ஆதியாகமம்

அதிகாரம் 01 

1 ஆதியிலே கடவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார்

2 பூமி உருவமற்றதும் வெறுமையுற்றதுமாய் இருந்தது. பாதாளத்தின் முகத்தே இருள் பரவியிருந்தது. கடவுளின் ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தார்.

3 அப்பொழுது கடவுள்: ஒளி உண்டாகுக என்று உரைத்தார். உரைக்கவே, ஒளி உண்டாயிற்று.

4 கடவுள் ஒளியை நல்லது என்று கண்டு, ஒளியை இருளினின்று பிரித்தார்.

5 ஒளிக¢குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் சேர்ந்து முதல் நாள் ஆயிற்று.

6 பின் கடவுள்: நீர்த்திரளின் நடுவில் வானவெளி உண்டாகி நீரினின்று நீர் பிரியக் கடவது என்றார்.

7 இவ்வாறு கடவுள் வான வெளியை உண்டாக்கி, வானவெளிக்குக் கீழேயுள்ள நீரையும், வானவெளிக்கு மேலேயுள்ள நீரையும் பிரித்தார். அதுவும் அவ்வண்ணமே ஆயிற்று

8 கடவுள் வானவெளிக்குப் பரலோகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் சேர்ந்து இரண்டாம் நாள் ஆயிற்று.

9 மேலும் கடவுள்: வானவெளிக்குக் கீழேயுள்ள நீரெல்லாம் ஒரே இடத்தில் ஒன்றாகச் சேரக்கடவது; காய்ந்த தரை தோன்றக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.

10 காய்ந்த தரைக்கு நிலம் என்றும், ஒன்றாகச் சேர்ந்த நீர்த்திரளுக்குக் கடல் என்றும் கடவுள் பெயரிட்டார். அதுவும் நலமென்று கடவுள் கண்டார்.

11 அப்போது அவர்: விதையைப் பிறப்பிக்கும் பசும் புற்பூண்டுகளையும், பூமியின் மீது தம்மிடம் விதைகளைக் கொண்டுள்ள கனிகளைத் தத்தம் இனத்தின்படியே தரும் மரங்களையும் பூமி முளைப்பிக்கக்கடவது என்றார்.

12 அதுவும் அப்படியே ஆயிற்று. பூமி தத்தம் இனத்தின்படியே தத்தம் விதையைப் பிறப்பிக்கும் புற்பூண்டுகளையும், தத்தம் இனத்தின்படி தம்மிடம் விதைகளைக் கொண்டுள்ள மரங்களையும் முளைப்பித்தது. கடவுள் அதுவும் நல்லதென்று கண்டார்.

13 மாலையும் காலையும் சேர்ந்து மூன்றாம் நாள் ஆயிற்று.

14 மேலும் கடவுள்: பரமண்டல வான்வெளியில் சுடர்கள் உண்டாகிப் பகலையும் இரவையும் பிரிக்கக் கடவன; அவை பருவக் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதற்கான அடையாளங்களாய் அமையக் கடவன.

15 அவை பரமண்டல வான்வெளியில் சுடர்களாய் இருந்து பூமிக்கு ஒளி தரக்கடவன என்றார். அதுவும் அப்படியே ஆயிற்று.

16 அப்போது கடவுள் பகலை ஆளப் பெரியதொரு சுடரும், இரவை ஆளச் சிறியதொரு சுடருமாக இரு பெரும் சுடர்களையும் விண்மீன்களையும் உண்டாக்கினார்.

17 கடவுள் அவற்றைப் பரமண்டல வானவெளியில் நிறுவிப் பூமியின் மேல் ஒளி வீசவும்,

18 பகலையும் இரவையும் ஆளவும், ஒளியையும் இருளையும் பிரிக்கவும் அமைத்தார். கடவுள் அதுவும் நல்லதென்று கண்டார்.

19 மாலையும் காலையும் சேர்ந்து நான்காம் நாள் ஆயிற்று.

20 மேலும் கடவுள்: அசைந்து உலாவும் உயிரினங்களையும், பூமியின் மேலே பரமண்டல வான்வெளியில் பறந்து திரியும் பறவைகளையும், நீர்த்திரள் பிறப்பிக்கக்கடவது என்றார்.

21 அப்போது கடவுள் திமிங்கிலங்களையும், உயிரும் அசைவும் உடையனவாய் நீர்திரளில் உற்பத்தியாகிய வகை வகையான பிராணிகள், வித விதமான பறவைகள் எல்லாவற்றையும் படைத்தார். கடவுள் அதுவும் நல்லதென்று கண்டர்.

22 அவர் அவைகளை ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள்; பறவைகளும் பூமியில் பலுகக் கடவன என்றார்.

23 மாலையும் காலையும் சேர்ந்து ஐந்தாம் நாள் ஆயிற்று.

24 பின் கடவுள்: பலவகையான உயிரினங்களையும், வீட்டு விலங்குகளையும், ஊர்வனவற்றையும், காட்டு விலங்குகளையும் பூமி பிறப்பிக்கக்கடவது என்றார். அப்படியே ஆயிற்று.

25 அப்போது கடவுள் பலவகைக் காட்டு விலங்குகளையும், வீட்டு விலங்குகளையும், பூமியின் மீது ஊர்வன யாவற்றையும் படைத்தார். கடவுள் அதுவும் நல்லதென்று கண்டார்.

26 பின்னர் கடவுள்: நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக; அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கடவன் என்றார்.

27 இவ்வாறு கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

28 கடவுள் அவர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பி அதனைக் கீழ்ப்படுத்துங்கள்; கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், பூமியின் மீது அசைந்து உலாவும் உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றார்.

29 மேலும் கடவுள்: இதோ பூமியின் மீது விதை தரும் புற்பூண்டுகள் எல்லாவற்றையும், தத்தம் இனத்தின்படி தம் விதைகளைக் கொண்டிருக்கும் விதவிதமான மரங்களையும் உங்களுக்கு உணவாகத் தந்துள்ளோம்;

30 மேலும், பூமியில் உயிர் வாழும் விலங்குகள் வானத்தில் பறக்கும் பறவைகள், உயிரோடு பூமியில் அசையும் எல்லாவற்றிக்கும் அதே புற்பூண்டுகளை உணவாகக் கொடுத்தோம் என்றார். அதுவும் அப்படியே ஆயிற்று.

31 அப்போது கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் சேர்ந்து ஆறாம் நாள் ஆயிற்று.

அதிகாரம் 02

1 இவ்வாறு விண்ணும் மண்ணும் அவற்றிற்கு அழகு தரும் யாவும் படைக்கப்பட்டு முடிந்தன.

2 கடவுள் தாம் ஏழாம் நாளிற்கு முன் செய்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்.

3 மேலும் தாம் செய்ய நினைத்திருந்த வேலைகளையெல்லாம் செய்து விட்டு அந்நாளில் ஓய்வெடுத்தார். எனவே, அவ்வேழாம் நாளை ஆசிர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.

4 இவையே விண்ணும் மண்ணும் படைக்கப் பெற்ற தொடக்கக்கால நிகழ்ச்சிகள் ஆகும்; அந்நாளில் ஆண்டவராகிய கடவுள் விண்ணையும் மண்ணையும் உண்டாக்கினார்.

5 இதற்கு முன் தரையில் இல்லாதிருந்த செடிகள் யாவற்றையும், இதற்கு முன் தரையில் வளர்ந்திராப் புற்பூண்டுகள் எல்லாவற்றையும் வயல் வெளிகளில் உண்டாக்கினார். உண்மையிலே அது வரை ஆண்டவராகிய கடவுள் பூமியின் மீது மழை பொழியச் செய்யவுமில்லை, நிலத்தை உழுவதற்கு ஒரு மனிதனும் இருந்ததுமில்லை.

6 ஆயினும், பூமியிலிருந்து தோன்றிய ஒரு நீருற்று பூமியெங்கும் பாய்ந்து கொண்டிருந்தது.

7 அப்படியிருக்க, ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்.

8 ஆண்டவராகிய கடவுள் ஆதியிலே ஓர் இன்ப வனத்தை நட்டிருந்தார். தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.

9 ஆண்டவராகிய கடவுள் அவ்வனத்திலே பார்வைக்கு அழகிய, நாவிற்கு இனிய கனிகள் கொண்டுள்ள பலவித மரங்களையும் மண்ணினின்று தோன்றச் செய்தார். மேலும், அந்த இன்ப வனத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியும் மரத்தையும் வளரச் செய்தார்.

10 அவ்வின்ப வனத்திற்குப் பாய ஒரு நதி அவ்வனத்திலிருந்தே புறப்பட்டு, அங்கிருந்து நான்கு தலையான ஆறுகளாகப் பிரிந்து போகிறது.

11 அவைகளில் ஒன்று பீசோன் என்பதாம். அது பொன் விளையும் பூமியாகிய எவிலாத் நாட்டையெல்லாம் சுற்றி ஓடுகிறது.

12 அந்நாட்டில் விளையும் பொன் மிகச் சுத்தமானது. அதுவுமின்றிக் குங்கிலியமும் ஒருவிதக் கோமேதக் கல்லும் அங்குக் கிடைக்கின்றன.

13 இரண்டாம் ஆற்றின் பெயர் யெகோன். இதுவே எத்தியோப்பிய நாடு முழுவதையும் சுற்றிச் செல்கிறது.

14 திகிரிஸ் என்பது மூன்றாம் ஆற்றின் பெயர். இது அசீரிய நாட்டை நோக்கிச் செல்கிறது. நான்காம் ஆற்றின் பெயர் யூஃப்ரத்தீஸ்.

15 ஆண்டவராகிய கடவுள் மனிதனை அழைத்து அவ்வின்ப வனத்தை உழுது பேணும்படி அவனை அங்கு விட்டு வைத்தார்.

16 அன்றியும் அவனை நோக்கிக் கட்டளையிட்டு, இவ்வின்ப வனத்திலுள்ள எல்லாவித மரங்களின் கனிகளையும் நீ உண்ணலாம்;

17 ஆனால், நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்ணாதே; ஏனென்றால் அதை நீ உண்ணும் நாளிலே சாகவே சாவாய் என்று சொன்னார்.

18 மேலும், ஆண்டவராகிய கடவுள்: மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று; ஆதலால் அவனுக்குச் சரிநிகரான ஒரு துணைவியை அவனுக்கென உண்டாக்குவோம் என்றார்.

19 ஆண்டவராகிய கடவுள் பூமியின் எல்லா வித மிருகங்களையும் வானத்துப் பறவைகள் அனைத்தையும் மண்ணினின்று படைத்த பின்னர், அவற்றிற்கு ஆதாம் என்னென்ன பெயர் இடுவானென்று பார்க்க அவற்றையெல்லாம் அவனிடம் கூட்டி வந்தார். ஏனென்றால் அந்த உயிரினங்களுக்கு ஆதாம் எந்தப் பெயரிட்டானோ அதுவே அவற்றிற்குப் பெயராய் அமைந்தது.

20 அவ்வாறே ஆதாம் எல்லாக் கால்நடைகளுக்கும், வானத்துப் பறவைகளுக்கும், பூமியிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் தகுதியான பெயர்களை இட்டான். ஆனால் ஆதாமுக்கு ஒத்த துணை ஒன்றும் தென்படவில்லை.

21 அப்போது ஆண்டவராகிய கடவுள் ஆதாமுக்கு ஆழ்ந்த தூக்கம் வரச் செய்தார். அவன் அவ்வாறு தூங்கிக் கொண்டிருந்த போது கடவுள் அவனுடைய விலாவெலும்புகளில் ஒன்றை எடுத்து, அவ்வாறு எடுத்த இடத்தைச் சதையினால் மூடினார்.

22 பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்.

23 ஆதாம்: இவள் என் எலும்புகளின் எலும்பும் மாமிசத்தின் மாமிசமுமாய் இருக்கிறாள்; இவள் மனிதனிடத்தினின்று எடுக்கப்பட்டவளாதலால் மனுசி எனப்படுவாள் என்றான்.

24 இதன் பொருட்டு மனிதன் தன் தந்தையையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே மாமிசமாய் இருப்பார்கள், (என்று சொன்னார்.)

25 ஆதாம், அவன் துணைவி ஆகிய இருவரும் நிருவாணமாய் இருந்தார்கள்; இருந்தும் அவர்கள் வெட்கம் என்பதை அறியாதிருந்தார்கள்.

அதிகாரம் 03

1 ஆண்டவராகிய கடவுளால் படைக்கப்பட்ட எல்லாப் பிராணிகளிலும் பாம்பு அதிகத் தந்திரமுள்ளதாய் இருந்தது. அது பெண்ணை நோக்கி: இன்ப வனத்திலுள்ள எல்லா மரங்களின் கனிகளையும் உண்ண வேண்டாமென்று உங்களைக் கடவுள் ஏன் தடுத்தார் என்று கேட்டது.

2 பெண்: இன்ப வனத்திலுள்ள மரங்களின் கனிகளை நாங்கள் உண்டே வருகிறோம்;

3 ஆனால், இன்ப வனத்தின் நடுவிலிருக்கிற மரத்தின் கனியைத் தின்ன வேண்டாம் தொடவும் வேண்டாம் என்று கடவுள் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்; தின்றால் சாவோம் என்றாள்.

4 பாம்பு பெண்ணை நோக்கி: நீங்கள் உண்மையில் சாகவே மாட்டீர்கள்;

5 நீங்கள் எப்போது அக்கனியைத் தின்பீர்களோ அந்நேரமே உங்கள் கண்கள் திறக்கப்படும். அதனால் நீங்கள் தெய்வங்கள் போல் ஆகி நன்மையும் தீமையும் அறிவீர்கள்; இது கடவுளுக்குத் தெரியும் என்று சொல்லிற்று.

6 அப்பொழுது பெண் அந்த மரத்தின் கனி தின்பதற்கு நல்லது, பார்வைக்கு இனியது, அறிவைப் பெறுவதற்கு விரும்பத் தக்கது எனக் கண்டு, அதைப் பறித்துத் தானும் உண்டாள்; தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் அதைத் தின்றான்.

7 உடனே அவ்விருவருடைய கண்களும் திறக்கப்பட்டன. தாங்கள் நிருவாணமாய் இருந்ததை அவர்கள் கண்டு, அத்தி இலைகளைத் தைத்து இடுப்பில் உடுத்திக் கொண்டார்கள்.

8 மேலும், மாலையில் தென்றல் வீசும் வேளையிலே இன்ப வனத்தில் உலாவிக் கொண்டிருந்த ஆண்டவராகிய கடவுளின் குரலொலியைக் கேட்டார்கள். கேட்டதும், ஆதாமும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் முன்னிலையில் நில்லாதவாறு இன்ப வனத்து மரங்களிடையே ஒளிந்து கொண்டார்கள்.

9 அப்போது ஆண்டவராகிய கடவுள் ஆதாமைக் கூப்பிட்டு: எங்கே இருக்கிறாய் என்றார்.

10 அதற்கு அவன்: நான் இன்பவனத்தில் உமது குரலொலியைக் கேட்டேன். நிருவாணியாய் இருந்ததால் பயந்து ஒளிந்து கொண்டேன் என்றான்.

11 கடவுள்: நீ நிருவாணியாய் இருப்பதாக உனக்குச் சொன்னவன் யார்? உண்ண வேண்டாமென்று நாம் உனக்கு விலக்கியிருந்த கனியைத் தின்றாயோ? என்று வினவினார்.

12 ஆதாம்: எனக்குத் துணைவியாய் இருக்கும்படி நீர் எனக்குத் தந்தருளிய அந்தப் பெண்ணே அம்மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் தின்றேன் என்றான்.

13 அப்போது ஆண்டவராகிய கடவுள் பெண்ணை நோக்கி: நீ ஏன் அவ்வாறு செய்தாய்? என்று கேட்டார். அவள்: பாம்பு என்னை வஞ்சித்ததால் தின்று விட்டேன் என்று பதில் சொன்னாள்.

14 அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் பாம்பைப் பார்த்து: நீ அவ்வாறு செய்ததால் பூமியிலுள்ள எல்லாப் பிராணிகளிலும் சபிக்கப்பட்டதாய், உன் வயிற்றினால் ஊர்ந்து, உயிரோடிருக்கும் வரை மண்ணைத் தின்பாய்;

15 உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.

16 அவர் பெண்ணை நோக்கி: துன்பங்களையும் கருப்ப வேதனைகளையும் உனக்கு அதிகப்படுத்துவோம்; வேதனையோடு நீ பிள்ளைகளைப் பெறுவாய்; கணவனின் அதிகாரத்துக்கு நீ அடங்கி இருப்பாய்; அவன் உன்னை ஆண்டு கொள்வான் என்றார்.

17 பின் கடவுள் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் சொல்லுக்குச் செவிசாய்த்து, உண்ண வேண்டாமென்று நாம் விலக்கியிருந்த மரத்தின் கனியைத் தின்றதினாலே உன் பொருட்டு பூமி சபிக்கப்பட்டிருக்கும்; நீ உழைத்துத் தான் உன் வாழ்நாளெல்லாம் அதன் பலனை உண்பாய்.

18 அது உனக்கு முட்களையும் முட்செடிகளையும் விளைவிக்கும்; பூமியின் புல் பூண்டுகளை நீ உண்பாய்;

19 நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்பாய். இறுதியில், நீ எந்தப் பூமியினின்று எடுக்கப் பட்டாயோ அந்தப் பூமிக்கே திரும்பிப் போவாய்; ஏனென்றால், நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய் என்றார்.நி98

20 பின் ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவளே உயிர் வாழ்வோர்க்கெல்லாம் தாயானவள்.

21 அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் தோல் சட்டைகளைச் செய்து ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் அணிவித்தார்.

22 பின்: இதோ ஆதாம் நன்மை தீமை அறிந்தவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆகிவிட்டானே! இனி அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் கனியைப் பறித்துத் தின்று, என்றென்றும் உயிர் வாழ்வானோ என்று சொல்லி,

23 அவன் எந்த மண்ணினின்று எடுக்கப்பட்டானோ அந்த மண்ணையே பண்படுத்தும்படி ஆண்டவராகிய கடவுள் அவனை இன்ப வனத்திலிருந்து அனுப்பி விட்டார்.

24 அப்படி ஆதாமை வெளியே துரத்திவிட்ட பின் கடவுள் இன்ப வனத்தின் வாயிலில், சுடர் விட்டெரியும் வாளை ஏந்தி எப்பக்கமும் சுழற்றுகின்ற கெரூபிமை வைத்து, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல் செய்யச் சொன்னார்.

அதிகாரம் 04

1 ஆதாம் தன் மனைவி ஏவாளோடு கூடி வாழ்ந்தான். அவள் கருத்தரித்துக் காயினைப் பெற்று: கடவுள் அருளால் ஓர் ஆண்மகனைப் பெற்றேன் என்றாள்.

2 பின் அவனுடைய தம்பியாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயினோ நிலத்தைப் பயிரிடுபவன் ஆனான்.

3 நீண்ட நாட்களுக்குப் பின் நிகழ்ந்ததாவது: காயின் தன் விளைச்சலின் பலனை ஆண்டவருக்குக் காணிக்கையாய்ச் செலுத்தினான்.

