உண்பதிலும், குடிப்பதிலும் மட்டுமிதத்தோடு இருக்கக் கடுமையாக முயற்சி செய்யும் காரியத்தில் நம் ஆண்டவரின் ஒறுத்தல், உணர்ச்சிவசப்படாத சம நிலை, போதையை விலக்குதல், பரித்தியாகம் ஆகியவை நம்மைத் தூண்டும் முன்மாதிரிகைகளாக இருக்கினறன. இவ்வாறே அர்ச்சியசிஷ்டவர்களின் முன்மாதிரிகையும் நமக்குப் பாடமாக உள்ளது. அவர்கள் எப்போதும் உணவு, மற்றும் மது ஆகியவற்றில் வீரத்துவமுள்ள கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தனர். அதன் மூலம் அவர்கள் தங்கள் பசி, தாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தியிருந்தனர். இதன் மூலம் தங்கள் ஆத்தும சுதந்திரத்தை அவர்கள் காத்துக் கொண்டதோடு, தங்கள் ஞான பலத்தையும், ஆற்றல் வளத்தையும், தைரியத்தையும் பெருக்கிக் கொண்டனர்.
உபவாசம், அல்லது உணவின் காரியத்தில் பரித்தியாகம் மற்றும் சுய-மறுதலிப்பு என்பது சில குறிப்பிட்ட சமயங்களில் திருச்சபையால் கட்டளையாகத் தரப்படுகின்றது. மிதமான, ஒழுங்குபடுத்தப்பட்ட உபவாசம் சரீரத்தின் ஆரோக்கியத்தையும், பலத்தையும் கூட நல்ல முறையில் பாதுகாக்கிறது. அது மனத்தை விழிப்புள்ளதாக்கி, இழிந்த ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது; மற்ற புண்ணியங்களை அனுசரிப்பது இதனால் எளிதாகிறது. வழக்கமாகவே, தான்தோன்றியான, கட்டுப்பாடற்ற வாழ்வு முறையையே நம் மனம் விரும்புகிறது. உபவாசம் இந்த நிலையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
உண்பதிலும் குடிப்பதிலும் உள்ள இன்பம் தன்னிலேயே ஒரு முடிவு அல்ல, மாறாக அது உயிரைக் காத்துக் கொள்ளும் ஒரு வழி ஆகும். உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்பது என்னும் பண்டைய விதிதான் போசனப் பிரியத்தைத் தவிர்ப்பதில் நம்மை வழிநடத்துகிற கொள்கையாக இருக்கிறது. “நீங்கள் சாப்பிட்டாலும், குடித்தாலும், வேறெதைச் செய்தாலும், எல்லாவற்றையும் சர்வேசுரனுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” என்று அர்ச். சின்னப்பர் அறிவுறுத்துகிறார் (1 கொரி. 10:31).