ஒரு கிறிஸ்தவனுக்கு இன்றியமையாது!

ஒரு கிறிஸ்தவனுக்கு இன்றியமையாத ஜெபங்கள் அல்லது ஆயுதங்கள் அல்லது தேவைகள் மூன்று,

1. திருப்பலி

2. ஜெபமாலை

3. சிலுவை

இவைகள் இல்லாமல் வாழ்ந்தால் என்றால் அவன் ஆன்மா கடைசிவரை விசுவாசத்தில் உறுதியாய் இருக்குமா என்றால் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமாக தன் விசுவாசத்தை இழந்துவிடும்.. அவனுக்கு கேரண்டி இல்லை. (இது கத்தொலிக்கர்களுக்கான பதிவு)

தெய்வீகத்திருப்பலி : இதை ஏற்படுத்தியவர் யார் ? சுதனாகிய கடவுள் இயேசு. இயேசு என்ற தலைமைக்குரு குருத்துவத்தையும் குருக்களையும் ஏற்படுத்தி “ இதை என் நினைவாகச் செய்யுங்கள் “ என்றார். ஏன்? தன் பாடுகளை அன்றாடம் நினைவு கூர்ந்து தன் தந்தையை சாந்தப்படுத்தா விட்டால் மண்ணுலகில் பாவம் மலிந்துள்ளதைக்கண்டு மக்கள் மேல் கோபம் கொண்டு உலகை அழித்துவிடுவார் என்பதற்காக.

திருப்பலி யாருக்காக ஒப்புக்கொடுக்கப்படுகிறது? பிதாவுக்காக ஒப்புக்கொடுக்கப்படுகிறது. யார் வழியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது?. சுதனாகிய இயேசு பலியாகி பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறார். அதை ஒப்புக்கொடுப்பது யார்? குருக்கள். திருப்பலி நேரத்தில் அவர்கள் இயேசுவாக மாறுகிறார்கள். அதனால் தான் அவர்கள் சொல்கிறார்கள், “ இது என் சரீரம்” என்று. அந்த வெண்சிறு அப்பத்தை இயேசுவுன் திருவுடலாக மாற்றுவது யார் தூய ஆவியான கடவுள்.

ஆக மூன்று பேருமே பிரசன்னமாகும் இடம் திருப்பலி. ஒவ்வொரு திருப்பலியின் போதும் வானம் திறக்கப்பட்டு தேவமாதாவும், புனிதர்களும், வானதூதர்களும் பிரசன்னமாகும் இடம்தான் தெய்வீகதிருப்பலி. ஆகையினால் திருப்பலி மிகவும் இன்றியமையாத ஜெபம். அதனால்தான் புனித தந்தை பியோ சொன்னார், “ திருப்பலி மட்டும் உலகெங்கிலும் நிறைவேற்றப்படவில்லை என்றால் உலகம் என்றோ அழிந்திருக்கும் என்று. ஆகையால் நம்மால் எவ்வளவு திருப்பலிகளில் கலந்துக்க முடியுமோ அத்தனை திருப்பலிகளில் பங்கேற்று அடிக்கடி தகுதியான உள்ளத்தோடு தேவ நற்கருணை வாங்க வேண்டும். அப்படிச் நம்மை யாரும் அசைக்க முடியாது.

ஜெபமாலை : உலகிற்கு மீட்பைக்கொண்டு வந்த மங்களவார்த்தை அடங்கிய ஜெபம். “அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே” என்று பிதாவால் இயற்றப்பட்டு கபரியேல் தூதரால் சொல்லப்பட்ட ஜெபம்; “ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே!” என்று பரிசுத்த ஆவியானவரால் இயற்றப்பட்டு எலிசபெத்தம்மால் சொல்லப்பட்ட ஜெபம்.  “பாவிகளான எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் நமக்காகவும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் தேவ அன்னையை அவர் மகனிடம் வேண்டிக்கொள்ள கேட்கும் ஜெபம் அடங்கியது ஜெபமாலை.