4 ஆபேலோ தன் மந்தையின் தலையீற்றுக்களில் மிகக் கொழுத்த ஆடுகளைக் காணிக்கையாய்க் கொடுத்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்.

5 காயினையோ அவன் காணிக்கைகளையோ அவர் கண்ணோக்கவில்லை. அதனால் காயின் மிக்க சினம் கொண்டான். அவன் முகம் வாடியது.

6 அப்போது ஆண்டவர் அவனை நோக்கி: நீ ஏன் கோபமாய் இருக்கிறாய்? உன் முகம் வாடியிருப்பது ஏன்?

7 நீ நன்மை செய்தால் உனக்கு வெகுமதி கிடைக்கும்; தீமை செய்தால் உடனே பாவம் உன் வாயிலில் வந்து பதுங்கி நிற்குமன்றோ? அதன் ஆசை உன் மேல் இருக்கும்; நீயோ அதை அடக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

8 ஒரு நாள் காயின் தன் தம்பி ஆபேலைப் பார்த்து: வெளியே போகலாம் வா என்றான். வயல்வெளியில் இருந்த போது காயின் தன் தம்பி ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்று விட்டான்.

9 அப்பொழுது ஆண்டவர் காயினை நோக்கி உன் தம்பி ஆபேல் எங்கே என்று வினவ, அவன்: நான் அறியேன்; என் தம்பிக்கு நான் என்ன காவலாளியா? என்றான்.

10 அதற்கு அவர்: உன் தம்பியின் இரத்தக் குரல் பூமியினின்று நம்மை நோக்கிக் கூக்குரலிடுகிறதே;

11 நீ என்ன செய்தாய்? இதோ கேள்; பூமி தன் வாயைத் திறந்து, உன் கையால் சிந்திய உன் தம்பியின் இரத்தத்தை உட்கொண்டது. ஆகவே, இன்று முதல் நீ அந்தப் பூமியில் சபிக்கப்பட்டவனாய் இருப்பாய்.

12 அதனை நீ பயிரிட்டால் அது உனக்குப் பலன் தராது. பூமியில் நீ நிலையற்றவனும் நாடோடியுமாய் இருப்பாய் என்றார்.

13 அப்போது காயின் ஆண்டவரை நோக்கி, என் பாவம் மன்னிக்கப்படக் கூடுமானதன்று; அது அத்தனை பெரிது.

14 இதோ, இந்நாட்டிலிருந்து என்னை இன்று துரத்தி விடுகிறீர். இனி நான் உம் கண்ணிற்கு மறைந்தவனாய்ப் பூமியில் நிலையற்றவனும் நாடோடியுமாய் இருப்பேன். அப்படியானால் என்னைக் காணும் எவனும் என்னைக் கொல்வானே என்றான்.

15 ஆண்டவர்: அப்படி நடக்கவே நடக்காது; காயினைக் கொல்பவன் ஏழு மடங்கு பழியைச் சுமப்பான் என்று காயினுக்குச் சொல்லி, அவனைக் கண்டு பிடிப்பவன் எவனும் அவனைக் கொல்லாதபடிக்கு அவனுக்கு ஓர் அடையாளம் இட்டார்.

16 அப்போது காயின் ஆண்டவருடைய திருமுன்னின்று விலகி, ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள நாட்டில் அகதியாய் அலைந்து திரிந்தான்.

17 பின் காயின் தன் மனைவியோடு சுடி வாழ்ந்தான். அவள் கருத்தரித்து ஏனோக்கைப் பெற்றாள். அப்போது காயின் ஒரு நகரை எழுப்பி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை இட்டான்.

18 ஏனோக் இராத்தைப் பெற்றான். இராத் மவியயேலைப் பெற்றான். மவியயேல் மத்துசயேலைப் பெற்றான். மத்துசயேல் இலாமேக்கைப் பெற்றான்.

19 இலாமேக் இரண்டு மனைவியரைக் கொண்டான்: ஒருத்தியின் பெயர் ஆதாள், மற்றவள் பெயர் செல்லாள்.

20 ஆதாள் யாபேலைப் பெற்றாள்: கூடாரவாசிகளுக்கும் ஆயர்களுக்கும் தந்தை இவனே. இவன் தம்பி பெயர் யூபால்:

21 வீணையும் கின்னரமும் வாசிப்பவர்களுக்கு அவனே தந்தை.

22 செல்லாளும் துபால் காயினைப் பெற்றாள். இவன் இரும்பு, பித்தளைகளைக் கொண்டு வேலை செய்யும் கருமானும் கன்னானும் ஆனான். துபால் காயினின் சகோதரி நொஎமாள்.

23 இலாமேக் தன் மனைவியராகிய ஆதாளையும் செல்லாளையும் நோக்கி: இலொமேக்கின் மனைவியரே, என் வார்த்தையைக் கேளுங்கள்; என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்: என்னைக் காயப்படுத்திய ஒரு மனிதனை நான் கொன்றேன்; என்னைத் துன்புறுத்திய ஒரு இளைஞனையும் சாகடித்தேன்;

24 எனவே, காயின் பொருட்டு ஏழு மடங்கு பழியென்றால், இலாமேக்கின் பொருட்டு ஏழெழுபது மடங்கு பழி வந்து சேரும் என்றான்.

25 மீண்டும் ஆதாம் தன் மனைவியோடு கூடிவாழவே, அவள் ஒரு மகனைப் பெற்றாள்: காயின் கொலை புரிந்த ஆபேலுக்குப் பதிலாகக் கடவுள் எனக்கு வேறொரு மகனைத் தந்தருளினார், என்று சொல்லி, அவள் அவனுக்குச் சேத் என்று பெயரிட்டாள்.

26 சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். சேத் இவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான். இவனே ஆண்டவருடைய (திருப்) பெயரைச் சொல்லி வழிபடத் தொடங்கினான்.

அதிகாரம் 05

1 ஆதாமுடைய சந்ததியாரின் அட்டவணையாவது: கடவுள் தாம் படைத்த நாளில் மனிதனைத் தெய்வச் சாயலாகப் படைத்தார்.

2 அவர் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்து ஆசீர்வதித்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர் மனிதன் என்னும் பெயரை அவர்களுக்குக் கொடுத்தார்.

3 நூற்றுமுப்பது ஆண்டுகள் வாழ்ந்த பின் ஆதாம் தன் உருவமும் சாயலும் கொண்ட ஒரு மகனைப் பெற்று, அவனைச் சேத் என்று அழைத்தான்.

4 சேத்தைப் பெற்ற பின் ஆதாம் எண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.

5 ஆதாமின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.

6 சேத் நூற்றைந்து ஆண்டு வாழ்ந்த பின் ஏனோஸைப் பெற்றான்.

7 ஏனோஸைப் பெற்ற பின் எண்ணுற்றேழு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.

8 சேத்தின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.

9 ஏனோஸ் தொண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்த பின் காயினானைப் பெற்றான்.

10 இவன் பிறந்த பின் எண்ணுற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.

11 ஏனோஸின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.

12 காயினான் எழுபது ஆண்டு வாழ்ந்த பின் மகலாலெயேலைப் பெற்றான்.

13 மகலாலெயேலைப் பெற்ற பின் கயினான் எண்ணுற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.

14 கயினானின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.

15 மகலாலெயேல் அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் யாரேதைப் பெற்றான்.

16 யாரேதைப் பெற்ற பின் மலலெயேல் எண்ணுற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.

17 மலலெயேலின் வாழ்நாள் மொத்தம் எண்ணுற்றுத் தொண்ணுற்றைந்து ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.

18 யாரேத் நூற்றருபத்திரண்டு ஆண்டு வாழ்ந்த பின் ஏனோக்கைப் பெற்றான்.

19 ஏனோக்கைப் பெற்ற பின் எண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.

20 யாரேத்தின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.

21 ஏனோக்கு அறுபத்தைந்து ஆண்டு வாழ்ந்த பின் மெத்துசலாவைப் பெற்றான்.

22 ஏனோக்கு கடவுளுக்கு உகந்த விதமாய் நடந்து, மெத்துசலாவைப் பெற்ற பின் முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.

23 ஏனோக்கின் வாழ்நாள் மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள்.

24 அவன் கடவுளுக்கு உகந்த விதமாய் நடந்து இவ்வுலகினின்று மறைந்தான். ஏனென்றால் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார்.

25 மெத்துசலா நூற்றெண்பத்தேழு ஆண்டு வாழ்ந்த பின் லாமேக்கைப் பெற்றான்.

26 லாமேக்கைப் பெற்ற பின் மெத்துசலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.

27 மெத்துசலாவின் வாழ்நாள் மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள். பின் அவன் இறந்தான்.

28 லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு ஆண்டு வாழ்ந்த பின்பு ஒரு புதல்வனைப் பெற்று:

29 ஆண்டவராலே சபிக்கப்பட்ட (இந்தப்) பூமியில் எங்கள் உழைப்பிலும் களைப்பிலும் இவனே எங்களுக்குத் தேற்றுபவன் ஆவான். என்று சொல்லி அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.

30 நோவாவைப் பெற்ற பின் லாமேக்கு ஐந்நூற்றுத் தொண்ணுற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றான்.

31 லாமேக்கின் வாழ்நாள் மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள். பின் அவன் இறந்தான். நோவா ஐந்நூறு ஆண்டுகள் சென்ற பின் சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

அதிகாரம் 06

1 மனிதர்கள் பூமியில் பலுகிப் பெருகத் தொடங்கிப் பெண் மக்களைப் பெற்றெடுத்த பின்,

2 மனிதப் புதல்வியர் அழகு மிகுந்தவர்களாய் இருக்கக் கண்ட தெய்வப் புதல்வர் அவர்களுள் தங்களுக்கு விருப்பமானவர்களை மணந்து கொண்டார்கள்.

3 அப்போது கடவுள்: நம் ஆவி மனிதனிடம் என்றென்றும் தங்காது. ஏனென்றால் அவன் மாமிசமே! இனி அவனுக்கு வாழ்நாள் நூற்றிருபது ஆண்டுகளாய் அமையும் என்றார்.

4 அக்காலத்தில் பூமியின் அரக்கர் இருந்தனர். ஏனென்றால், தெய்வப் புதல்வர் மனிதப் புதல்வியரை மணந்து கொண்ட பின் இவர்களும் பிள்ளைகள் பெற்றனர். இவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தொடக்கத்தில் பேர் பெற்ற வல்லவர்களாய் இருந்தனர்.

5 மண்ணுலகில் மனிதருடைய அக்கிரமம் பெருகினதையும், அவர்கள் எண்ணமெல்லாம் எப்போதும் தீமையையே நாடியிருந்ததையும் கண்டு, கடவுள், இவ்வுலகில் மனிதனைப் படைத்து குறித்து வருந்தினார்.

6 அப்போது அவர் மனம் நொந்து: நாம் படைத்த மனித இனத்தைப் பூமியில் இல்லாதபடி அழித்து விடுவோம்;

7 மனிதன் முதல் மிருகங்கள் வரையிலும், ஊர்வன முதல் வானத்துப் பறவைகள் வரையிலும், எல்லாவற்றையும் அழித்தொழிப்போம்; ஏனென்றால், அவற்றைப் படைத்ததை நினைத்து வருந்துகிறோம் என்றார்.

8 ஆனால் நோவா ஒருவர் மட்டும் ஆண்டவர் திருமுன் அருள் பெற்றவர் ஆனார்.

9 நோவாவின் தலைமுறை அட்டவணையாவது: நோவா தம் காலத்தில் இருந்தவர்களுள் நீதிமானும் உத்தமனுமாய்க் கடவுளுக்கு ஏற்க நடந்து வந்தார்.

10 அவர் சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று புதல்வரைப் பெற்றார்.

11 பூமியோ கடவுள் கண்ணுக்குக் கெட்டிருந்தது; அதிக அக்கிரமத்தால் நிறைந்திருந்தது.

12 மாமிசம் கொண்ட மனிதர் யாவரும் பூமியிலே கெட்ட வழியில் நடக்கிறார்கள்; அதனால் உலகம் கெட்டுப் போயிற்று எனக் கடவுள் கண்டு, நோவைவை நோக்கி:

13 மாமிசம் கொண்டுள்ள மனிதர்களை நாம் அழித்து விடத் தீர்மானித்துள்ளோம். அவர்களாலே பூமி அக்கிரமத்தில் நிறைவுற்றபடியால், அவர்களைப் பூமியோடு அழிப்போம்.

14 நன்கு இசையும் மரங்களால் நீ ஒரு பெட்டகத்தைச் செய்து, அப்பெட்டகத்திலே சிற்றறைகளை உண்டாக்கி, அதன் உள்ளும் புறமும் தார் பூசு.

15 அப்பெட்டகத்தின் நீளம் முந்நூறு முழமும், அகலம் ஐம்பது முழமும், உயரம் முப்பது முழமுமாக இருக்கட்டும்.

16 பெட்டகத்தின் மேல் தட்டுக்கு ஒரு முழம் தாழ்த்தி ஒரு சன்னல் இருக்கட்டும். பெட்டகத்தின் கதவை ஒரு பக்கத்தில் அமைத்து, ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தட்டுகளையும் அமை.

17 ஏனென்றால் வானத்தின் கீழிருக்கிற உயிரினங்கள் எல்லாவற்றையும் அழிக்க, இதோ நாம் பூமியின் மேல் வெள்ளப் பெருக்கு வரப் பண்ணுவோம். பூமியிலுள்ள யாவும் அடியோடு அழியும்.

18 ஆனால் உன்னோடு நம்முடைய உடன்படிக்கையை நிலை நிறுத்துவோம். பெட்டகத்துள் நீயும் புகுவாய்; உன்னோடு உன் புதல்வர்களும், உன் மனைவியும், உன் புதல்வர்களின் மனைவியரும் நுழைவார்கள்.

19 அன்றியும், உன்னுடன் உயிரோடு காக்க வேண்டிய எல்லாவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக இனத்திற்கு ஒரு சோடியைப் பெட்டகத்திலே சேர்ப்பாய்.

20 இவ்வாறு பல்வேறுப்பட்ட பறவைகளிலும் மிருகங்களிலும், பூமியில் ஊர்வனவற்றிலும் இனத்திற்கு ஒரு சோடி உயிரோடு காக்கப்பட உன்னுடன் நுழையும்.

21 ஆதலால், நீ உண்ணத் தக்க உணவுப் பொருட்களையும் சேகரித்துப் பெட்டகத்தில் வைத்துக் கொள். அது உனக்கும் அவைகளுக்கும் உணவாய் அமையும் என்று கூறினார்.

22 நோவா கடவுள் கட்டளைப்படி எல்லாம் செய்து முடித்தார்.

அதிகாரம் 07

1 பின் ஆண்டவர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பெட்டகத்தினுள் செல்லுங்கள். ஏனென்றால், இப்பொழுது இருக்கிற மனிதர்களுக்குள்ளே உன்னையே நமது முன்னிலையில் நீதிமானென்று கண்டோம்.

2 சுத்தமான எல்லா மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடியும், அசுத்தமான மிருகங்களிலோ ஆணும் பெண்ணுமாக இரண்டு சோடியும்,

3 வானத்துப் பறவைகளிலும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடியும் உன்னோடு சேர்த்துக்கொள். அதனால் பூமியெங்கும் உள்ளவற்றின் வித்து காக்கப்படும்.

4 ஏனென்றால், இன்னும் ஏழு நாட்களுக்குப் பின் நாற்பது பகலும் நாற்பது இரவுமாகப் பூமியின் மேல் நாம் மழை பொழியச் செய்து, படைக்கப்பட்ட உயிரினங்கள் எல்லாவற்றையும் பூமியின் கண் அழித்து விடுவோம் என்றார்.

5 ஆகையால், ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டபடி நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.

6 வெள்ளம் பூமியின் மேல் பெருக்கெடுத்தோடிய காலத்தில் அவருக்கு வயது அறுநூறு.

7 நோவாவும், அவர் புதல்வர்களும், அவர் மனைவியும், அவர் புதல்வர்களின் மனைவியரும் வெள்ளப் பெருக்குக்குத் தப்புமாறு பெட்டகத்தினுள் புகுந்தார்கள்.

8 அன்றியும், கடவுள் நோவாவுக்குக் கட்டளையிட்ட வண்ணம், சுத்தமும் அசுத்தமுமான பிராணிகளிலும் பறவைகளிலும் பூமியில் ஊர்வன யாவற்றிலும்,

9 ஆணும் பெண்ணும் சோடி சோடியாக நோவாவோடு பெட்டகத்துள் நுழைந்தன.

10 ஏழு நாட்களுக்குப் பின்னர் வெள்ளம் பூமியின் மீது பெருக்கெடுத்தோடியது.

11 நோவாவுக்கு அறுநூறு வயது நடக்கும் பொழுது, அவ்வாண்டின் இரண்டாம் மாதம் பதினேழாம் நாளன்று பெரும் பாதாளத்தின் ஊற்றுக் கண்கள் அனைத்தும் உடைபட்டன; வானத்தின் மதகுகளும் திறக்கப்பட்டன.

12 பூமியின் மீது நாற்பது பகலும் நாற்பது இரவும் (விடா) மழை பெய்தது.

13 (முன் குறிப்பிட்ட) அந்த (ஏழாம்) நாளிலே நோவா தம் புதல்வராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களோடும், தம் மனைவியோடும், தம் புதல்வர்களின் மூன்று மனைவியரோடும் பெட்டகத்துள் சென்றார்.

14 அவர்களோடு, பல்வேறுபட்ட காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள், பூமியில் ஊர்வன, பறப்பன, பறவைகள் யாவும்,

15 உயிரினங்கள் எல்லாமே சோடி சோடியாய் நோவாவோடு கூடப் பெட்டகத்துள் புகுந்தன.

16 கடவுள் அவருக்குக் கட்டளையிட்ட வண்ணமே ஆணும் பெண்ணுமாக எல்லா உயிரினங்களும் உள்ளே புகுந்தன. பின் ஆண்டவர் வெளிப்புறமிருந்து அவனுக்குப் பின்னாலே கதவை அடைத்தார்.

17 பின் நாற்பது நாளும் பூமியின் மீது பெரு வெள்ளம் உண்டாகித் தண்ணீர் பெருக்கெடுக்கவே பெட்டகம் உயர மிதந்து செல்லலாயிற்று.

18 நீர்த்திரள் மிகுந்த வெள்ளமாகிப் பூமியின் மேலுள்ள எல்லாவற்றையும் மூடினது. பெட்டகம் நீரின் மீது மிதந்து கொண்டிருந்தது.

19 இன்னும் வெள்ளம் பூமியின் மீது மிஞ்சி அதிகரித்தமையால் வானத்துக்குக் கீழ் அதிக உயரமாய் இருந்த மலைகள் யாவுமே மூடப்பட்டன.

20 மூடப்பட்ட பெரிய மலைகளுக்கு மேல் பதினைந்து முழ உயரத்திற்குத் தண்ணீர் உயர்ந்து போயிற்று.

21 பூமியின் மீது நடமாடின உயிரினங்களான எல்லாப் பறவைகளும், வீட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும், பூமியின் மேல் ஊர்வன யாவும், எல்லா மனிதர்களும் அழிந்து போயினர்.

