அர்ச். யூதா எழுதிய நிருபம்

அப்போஸ்தலரான அர்ச். யூதா எழுதிய
நிருபம்அர்ச். யூதா எழுதிய நிருபம் - பாயிரம்


இந்த நிருபத்தை எழுதினவர் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராகிய அர்ச். யூதா என்பவர். இவர் சின்ன யாகப்பரின் சகோதரர். கர்த்தர் அவதாரமான ஏறக்குறை 65-ம் ஆண்டில் இந்த நிருபம் எழுதப்பட்டதென்று வேதசாஸ்திரிகள் தீர்மானித்திருக்கின்றனர். இந்த நிருபத்தில் அர்ச். யூதா அக்காலத்துப் பதிதரின் கெட்ட நடத்தைகளை வெளிப்படுத்தி அவர்களை விலக்கி நடக்கும்படி விசுவாசிகளுக்குப் புத்தி சொல்லுகிறார்


அர்ச். யூதா எழுதிய நிருபம் - அதிகாரம் 01

அக்காலத்திலிருந்த பொல்லாதவர்களுடைய துர்நடக்கைகளை வெளிப்படுத்தி, அவர்களை விலக்கி நடக்கக் கற்பித்து, அவர்களுடைய அவலமான முடிவை எடுத்துக் காண்பிக்கிறார்.

1. சேசுக்கிறீஸ்துநாதருடைய ஊழியனும், யாகப்பருடைய சகோதரனு மாகிய யூதாவாகிய (நான்), பிதா

வாகிய சர்வேசுரனால் நேசிக்கவும், சேசுக்கிறீஸ்துநாதரால் காப்பாற்றவும், அழைக்கவும்பட்டிருக்கிறவர்களுக்கு எழுதுவது:

2. கிருபையும், சமாதானமும், பரம அன்பும் உங்களுக்குப் பூரணமாய் உண்டாவதாக.

3. மிகவும் பிரியமானவர்களே, உங்கள் பொதுவான இரட்சணியத்தைக் குறித்து எழுதும்படி நான் மிகவுங்கவலையுற்றவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் உற்சாகமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதுவது அவசியமாயிற்று.

4. ஏனெனில் நமது சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தைத் தங்கள் துர்மார்க்கத்துக்கேதுவாகப் புரட்டி, நம்முடைய கர்த்தரும் ஆண்டவருமாகிய சேசுக்கிறீஸ்துவை மறுதலிக்கிற அவபக்தரான சில மனிதர் தந்திரமாய் வந்து நுழைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடியில்கண்ட ஆக்கினை ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறது.

5. நீங்கள் எற்கனவே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புவதென்னவெனில், சேசுநாதர் பிரஜைகளை எஜிப்தினின்று இரட்சித்து, பின்பு விசுவசியாதவர்களைச் சங்கரித்தார். (எண். 14:37.)

* 5. சேசுநாதர் சர்வத்துக்கும் கர்த்தராயிருக்கிறபடியால், கர்த்தர் என்கிறவார்த்தையைப் பிரயோகிக்கவேண்டிய இடத்தில் சேசு என்னும் வார்த்தையைப் பிரயோகிக்கிறார்.

6. தங்களுடைய ஆதி மேன்மையைக் காப்பாற்றிக்கொள்ளாமல், தங்கள் வாசஸ்தலத்தைக் கைவிட்ட தூதர்களையும் மகா நாளின் தீர்ப்புக் கென்று நித்திய சங்கிலிகளினால் கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக் கிறார். (2 இரா. 2:4.)

* 6. ஆதி மேன்மை: - இஷ்டப்பிரசாதத்தோடு அவர்கள் முதல் முதல் சிருஷ்டிக்கப்பட்ட பாக்கியமான ஸ்திதி.

7. அப்படியே சோதோம் கொமோ ரா பட்டணத்தாரும், அவர்களைப் போல் விபசாரிகளாகி, அந்நிய மாம்சத் தைப் பின்பற்றின மற்றச் சுற்றுப்புறத் தாரும் நித்திய அக்கினியின் ஆக்கினை யை அடைந்து, மற்றவர்களுக்குப் படிப் பினையானார்கள். (ஆதி. 19:24.)

8. இந்தப்பிரகாரமாய் இவர்களும் மாம்சத்தைக் கறைப்படுத்திக் கொண்டு, அதிகாரத்தைப் புறக்கணித்து, மகத் துவத்தைத் தூஷணிக்கிறார்கள். (2 இரா. 2:10.)

