவற்றைத் தங்களுள்ளே வைத்துக் கொள்ளாமல், பிறருக்கும் கொடுக்கவேண்டும். இது இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் மிக முக்கியமான செய்தியாக இருக்கின்றது.

நற்செய்தியில் இயேசு, சீமோன் பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைப் போக்கியதும், அவர் இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் பணிவிடை செய்தார் என்று வாசிக்கின்றோம். அவ்வாறெனில், இறைவனிடமிருந்து நன்மைகளை (அது நற்செய்தியோ நலமான வாழ்வோ) பெறுகின்ற நாம், அவற்றைப் பிறருக்கும் வாழவேண்டும். ஒருவேளை நாம் இறைவனிடமிருந்து நன்மைளையும் நலமான வாழ்வையும் பெற்றுக்கொண்டு, அவற்றைப் பிறருக்கு வழங்கவில்லை என்றால், நம்மைப் போன்ற தன்னலவாதிகள் யாரும் இருக்க முடியாது! இதைத்தான் கவிக்கோ அப்துல் ரகுமான், “இவ்வுலகிற்குப் பிச்சைக்காரர்களாய் வந்துவிட்டு, கடன்காரர்களாய் போகாதீர்கள்” என்பார். இந்த உலகம் அல்லது கடவுள் தந்த எல்லா வளங்களையும் அனுபவித்துவிட்டு, இந்த உலகிற்கு எதையும் செய்யாதவர்கள் கடன்காரர்கள்தானே! எனவே, நாம் பெற்ற நன்மைகளை, நலமான வாழ்வை, நற்செய்தியை மற்றவர்களுக்கும் வழங்கி இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

சிந்தனை:

‘நாம் இயேசுவின் நண்பர்களாக, அவரது சீடர்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளோம் என்பதே நற்செய்தி அறிவிப்பில் உள்ள மகிழ்ச்சி’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் இயேசுவின் சீடர்களாக, அவரது நண்பர்களாக இருந்து, அவரது நற்செய்தி அறிவித்து, அதனால் வருகின்ற ஆசியில் பங்கு பெற்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.