22 பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்கள் எல்லாம் மாண்டன.

23 அவ்வாறு கடவுள் மனிதன் முதல் உயிர்ப் பிராணிகள் வரை, ஊர்வன முதல் வானத்துப் பறவைகள் வரை பூமியில் வாழ்ந்து வந்த உயிர்கள் அனைத்தையும் அழித்து விட்டார். அவையெல்லாம் பூமியிலிருந்து மறைந்து போயின. நோவாவும் அவருடன் பெட்டகத்திலிருந்தவர்களுமே அப்போது தப்பிப் பிழைத்தார்கள்.

24 நீர்த்திரள் நூற்றைம்பது நாட்களாகப் பூமியை மூடிக்கொண்டிருந்தது.

அதிகாரம் 08

1 கடவுள் நோவாவையும் அவருடன் பெட்டகத்தில் இருந்த எல்லாக் காட்டு மிருகங்களையும் வீட்டு மிருகங்களையும் நினைவு கூர்ந்து, காற்று வீசச் செய்யவே, வெள்ளம் குறைந்தது.

2 அன்றியும், பாதாளத்தின் நீரூற்றுக்களும் வானத்தின் மதகுகளும் அடைபட்டு, வானினின்று பெய்த மழையும் நின்றது.

3 சிறிது சிறிதாய் வெள்ளம் பூமியில் வற்றத் தொடங்கியது. நூற்றைம்பது நாட்களுக்குப் பின் அது வடிய ஆரம்பித்தது.

4 ஏழாம் மாதத்தின், இருபத்தேழாம் நாளன்று பெட்டகம் ஆர்மேனிய நாட்டு மலையின் மீது தங்கியது.

5 வெள்ளம் பத்தாம் மாதம் வரை வடிந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலைகளின் சிகரங்கள் காணப்பட்டன.

6 நாற்பது நாட்களுக்குப் பின் நோவா பெட்டகத்தின் சன்னலைத் திறந்து ஒரு காக்கையை வெளியே விட்டார்.

7 அது புறப்பட்டுப் போய்ப் பூமியில் வெள்ளம் வற்றுமட்டும் இங்குமங்குமாய்ச் சுற்றித் திரும்பவேயில்லை.

8 மறுபடியும், பூமியின் மீது வெள்ளம் வற்றி விட்டதா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு, (நோவா) ஒரு புறாவை வெளியே விட்டார்.

9 பூமியின் மீது எங்கும் வெள்ளம் பரந்து கிடந்தமையால், கால் வைத்து இளைப்பாறவும் இடம் காணாமல் அது திரும்பவும் அவரை நாடிப் பெட்டகத்திற்கு வந்தது. அவர் கை நீட்டி அதைப் பிடித்துப் பெட்டகத்தினுள் சேர்த்தார்.

10 அவர் மேலும் ஏழு நாட்கள் பொறுத்து மீண்டும் புறாவைப் பெட்டகத்திலிருந்து வெளியே விட்டார்.

11 அது மாலை நேரத்தில் பசும் இலைகளையுடைய ஒலிவ மரத்தின் கிளையொன்றை அலகில் கவ்விக் கொண்டு தன் அண்டையில் வந்ததனால், பூமியின் மீது வெள்ளம் அற்றுப் போயிற்றென்று நோவா தெரிந்து கொண்டார்.

12 மேலும் அவர் வேறு ஏழு நாட்கள் பொறுத்திருந்து புறாவை விட, அது அவரிடம் திரும்பி வரவேயில்லை.

13 இவ்வாறு அறுநூற்றோராம் ஆண்டின் முதல் மாதம், முதல் நாளன்று பூமியின் மீது வெள்ளம் வற்றிப் போயிற்று. அப்பொழுது நோவா பெட்டகத்தின் மேல் தட்டைப் பிரித்து (வெளியே) பார்த்துப் பூமியின் மேல் தண்ணீர் இல்லையென்று கண்டார்.

14 இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாள் பூமி காய்ந்திருந்தது.

15 அப்போது கடவுள் நோவாவை நோக்கி:

16 நீயும் உன் மனைவியும், புதல்வர்களும், புதல்வர்களின் மனைவியரும் பெட்டகத்தை விட்டு வெளியே வாருங்கள்.

17 உன்னோடிருக்கிற பலவகை உயிரினங்களாகிய எல்லாப் பறவைகளையும் மிருகங்களையும், பூமியின் மேல் ஊர்வன யாவையும் உன்னோடு கூட வெளியே வரவிடு. நீங்கள் பூமியில் வாழ்ந்து அதன் மேல் பலுகிப் பெருகுவீர்களாக என்றார்.

18 அப்படியே நோவாவும், அவர் புதல்வரும், அவர் மனைவியும், அவர் புதல்வரின் மனைவியரும் வெளியேறி வந்தார்கள்.

19 அன்றியும், மிருகங்களும், பூமியின் மேல் ஊர்வனவாகிய எல்லா உயிர்களும் இனம் இனமாகப் பெட்டகத்தை விட்டு வெளியே வந்தன.

20 பின் நோவா ஒரு பீடத்தைக் கட்டி, மிருகங்களிலும் சுத்தமான பறவைகளிலும் பலவற்றை எடுத்து அதன் மேல் தகனப் பலியாக ஒப்புக் கொடுத்தார்.

21 ஆண்டவர் அவற்றை நறுமணமுள்ள பரிமளமாக ஏற்றுக்கொண்டு: நாம் இனி மனிதன் பொருட்டுப் பூமியை ஒருபோதும் சபிக்க மாட்டோம். ஏனென்றால், மனிதனுடைய இதய சிந்தனைகள் இளமை முதல் தீமையின் மீதே நாட்டம் கொண்டுள்ளன. ஆதலால், இப்பொழுது செய்தது போல் இனி நாம் உயிரினங்கள் யாவையும் மறுமுறை அழிக்க மாட்டோம்.

22 பூமி இருக்குமட்டும் விதைப்பும் அறுப்பும், குளிரும் வெப்பமும், கோடைக் காலமும் குளிர் காலமும், இரவும் பகலும் ஒழிவதில்லை என்று திருவுளம் பற்றினார்.

அதிகாரம் 09

1 பின் கடவுள் நோவாவையும் அவர் புதல்வர்களையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள்.

2 பூமியின் எல்லா உயிரினங்களும், வானத்துப் பறவைகள் அனைத்தும் பூமியின் மீது நடமாடுகிற மற்றுமுள்ள யாவும் உங்கள் முன்னிலையில் அஞ்சி நடுங்குவனவாக. (அன்றியும்) கடலிலுள்ள எல்லா மீன்களும் உங்களுக்கு கையளிக்கப் பட்டிருக்கின்றன.

3 உயிரும் அசைவும் கொண்டுள்ள யாவும் உங்களுக்கு உணவாய் இருப்பனவாக. பசும் புற்பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல் அவையெல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தோம்.

4 ஆயினும், இறைச்சியை அதன் இரத்தத்தோடு உண்ணாதிருப்பீர்களாக.

5 ஏனென்றால், உங்கள் உயிரின் இரத்தத்துக்காக எல்லா உயிரினங்களிடத்தும் மனிதனிடத்தும் பழிவாங்குவோம். மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடம் பழிவாங்குவோம்.

6 மனித இரத்தத்தைச் சிந்துபவன் இரத்தமும் சிந்தப்படும். ஏனென்றால், மனிதன் தெய்வச் சாயலாகப் படைக்கப்பட்டுள்ளான்.

7 நீங்களோ பலுகிப் பெருகிப் பூமியில் பரவி அதனை நிரப்புங்கள் (என்றருளினார்).

8 மேலும் கடவுள் நோவாவையும் அவர் புதல்வர்களையும் நோக்கி:

9 இதோ, நாம் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரோடும்,

10 பெட்டகத்திலிருந்து வெளியேறி உங்கள் அண்டையிலிருக்கிற பறவைகள், வீட்டு மிருகங்கள், மற்றும் பூமியிலுள்ள காட்டு விலங்குகள் முதலிய எல்லா உயிரினங்களோடும் நமது உடன்படிக்கையை நிறுவுவோம்.

11 உங்களோடு நாம் உடன்படிக்கை செய்வோம். ஆதலால், இனி மாமிசமெல்லாம் வெள்ளப் பெருக்குகளால் ஒருபோதும் அழிக்கப்படா. உண்மையில், பூமியைப் பாழாக்க இனி வெள்ளப் பெருக்கு வராது என்றருளினார்.

12 மேலும் கடவுள்: நமக்கும் உங்களுக்கும், உங்களுடனிருக்கும் எல்லா உயிரினங்களுக்குமிடையே நித்திய தலைமுறைகளுக்கென்று நாம் செய்து கொள்ளும் உடன்படிக்கையின் அடையாளமாவது:

13 நமது வில்லை மேகங்களிலே வைப்போம். அதுவே நமக்கும் உலகத்துக்குமிடையேயுள்ள உடன்படிக்கையின் அடையாளமாகும்.

14 ஆதலால், நாம் வானத்தை மேகங்களால் மறைத்திருக்கும் போது நம்முடைய வில் அங்குக் காணப்படும்.

15 அப்போது உங்களோடும் எல்லா உயிரினங்களோடும் (செய்துகொண்ட) நமது உடன்படிக்கையை நினைவு கூருவோமாகையால், இனி எல்லா உயிர்களையும் அழிக்கும் வெள்ளப் பெருக்கு இராது.

16 வில் மேகங்களில் தோன்றும். அதைக் கண்டு, கடவுளாகிய நமக்கும், உலகத்திலுள்ள எல்லா உயிர்களுக்குமிடையே ஏற்பட்ட நித்திய உடன்படிக்கையை நினைத்தருள்வோம் (என்றார்).

17 கடைசியாகக் கடவுள் நோவாவை நோக்கி: நமக்கும் உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்திற்குமிடையே நாம் செய்துள்ள உடன்படிக்கையின் அடையாளம் அதுவேயாம் என்று சொல்லி முடித்தார்.

18 பெட்டகத்திலிருந்து வெளியேறிய நோவாவின் புதல்வர்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தந்தை.

19 நோவாவின் மூன்று மக்கள் இவர்களே. இவர்களால் மனித இனம் எல்லாம் உலகம் முழுவதும் பரவிற்று.

20 நோவா உழவராகிப் பயிரிடத் தொடங்கித் திராட்சை நட்டுத் தோட்டம் அமைத்தார்.

21 திராட்சை இரசத்தை அவர் குடித்த போது மயக்கம் கொண்டு தம் சுடாரத்துக்குள் ஆடை விலகிய நிலையில் படுத்திருந்தார்.

22 அப்போது கானானின் தந்தையாகிய காம் தன் தந்தையின் நிருவாணத்தைக் கண்டவுடன், வெளியே இருந்த தன் இரு சகோதரருக்கும், இச் செய்தியைத் தெரிவித்தான்.

23 அப்போது சேமும் யாப்பேத்தும் ஓர் ஆடையை எடுத்துத் தங்கள் இருவர் தோள் மீதும் போட்டுக் கொண்டு புறங்காட்டி வந்து தங்கள் தந்தையின் நிருவாணத்தை மூடினர். அவர்கள் திரும்பின முகமாய் வந்ததனால் தங்கள் தந்தையின் நிருவாணத்தைப் பார்க்கவில்லை.

24 இரசத்தால் உண்டான மயக்கம் தெளிந்த போது, நோவா தம் இளைய மகன் தனக்குச் செய்ததைக் கேட்டறிந்ததும்:

25 கானான் சபிக்கப்பட்டவன். அவன் தன் சகோதரரின் அடிமைகளுக்கு அடிமையாய் இருப்பான் என்றார்.

26 மேலும்: சேமின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக. கானான் இவனுக்கு அடிமையாய் இருக்கக் கடவான்.

27 கடவுள் யாப்பேத்தை விருத்தியாகச் செய்வாராக. அன்றியும் அவன் சேமின் கூடாரங்களில் வாசம் செய்வானாக. கானான் அவனுக்கும் அடிமையாய் இருக்கக் கடவான் என்றார்.

28 நோவா வெள்ளப் பெருக்கிற்குப் பின் முந்நூற்றைம்பது ஆண்டு வாழ்ந்தார். அவர் உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் தொள்ளாயிரத்தைம்பது ஆண்டுகள். பின் இறந்தார்.

அதிகாரம் 10

1 நோவாவின் புதல்வர்களாகிய சேம், காம், யாப்பேத் ஆகியவர்களின் தலைமுறை அட்டவணையாவது: வெள்ளப் பெருக்கிற்குப் பின் அவர்களுக்குப் புதல்வர்கள் பிறந்தனர்.

2 யாப்பேத்தின் மக்கள்: கோமேர், மகோக், மதாயி, யாவான், துபால், மோசோக், திராஸ் என்பவர்கள்.

3 ஆசெனேஸ், ரிப்பாத், தொகொர்மா ஆகியோர் கோமேருடைய மக்கள். யாவானுடைய புதல்வர்கள்:

4 எலிசா, தற்சிஸ், சேத்தீம், தொதானீம் என்பவர்கள்.

5 இவர்களால் தான் உலக மக்களுடைய நாடுகளும் தீவுகளும் அவரவர்க்குரிய மொழிக்கும் இனத்திற்கும் தக்கபடி பகுக்கப்பட்டன.

6 காமின் மக்கள்: கூஸ், மெஸ்றாயீம், புத், கானான் என்பவர்கள்.

7 சாபா, ஏவிலா, சபத்தா, இரேக்மா, சபத்தக்கா ஆகியோர் கூஸின் புதல்வர். சபாவும், ததானும் இரேக்மாவின் மக்கள்.

8 பின் கூஸ் நெமிரோதைப் பெற்றான். இவன் பூமியிலே வலிமை மிக்கவனாய் இருந்தான்.

9 ஆண்டவருக்கு முன் அவன் வலிமை மிக்க வேட்டைக்காரனாய் இருந்தான். ஆதலால் தான் 'ஆண்டவருக்கு முன்பாக நெமிரோதைப் போல் வலிமை மிக்க வேட்டைக்காரன்' என்னும் பழமொழி வழங்கலாயிற்று.

10 சென்னார் நாட்டிலுள்ள பாபிலோன், ஆராக், ஆக்காத், காலன்னே (என்னும் நகரங்கள்) அவன் அரசாட்சியின் முதல் இடங்களாய் அமைந்தன.

11 அந்நாட்டிலிருந்து ஆசூர் தோன்றி நினிவே நகரையும், அந்நகரின் விதிகளையும், பின் காலேயையும் அமைத்தான்.

12 நினிவேய்க்கும் காலேய்க்கும் நடுவே இறேசெனையும் எழுப்பினான். இது பெரிய நகர்.

13 மெஸ்றாயீம் முதலில் லுதீம் என்பவனையும், பிறகு அனமீம், லாபீம், நெப்துயீம், பெத்திருசீம், கஸ்லுயீம் என்பவர்களையும் பெற்றான்.

14 இவர்களிடமிருந்து பிலிஸ்தியரும் கப்தோரீமரும் தோன்றினார்கள்.

15 கானான் தன் தலைச்சனாகிய சிதோனைப் பெற்றான்;

16 பிறகு ஏத்தை, யெபூசை, அமோறை, யெற்கேசை, ஏவை, அரக்கை,

17 சீனை, அரதியை, சமறை, அமத்தைப் பெற்றான்.

18 இவர்களால் கானானியர்களின் வம்சங்கள் பல நாடுகளில் பரவின.

19 சீதோன் முதல் ஜெரரா வழியாகக் காஜா வரையிலும், சொதோம், கொமோரா, ஆதமா செபொயீம், என்னும் நகரங்கள் முதல் லெசா வரையிலுமுள்ள நாடு கானானியரின் எல்லைகளாம்.

20 தங்கள் உறவினர், மொழி, சந்ததி, நாடு, இனம் ஆகியவற்றின்படி இவர்களே காமுடைய வழித் தோன்றல்களாவர்.

21 சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தனர். அவன் ஏபேரின் சந்ததியாருக்குக்கெல்லாம் தந்தையும் யாப்பேத்தின் அண்ணனும் ஆவான்.

22 சேமின் புதல்வர்: ஐலாம் ஆசூர், அற்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.

23 ஊஸ், ஊள், ஜெத்தோமேஸ், என்பவர்கள் ஆராமின் புதல்வர்.

24 அற்பக்சாத் சாலே என்பவனைப் பெற்றான்.

25 இவனுக்கு ஏபேர் பிறந்தான். ஏபேருக்கு இரண்டு புதல்வர் பிறந்தனர். ஒருவன் பெயர் பாலேக்; ஏனென்றால் இவன் காலத்தில் பூமி பிரிக்கப்பட்டது. இவன் தம்பி பெயர் ஜெக்தான்.

26 இந்த ஜெக்தான் எல்மோதாதைப் பெற்று, பிறகு சாலேப்,

27 ஆசர்மோத், ஜாரே, அதுராம், உசால்,

28 தெக்கிலா, எபால், அபிமயேல், சபா,

29 ஒப்பீர், ஏவிலா, ஜொபாப் என்பவர்களையும் ( பெற்றான் ). இவர்கள் யாவரும் ஜெக்தானின் புதல்வர்கள்.

30 மெசா முதல் கீழ்த்திசையிலுள்ள செப்பார் மலை வரை இவர்களுடைய உறைவிடம்.

31 தங்கள் உறவினர், மொழி, நாடு ,இனம் ஆகியவற்றின்படி இவர்களே சேமுடைய வழித்தோன்றல்கள்.

32 தத்தம் இனம், நாடு முதலியவற்றின்படி இவர்களே நோவாவின் குடும்பத்தார். வெள்ளப் பெருக்கிற்குப் பின் இவர்களாலேயே பூமியில் மக்கள் உண்டாயினர்.

அதிகாரம் 11

1 உலகத்தில் ஒரே மொழியும் ஒரே விதமான பேச்சும் வழங்கி வந்தன.

2 மக்கள் கீழ்த்திசையிலிருந்து புறப்பட்ட போது, சென்னார் நாட்டில் சமவெளியைக் கண்டு அங்கே குடியேறினர்.

3 அப்பொழுது அவர்கள் ஒருவரோடொருவர்: வாருங்கள், செங்கல் அறுத்துச் சூளையிலிட்டுச் சுடுவோம் என்று பேசிக்கொண்டு, கருங்கல்லுக்குப் பதிலாகச் செங்கற்களையும், சாந்துக்குப் பதிலாகத் தாரையும் பயன் படுத்தினர்.

4 மேலும் அவர்கள்: வாருங்கள், நாம் நாடுகள் தோறும் சிதறிப் போகு முன்னே ஒரு நகரையும், விண்ணை முட்டும் ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் புகழ் உண்டாகச் செய்வோமாக என்று சொன்னார்கள்.

5 ஆனால், ஆதாமின் புதல்வர் கட்டி வந்த நகரையும் கோபுரத்தையும் பார்க்க ஆண்டவர் இறங்கி வந்தார்.