* 8. மகத்துவத்தைத் தூஷணிக்கிறார்கள்: - உலக அதிகாரிகளுக்கு விரோதமாய்ப் பேசுவதுமன்றி, தேவ மகத்துவத்தையும் அவர்கள் தூஷணிக்கிறார்கள்.

9. அதிதூதராகிய மிக்கயேல் மோயீசனுடைய சரீரத்தைக் குறித்துப் பசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனுடைய தூஷணத்துக்குத் தீர்வையிடத் துணியாமல், ஆண்டவரே உனக்கு ஆக்கியாபிப்பாராக என்றார். (சக். 3:2.)

* 9. இங்கே சொல்லப்பட்டிருக்கிற வாக்குவாதம் வேத புஸ்தகத்தில் எந்த இடத்திலும் குறிக்கப்பட்டதில்லை. ஆகையால் இது விசேஷ தேவ ஏவுதலால் அறியப்பட்டு, பாரம்பரியமாய் யூதர்களுக்குள் தெரியப்பட்ட விஷயமாயிருக்கவேண்டும். பசாசு மோயீசனுடைய சரீரத்தைக் கைக்கொண்டிருந்தால் ஒருவேளை அதற்கு யூதர்கள் தேவ ஆராதனை செய்யத் தூண்டிக் கெடுத்திருக்கக்கூடும். இதனாலே அர்ச். மிக்கயேல் அவனைக் கண்டித்திருக்கிறார்.

10. இவர்களோ தங்களுக்குத் தெரியாதவைகளையெல்லாம் தூஷணித்து, சுபாவமாய்த் தாங்கள் அறிந்தவைகளில் வாய்பேசாத மிருகங்களைப் போல் தங்களை அழுகப்பண்ணு கிறார்கள்.

11. இவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் இவர்கள் காயீன் வழியில் சென்றவர்கள்; பாலாமைப்போல் தவறி, கூலிக்காக விழுந்தோடினவர்கள்; கோரையனைப்போல் எதிர்த்து நின்று நாசமானவர்கள். (ஆதி. 4:8; எண். 22:23; 16:32.)

* 11. கள்ளப்போதகர்கள் காயீன் வழியிலே நடக்கிறார்கள்: எப்படியெனில், காயீன் தன் தம்பியைக் கொலைசெய்ததுபோல், அவர்களும் தங்கள் சகோதரருடைய ஆத்துமங்களைக் கொலைசெய்கிறார்கள். பாலாமையும் பின்செல்லுகிறார்கள்: எப்படியெனில், பாலாக்கு ராஜா கொடுக்க உடன்பட்ட கைக்கூலிக்கு ஆசைப்பட்டு அவன் இஸ்ராயேல் பிரஜைகளைச் சபிக்கத் துணிந்ததுபோல், இவர்களுஞ் சம்பளத்துக்கு ஆசைப்பட்டு, சர்வேசுரனுடைய திருச்சபையைத் தூஷணிக்கத் துணிகிறார்கள். கோரை என்பவனையும் பின்செல்லுகிறார்கள்: எப்படியெனில், அவன் மோயீசனையும் ஆரோனையும் எதிர்த்துத் தேவனுக்குத் தூபம் கொடுக்கத் துணிந்தது போல், இவர்களும் திருச்சபையை ஆளுகிறவர்களை எதிர்த்து, வேதத்தைப் போதிக்கத் துணிகிறார்கள். இப்படியே இந்த மூவருக்கும் வந்த ஆக்கினை இவர்களுக்கும் வரும்.

12. இவர்கள் தங்கள் விருந்துகளில் அசுசிகள்; அச்சமின்றி விருந்தாடுகிற வர்கள்; தங்களைத் தாங்களே மேய்த் துக்கொள்ளுகிறவர்கள். இவர்கள் காற் றில் அடிபட்டோடும் நீரில்லாத மேகங் கள்; இலையுதிர்ந்து, கனியற்று, இரு தரஞ் செத்து, வேரற்றுப்போன மரங் கள். (2 இரா. 2:17.)

13. இவர்கள் தங்கள் வெட்கக்கேடுகளை நுரையாகத்தள்ளும் அமளியான கடலலைகள்; மார்க்கந்தப்பி ஓடும் நட்சத்திரங்கள். இவர்களுக்காக அந்தகாரச் சுழல்காற்று நித்தியத்துக்கும் வைக்கப்பட்டிருக்கின்றது.

14. ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையான ஏனோக்கு இவர்களைக்குறித் துத் தீர்க்கதரிசனமாக: இதோ, ஆண் டவர் எல்லோருக்கும் நியாயத் தீர்ப்பிடு வதற்கும், எல்லா அக்கிரமிகளுக்கும் அவர்கள் அக்கிரமமாய்ச் செய்த சகல அக்கிரம செய்கைகளைப்பற்றியும், (காட்சி. 1:7.)

