கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபம் - பாயிரம்

கொரிந்து நகரமானது கிரேசியா இராச்சியத்தின் தென்பாகமாகிய அக்காயா நாட்டின் தலைநகர் பட்டணமாம். 

அப்பட்டணத்தார் அக்காலத்தில் மிகுந்த செல்வமும், கல்வியறிவும் உள்ளவர்கள். 

அப்போஸ்தலர் நடபடி 18-ம் அதிகாரத்தில் கண்டிருக்கிறபடி அர்ச். சின்னப்பர் அந்நகருக்கு வந்து, அதிலே வாழ்ந்த ஒன்றரை வருஷத்துக்குள்ளே அநேகருக்கு ஞானஸ்நானங் கொடுத்தார். 

பின்பு அவ்விடத்தைவிட்டுச் சின்ன ஆசியாவிலுள்ள பிரதான பட்டணமாகிய எபேசுக்கு வந்து, மூன்று வருஷமளவும் அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். 

அவ்விடத்திலிருக்கையில் கர்த்தர் அவதாரமான 57-ம் வருஷத்திலே இந்த முதல் நிருபத்தை எழுதினார்.

இதை எழுதுவதற்கு உண்டான காரணம் ஏதென்றால், கொரிந்து நகரத்தாரிடத்தில் முன்னிருந்த பக்தி விசுவாசமும், புண்ணிய ஒழுக்கமும் கொஞ்சம் குறைந்துபோனதையும், அவர்கள் தங்கள் போதகர்கள்மட்டில் ஒருவரோடொருவர் வீணான தர்க்கஞ் செய்துகொண்டிருந்ததையும், அவர்களுக்குள் ஒருவன் யாவரும் அறிய துர்மார்க்கமாய் நடந்ததையும் அவர் கேள்விப்பட்டிருந்தார். 

மேலும் விவாகத்தையும், கன்னிமையையுங் குறித்தும், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகள், பெண்பிள்ளைகள் கோவிலில் இருக்க வேண்டிய விதம், திவ்வியநற்கருணை, இஸ்பிரீத்துசாந்துவின் வரங்கள், மரித்தோருடைய உத்தானம் ஆகிய இவைகளைக்குறித்தும் பற்பல விஷயங்களை அறியும்படி அந்தச் சபையார் அவரிடத்தில் எழுதிக் கேட்டிருந்தார்கள். 

அவைகளுக்கு பதில் சொல்லும்படி இந்த நிருபத்தை எழுதினார்.