6 அப்பொழுது அவர்: இதோ, மக்கள் ஒரே இனமாயிருந்து ஒரே மொழி பேசி வருகிறதனாலன்றோ இதைச் செய்யத் தொடங்கினார்கள்! தாங்கள் செய்ய நினைத்ததை அவர்கள் விடாமல் எப்படியும் செய்து முடிப்பார்கள்.

7 சரி நாம் இறங்கிப் போய், அவர்களுள் ஒருவர் பேசுவதை மற்றவர் அறியா வண்ணம் அவர்களது மொழியைக் குழப்பி விடுவோம் என்றார்.

8 அவ்வாறு ஆண்டவர் அவர்களை அவ்விடத்திலிருந்து உலகமெங்கும் சிதறிப் போகச் செய்தமையால், அவர்கள் அந்நகரைக் கட்டுவதை விட்டு விட்டனர்.

9 பூமியெங்கும் வழங்கும் மொழிக் குழப்பம் அவ்விடத்தில் பிறந்தமையால் அதன் பெயர் பாபேல் எனப்பட்டது. ஆண்டவர் அவர்களை அவ்விடத்திலிருந்து நாடுகள் தோறும் சிதறிப் போகச் செய்தார்.

10 சேமின் தலைமுறை அட்டவணையாவது: சேம் தனக்கு நூறு வயதான போது, வெள்ளப் பெருக்கிற்குப் பின் இரண்டாம் ஆண்டில், அற்பக்சாத்தைப் பெற்றான்.

11 அற்பக்சாத்தைப் பெற்றபின், சேம் ஐநூறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.

12 அற்பக்சாத் முப்பத்தைந்து வயதான போது சாலேயைப் பெற்றான்.

13 சாலேயைப் பெற்ற பின்னும் அற்பக்சாத் முந்நூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.

14 சாலே முப்பது வயதான பின் ஏபேரைப் பெற்றான்.

15 ஏபேரைப் பெற்ற பின்னும் சாலே நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.

16 ஏபேர் முப்பத்து நான்கு வயதான போது பாலேக்கைப் பெற்றான்.

17 பாலேக்கைப் பெற்ற பின்னும் ஏபேர் நானூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.

18 பாலேக் முப்பது வயதான போது ரேயூவைப் பெற்றான்.

19 ரேயூவைப் பெற்ற பின்னும் பாலேக் இருநூற்றொன்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.

20 ரேயூ முப்பத்திரண்டு வயதான போது சாரூக்கைப் பெற்றான்.

21 சாரூக்கைப் பெற்ற பின் ரேயூ இருநூற்றேழு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.

22 சாரூக் முப்பது வயதான போது நாக்கோரைப் பெற்றான்.

23 நாக்கோரைப் பெற்ற பின்னும் சாரூக் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.

24 நாக்கோர் இருபத்தொன்பது வயதான போது தாரேயைப் பெற்றான்.

25 தாரேயைப் பெற்ற பின் நாக்கோர் நூற்றுப் பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்து புதல்வர் புதல்விகளைப் பெற்றான்.

26 தாரே எழுபது வயதான பின் ஆபிராம், நாக்கோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.

27 தாரேயின் தலைமுறை அட்டவணையாவது: தாரே ஆபிராமையும் நாக்கோரையும் ஆரானையும் பெற்றான். ஆரான் லோத்தைப் பெற்றான்.

28 ஆரான் தன் பிறப்பிடமாகிய ஊர் என்னும் கால்தேயர் நாட்டு நகரில் தன் தந்தையாகிய தாரே இறக்கு முன்பே இறந்தான்.

29 பின்னர் ஆபிராமும் நாக்கோரும் மணம் செய்து கொண்டார்கள். ஆபிராமின் மனைவியின் பெயர் சாறாயி. நாக்கோரின் மனைவிக்கு மெல்காள் என்பது பெயர். இவள் ஆரானின் மகள். இந்த ஆரான் மெல்காளுக்கும் எஸ்காளுக்கும் தந்தை.

30 சாறாயி மலடியாக இருந்தாள். அவளுக்குப் பிள்ளை இல்லை.

31 (அக்காலத்தில்) தாரே தன் மகனான ஆபிராமையும், ஆரானுக்கு மகனான லோத் என்னும் தன்பேரனையும், தன் மருமகளும் தன் மகன் ஆபிராமின் மனைவியுமான சாறையியையும் அழைத்துக் கொண்டு, அவர்களோடு கால்தேயருடைய (நகராகிய) ஊரிலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டுக்கு வந்தனர். அவர்கள் ஆரான் வரை வந்து அங்கே குடியேறினர்.

32 தாரேயின் வாழ்நாள் இருநூற்றைந்து ஆண்டுகள். அவன் ஆரானில் இறந்தான்.

அதிகாரம் 12

1 ஆண்டவர் ஆபிராமை நோக்கி: நீ உன் நாட்டையும், உன் இனத்தையும், உன் தந்தையின் வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நாம் உனக்குக் காட்டவிருக்கிற நாட்டிற்குப் போகக்கடவாய்.

2 நாம் உன்னைப் பெருங்குடியாய்ப் பெருகச் செய்து, உன்னையும் ஆசீர்வதித்து, உன் பெயரையும் மேன்மைப் படுத்துவோம். நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாய் இருப்பாய்.

3 உன்னை ஆசீர்வதிப்பவர்களை நாம் ஆசீர்வதிப்போம். உன்னை சபிப்பவர்களை நாமும் சபிப்போம். மேலும், பூமியிலுள்ள இனமெல்லாம் உன் வழியாய் ஆசீர்வதிக்கப்படும் என்றருளினார்.

4 ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டவாறு ஆபிராம் புறப்பட்டான். லோத்தும் அவனோடு சென்றான். ஆபிராம் ஆரானை விட்டுப் புறப்பட்ட போது அவனுக்கு வயது எழுபத்தைந்து.

5 அவன் தன் மனைவி சாறாயியையும், தன் சகோதரனின் மகன் லோத்தையும், தாங்கள் வைத்திருந்த பொருள் அனைத்தையும், ஆரானிலே பிறந்திருந்த உயிர்களையும் கூட்டிக் கொண்டு கானான் நாடு போய்ச் சேர்ந்தான்.

6 பின்னர் ஆபிராம் அந்த நாட்டில் சுற்றித் திரிந்து, சிக்கேம் என்னும் இடம் வரை - அதாவது, மகிமைப் பள்ளத்தாக்குவரை- வந்தான். அக்காலத்தில் கானானையர் அந்நாட்டில் இருந்தனர்.

7 பின் ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி: இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவோம் என்று அவனுக்குத் திருவாக்கு அருளினார். அவனோ, தனக்குத் தோன்றின ஆண்டவருக்கு அவ்விடத்தில் ஒரு பீடத்தைக் கட்டினான்.

8 பின் அவன் அவ்விடத்திலிருந்து பெத்தெலுக்குக் கிழக்கேயிருக்கும் மலைக்குப் போய், பெத்தெல் தனக்கு மேற்காகவும், ஆயீ கிழக்காகவும் இருக்க, அங்கே கூடாரம் அடித்தான். அவ்விடத்திலும் ஆண்டவருக்கு ஒரு பீடத்தைக் கட்டி அவருடைய திருப் பெயரைத் தொழுதான்.

9 அதன் பின் ஆபிராம் மீண்டும் நடந்து தெந்கு நோக்கிச் சென்றான்.

10 ஆனால், அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதனால் ஆபிராம் எகிப்து நாட்டை நாடி, அங்குக் குடியிருக்கப் போனான். உண்மையிலேயே அந் நாட்டில் பஞ்சம் மிகவும் கொடுமையாய் இருந்தது.

11 அவன் எகிப்திலே நுழையும் வேளையிலே தன் மனைவி சாறாயியை நோக்கி: நீ அழகி என்று அறிவேன்.

12 ஆதலால், எகிப்தியர் உன்னைக் கண்டவுடன், இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்று விட்டு உன்னை உயிரோடு வைப்பர்.

13 உன் பொருட்டு எனக்கு நன்மை உண்டாகும்படியும், உனக்காக என் உயிர் பிழைக்கும்படியும் தயவு செய்து நீ என் சகோதரி என்று சொல் என்றான்.

14 ஆபிராம் எகிப்து நாட்டினுள் வந்த போது அந்தப் பெண் பேரழகி என்று எகிப்தியர் கண்டனர்.

15 பிரபுக்களும் பாரவோனிடத்தில் இச் செய்தியை அறிவித்து அவளைப் புகழ்ந்து பேசியதனால், அந்தப் பெண் பாரவோனின் அரண்மனைக்குக் கட்டாயமாய்க் கொண்டு போகப் பட்டாள்.

16 ஆயினும், அவள் பொருட்டு (அந்நாட்டார்) ஆபிராமுக்குத் தயவு பாராட்டி வந்தனர். அவனுக்கு ஆடு மாடுகளையும், கோவேறு கழுதைகளையும், வேலைக்காரர் வேலைக்காரிகளையும், கோளிகைகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தனர்.

17 ஆண்டவரோ ஆபிராமின் மனைவி சாறாயியின் பொருட்டு பாரவோனையும் அவன் வீட்டாரையும் மிகவும் கொடிய துன்பங்களால் தண்டித்தார்.

18 ஆதலால் பாரவோன் ஆபிராமை வரவழைத்து அவனை நோக்கி: நீ ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவியென்று நீ எனக்குத் தெரிவிக்காமல் இருந்ததென்ன?

19 இவளை உன் சகோதரியென்று நீ ஏன் சொல்ல வேண்டும்? அவளை நான் என் மனைவியாக்கியிருக்கலாம். சரி போகட்டும். இதோ உன் மனைவி; நீ அவளை அழைத்துக் கொண்டு போ என்றான்.

20 பாரவோன் ஆபிராமைக் குறித்துத் தன் குடிகளுக்கும் கட்டளையிட்டான். அவர்களும் ஆபிராமையும், அவன் மனைவியையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

அதிகாரம் 13

1 ஆகையால் ஆபிராமும், அவன் மனைவியும், அவன் உடைமைகள் யாவும், அவனோடு லோத்தும் எகிப்தை விட்டுத் தெற்கே சென்றனர்.

2 ஆபிராம் பொன்னும் வெள்ளியுமாகத் திரளான செல்வங்களைக் கொண்டிருந்தான்.

3 தன்னுடைய முந்தின பயணத்தில் அவன் தெற்கிலிருந்து பெத்தெலுக்கு வந்திருந்தான். இப்பொழுதும் அவன் வந்த வழியே திரும்பிப் போய், பெத்தெலுக்கும் ஆயிக்கும் நடுவில் தான் முன்பு கூடாரம் அடித்திருந்ததும்,

4 தான் முதன் முதல் ஒரு பலிப்பீடத்தைக் கட்டியிருந்ததுமான இடம் வரைப் போய், அங்கே ஆண்டவருடைய பெயரைத் தொழுதான்.

5 ஆபிராமுடன் இருந்த லோத்துக்கு ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும், கூடாரங்களும் இருந்தன.

6 அவர்கள் இருவரும் ஒன்றாய்க் குடியிருப்பதற்குப் போதுமான இடம் இல்லை. உண்மையிலே அவர்களுடைய சொத்து மிகுதியாயிருந்தமையால் அவர்கள் சேர்ந்து வாழக் கூடாமல் போயிற்று.

7 எனவே, ஆபிராமின் மந்தை மேய்ப்பவருக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பவருக்குமிடையே (பிணக்குகள்) உண்டாயின. அக்காலத்தில் கானானையரும் பெரேசையரும் அதே நாட்டில் குடியிருந்தனர்.

8 அது கண்டு ஆபிராம் லோத்தை நோக்கி: உனக்கும் எனக்கும், உன் மேய்ப்பர்களுக்கும் என் மேய்ப்பர்களுக்குமிடையே வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர் அல்லரோ?

9 அதோ, நாடு முழுவதும் கண் முன் இருக்கிறது. தயவுசெய்து என்னை விட்டுப் பிரிந்து போ. நீ இடப்பக்கம் போனால், நான் வலப்பக்கம் போகிறேன்; நீ வலப்பக்கம் போக விரும்பினால், நான் இடப்பக்கம் செல்கிறேன் என்றான்.

10 இது கேட்டு லோத் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான்; யோர்தான் நதியின் இரு புறத்திலுமுள்ள இடம் முழுவதும் (நீர்) வளமுள்ளதாய் இருக்கக் கண்டான். உண்மையில் ஆண்டவர் சொதொம், கொமோரா (என்னும் நகரங்களை) அழிக்கு முன்பே, அந்நாடு ஆண்டவருடைய இன்ப வனத்தைப் போலவும், செகோர் பக்கம் செல்பவர்களுக்கு எகிப்தை போலவும் தோற்றமளிக்கும்.

11 ஆகையால் லோத் யோர்தான் நதியின் இரு புறத்திலுமுள்ள நாட்டைத் தேர்ந்து கொண்டு, கீழ்த்திசையை விட்டுப் புறப்பட்டான். இவ்வாறு அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் குடியிருந்தான்.

12 லோத்தோ யோர்தான் நதிக்கு அருகிலிருந்த நகரங்களில் வாழ்ந்து, இறுதியில் சொதோம் நகரில் குடியேறினான்.

13 சொதோம் நகர மக்கள் மிகக் கொடியவரும், ஆண்டவர் முன்பாகப் பெரும் பாவிகளுமாய் இருந்தனர்.

14 லோத் பிரிந்து போன பின்பு ஆண்டவர் ஆபிராமை நோக்கி: நீ கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் நோக்கிப் பார்.

15 நீ காண்கிற இந்தப் பூமி முழுவதையும் நாம் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இருக்கும்படி கொடுப்போம்.நி355

16 அன்றியும் உன் சந்ததியைப் பூமியின் புழுதிப் போலப் பெருகச் செய்வோம். மனிதர்களுள் ஒருவன் பூமியின் புழுதியை எண்ணக் கூடுமாயின், அவனால் உன் சந்ததியாரையும் எண்ணக் கூடுவதாகும்.

17 நீ எழுந்துபோய், நாட்டை நீளவசமாயும் அகல வசமாயும் நடந்துபார். ஏனென்றால், அதனை உனக்குத் தரவிருக்கிறோம் என்றருளினார்.

18 ஆபிராம் தன் கூடாரத்தைப் பெயர்த்து எபிறோனில் இருக்கும் மாம்பிரே என்ற பள்ளத்தாக்கிற்கு அண்மையிலேயே குடியேறினான். அவ்விடத்திலும் ஆண்டவருக்கு ஒரு பீடத்தைக் கட்டினான்.

அதிகாரம் 14

1 அக்காலத்தில் நிகழ்ந்ததாவது: சென்னார் அரசன் அமிரப்பேல், போந்த் அரசன் அரியோக், எலாமித்தாரின் அரசன் கொதொர்ல கோமொர், கோயிம் அரசன் தாதால் (ஆகிய) இவர்கள் எல்லாரும் சொதோமின் அரசனான பாரா,

2 கொமோர் அரசனான பெற்சா அதம அரசனான சென்னாபு, செபொயீம் அரசனான செமெபேர், பாலாவின் அரசனான செகோர் ஆகியோரை எதிர்த்துப் போர் புரிந்தனர்.

3 இன்று உப்புக் கடலாயிருக்கும் அப்பகுதி, முன்பு ஆரணியப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது. அவ்விடத்தில் இந்த அரசர்களெல்லாம் ஒன்று கூடினர்.

4 ஏனென்றால், இவர்கள் பன்னிரண்டு ஆண்டுக்காலமாகக் கொதொர்ல கோமோருக்கு அடங்கி நடந்த பின்னர், பதின்மூன்றாம் ஆண்டில் அவனை விட்டு விலகினர்.

5 ஆதலால் கொதொர்ல கோமோர் பதினான்காம் ஆண்டில் தன்னைச் சேர்ந்த அரசர்களுடன் வந்து, அஸ்தரோட்கர்ணாயீமில் இருந்த இராப்பாயீத்தரையும், அவர்களோடு சுசீத்தரையும், சாவேகரியத்தாயீமில் இருந்த ஏமீத்தரையும் தோற்கடித்து,

6 செயீர் என்ற மலைகளில் இருந்த கோறையர்களையும் பாலை நிலத்திலுள்ள பாரன் சமவெளி வரை முறியடித்தான்.

7 மேலும் அவர்கள் திரும்பி காதேஸ் என்னும் பெயர் கொண்ட மிஸ்பாத் ஊருணிவரை வந்து, அமலேசித்தார் குடியிருந்த நாடு முழுவதையும், அச்சோந்தமாரில் குடியிருந்த அமோறையருடைய நாட்டையும் பாழாக்கினர்.

8 அப்போது சொதோம், கொமோரா, அதம, சொபோயீம் முதலியவற்றின் அரசர்களும், செகோர் என்னும் பெயர் கொண்ட பாலாவின் அரசனும் புறப்பட்டு, ஆரணியம் என்று சொல்லப்படும் பள்ளளத்தாக்கில் அவர்களை எதிர்த்துப் போராடினர்.

9 அதாவது, எலாமித்தாரின் அரசனான கொதொர்ல கோமோர், கோயிமின் அரசனான தாதால், சென்னார் அரசனான அமிரப்பேல், போந்த் அரசனான அரியோக் ஆகிய இந்நான்கு அரசர்களோடும் அந்த ஐந்து அரசர்கள் போர் புரிந்தனர்.

10 ஆரணியம் என்னும் பள்ளத்தாக்கிலே நிலக்கீல் ஊறும் கிணறுகள் பல இருந்தன. சொதோம், கொமோரா அரசர்கள் புற முதுகு காட்டி ஓடி அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் மலைக்கு ஓடிப் போயினர்.

11 அப்போது (வெற்றியடைந்த அரசர்கள்) சொதோம், கொமோரா நகர மக்களின் சொத்துக்கள் முழுவதையும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு போனார்கள்.

12 அத்துடன் சொதொமில் வாழ்ந்தவனும் ஆபிராமின் சகோதரன் மகனுமாகிய லோத்தையும் அவன் சொத்துக்களையும் கைப்பற்றிப் போனார்கள்.

13 தப்பி ஓடிப் போயிருந்த ஒருவன், எபிரோயனான ஆபிராமிடம் வந்து அந்தச் செய்தியை அறிவித்தான். அப்பொழுது (ஆபிராம்) தன்னோடு உடன்படிக்கை செய்திருந்த எஸ்கோலுக்கும் ஆனேருக்கும் சகோதரனான மம்பிரேயின் பள்ளத்தாக்கில் குடியிருந்தான்.

14 தன் சகோதரன் லோத் பிடிபட்ட செய்தியைக் கேட்டறிந்தவுடனே, ஆபிராம் தன் வீட்டில் பிறந்த ஊழியர்களுள் போருக்குத் தகுதியான முந்நூற்றுப் பதினெட்டு பேர்களைக் கூட்டிக் கொண்டு, டான் என்னும் ஊர்வரைப் (பகைவரைப்) பின்தொடர்ந்து போனான்.

15 மேலும் தன் துணைவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து, இரவு வேளையில் அவர்கள் மேல் பாய்ந்து வெட்டி, தமாசுக்கு இடப்பக்கத்திலுள்ள ஓபாவரை அவர்களைத் துரத்தியடித்தான்.