15. அவபக்தரான பாவிகள் கடவுளுக்கு விரோதமாய்ச் சொல்லிய சகல கொடிய வார்த்தைகளைப்பற்றியும் அவர்களைக் கண்டிப்பதற்குத் தம்முடைய ஆயிரமாயிரமான அர்ச்சியசிஷ்டவர்களோடேகூட வருகிறார் என்று சொல்லியிருக்கிறார். (மலக். 3:13.)

16. இவர்கள் முறுமுறுத்து முறையிடுகிறவர்கள்; தங்கள் இச்சைகளின் படி நடக்கிறவர்கள்; வீம்பு பேசும் வாயையுடையவர்கள்; ஆதாயத்துக்காக முகஸ்துதி சொல்லுகிறவர்கள். (சங். 16:10.)

17. நீங்களோ என் அன்பரே, நமது கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துவின் அப் போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள். (2 தீமோ. 3:1; 2 இரா. 3:3.)

18. கடைசிக்காலத்தில் தங்கள் இச் சைகளின்படியே துன்மார்க்கங்களில் நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார் களென்று அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்களே.

19. இவர்கள் தாங்களாய்ப் பிரிந்து போகிறவர்கள்; இந்திரிய ஜீவன்கள்; ஞான ஜீவனற்றவர்கள்.

20. நீங்களோ மிகவும் பிரியமுள்ளவர்களே, உங்கள் மகா பரிசுத்த விசுவாசத்தின்மேல் உங்களை மாளிகை யாக எழுப்பி, இஸ்பிரீத்துசாந்துவில் ஜெபித்து,

21. உங்களைத் தேவசிநேகத்தில் காப்பாற்றி, நித்திய ஜீவியத்துக்கேதுவான தமது இரக்கத்தை நமது கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துநாதர் அளிக்கும்படி எதிர்பார்த்திருங்கள்.

22. ஆகையால் அவதீர்வைக்கு உள்ளானவர்களைக் கண்டியுங்கள்.

23. சிலரை அக்கினியினின்று இழுத்து இரட்சியுங்கள். மற்றவர்கள் மட்டிலோ இரக்கமாயிருங்கள்; ஆனாலும் அச்சமும் வேண்டியது. மாம்சத்தால் கறைபட்ட துணியை முதலாய் வெறுத் துத் தள்ளுங்கள். (இயா. 5:19, 20.)

* 22-23. பிறருக்குப் புத்திசொல்லுகிற விஷயத்திலே மூவித ஜனங்கள் காணப்படுகிறார்கள். சிலர் பாவத்தில் மூர்க்கராயிருக்கிறவர்கள்; அப்படிப்பட்டவர்கள் நடுத்தீர்க்கப்பட்டவர்களென்று எண்ணி, அவர்களைக் கண்டித்துப் புத்தி சொல்ல வேண்டியது. வேறே சிலரை அக்கினியினின்று இழுத்தாற்போல் பாவவழியினின்று பலவந்த மாய் இழுத்துக்கொள்ளவேண்டும். பலவீனத்தினாலும் அறிவீனத்தினாலும் கெட்டுப் போகிற வேறே சிலருக்குத் தயவோடும் இரக்கத்தோடும் புத்தி சொல்லவேண்டும். ஆனால் பாவிகளைத் தயவோடும் இரக்கத்தோடும் நடத்தினாலும், ஆத்துமத்தையும் சரீரத்தையும் அசுசிப்படுத்துகிற சரீரத்துக்கடுத்த எவ்வித நேசத்தையும் அருவருத்து விலக்கவேண்டுமென்று அர்த்தமாகும்.

24. பாவமின்றி உங்களைக் காப்பாற்றவும், நமது கர்த்தராகிய சேசுக்கிறீஸ்து நாதர் வரும்போது தம்முடைய மகிமை யுள்ள சந்நிதியிலே மாசற்றவர்களாய் மிகுந்த மகிழ்ச்சியோடு உங்களை நிறுத் தவும் வல்லமையுள்ளவரும்,

25. நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின் வழியாய் நம்மை இரட்சித்தவருமாகிய ஏக கடவுளுக்கு மகிமையும், ஸ்தோத்திரமும், கர்த்தத்துவமும், வல்லபமும் காலாகாலங்களுக்குமுன் (இருந்ததுபோல்) இப்பொழுதும் அநவரதகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.யூதா நிருபம் முற்றிற்று.