இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 16 /25 ***


    “ இதோ ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் என போற்றுமே. ஏனெனில் வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்துள்ளார் “

                            லூக்காஸ் 1 : 48

ஆம் தாயே ! அப்போஸ்தலர்கள் தொடங்கி இன்று வரை தலைமுறை தலைமுறைகளாக உன்னை பேறுடையாள் எனப்போற்றுகின்றோம். வாழ்த்துகின்றோம், வணங்குகின்றோம்.வலிமைமிக்க கடவுள் மாசில்லா உன்னை தேர்ந்துகொண்டு உனக்கு, உன்மூலம் பல அரும் பெரும் செயல்கள் புரிந்துள்ளார். உன் வழியாகவே மீட்பு உலகிற்கு கிடைத்தது. உன் வழியாகவே மீட்பர் இயேசு எங்களுக்கு கிடைத்தார்.

பரிசுத்த எம்தாயே உன் தூய்மையையும், உன் அர்ப்பணத்தையும் நினைத்துப்பார்க்கிறோம்.

அதிலும் குறிப்பாக எளிதில் மனமிரங்கும் உன் விசேசமான இரக்க சுபாவத்தை  நினைத்துப்பார்க்கிறோம். அன்று முதிர்ந்த வயதில் கருத்தரித்த எலிசபெத்துக்கு உதவி செய்ய மலை நாட்டுக்கு ஓடிச்சென்று உதவி செய்தாய். பின்னாளில் 

கானாவூர் திருமணத்தில் தத்தளித்த திருமண வீட்டினரின் துயரத்தை உன் மகன் மூலம் போக்கினாய். அதுமட்டுமின்றி நேரம் வராதிருந்த உன் மகனுக்கு நேரத்தைவர வைத்தாய். உலகிற்கு கொஞ்சம் லேட்டாக வர இருந்த மீட்பையே உன் ஜெபதவத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பாக வர வைத்தாய். உன் தனிச்சிறப்பு மிகவும் மகத்தானது. போற்றுதலுக்குறியது..

அம்மா ! தாயே ! தயாபரியே ! உன்னுடைய பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை எங்கள் சிலரிடம் கொஞ்சம் இருக்கிறது. பலரிடம் அறவே இல்லை. உதவி என்று கேட்போரை ஒரு புழுவைப்போல் பார்க்கிறோம். என்னிடம் உதவி கேட்கும் அளவுக்கு அவன், அவள் நிலையை இருக்கிறதே என்று அவர்களை தாழ்வாகவும், எங்களை உயர்வாகவும் நினைக்கிறோம். சில நேரங்களில் போனால் போகிறது என்றுதான் உதவி செய்கிறோம்.

“ இந்த சின்னச்சிறுவருக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் “

என்ற உமது திருக்குமாரன் வார்த்தையை உதவி செய்யும் நேரத்தில் மறந்து விடுகிறோம். பல வேளைகளில் நோயுற்று கிடந்த லாசரின் எதிர்வீட்டு பணக்காரன்போல் நடந்துகொள்கிறோம். இறந்த பின்பு அந்த பணக்காரனுக்கு கிடைத்த நிலை எங்களுக்கு வேண்டாம். ஒரு சொட்டு தண்ணீரை லாசரின்  நுனியில் விரலில் கேட்ட அவனின் நிலை எங்களுக்கு வேண்டாம்.

எங்களால் முடிந்த உதவியை மனமகிழ்ச்சியுடன் பிறருக்கு செய்ய அருள்தாரும். உதவி என்பது பொருள் உதவி மட்டுமல்ல.. அன்று அன்னை எலிசபெத்துக்கு செய்ததுபோல உடலுதவியும் செய்யலாம்..

அதே நேரம் கடினமான மனதுடையவன், மனதுடையவள் தன்னைக் கிறிஸ்தவர்கள் என்பாரானால் அவர்கள் பொய்யர்கள்.

ஜெபம் : இரக்கமே உருவான இறைவா ! அன்று உம் தாய் உதவி செய்ய வாய்ப்பு கிடைத்ததும், மலை நாட்டுக்கு சென்று எலிசபெத்துக்கு உதவி செய்தாள். ஆனால் எங்களை சுற்றி எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் யாருக்கும் உதவி செய்ய மனமில்லை. பெரியவர்கள், முதியோர்கள், நோயாளிகள், ஏழைகள், கைவிடப்பட்டவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் ஆலயத்துக்கு செல்கிறோம், வழிபாட்டுகளில் பங்கேற்கிறோம். ஜெபங்கள் சொல்கிறோம். ஆனால் உதவி என்று வந்துவிட்டால் மட்டும் மனது கடினமாகிவிடுகிறது. ஏன் ஒரு பைசா செலவு இல்லாத இன்சொல் கூட முதியவர்களிடம் பேசுவதில்லை.

செயலில்லாத விசுவாசம், ஜெபம் வீண் என்பதை எங்களுக்கு புரியவையும்.

“ உன் மீது அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக “

என்ற உம் சொல்லுக்கு கீழ்படிந்து உதவி செய்யும் மனப்பான்மையும், இன்சொல் பேசும் மனப்பான்மையும் தந்து உம் பிறப்பு விழாவுக்கு எங்களை தயாரிக்க வரம் தாரும் - ஆமென்