16 அப்படி (ஆபிராம்) அவர்களின் எல்லாப் பொருட்களையும், தன் சகோதரனான லோத்தையும் அவன் சொத்துக்களையும் பெண்களையும் மக்களையும் திருப்பிக் கொண்டு வந்தான்.

17 பின் அவன் பொதொர்ல கோமோரையும், அரசக் கணவாய் என்னப்பட்ட சாவே பள்ளத்தாக்கின் அரசர்களையும் முறியடித்துத் திரும்புகையில், சொதோம் அரசன் அவனைச் சந்திக்கச் சென்றான்.

18 மேலும், சாலேமின் அரசனும் உன்னத கடவுளின் குருவுமாய் இருந்த மெல்கிசெதேக், அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் கைகளில் ஏந்தி வந்து, அவனை ஆசீர்வதித்து:

19 விண்ணையும் மண்ணையும் படைத்த உன்னத கடவுளால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படக் கடவானாக.

20 உன்னை ஆதரித்து, உன் பகைவர்களை உன் கையில் ஒப்படைத்த உன்னத கடவுள் வாழ்த்தப்படுவாராக (என்றார்). அவருக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு கொடுத்தான்.

21 பின் சொதோம் அரசன் ஆபிராமை நோக்கி: நீர் மனிதர்களை மட்டும் எனக்குத் தாரும்; மற்ற பொருட்களையெல்லாம் நீர் எடுத்துக் கொள்ளும் என்றார்.

22 அதற்கு அவன்: இதோ, விண்ணையும் மண்ணையும் ஆளும் அதி உன்னத கடவுளாயிருக்கிற ஆண்டவருக்கு முன் என் கையை உயர்த்தி,

23 ஆபிராமைச் செல்வனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு, நான் ஒரு பாவு நூலாகிலும், செருப்பின் வாரையாகிலும், உமக்குண்டான பொருட்களில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளமாட்டேன்.

24 என் இளைஞர் உண்டதையும், என்னுடன் வந்த ஆனேர், எஸ்கோல், மம்பிறே ஆகியோரின் பங்கையும் தவிர, (நான் யாதொன்றையும் எடுத்துக் கொள்ளேன்). இவர்கள் தத்தம் பங்கை எடுத்துக்கொள்வார்கள் என்றான்.

அதிகாரம் 15

1 இவை இவ்வாறு நிகழ்ந்தபின் ஆண்டவருடைய திரு வாக்கு ஆபிராமுக்குக் காட்சியில் உண்டாகி, அஞ்சாதே, ஆபிராம், நாம் உன் அடைக்கலமும், மிகவும் சிறந்த உன் பரிசுமாய் இருக்கிறோம் என்றது.

2 அதைக் கேட்டு, ஆபிராம்: ஆண்டவராகிய கடவுளே, அடியேனுக்கு நீர் என்ன தருவீர்? நான் பிள்ளையின்றிப் போவேனே! என் வீட்டு மேற்பார்வையாளனின் மகனான இந்தத் தமாஸ் ஊரானாகிய எலியேசேர் தான் இருக்கிறான் என்றான்.

3 மீண்டும் ஆபிராம்: நீர் எனக்கு மகப்பேறு அருளினீரில்லை. ஆதலால், இதோ, என் வீட்டில் பிறந்த ஊழியனே எனக்கு வாரிசாய் இருப்பான் என்றான்.

4 (என்றதும்) ஆண்டவருடைய திருவாக்கு அவனுக்கு உடனே உண்டாகி: இவன் உன் வாரிசு ஆகான். உனக்கு பிறக்கும் புதல்வன் தான் உனக்கு வாரிசு ஆவான் என்று சொன்னது.

5 பின் ஆண்டவர் அவனை வெளியே அழைத்துக் கொண்டு போய்: நீ வானத்தை அண்ணாந்து பார். கூடுமாயின் விண்மீன்கள் எத்தனையென்று எண்ணிப் பார். உன் சந்ததி அவ்வளவு இருக்கும் என்றார். ஆபிராம் கடவுளை விசுவாசித்தான்.

6 அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. மீண்டும் அவர் அவனை நோக்கி:

7 இந்நாட்டை உனக்குக் கொடுக்கும்படியாகவும், அதனை நீ உரிமையாக்கிக் கொள்ளும்படியாகவும் அல்லவா ஆண்டவராகிய நாம் ஊர் என்னும் கல்தேயர் நகரிலிருந்து உன்னை வெளிக் கொணர்ந்தோம் என்றார்.

8 அதற்கு அவன்: ஆண்டவராகிய கடவுளே, நான் இதனை உரிமையாக்கிக் கொள்வேனென்று எப்படி அறிவேன் என்று கேட்டான்.

9 ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக: மூன்று வயதுக் கிடாரி ஒன்றும், மூன்று வயதுள்ள வெள்ளாடு ஒன்றும், மூன்று வயது ஆட்டக் கிடாய் ஒன்றும் காட்டுப் புறா ஒன்றும், மாடப் புறா ஒன்றும் நம்மிடம் கொண்டு வா என்றார்.

10 அவற்றையெல்லாம் அவன் கொண்டுவந்து, அவற்றை நடுவே வெட்டித் துண்டங்களை ஒன்றிற்கொன்று எதிராக வைத்தான். பறவைகளையோ அவன் துண்டிக்கவில்லை.

11 வானத்துப் பறவைகள் அந்த உடல்களின் மேல் வந்திறங்கின. அவற்றை ஆபிராம் துரத்திக் கொண்டிருந்தான்.

12 பின் சூரியன் மறையும் வேளையில் ஆபிராமுக்கு அயர்ந்த தூக்கம் உண்டானது. பெரும் திகிலும் காரிருளும் அவனைச் சூழ்ந்து கொண்டன.

13 அந்நேரத்தில் ஆண்டவர்: உன் சந்ததியார் தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியராய்த் திரிந்து, அடிமைகளாக்கப்பட்டு, நானூறு ஆண்டளவும் துன்பமடைவார்கள் என்று முன்பே அறியக்கடவாய்.

14 ஆயினும், அவர்களை அடிமைப்படுத்திய மக்களுக்கு நாம் தீர்ப்பு வழங்குவோம். அதன் பின் உன் சந்ததியார் உரிமை பெற்றவராய் மிகுந்த பொருளுடனே புறப்படுவர்.

15 நீயோ, மிகவும் முதிர்ந்த வயதிலே அடக்கம் பண்ணப்பட்டுச் சமாதானத்தோடு உன் முன்னோருடன் சேர்வாய்.

16 ஆனால், நாலாம் தலைமுறையில் (உன் சந்ததியார்) இவ்விடத்திற்குத் திரும்பவும் வருவார்கள். ஏனென்றால், அமோறையருடைய பாவ அக்கிரமங்களின் அளவு இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

17 சூரியன் மறைந்து காரிருள் உண்டான பின், புகைகின்ற ஒரு சூளையும், மேற் சொல்லப்பட்ட துண்டங்களின் நடுவே உலாவி நின்ற நெருப்பு மயமான ஒரு விளக்கும் காணப்பட்டன.

18 அந்நாளிலே ஆண்டவர் ஆபிராமோடு உடன்படிக்கை செய்து: எகிப்தின் நதிமுதல் யூஃப்ரத்தீஸ் மாநதி வரையிலுமுள்ள இந்த நாட்டை உன் சந்ததியாருக்குத் தருவோம்.

19 சீனையர், செனெசேயர், செத்மோனையர்,

20 ஏத்தையர், பெரேசையர், இராப்பாயீமர்,

21 அமோறையர், கானானையர், ஜெந்சையர், ஜெபுசையர் முதலியோரையும் (அவர்களுக்குக் கீழ்ப்படுத்துவோம்) என்றருளினார்.

அதிகாரம் 16

1 நிற்க, அந்நாள் வரை ஆபிராமின் மனைவி சாறாயிக்குப் பிள்ளைகள் இல்லை. ஆனால், அவளுக்கு எகிப்து நாட்டினளான ஆகார் என்னும் பெயர் கொண்ட வேலைக்காரி ஒருத்தி இருந்தாள்.

2 சாறாயி தன் கணவனை நோக்கி: இதோ, நான் பிள்ளை பெறாவண்ணம் ஆண்டவர் என் கருப்பத்தை அடைத்திருக்கிறார். நீர் என் வேலைக்காரியோடு சேரும். அவள் மூலமாவது நான் பிள்ளைகளை அடைவேனாக என்றாள். அவன் அவள் வேண்டுகோளுக்கு இணங்கினான்.

3 கானான் நாட்டில் அவர்கள் பத்தாண்டுகள் குடியிருந்த பின் (சாறாயி) எகிப்து நாட்டினளான ஆகார் என்னும் தன் வேலைக்காரியை அழைத்து, அவளைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

4 அவன் அவளோடு கூடி வாழ்ந்தான். பின்னர் அவள் தான் கருவுற்றிருக்கக் கண்டு, தன் தலைவியை அலட்சியம் பண்ணினாள்.

5 அது கண்டு சாறாயி ஆபிராமை நோக்கி: எனக்கு நீர் அநீதி செய்து வருகிறீரே! நான் என் அடிமைப் பெண்ணை உமது மடியிலே கொடுத்திருக்க. அவள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தவுடன் என்னைப் பழிக்கத் தொடங்கி விட்டாளே! ஆண்டவர் உமக்கும் எனக்கும் நடுவராயிருந்து நீதி வழங்கக் கடவார் என்றாள்.

6 அதற்கு ஆபிராம்: இதோ, உன் அடிமைப் பெண் உன் கைக்குள் இருக்கிறாள். உன் மனப்படி அவளை நடத்துவாய் என்றான். பின்பு, சாறாயி தன்னைக் கண்டிப்பாய் நடத்தியது கண்டு அவள் ஓடிப் போனாள்.

7 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் அவளைப் பாலைவனத்திலே சூருக்குப் போகும் வழியருகே உள்ள நீரூற்றண்டையில் கண்டு: சாறாயியின் அடிமைப் பெண்ணாகிய ஆகாரே, நீ எங்கிருந்து வந்தாய்?

8 எங்கே போகிறாய் என்று கேட்க, அவள்: நான் என் தலைவி சாறாயியை விட்டு ஓடிப் போகிறேன் என்று பதில் கூறினாள்.

9 ஆண்டவருடைய தூதர் அவளைப் பார்த்து: உன் தலைவியிடம் நீ திரும்பிப் போய் அவளுக்கு அடங்கியிரு என்றார்.

10 மேலும் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் விருத்தியடையச் செய்வோம். அது எண்ண முடியாததாய் இருக்கும் என்று சொன்னார்.

11 மீண்டும்: இதோ, கருவுற்றிருக்கிற நீ ஒரு புதல்வனைப் பெறுவாய். உன் இன்னலைக் கண்டு ஆண்டவர் இரங்கினதனாலே, அவனுக்கு இஸ்மாயில் என்று பெயரிடுவாயாக.நி414

12 அவன் கொடும் குணமுள்ள மனிதனாய் வளர்வான். அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் ஓங்கியிருக்கும். தன் சகோதரர் அனைவரும் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களுக்கெதிராக அவன் குடியிருப்பான் என்றார்.

13 அப்போது அவள்: என்னைக் கண்ட அந்த ஆண்டவருடைய பின் புறத்தை நான் கண்டேனல்லவா என்று சொல்லித் தன்னோடு பேசிய ஆண்டவருக்கு: நீர் என்னைக் கண்ட கடவுள் என்று பெயரிட்டாள்.

14 அதனால் அந்தக் கிணற்றை, வாழ்கிறவரும் என்னைக் காண்கிறவருமாய் இருக்கிறவருடைய கிணறு என்று அழைத்தாள். அது காசேதுக்கும் பாரதுக்கும் நடுவே இருக்கிறது.

15 பின் ஆகார் ஆபிராமுக்கு ஒரு புதல்வனைப் பெற்றாள். இவனுக்கு அவன் இஸ்மாயில் என்று பெயரிட்டான்:

16 ஆகார் இஸ்மாயிலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எண்பத்தாறு.

அதிகாரம் 17

1 ஆபிராம் தொண்ணுற்றொன்பது வயதுள்ளவனாய் இருந்த போது ஆண்டவர் அவனுக்குத் தோன்றி: நாம் எல்லாம் வல்ல கடவுள். நீ நமக்குமுன் நடந்து உத்தமனாய் இரு.

2 நாம் நமக்கும் உனக்குமிடையே ஓர் உடன்படிக்கை செய்து, உன்னை மிகுதியாய்ப் பெருகச் செய்வோம் என்றார்.

3 ஆபிராம் முகம் குப்புற விழுந்து தொழுதான்.

4 அப்பொழுது கடவுள் அவனைப் பார்த்து: நாம் சுயம்பு. இதோ, நம் உடன்படிக்கை உன்னுடன் இருக்கும். நீ திரளான மக்களுக்குத் தந்தையாவாய்.

5 இன்று முதல் உன் பெயர் ஆபிராம் அன்று, ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய். ஏனென்றால், அநேக மக்களுக்கு உன்னைத் தந்தையாக ஏற்படுத்தினோம்.

6 நாம் உன்னைப் பெருந்திரளாய் விருத்தியடையச் செய்து பல இனத்தாருக்கும் உன்னைத் தந்தையாக்குவோம். அரசர்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள்.

7 நமக்கும் உனக்கும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நம் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாய் நிறுவுவோம். அதனாலே உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததியார்களுக்கும் நாம் கடவுளாக இருப்போம்.

8 அன்றியும், உனக்கு அன்னிய நாடாகிய இந்தக் கானான் நாடு முழுவதையும் உனக்கும் உன் சந்ததியாருக்கும் நித்திய உரிமையாகக் கொடுத்து, நாம் அவர்களுக்குக் கடவுளாக இருப்போம் என்றார்.

9 மீண்டும் கடவுள் ஆபிரகாமை நோக்கி: ஆதலால், நமது உடன்படிக்கையை நீயும் உனக்குப் பின் உன் சந்ததியாரும் தலைமுறை தலைமுறையாய்க் கடைப்பிடித்து வருவீர்களாக.

10 நமக்கும் உங்களுக்கும் உனக்குப் பின் வரும் சந்ததிக்குமிடையே உள்ள உடன்படிக்கை என்னவெனில், உங்களுக்குப் பிறக்கும் எல்லா ஆண் பிள்ளைகளுக்கும் விருத்தசேதனம் செய்யப்படும் என்பதாகும்.

11 நமக்கும் உங்களுக்குமிடையே (ஏற்பட்ட) உடன்படிக்கைக்கு அடையாளமாக உங்கள் நுனித்தோலை வெட்டுவீர்களாக.

12 உங்களில் ஆணாய்ப் பிறந்த குழந்தை எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படும். உங்கள் வீட்டில் பிறந்த ஊழியனும் சரி, விலைக்கு வாங்கின அடிமையும் சரி, புறவினத்துப் பிள்ளையும் சரி, உங்களில் தலைமுறை தலைமுறையாய்ப் பிறக்கும் ஆண் பிள்ளைகளெல்லாம் விருத்தசேதனம் பண்ணப்படுவார்கள்.

13 இவ்வாறு நம் உடன்படிக்கை உங்கள் மாமிசத்திலே நித்திய உடன்படிக்கையாய் இருக்கும்.

14 நுனித் தோல் வெட்டப்படாத ஆண்பிள்ளை இருந்தால், அப்படிப்பட்டவன் நம் உடன்படிக்கையை மீறினபடியால் தன் இனத்தினின்று விலக்குண்டு போவான் என்றார்.

15 மீண்டும் கடவுள் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாறாயியை, இனிச் சாறாயி என்றழையாமல், சாறாள் என்று அழைப்பாய்.

16 நாம் அவளை ஆசீர்வதிப்போம். அவள் மூலம் நாம் உனக்குத் தரவிருக்கிற புதல்வனையும் ஆசீர்வதிப்போம். இவன் பல மக்களுக்கும் முதல்வனாவான்; எல்லா இனத்தவரின் அரசர்களுக்கும் தந்தையாவான் என்றருளினார்.

17 ஆபிரகாம் முகம் குப்புற விழுந்து, புன் முறுவலோடு: நூறு வயதுள்ளவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணுறு வயதுள்ள சாறாள் பிள்ளை பெறுவாளோ என்று உள்ளத்தில் நினைந்து, கடவுளைப் பார்த்து:

18 இஸ்மாயில் உம் முன்னனிலையில் பிழைக்கக் கடவான் என்று விண்ணப்பம் செய்தார்.

19 அதற்குக் கடவுள் ஆபிரகாமை நோக்கி; உன் மனைவி சாறாள் உனக்கு ஒரு புதல்வனைப் பெறுவாள். அவனுக்கு ஈசாக் என்று பெயரிடுவாய். நம் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிறுவுவோம்.

20 அன்றியும் இஸ்மாயிலுக்காக நீ செய்த விண்ணப்பத்தையும் கேட்டருளினோம். இதோ, அவனுக்கு நாம் ஆசீர் அளிப்போம். அவனை நாம் மிகவும் பலுகிப் பெருகச் செய்வோம். அவன் பன்னிரண்டு தலைவர்களைப் பெறுவான். அவனை மாபெரும் இனமாக விருத்தியடையச் செய்வோம்.

21 ஆனால், வருகிற ஆண்டு இதே காலத்தில் சாறாள் உனக்குப் பெறவிருக்கிற ஈசாக்கோடு நாம் நம் உடன்படிக்கையை ஏற்படுத்துவோம் என்றார்.

22 ஆண்டவர் ஆபிரகாமோடு பேசி முடிந்த பின்பு ஆபிரகாமை விட்டு மறைந்தார்.

23 ஆபிரகாம் தம் மகனான இஸ்மாயிலும், தம் வீட்டில் பிறந்த ஊழியரும், விலைக்கு வாங்கப் பட்டிருந்த அனைவருமாகிய தம் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களையும் அன்றே அழைத்துக் கடவுள் தமக்குக் கட்டளையிட்ட வண்ணம், உடனே அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தார்.

24 ஆபிரகாம் தமக்குத்தாமே நுனித் தோலை வெட்டிக் கொண்டார். அப்பொழுது அவருக்குத் தொண்ணுற்றொன்பது வயது.

25 அவர் மகனான இஸ்மாயில் பதின்மூன்று வயதுள்ள பிள்ளையாய் இருந்தான்.

26 ஒரே நாளில் ஆபிரகாமும், அவர் மகன் இஸ்மாயிலும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.

27 அவர் வீட்டில் பிறந்திருந்த எல்லா ஊழியர்களும், விலைக்கு வாங்கப் பட்ட அடிமைகளும், அன்னியர்களுமாகிய அவர் வீட்டு ஆடவர் அனைவரும் அவ்வாறே விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.

அதிகாரம் 18

1 பின்பு கடவுள் மம்பிறே பள்ளத்தாக்கில் ஆபிரகாமுக்குத் தோன்றினார். அந்நேரம் வெப்பம் மிகுந்த உச்சிப் பகல் வேளையானதனால், அவர் கூடார வாயிலில் உட்கார்ந்திருந்தார்.