பரலோக மந்திரம் சுதனாகிய கிறிஸ்துவால் இயற்றப்பட்டது. எப்படி ஜெபிக்கவேண்டும் என்று கேட்ட அப்போஸ்தலர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஜெபம். அதில் வரும் “ஓ என் இயேசுவே” ஜெபம் பாத்திமா அன்னையால் 1917-ல் சொல்லிக்கொடுக்கப்பட்ட ஜெபம். அந்த ஜெபத்தில் இயேசுவிடம் பாவத்திற்கு மன்னிப்பும், நரகநெருப்பில் இருந்து நம்மையும் இந்த உலகத்து மக்களை காப்பாற்றுமாறும், உத்தரிக்கும் ஸ்தலத்து ஆன்மாக்களுக்காகவும் வேண்டும் ஜெபம். ஆக ஜெபமாலை மூவொரு கடவுளாலும், கடவுளின் தாயான அன்னை மரியாளும் இயற்றியுள்ளார்கள். அது யாருக்காக ஜெபிக்கப்படுகிறது. மூவொரு கடவுளை மகிமைப்படுத்த.

யார் வழியாக செய்யப்படுகிறது. தேவமாதா வழியாக செய்யப்படுகிறது. அதனால்தான் ஜெபமாலைக்கு அவ்வளவு சக்தி. அதனால்தான் ஜெபமாலை அதிகமாக ஜெபிக்கப்படவேண்டும்.

நம் பணிகள், கடமைகள் தவிர நாம் ஜெபமாலைக்காக நேரம் ஒதுக்கியும் ஜெபிக்கவேண்டும். கிடைக்கும் ஒய்வு நேரத்தையோ அல்லது ஓய்வு நேரத்தில் ஒரு பகுதியையோ ஜெபமாலைக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஜெபமாலை நம்மை தீய எதிரிகளிடமிருந்து முக்கியமாக சாத்தானிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் ஆயுதம் மற்றும் கேடயம்.

சிலுவை : சிலுவைதான் நமது மோட்ச வீட்டின் கதவை திறக்கும் சாவி. முதல் சாவி இயேசுவினுடைய சிலுவை, அதனால்தான் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்.இரண்டாவது சாவி நாம் இந்த உலகத்தில் நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்யும் துன்பங்கள் என்னும் சிலுவை. சிலுவை இல்லாமல் மீட்பு இல்லை என்று இயேசுவே சொல்லிவிட்டார்.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்”.
லூக்காஸ் 9 : 23

“ தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது “
லூக்காஸ் 14 : 27

ஆகையினால் கடவுள் கொடுக்கும் வாய்ப்புகளை வீணடிக்கக்கூடாது. அது கைவலி, கால்வலி, நோயாக இருக்கலாம், இல்லை அசவுகரீகங்களாக இருக்கலாம். மழை, வெயில், குளிராக இருக்கலாம், ஏன் சமையல், படிப்பு நம் வேலையாகக்கூட இருக்கலாம். அதை நாம் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். நோயாளிகள் மருத்துவம் செய்யவேண்டும். நம் நோய்கள் குணமாகும்வரை உள்ள வேதனைகளை ஒப்புக்கொடுக்க வேண்டும். சில நேரங்களில் அந்த நோயை அவரே குணமாக்கவும் செய்யலாம்.

அநேகமாக தேவமாதா, புனித சூசையப்பர், அப்போஸ்தலர்கள் தொடங்கி அனைத்து புனிதர்களுமே இந்தச் சிலுவைகளை சுமக்காமல் விண்ணகம் செல்லவில்லை. புனிதர்களாகவும் ஆகவில்லை. “சிலுவையிலே தான் மீட்சியுண்டு; தேடும் வானக மாட்சியுண்டு”

ஆகையினால் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுப்போம்; நாம் சிலுவை என்ற ஆயுதத்தை பயன்படுத்துவோம். நம்மிடம் சிலுவை இருந்தால் நம் பக்கம் சாத்தான் வர மாட்டான். வரவே மாட்டான்.

ஆக ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கட்டாய தேவை திருப்பலி, ஜெபமாலை, சிலுவை..