2 திடீரென்று அவர் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடனே அவர் கூடார வாயிலை விட்டு அவர்களுக்கு எதிர்கொண்டோடிக் குப்புற விழுந்து வணங்கி:

3 ஆண்டவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், அடியேனை விட்டுக் கடந்து போக வேண்டாம்.

4 இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருகிறேன். உங்கள் கால்களைக் கழுவி இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள்.

5 அதற்குள் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன். நீங்கள் உள்ளத்தைச் சற்றே திடப்படுத்திக் கொண்டபின் அப்பால் செல்வீர்களாக. இதற்காகத்தானே அடியேனிடத்திற்கு எழுந்தருளி வந்தீர்கள் என்றார். அவர்கள்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொன்னார்கள்.

6 அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாறாளை நோக்கி: நீ மிக விரைவில் மூன்று படி மாவைப் பிசைந்து, அடுப்புத் தணலில் அப்பங்களைச் சுடு என்றார்.

7 மாட்டு மந்தைக்குத் தாமே ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றுக் குட்டியைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க இவன் அதனை விரைவில் சமைத்தான்.

8 பிறகு வெண்ணெயையும் பாலையும் சமைக்கப்பட்ட கன்றுக் குட்டியையும் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்து, அவர்களுக்குப் பக்கமாய் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.

9 சாப்பிட்ட பின்னர் அவர்கள் அவரை நோக்கி: உன் மனைவி சாறாள் எங்கே என்று கேட்க, அவர்: அதோ, கூடாரத்தில் இருக்கிறாள் என்று பதில் கூறினார்.

10 மூவருள் ஒருவர் அவரை நோக்கி: நாம் திரும்பும்போது இதே காலத்தில் உன்னிடத்திற்கு வருவோம். அப்போது நீயும் உயிரோடிருப்பாய்; சாறாளுக்கும் ஒரு மகன் இருப்பான் என்றார். கூடார வாயிலின் பின் புறமாய் நின்று கொண்டிருந்த சாறாள் இதைக் கேட்டுச் சிரித்தாள்.

11 ஏனென்றால், அவர்கள் இருவரும் வயது சென்று முதிர்ந்தவராய் இருந்தனர். சாறாளுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.

12 ஆதலால், அவள் மறைவில் இருந்துகொண்டு புன் சிரிப்புடன்: நானும் கிழவி, என் கணவரும் முதிர்ந்த வயதினர். பின், நான் இன்பத்திற்கு இடம் கொடுப்பதா என்றாள்.

13 அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, சாறாள், நான் கிழவியாய் இருக்கப் பிள்ளை பெறுவது மெய்யாய் இருக்குமொவென்று நகைத்தாளே,

14 கடவுள் செய்வதற்கு அரிதான காரியமும் உண்டோ? முன் சொன்னது போல், நாம் இதே காலத்தில் மறுபடியும் வருவோம். அப்போது நீயும் உயிரோடிருப்பாய்; சாறாளுக்கும் ஒரு மகன் இருப்பான் என்று சொன்னார்.

15 சாறாள் பயத்தினாலே கலங்கி: நான் சிரிக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு ஆண்டவர்: இல்லை, நீ சிரித்தாய் என்றார்.

16 அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சொதோமை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடு கூடப் போய், அவர்களை வழியனுப்பினார்.

17 அப்பொழுது ஆண்டவர்: நாம் செய்யப் போகிறதை ஆபிரகாமுக்கு மறைக்கக் கூடுமோ? இல்லை.

18 அவன் மிகவும் பெரிய, வலிமைமிக்க இனமாவான். மேலும், பூமியிலுள்ள எல்லா இனத்தாரும் அவனில் ஆசீர் பெறவிருக்கின்றனர்.

19 உண்மையிலே, ஆண்டவர் ஆபிரகாமுக்குத் திருவுளம் பற்றின எல்லாவற்றையும் ஆபிரகாமின் பொருட்டு நிறைவேற்றும்படி, அவன் தன் மக்களுக்கும் தனக்குப் பின்னால் வரும் தன் வீட்டாருக்கும் புத்திச் சொல்லி, நீங்கள் கடவுள் கட்டளையிட்ட நெறியில் ஒழுகி நியாயத்தையும் நீதியையும் கடைபிடிக்க வேண்டுமென்று கற்பிப்பான் என்று அறிவோம் (என்றார்).

20 ஆகையால் ஆண்டவர்: சொதோம் கொமோரா நகரங்களின் ஆரவாரம் மிஞ்சிப் போயிற்று. அவைகளின் பாவமும் அளவின்றிப் பெருகிப் போயிற்று.

21 ஆதலால், இதோ, நாம் இறங்கிப் போய், நம்மை எட்டிய அந்தக் கூக்குரலுக்கு ஏற்ப அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்ப்போம் என்றார்.

22 அப்பொழுது அவர்கள் அவ்விடம் விட்டுச் சொதோமை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமோ, ஆண்டவர் திருமுன் நின்றவராய், அண்மையில் வந்து:

23 நீர் தீயவர்களோடு கூட நீதிமானையும் அழிக்கவிருக்கிறீரோ?

24 நகருக்குள்ளே நீதிமான்கள் ஐம்பது பேர் இருந்தால், (பாவிகளோடு) கூட அவர்களும் அழிந்து போவார்களோ? அவ்விடத்திலே நீதிமான்கள் ஐம்பது பேர் இருப்பார்களாயின், அவர்கள் பொருட்டு அந்த இடத்தைக் காப்பாற்றமாட்டீரோ?

25 தீயவனோடு நீதிமானையும் அழிப்பதும், நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவதும் உமக்குத் தூரமாய் இருப்பதாக. அது உமக்கு உகந்ததன்று. மண்ணகம் முழுவதற்கும் நடுவராய் இருக்கிறீரே: இத்தகைய தீர்ப்பு நிச்சயம் செய்ய மாட்டீரே? (என்றார்).

26 ஆண்டவர் அவரை நோக்கி: நாம் சொதோம் நகருக்குள்ளே ஐம்பது நீதிமான்களைக் கண்டால் அவர்களின் பொருட்டு அந்நகர் முழுவதையும் காப்பாற்றுவோம் என்றார்.

27 ஆபிரகாம் மறுமொழியாக: புழுதிக்கும் சாம்பலுக்கும் சமமாய் இருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத் தொடங்கினபடியால், இன்னும் என் ஆண்டவரிடம் ஒன்று கேட்பேன்.

28 ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருந்தாலும் இருக்கலாம். நாற்பத்தைந்து பேரைப் பாராது நகர் முழுவதையும் அழிப்பீரோ என்று கேட்க, கடவுள்: நாம் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அதனை அழிப்பதில்லை என்றார்.

29 மீண்டும் அவரை நோக்கி: அவ்விடத்தில் நாற்பது பேர் மட்டும் இருந்தால் என்ன செய்வீர் என, ஆண்டவர்: நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிப்பதில்லை என்றார்.

30 அப்பொழுது ஆபிரகாம்: ஆண்டவரே, தயை புரியும். நான் பேசுவதினால் கோபிக்க வேண்டாம். முப்பது நீதிமான்கள் காணப்பட்டால் என்று கேட்க, அவர்: முப்பதுபேர் காணப்பட்டால் அதை அழியேன் என்று பதில் கூறினார்.

31 அவர்: நான் பேசத் தொடங்கிவிட்டேன்; எப்படியாவது என் ஆண்டவரிடம் இன்னும் ஒன்று கேட்கத் துணிவேன்: அவ்விடத்தில் இருபது நீதிமான்களே இருக்கக் கண்டால் என்ன என, அவர்: இருபது பேரானாலும் அதை நாம் அழிப்பதில்லை என்றார்.

32 அவர்: ஆண்டவரே, அருள் கூறும். அடியேன் இன்னும் ஒருமுறை மட்டும் கேட்கிறேன். ஆண்டவருக்கு கோபம் வேண்டாம். அவ்விடத்தில் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால் என, ஆண்டவர்: அந்தப் பத்துப் பேருக்காக அந்நகரை அழிக்க மாட்டோம் என்றார்.

33 ஆபிரகாமோடு பேசி முடிந்தபோது ஆண்டவர் போய்விட்டார். ஆபிரகாமும் தம் இல்லிடத்துக்குத் திரும்பிப் போனார்.

அதிகாரம் 19

1 மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சொதோமுக்கு வந்தனர். அப்பொழுது லோத் நகரின் தலை வாயிலில் உட்கார்ந்திருந்தான். அவன் அவர்களைக் கண்டவுடன் எழுந்து அவர்களுக்கு எதிர் கொண்டு சென்று முகம் குப்புறவிழுந்து வணக்கம் புரிந்தான்.

2 பிறகு: ஐயன்மீர், அருள் கூர்ந்து அடியேன் வீட்டுப் பக்கமாய் நீங்கள் வந்து இரவு தங்கி கால்களைக் கழுவி, காலையிலே புறப்பட்டு உங்கள் வழிப் பயணத்தைத் தொடரலாம், என்று உபசரிக்க, அவர்கள்: பரவாயில்லை; தெருவிலே இரவைக் கழிப்போம் என்று மறுமொழி சொன்னார்கள்.

3 அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுத் தன் வீட்டிற்கு வரும்படி செய்தான். ஆகவே, அவர்கள் திரும்பி அவனிடத்திற்கு வந்து உள்ளே சென்ற போது லோத் அவர்களுக்கு ஒரு விருந்து செய்து புளியாத அப்பம் சுட்டான். அவர்களும் சாப்பிட்டார்கள்.

4 பின் அவர்கள் துயில் கொள்ளுமுன் நகர வாயில்களில் சிறுவர் முதல் கிழவர் வரை நகரின் எல்லா ஆடவர்களும் ஒருங்கே வந்து வீட்டைச் சூழ்ந்து கொண்டு, லோத்தைக் கூப்பிட்டு:

5 இன்று மாலை உன்னிடத்தே வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு சற்றுச் சரசமாடும்படி அவர்களை இங்கே கொண்டு வா என்றனர்.

6 லோத் வீட்டிற்கு வெளியே வந்து, தன் பின்னால் கதவைச் சாத்திக்கொண்டு: என் சகோதரரே, வேண்டாம்.

7 உங்களைக் கெஞ்சி மன்றாடுகிறேன்: அத்தகைய தீச்செயல் செய்ய வேண்டாம்,

8 இது வரை ஆண் தொடர்பு அறியாத புதல்வியர் இருவர் எனக்கு உண்டு. உங்கள் விருப்பப்படி அவர்களை அழிம்பு செய்வதாயினும் செய்யுங்கள்; இந்த ஆடவருக்கு மட்டும் ஒன்றும் செய்யாதீர்கள். ஏனென்றால், அவர்கள் என் வீட்டில் தங்க வந்திருக்கின்றார்கள் என்றான்.

9 அதற்கு அவர்கள்: நீ அப்பாலே போ என்றனர். மீண்டும் அவனை நோக்கி: இவ்விடத்திற்கு அந்நியனாய் வந்த நீ எங்களுக்கு நியாயம் கூறத் துணிந்ததென்ன? பொறு; அவர்களுக்குச் செய்வதை விட உனக்கு அதிகத் தீங்கு இழைப்போம் என்று சொல்லி, லோத்தைக் கொடுமையாய் நெருக்கிக் கதவை உடைக்க முயலுகையில்,

10 இதோ, (வீட்டினுள் இருந்த) அவ்வாடவர் கையை வெளியே நீட்டி லோத்தைப் பிடித்து உள்ளே இழுத்துக் கதவைப் பூட்டினர்.

11 பின் சிறுவர் முதல் பெரியோர் வரை வெளியே இருந்தவர்கள் அனைவரும் கண் பார்வை இழந்து போகும்படி செய்ததனால், அவர்கள் கதவைக் காணக் கூடாமல் போயிற்று.

12 மேலும் அவர்கள் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் உனக்கு உறவினர் யாரேனும் இருக்கிறார்களோ? மருமகனோ, புதல்வர்களோ, புதல்விகளோ- உன் உறவினர் யாவரையும் இவ்வூரிலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போ.

13 எனென்றால், நாங்கள் இந்த ஊரை அழிக்கப் போகிறோம். அவர்களுடைய (பாவங்களின்) ஆரவாரம் ஆண்டவர் திரு முன் பெருகிப் போயிற்று. இவர்களை அழிக்கும்படி அவர் எங்களை அனுப்பியிருக்கிறார் என்றனர்.

14 உடனே லோத் வெளியே போய்த் தன் புதல்விகளை மணந்து கொள்ளவிருந்த தன் மருமக்களோடு பேசி: ஆண்டவர் இந்த இடத்தை அழிக்கப் போகிறார். ஆதலால், நீங்கள் எழுந்திருங்கள்; இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள் என்றான். ஆனால் லோத் தங்களைக் கேலி செய்வது போல் (அது) அவர்களுக்குத் தோன்றியது.

15 பொழுது விடியும் வேளையில் ஆண்டவரின் தூதர்கள் அவனை அவசரப்படுத்தி: நீ எழுந்திரு. உன் மனைவியையும் உன் இரு புதல்விகளையும் கூட்டிக் கொண்டு போ. இல்லையேல், இந் நகரின் அக்கிரமத் (தண்டனையிலே) நீயும் அகப்பட்டு அழிவாய் என்றார்கள்.

16 அவன் தயங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவர்கள் அவனையும் அவன் மனைவியையும் இரு புதல்விகளையும் கையால் பிடித்தார்கள். ஏனென்றால், ஆண்டவர் லோத்தின் மீது இரக்கம் வைத்திருந்தார்.

17 அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள். அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் உயிர் காக்க ஓடிப்போ. திரும்பிப் பார்க்காதே. சுற்றுப் புறத்தில் தங்காதே. நகரோடு கூட நீயும் அழியாதபடிக்கு மலையில் சரணடையக்கடவாய் என்றார்கள்.

18 லோத் அவர்களை நோக்கி: ஆண்டவரே, ஒரு வார்த்தை சொல்கிறேன், கேளும்.

19 அடியேன் உம் முன்னிலையில் அருள் அடைந்தேனே; என் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு நீர் அளவில்லாத தயவு புரிந்தீரே; ஆனால், மலைக்கு ஓடிப்போக என்னால் இயலாது. போனாலும், தீங்கு என்னை அங்கே தொடருமாயின் செத்துப் போவேனே!

20 அதோ, அந்தச் சிற்றூர் தெரிகிறதே, அது அருகிலிருப்பதனால் எளிதாய் அங்கே போய்ச் சேரலாம். சேர்ந்ததால் என் உயிர் பிழைக்கும். அது சிறிய ஊரல்லவா? அவ்விடத்தில் சாவுக்குத் தப்பிப் பிழைப்பேனன்றோ என்றான்.

21 அதற்கு அவர்: நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை புரிந்தோம். நீ சொன்ன ஊரை நாம் அழிக்க மாட்டோம்.

22 நீ அங்கே விரைந்தோடித் தப்பித்துக்கொள். எனென்றால், நீ அவ்விடம் சேருமட்டும் நாம் ஒன்றும் செய்யக் கூடாதிருக்கிறது என்றார். இதனால் அந்த நகரத்துக்கச் செகோர் என்னும் பெயர் வழங்கிற்று.

23 லோத் செகோருக்குள் புகுந்தபோது பூமியின் மேல் சூரியன் உதித்தது.

24 அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சொதோம் கோமோரா நகரங்களின் மேல் தெய்வீக கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்;

25 அந் நகரங்களையும், அவற்றைச் சுற்றிலுமுள்ள ஊர் முழுவதையும், அவற்றின் எல்லாக் குடிகளையும், நிலத்தின் எல்லாப் பயிர்களையும் அழித்தார்.

26 அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புச் சிலையாக மாறினாள்.

27 ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கனவே ஆண்டவர் முன்னிலையில் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் போய்,

28 சொதோம் கொமோரா நகரங்கள் இருந்த திசையையும் அவைகளுக்குச் சுற்றிலுமுள்ள நாட்டையும் நோக்கிப் பார்த்த போது, சூளையில் எழும்பும் புகை போலப் பூமியிலிருந்து தீப்பொறி கிளம்பக் கண்டார்.

29 ஆனால், அந்நாட்டின் நகரங்களை அழித்தபோது, கடவுள் ஆபிரகாமின் பொருட்டு, லோத் குடியிருந்த நகரின் அழிவிலிருந்து அவனைக் காப்பாற்றினார்.

30 லோத் சொகோரினின்று மலைமேல் ஏறி அங்குத் தங்கினான். அவனோடு அவன் இரு புதல்விகளும் சென்றிருந்தனர். (ஏனென்றால், அவன் செகோரில் குடியிருக்க அஞ்சினான்.) அவ்விடத்தில் அவனோடுகூட அவன் இரு புதல்விகளும் ஒரு குகையில் வாழ்ந்து வந்தனர்.

31 அப்படியிருக்க, மூத்த புதல்வி தன் சகோதரியை நோக்கி: நம் தந்தை வயது சென்றவர். உலகமெங்கும் நடக்கிற முறைமையின்படி நம்மை மணந்து கொள்ளப் பூமியில் ஆடவன் ஒருவனும் இல்லை.

32 தந்தை வழியாவது நமக்குச் சந்ததி உண்டாகும்படி அவருக்கு மதுபானம் கொடுத்து அவரோடு படுப்போம், வா என்றாள்.

33 அவ்வாறே அவ்விரவில் அவர்கள் தங்கள் தந்தைக்கு மயக்க மூட்டும் பானம் கொடுத்தனர். பிறகு மூத்ததவள் உள்ளே புகுந்து தன் தந்தையோடு படுத்தாள். ஆனால், அவள் வந்து தன்னுடன் படுத்தும் பின் எழுந்து போனதும் அவனக்குத் தெரியாது.

34 மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி: இதோ, நேற்றிரவு நான் தந்தையோடு படுத்தேன். இன்றிரவும் அவருக்கு மதுவைக் கொடுப்போமாக. நம் தந்தை வழியாவது நமக்குச் சந்ததி உண்டாகும் வண்ணம், நீ போய் அவரோடு படுப்பாய் என்றாள்.

35 அப்படியே அன்றிரவும் தங்கள் தந்தைக்கு மதுபானம் குடிக்கக் கொடுத்தார்கள். இளைய புதல்வி அவரோடு படுத்தாள். இம்முறையும் அவள் படுத்ததையும் எழுந்து போனதையும் அவன் உணரவேயில்லை.

36 இவ்வாறு லோத்தின் புதல்விகள் இருவரும் தங்கள் தந்தையாலேயே கருத்தரித்தனர்.

37 பின் மூத்தவள் ஒரு புதல்வனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்னும் பெயரிட்டாள். அவன் இன்று வரை இருக்கிற மோவாப்பித்தாரக்குத் தந்தையானான்.

38 இளையவளும் ஒரு புதல்வனைப் பெற்று: இவன் என் இனத்தின் புதல்வன் என்று சொல்லி, அவனுக்கு ஆமோன் என்னும் பெயரைச் சூட்டினாள். அவன் இன்று வரை இருக்கிற ஆமோனித்தாருக்கு மூதாதை ஆனான்.

அதிகாரம் 20

1 ஆபிரகாம் அவ்விடத்திலிருந்து புறப்பட்டுத் தென்னாட்டிற்குப் போய், காதேசுக்கும் சூருக்கும் நடுவில் குடியேறி, பின் ஜெரரா நாட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.

2 அப்போது அவர் தம் மனைவி சாறாளைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், ஜெரரா மன்னனாகிய அபிமெலெக் தன் ஆட்களை அனுப்பி அவளைப் பிடித்துக் கொண்டு வரும்படி செய்தான்.

3 ஆனால் (ஒரு நாள்) இரவு நேரத்தில் அபிமெலெக்குக்கு ஆண்டவர் கனவில் தோன்றி: இதோ, நீ அபகரித்த பெண்ணின் பொருட்டு நீ சாகப் போகிறாய். ஏனென்றால், அவளுக்குக் கணவன் இருக்கிறான் என்றார்.

4 அவளைத் தொடாதிருந்த அபிமெலெக் அது கேட்டு, மறுமொழியாக: ஆண்டவரே, வெள்ளைப் புத்தியும் சுத்தமான கையும் கொண்டுள்ள மக்களை நீர் சாகடிப்பீரே?

5 அவளை அவன் தன் சகோதரி என்றும், அவள் (அவனைத்) தன் சகோதரன் என்றும் சொல்லவில்லையா? நான் கபடில்லாத மனத்துடனும் பரிசுத்தமான கைகளுடனும் இதைச் செய்தேன் என்றான்.

6 அப்பொழுது கடவுள்: நீ கபடற்ற மனத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவோம். அதனால் தானே நமக்கு விரோதமாய் நீ பாவம் செய்யாத படிக்கும் உன்னைக் காப்பாற்றி, அவளைத் தொடவும் நாம் இடம் கொடுக்கவில்லை.

7 அதனால், நீ அந்தப் பெண்ணை அவள் கணவனிடம் அனுப்பிவிடு. அவன் ஓர் இறைவாக்கினன். அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவளை அனுப்பி விட நீ இசையாவிடில், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் (என்றார்).

8 அபிமெலெக் அவ்விரவில் தானே உடனே எழுந்து தன் ஊழியக்காரரையெல்லாம் வரவழைத்து, அந்த வார்த்தைகள் எல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அந்த மனிதர்கள் எல்லாரும் மிகவும் திகிலடைந்தனர்.

9 பின் அபிமெலெக் ஆபிரகாமையும் வரவழைத்து: என்ன காரியம் செய்தீர்? நீர் என் மேலும் என் நாட்டின் மேலும் ஒரு பெரிய பாதகத்தைச் சுமத்துவதற்கு நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? செய்யத் தகாததை எங்களுக்குச் செய்தீரே என்று சொல்லி, மீண்டும்:

10 என்ன குற்றத்தைக் கண்டு நீர் இவ்வாறு செய்தீர் என்று முறையிட்டு வினவினான்.

11 ஆபிரகாம் மறுமொழியாக: இவ்விடத்தில் தெய்வ பயம் உண்டோ என்னவோ என்றும், என் மனைவியின் பொருட்டு இவ்வூரார் என்னைக் கொன்றாலும் கொல்வர் என்றும் என் மனத்திலே எண்ணிக் கொண்டேன் ஒரு வகையிலே;

12 மற்றொரு வகையிலோ, அவள் என் சகோதரி என்பது உண்மையே; ஏனென்றால். அவள் என் தாய்க்கு மகளல்லாவிடினும், என் தந்தையின் மகளே; அவளை நான் மணந்து கொண்டேன்.

13 மேலும் கடவுள் கட்டளைப்படி நான் என் தந்தையின் வீட்டை விட்டுப் புறப்பட விருக்கையில், நான் அவளை நோக்கி: நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்; அது என்னவென்றால், நாம் எவ்விடம் சென்றாலும் சரி, என்னை உன் சகோதரனெனச் சொல்வாய், என்று அவளிடம் சொல்லியிருந்தேன் என்றார்.

14 அப்பொழுது அபிமெலெக் ஆடுமாடுகளையும், வேலைக்காரர் வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்ததுமன்றி, அவன் மனைவி சாறாளையும் அவனுக்குத் திரும்பக் கொடுத்து: இந்நாடு உங்களுக்குச் சொந்தம்.

15 உமக்கு விருப்பமான இடத்தில் குடியிருக்கலாம் என்று கூறினான்.

16 பிறகு சாறாளை நோக்கி: இதோ, உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக் காசு கொடுத்தேன். அந்தப் பணத்திலே கண்களை மறைக்கும் ஒரு முக்காடு வாங்கி, நீ எங்கே போனாலும், யார் அருகில் வந்தாலும், உன்முகம் எவருக்கும் தோன்றா வண்ணம் அதைப் போட்டுக் கொள். நீ ஒரு முறை சிக்கிக் கொண்டாய் என்பதை மறக்க வேண்டாம் என்றான்.

17 இதன்மேல் கடவுள் ஆபிரகாமின் மன்றாட்டைக் கேட்டு, அபிமெலெக்கையும், அவன் மனைவியையும், வேலைக்காரிகளையும் குணமாக்கிப் பிள்ளை பெறும்படி அருள் புரிந்தார்.

18 ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாறாளின் பொருட்டு ஆண்டவர் அபிமெலெக் வீட்டிலேயுள்ள (பெண்களின்) கருப்பையையெல்லாம் அடைந்திருந்தார்.

அதிகாரம் 21

1 பின்னர் ஆண்டவர் தமது அருள்வாக்கின் படி சாறாளை நினைவு கூர்ந்து, தமது திருவாக்கு அவளிடம் நிறைவேறச் செய்தார்.

2 அவள் தன் முதிர்ந்த வயதில் கருத் தாங்கி, கடவுள் முன் குறித்திருந்த காலத்தில் ஒரு புதல்வனைப் பெற்றாள்.

3 ஆபிரகாம் சாறாளிடம் பெற்ற புதல்வனுக்கு ஈசாக் எனப் பெயரிட்டார்.

4 பின் கடவுள் கட்டளைப்படி ஆபிரகாம் எட்டாம் நாளிலே குழந்தைக்கு விருத்த சேதனம் செய்தார்.

5 அப்பொழுது அவருக்கு நூறு வயது. அத்தனை வயதுள்ள தந்தைக்கே ஈசாக்கு பிறந்தான்.

6 அப்பொழுது சாறாள்: கடவுள் எனக்கு மகிழ்ச்சி அளித்தார் என்றும், இதைக் கேட்கிற யாவரும் என்னோடு சேர்ந்து மகிழ்வார்கள் என்றும் சொன்னாள்.

7 மீண்டும்: முதிர் வயதுள்ள ஆபிரகாமுக்குச் சாறாள் ஒரு புதல்வனைப் பெற்றாளாம்! அதற்குப் பாலூட்டி வருகிறாளாம்! இத்தகைய செய்தியை ஆபிரகாம் என்றாவது ஒரு நாள் கேள்விப்படுவாரென்று யார் தான் நினைத்திருக்கக் கூடும் என்றும் சாறாள் சொன்னாள்.

8 அந்தக் குழந்தை வளர்ந்து பால்குடியும் மறந்தது. அப்படிப் பால்குடி மறந்த நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து செய்தார்.

9 (பின் ஒரு நாள்) எகிப்து நாட்டினளான ஆகாரின் புதல்வன், சாறாள் புதல்வனான ஈசாக்கோடு கேலி பண்ணி விளையாடுவதைச் சாறாள் கண்டு, ஆபிரகாமை நோக்கி:

10 இந்த வேலைக்காரியையும் அவள் புதல்வனையும் துரத்தி விட வேண்டும். ஏனென்றால், வேலைக்காரியின் மகன் என் மகன் ஈசாக்கோடு பங்காளியாய் இருக்கக் கூடாது என்றாள்.

11 தன் மகன் இஸ்மாயிலைப் பற்றிச் சாறாள் சொன்ன வார்த்தையைக் கேட்டு ஆபிரகாம் வருத்தமுற்றார்.

12 அப்போது கடவுள் அவரை நோக்கி: பையனையும் வேலைக்காரியையும் பொறுத்த வரையில் அது கொடுமையென்று எண்ணாதே. சாறாள் உனக்குச் சொல்வதையெல்லாம் கேட்டு நட. ஏனென்றால் ஈசாக்கிடமிருந்து உனக்குச் சந்ததி தோன்றும்.

13 உன் வேலைக்காரியின் மகனும் உன் வித்தானதனால், அவனையும் ஒரு பெரிய இனத்துக்குத் தலைவனாக்குவோம் என்றார்.

14 ஆபிரகாம் இதைக் கேட்டு, காலையில் எழுந்து, ஓர் அப்பத்தையும், தண்ணீர் நிறைந்த ஒரு தோல் பையையும் அவள் தோளில் சுமத்தி, பையனையும் அவளிடம் ஒப்புவித்து அவளை அனுப்பிவிட்டார். அவள் புறப்பட்டுப் போய்ப் பெற்சபே என்னும் பாலைவனத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தாள்.

15 தோல் பையிலிருந்த தண்ணீர் தீர்ந்த பின் அவள் அவ்விடத்துள்ள மரங்களில் ஒன்றின் அடியில் பையனைக் கிடத்திய பின்,

16 அம்பு எறி தூரத்திற்கும் அதிகமாகச் சென்று அங்கே எதிர் நோக்கி உட்கார்ந்தாள்: குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன் என்று, தான் அமர்ந்திருந்த இடத்திலேயே கூக்குரலிட்டு அழுதாள். அப்போது கடவுள் குழந்தையின் குரலை நன்றாகக் கேட்டருளினதால், ஆண்டவருடைய தூதர் ஒருவர் வானத்தினின்று ஆகாரைக் சுப்பிட்டு:

17 ஆகாரே, உன்னை வருத்துவது யாது? பயப்படாதே. ஏனென்றால், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையன் இட்ட சத்தத்தைக் கடவுள் நன்றானக் கேட்டருளினார்.

18 நீ எழுந்து பையனைத் தூக்கியெடுத்து அதன் கையைப் பிடி. ஏனென்னால், அவளை ஒரு பெரிய இனத்திற்குத் தந்தையாக்குவோம் என்றார்.

19 அந்நேரத்திலே கடவுள் அவள் கண்களைத் திறந்து விட, அவள் ஒரு தண்ணீர்க் கிணற்றைக் கண்டாள்; அவ்விடம் சென்று தோல் பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

20 கடவுள் அவனோடு இருந்தார். ஆதலால் அவன் வளர்ந்து, பாலைவனத்தில் அலைந்து திரிந்து, வில்வித்தையில் கைதேர்ந்தவனானான்.

21 அவன் பரான் என்னும் பாலைவனத்தில் வாழ்ந்து வருகையில், அவன் தாய் எகிப்து நாட்டினின்று ஒரு பெண்ணைக் கொண்டு வந்து அவனுக்கு மணமுடித்து வைத்தாள்.

22 அக்காலத்தில் அபிமெலெக் தன் படைத் தலைவனாகிய பிக்கோலோடு வந்து ஆபிரகாமை நோக்கி: நீர் செய்கிற யாவற்றிலும் கடவுள் உம்முடனே இருக்கிறார்.

23 ஆகையால், எனக்கும் என் சந்ததியாருக்கும் என் இனத்தாருக்கும் நீர் எவ்விதத் தீமையும் செய்யாமல், உமக்கு நான் கருணை காட்டி வந்துள்ளதுபோல நீரும் என் மீதும், நீர் அந்நியனாய் வாழ்ந்து வந்த இந்த நாட்டின் மீதும் தயவுள்ளவராய் இருப்பதாகக் கடவுள் பெயராலே ஆணையிடுவீர் என்றான்.

24 அதற்கு, ஆபிரகாம்: அவ்விதமே ஆணையிடுகிறேன் என்று கூறினார்.

25 பிறகு அபிமெலெக்கின் ஊழியர்கள் வலுக்கட்டாயமாய்க் கைப்பற்றியிருந்த ஒரு கிணற்றைப் பற்றி அவனிடம் முறையிட்டார்கள்.

26 அபிமெலெக் அதற்கு மறுமொழியாக: அந்த அநியாயத்தைச் செய்தவர் யாரென்று எனக்கும் தெரியாமல் இருந்தது; நீரும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை. இன்று தான் முதல் தடவையாக நான் அதைக் கேள்விப்படுகிறேன் என்றான்.

27 பின் ஆபிரகாம் ஆடுமாடுகளை அபிமெலக்கிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர்கள் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

28 அப்பொழுது, ஆபிரகாம் மந்தையினின்று ஏழு பெண் ஆட்டுக் குட்டிகளைத் தனியாகப் பிரித்து நிறுத்தினார்.

29 அபிமெலெக் அவரை நோக்கி: நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தி வைப்பானேன்? இதன் காரணம் என்ன? என்று கேட்க, அவர்:

30 நீர் இப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளக் கடவீர்; நானே இந்தக் கிணற்றை வெட்டினேன் என்பதற்கு இவை எனக்குச் சாட்சியாய் இருக்கும் என்றார்.

31 அதன் காரணமாக அந்த இடம் பெற்சபே என்று அழைக்கப்பட்டது: ஏனென்றால், அவ்விடத்தில் இருவரும் சத்தியம் பண்ணினார்கள்.

32 அவர்கள் சத்தியம் பண்ணின அக்கிணற்றைக் குறித்தே உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் பின் அபிமெலெக்கும் அவன் படைத் தலைவனாகிய பிக்கோலும் எழுந்து பிலிஸ்தியர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.

33 ஆபிரகாமோ, பெற்சபேயில் ஒரு சோலையை உண்டாக்கி, அங்கு நித்திய கடவுளாகிய ஆண்டவரின் திருப் பெயரை வணங்கிப் போற்றினார்.

34 அவர் பிலிஸ்தியர் நாட்டில் நெடுங்காலம் குடியிருந்தார்.

அதிகாரம் 22

1 இவையெல்லாம் நிகழ்ந்த பின் கடவுள் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக, அவரை: ஆபிரகாம்! ஆபிரகாம்! என்று கூப்பிட்டார். அவர்: அடியேன் தயார் என்று கூற, அவர்:

2 நீ அதிகம் அன்பு செய்யும் உன் ஒரே புதல்வனான ஈசாக்கைத் தரிசனைப் பூமிக்குக் கூட்டிக் கொண்டு போய், அங்கே நாம் உனக்குக் காட்டும் ஒரு மலையின் மீது அவனைத் தகனப்பலியாக ஒப்புக் கொடுப்பாய் என்று மொழிந்தருளினார்.

3 அவ்வாறே ஆபிரகாம் இரவில் எழுந்து தமது கழுதைக்குச் சேணம் போட்டு, தம்மோடு இரண்டு ஊழியரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு போய்த்தகனப் பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டின பின் கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தைக் நோக்கிப் பயணமானார்.

4 மூன்றாம் நாள் அவர் கண்களை உயர்த்தி அவ்விடத்தைத் தூரத்திலிருந்து கண்ட போது, தம் ஊழியர்களை நோக்கி:

5 நீங்கள் கழுதையைப் பார்த்துக் கொண்டு இங்கே காத்திருங்கள். நானும் என் மகனும் அவ்விடம் விரைந்து சென்று (ஆண்டவரை) ஆராதித்த பின் உங்களிடம் திரும்பி வருவோம் என்றார்.

6 பின் தகனப் பலிக்கு வேண்டிய கட்டைகளை எடுத்து, தம் மகன் ஈசாக்கின் (தோளின்) மீது சுமத்தினார்; நெருப்பையும் வாளையும் கையில் எடுத்தக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து செல்கையில்,

7 ஈசாக் தன் தந்தையை நோக்கி, அப்பா! என, அவர்: ஏன் மகனே! என்று கேட்டார். அதற்கு: இதோ நெருப்பும் கட்டைகளும் இருக்கின்றன. தகனப் பலிக்கு வேண்டிய மிருகம் எங்கே என்று வினவினான்.

8 ஆபிரகாம்: தகனப் பலிக்கு வேண்டிய மிருகத்தைக் கடவுளே தயார் செய்து கொடுப்பார் மகனே! என்றார். இருவரும் ஒன்றாக நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

9 கடவுடள் ஆபிரகாமுக்குக் காண்பித்திருந்த இடத்தை அவர்கள் அடைந்ததும், அவர் அங்கே ஒரு பீடம் அமைத்து அதன்மேல் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டிப் பீடத்தில் அடுக்கியிருந்த விறகுக் கட்டைகளின் மேல் அவனைக் கிடத்தி,

10 தம் கையை நீட்டி வாளை உருவி அவனைப் பலியிட முயற்சித்தார்.

11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் வானத்தினின்று: ஆபிரகாம்! ஆபிரகாம்! என்று கூப்பிட, அவர் அடியேன் தயார் என்று பதில் கூறினார்.

12 அவர்: உன் பிள்ளையின் மேல் கையோங்கி அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ தெய்வ பயமுடையவனாய், நம்பொருட்டு உன் ஒரே மகனையும் பலியிடத் தயங்கவில்லை என்று நாம் இப்போது அறிந்து கொண்டோம் என்றார்.

13 அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை ஏறெடுத்துத் திரும்பிப் பார்க்கையில், முட்செடியிலே கொம்பு மாட்டிக் கொண்டு நின்ற ஓர் ஆட்டுக் கிடாயைக் கண்டார்; அதைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக அதைத் தகனப் பலியாய் ஒப்புக் கொடுத்தார்.

14 அவ்விடத்திற்கும், ஆண்டவர் காண்கிறார், என்று பெயரிட்டார். அதனாலே, இந்நாள் வரை, ஆண்டவர் மலையிலே காண்பார், என்று சொல்லப்பட்டு வருகின்றது.

15 ஆண்டவருடைய தூதர் வானத்தினின்று மீண்டும் ஆபிரகாமைக் கூப்பிட்டு:

16 ஆண்டவர் சொல்லுகிறதாவது: நம் பெயரைச் சொல்லி நாம் ஆணையிட்டு வாக்குறுதி செய்வது ஏதெனில், நீ அச்செயலைச் செய்ததனாலும், நம்மைப் பற்றி நீ உன் ஒரே மகனையும் பலியிட மனம் துணிந்ததனாலும்,

17 நாம் உன்னை ஆசீர்வதித்து, விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைக் போலவும் உன் இனம் பெருகச் செய்வோம். உன் இனம் தன் பகைவர்களின் வாயில்களை உரிமையாக்கிக் கொள்ளும்.

18 அன்றியும், நீ நமது சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததினால் பூமியிலுள்ள எல்லா இனத்தாரும் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

19 பின் ஆபிரகாம் தம் ஊழியர் இருந்த இடத்திற்குத் திரும்பிவர, அவர்கள் எல்லாரும் ஒன்றாக பெற்சபேயை அடைந்தனர். அங்கு ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.

20 இவை நிகழ்ந்த பின் யாரோ ஒருவன் ஆபிரகாமிடம் வந்து: மெல்காள் உன் சகோதரனாகிய நாக்கோருக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள்:

21 மூத்த மகன் ஊஸ், இவன் தம்பி பூஸ், சீரியரின் மூதாதையாகிய கமுவேல்,

22 கசேத், அஜெள, பேல்தாஸ், இயத்லாப்,

23 இரெபேக்காளின் தந்தை பத்துவேல் ஆகிய இந்த எட்டுப் புதல்வர்களையும், மெல்காள் உன் சகோதரனாகிய நாக்கோருக்குப் பெற்றாள்.

24 மேலும், அவனுடைய வைப்பாட்டியாகிய உரோமாளும் தாபேயை, ககாம், தகாஸ், மாக்கா என்பவர்களைப் பெற்றுள்ளாள் என்று அறிவித்தான்.

அதிகாரம் 23

1 சாறாள் நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த பின், கானான் நாட்டிலுள்ள எபிறோன் என்னும் பெயருள்ள அற்பே நகரில் இறந்தாள்.

2 அவளுக்காகப் புலம்பி அழும்படி ஆபிரகாம் வந்தார்.

3 இறுதிக்கடன்களை முடித்த பின் அவர் எழுந்து, ஏட் என்பவனுடைய புதல்வர்களோடு பேசி:

4 நான் உங்களிடையே அந்நியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்வதற்கு எனக்குச் சொந்தமாக உங்களிடமுள்ள ஒரு கல்லறை நிலத்தைத் தரவேண்டும் என்று மன்றாடினார்.

5 ஏத்தின் புதல்வர் அதற்கு மறுமொழியாக: ஐயா, நாங்கள் சொல்வதைக் கேளும்.

6 நீர் எங்கள் நடுவில் கடவுளிடமிருந்து வரும் தலைவன் போல் இருக்கிறீர். எங்கள் சிறந்த கல்லறைகளில் ஏதேனும் ஒன்றில் உமது வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்தாலும் செய்யலாம்: என் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டாம் என்று எங்களில் ஒருவனும் உம்மைத் தடுக்க மாட்டான் (என்றனர்).

7 அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்நாட்டினராகிய ஏத்தின் புதல்வர்களுக்கு வணக்கம் செய்து, அவர்களை நோக்கி:

8 என் வீட்டுப் பிணத்தை நான் அடக்கம் செய்வதை நீங்கள் விரும்பினால் நான் சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள். நீங்கள் செயோரின் புதல்வரான எபிரோனிடம் எனக்காகப் பரிந்து பேசி, அவருக்குச் சொந்தமாய் அவர் நிலத்தின் கடைக் கோடியிலிருக்கும் இரட்டைக் குகையை நான் சொந்தக் கல்லறையாக உரிமை கொள்ளுமாறு,

9 அவர் உங்கள் முன்னிலையில் நியாயமான விலையை வாங்கிக் கொண்டு எனக்கு விற்கவேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.

10 ஏத்தின் புதல்வர்கள் நடுவிலே குடியிருந்த எபிரோன் தன் நகர் வாயிலுக்கு வந்திருந்த யாவரும் கேட்க ஆபிரகாமை நோக்கி:

11 அது வேண்டாம், ஐயா! அதை விட, நான் சொல்வதை நீர் கேளும்: என் இனத்தவர் முன்னிலையிலே இதோ! என் நிலத்தையும் அதிலுள்ள குகையையும் உமக்குச் சொந்தமாய்த் தருகிறேன். அதிலே உம் வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்யும் என்றார்.

12 அப்போது ஆபிரகாம் நாட்டு மக்கள் முன் வணக்கம் புரிந்து,

13 அவர்கள் அனைவரும் கேட்க, எபிரோனை நோக்கி: நான் சொல்வதைத் தயவு செய்து கேட்பீராக. நிலத்தை விலைக்குத் தான் கேட்கிறேன். நீர் அதன் விலையை வாங்கிக் கொள்ளும். அப்போது அடக்கம் செய்வேன் என்றார்.

14 அதற்கு எபிரோன்: ஐயா என் வார்த்தையைக் கேளும். நீர் கேட்கிற நிலம் நானூறு சீக்கல் வெள்ளிக் காசுகள் பெறுமானது. நம்மிருவரிடையேயும் அதுவே விலை.

15 ஆனால், அது எம்மாத்திரம்? உம் வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்வீராக என்றான்.

16 இதைக் கேட்டவுடனே, எபிரோன் சொன்னபடியே ஆபிரகாம் நானூறு சீக்கல் வெள்ளிக் காசுகளை ஏத்தின் புதல்வர்கள் முன்னிலையில் நிறுத்துக் கொடுத்தார். அந்தக் காசுகளோ, ஊரில் செல்லுபடியாகும் நாணயமான காசுகளேயாம்.

17 இவ்வாறு மம்பிறேய்க்கு எதிரேயுள்ளதும், அதுவரை எபிரோனுக்குச் சொந்தமானதும் இரட்டைக் குகைகளையுடையதுமான அந்த நிலமும், அதிலுள்ள குகையும், அதன் எல்லையெங்கும் சூழ்ந்திருந்த மரங்களும் கிரயத்திற்கு விற்கப்பட்டன.

18 ஏத்தின் புதல்வர்களும், எபிறோன் நகர் வாயிலில் நின்று கொண்டிருந்த யாவரும் அறிய அது ஆபிரகாமுக்குச் சொந்தமாகி விட்டது.

19 இவ்வாறு மம்பிறேய்க்கு எதிரான அந்த நிலத்திலுள்ள இரட்டைக் குகையில் ஆபிரகாம் தம் மனைவி சாறாளை அடக்கம் செய்தார். கானான் நாட்டிலுள்ள எபிறோன் அதுவேயாம்.

20 அப்பொழுது அந்த நிலமும் அதிலிருந்த குகையும் ஏத்தின் புதல்வர்களால் ஆபிரகாமுக்குச் சொந்தமான கல்லறை நிலமாக உறுதிப்படுத்தப்பட்டன.

அதிகாரம் 24

1 ஆபிரகாம் எல்லாக் காரியங்களிலும் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டு, வயதில் முதிர்ந்தவராய் இருந்தார்.

2 ஒரு நாள் அவர் தம் வீட்டிலுள்ள ஊழியர்களில் வயதில் மூத்தவனும், தனக்குள்ள எல்லாவற்றிற்கும் மேற்பார்வையாளனுமானவனை நோக்கி: உன் கையை என் தொடையின் கீழ் வைத்து,

3 விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராகிய கடவுள் மேல் ஆணையிட்டு, நான் வாழும் இக்கானான் நாட்டுப் பெண்களிடையே நீ என் மகனுக்குப் பெண் கொள்ளாமல்,

4 என் சொந்த நட்டிற்குப் போய், என் உற்றாரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண் கொள்வாய் என்று உண்மையாகச் சொல் என்றார்.

5 அதற்கு ஊழியன்: சிலவேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மனமில்லாதவளானால், தாங்கள் விட்டு வந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா? என்று கேட்க, ஆபிரகாம்:

6 அவ்விடத்திற்கு என் மகனை ஒருகாலும் கூட்டிக் கொண்டு போகாதே.

7 என் தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து என்னோடு பேசி: இந்த நாட்டை உன் இனத்தாருக்குத் தருவோம், என்று ஆணையிடடுத் திருவாக்கருளிய அந்த விண்ணக ஆண்டவராகிய கடவுளே உனக்குமுன் தம் தூதனை அனுப்பி வைப்பார். நீ போய், அவ்விடத்தில் என் மகனுக்கு ஒரு பெண் பார்ப்பாயாக.

8 உன்னைப் பின் தொடர்ந்து வர அப்பெண்ணிற்கு மனமில்லாதிருந்தால் ஆணையைப் பற்றி உனக்கு யாதொரு கடமையுமில்லை. என் மகனை மட்டும் அவ்விடத்திற்குக் கூட்டிக் கொண்டு போகாதே என்று மறுமொழி சொன்னார்.

9 இதையெல்லாம் கேட்ட ஊழியன் தன் தலைவன் ஆபிரகாமின் காலின் கீழே கையை வைத்து அக்காரியத்தைக் குறித்து ஆணையிட்டான்.

10 பின் தன் தலைவனுடைய மந்தையினின்று பத்து ஒட்டகங்களைக் கொண்டு போய், அவனுடைய எல்லாப் பொருட்களிலும் சிலவற்றை எடுத்துக் கொண்டு பயணமாகி, மெசொபொத்தாமியாவிலுள்ள நாக்கோர் நகரை நோக்கிச் சென்றான்.

11 மாலையில் பெண்கள் நீர் மொள்ள வரும் நேரத்தில் அவன் நகருக்கு வெளியே ஒரு கிணற்றுக்குப் பக்கமாய் ஒட்டகங்களை இளைப்பாற விட்டுத் தனக்குள் சொல்லிக் கொண்டதாவது:

12 என் தலைவன் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் இன்று எனக்குத் துணையாயிருந்து, என் தலைவன் ஆபிரகாமுக்குக் கருணை புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.

13 இந்நகர் மக்களின் புதல்வியர் நீர் மொள்ளும் படி வெளியே வருவார்கள்.

14 அப்படியிருக்க, நான் எந்தப் பெண்ணை நோக்கி: நான் குடிக்கும்படி குடத்தைச் சாய்த்துக் கொடு என்று கேட்கையில்: நீரும் குடியும்; பின் உம் ஒட்டகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர் காட்டுவேன், என்று எவள் மறுமொழி சொல்வாளோ அவளே உம் ஊழியனாகிய ஈசாக்கிற்கு உம்மால் நியமிக்கப்பட்டவள் ஆகக்கடவாள். நீர் என் தலைவனுக்குக் கருணை புரிந்தருளினீர் என்று நான் அதனால் அறிந்து கொள்வேன் என்றான்.

15 அவன் இவ்வார்த்தைகளைத் தனக்குள்ளே சொல்லி முடிக்கு முன்பே, ஆபிரகாமின் சகோதரனான நாக்கோருக்கும் அவன் மனைவி மெல்காளுக்கும் பிறந்த மகனான பத்துவேலின் புதல்வி இரெபேக்காள் தன் தோள் மீது ஒரு குடத்தை வைத்துக் கொண்டு வந்தாள்.

16 மிகுந்த அழகியும், ஆண் தொடர்பு அறியாத அதிக எழிலுள்ள கன்னியுமாகிய அவள், கிணற்றில் இறங்கிக் குடத்தை நிரப்பித் திரும்பி வீட்டிற்குப் போகையில்,

17 (ஆபிரகாமின்) ஊழியன் அவளுக்கு எதிராகச் சென்று: நான் குடிக்கும்படி உன் குடத்தினின்று கொஞ்சம் தண்ணீர் தருவாயா என்றான்.

18 அதற்கு அவள்: குடியும், ஐயா! என்று தன் குடத்தை உடனே இறக்கி அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

19 அவன் குடித்து முடித்ததும், அவள் மீண்டும் அவளை நோக்கி: உம் ஒட்டகங்களலெல்லாம், குடித்துத் தீருமட்டும் தண்ணீர் மொண்டு காட்டுவேன் என்று கூறி,

20 குடத்து நீரைத் தொட்டியில் ஊற்றி விட்டு, மீண்டும் மொள்ளக் கிணற்றண்டை விரைந்து போய் மொண்டு கொண்டு வந்து, ஒட்டகங்கள் யாவற்றிற்கும் தண்ணீர் காட்டினாள்.

21 அப்பொழுது ஊழியன் ஆண்டவர் தனது பயணம் வெற்றியடையச் செய்தாரோ இல்லையோவென்று ஆராய்ந்தபடி அவளை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

22 ஒட்டகங்கள் நீர் குடித்த பின் இரண்டு சீக்கல் நிறையுள்ள பொற்காதணிகளையும், பத்து சீக்கல் நிறையுள்ள காப்புக்களையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தான்.

23 பின்னர் அவளை நோக்கி: நீ யாருடைய மகள்? எனக்குச் சொல்ல வேண்டும். உன் தந்தையின் வீட்டில் தங்குவதற்கு இடம் உண்டோ என்று வினவினான்.

24 அவளோ மறுமொழியாக: நான் மெல்காள், நாக்கோர் புதல்வரான பத்துவேலின் மகள் என்று கூறினாள்.

25 மீண்டும்: எங்கள் வீட்டிலே வைக்கோலும் காய்ந்த புல்லும் மிகுதியாக இருப்பதுமன்றி, தங்குவதற்குப் போதுமான இடமும் இருக்கிறது என்றாள்.

26 அம்மனிதன் தலைகுனிந்து ஆண்டவரை வணங்கி:

27 என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவருக்கு மாட்சி உண்டாகக்கடவது. ஏனென்றால், அவர் என் தலைவரிடம் முன் கொண்டிருந்த கருணையும் விசுவாசமும் விலகவொட்டாமல், என் தலைவரின் சகோதரன் வீட்டிற்கு நேர்வழியாய் அடியேனை அழைத்துக் கொண்டு வந்தார் என்று கடவுளைத் துதித்தான்.

28 அப்போது அவ்விளம் பெண் ஓடிப்போய் தன் தாயின் அறைக்குள் சென்று, தான் கேட்டயாவற்றையும் அவளுக்குச் சொன்னான்.

29 மேலும், இரெபேக்காளுக்கு லாபான் என்னும் தமையன் ஒருவன் இருந்தான். அவன் கிணற்றண்டை இருந்த அம்மனிதனைக் காண விரைந்து போனான்.

30 அவன் தங்கையின் கையிலே காதணிகளையும் காப்புக்களையும் கண்டு, அம்மனிதன் என்னிடத்தில் இன்னின்னவைகளைச் சொன்னானென்று அவள் சொல்லியதையும் கேட்டவுடனே, கிணற்றண்டை ஒட்டகங்களின் அருகே நின்று கொண்டிருந்த அம்மனிதனிடம் வந்து, அவனை நோக்கி:

31 ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவனே, உள்ளே வா. ஏன் வெளியே நிற்கிறாய்? நான் வீட்டையும், ஒட்டகங்களுக்கு இடத்தையும் தயார் செய்கிறேன் என்று சொல்லி,

32 அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து, ஒட்டகங்களுக்குப் பாரம் இறக்கி வைக்கோலும் புல்லும் போட்டு, அவனுக்கும் அவனோடு வந்த ஆட்களுக்கும் கை கால் கழுவத் தண்ணீரும் கொடுத்தான்.

33 பின் அவனுக்கு உணவு பரிமாறப்பட்டது. அவனோ: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன் சாப்பிட மாட்டேன் என, லாபான்: சொல், என்று கூறினான்.

34 அவன்: நான் ஆபிரகாமின் ஊழியன்.

35 என் தலைவரை ஆண்டவர் மிகவும் ஆசீர்வதித்து, அவர் செல்வந்தராகும்படி ஆடு மாடுகளையும், பொன் வெள்ளி உடைமைகளையும், ஊழியர்களையும் பணிப் பெண்களையும், ஒட்டகங்களையும் கழுதைகளையும் அவருக்குக் கொடுத்தருளினார்.

36 மேலும், என் தலைவரின் மனைவியாகிய சாறாள் வயது சென்ற என் தலைவருக்கு ஒரு புதல்வனையும் பெற்றிருக்கிறாள். அவரும் அப்புதல்வனுக்குத் தமக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.

37 என் தலைவர் என்னை ஆணையிடச் செய்து: நான் வாழ்ந்து வருகிற இந்தக் கானான் நாட்டாரின் பெண்களுக்குள்ளே என் புதல்வனுக்குப் பெண் கொள்ளாதே.

38 ஆனால், என் தந்தையின் வீட்டுக்குச் சென்று, என் இனத்தாரிடமிருந்து என் புதல்வனுக்குப் பெண் கொள்வாயாக என்றார்.

39 அப்போது நான் என் தலைவரை நோக்கி: ஒரு வேளை பெண் என்னோடு வர இணங்காவிடில் நான் என்ன செய்ய வேண்டும் என்று வினவினேன்.

40 அதற்கு அவர்: நான் எவர் முன்னிலையில் நடந்து கொண்டிருக்கிறேனோ அந்தக் கடவுளே தமது தூதனை உன்னுடன் அனுப்பி, உன்னைச் செவ்வையான வழியிலே செலுத்துவார். நீ போய் என் இனத்தாரிடமிருந்து, என் தந்தை வீட்டினின்று என் புதல்வனுக்கு ஒரு பெண்ணைத் தெரிந்து கொண்டு வருவாய்.

41 என் இனத்தாரிடம் நீ போய்க் கேட்டும் அவர்கள் (பெண்ணைக்) கொடுக்க மாட்டோம் என்பார்களாயின், நீ என் சாபத்தக்கு உட்பட மாட்டாய் என்றார்.

42 ஆகையால், இன்று நான் அந்தக் கிணற்றண்டை வந்த போது: என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, நான் இப்போது செல்கிற வழியில் நீர் என்னைச் செவ்வையாக நடத்துவீராகில், இதோ, நான் இந்தக் கிணற்றண்டை இருக்கிறேன்.

43 தண்ணீர் மொள்ள வரும் பெண்களில் நான் எவளை நோக்கி, குடிக்கும்படி உன் குடத்தைச் சாய்த்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்க, அவள்:

44 நீயும் குடி; உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டுவேன் என்று சொல்வாளோ, அவளே என் தலைவரின் புதல்வனுக்கு ஆண்டவராகிய நீர் நியமித்த பெண் ஆகக்கடவாள் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

45 நான் அவற்றை என் இதயத்தில் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்த வேளையில், இரெபேக்காள் தோளின் மீது குடத்தை எடுத்துக் கொண்டு வரக் கண்டேன். அவள் கிணற்றிலிறங்கித் தண்ணீரை மொண்டு வரவே, நான் அவளை நோக்கி: எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தர வேண்டும் என்றேன்.

46 அவள் உடனே தோளிலிருந்து குடத்தை இறக்கி: நீரும் குடியும்; பிறகு உம் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்ப்பேன் என்று கூற, நானும் குடித்தேன்; அவள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டினாள்.

47 பின் நான் அவளை நோக்கி: நீ யாருடைய மகள் என்று வினவ, நான் மெல்காள் வயிற்றில் நாக்கோருக்குப் பிறந்த பத்துவேலின் மகள் என்றாள் அவள். அப்போது நான் அவள் முகத்துக்கு ஆபரணமாகக் காதணிகளைப் பூட்டி, அவள் கையிலே காப்புகளையும் கொடுத்தேன்.

48 மேலும் தலை வணங்கி ஆண்டவரைத் தொழுதேன். நான் என் தலைவரின் சகோதரனுடைய புதல்வியை ஆபிரகாமின் புதல்வனுக்குக் கொள்ளும்படி அவர் நேர் வழியாய் என்னை நடத்தி வந்ததனால், என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுது வாழ்த்திப் போற்றினேன்.

49 அப்படியிருக்க, நீங்கள் என் தலைவருக்குத் தயவு காட்டி அவர்மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கிறீர்களோ? அதை எனக்குத் தெரிவியுங்கள். உங்களுக்கு வேறு எண்ணமிருந்தால், அதையும் சொல்லுங்கள். அப்பொழுதல்லவோ நான் திரும்பிச் செல்ல இயலும் என்றான்.

50 அதற்கு லாபானும் பத்துவேலும் அவனைப் பார்த்து: இந்த வாக்கு ஆண்டவராலே வந்தது. அவரது திருவுளத்துக்கு விரோதமாய் நாங்கள் உனக்கு வேறொன்றும் சொல்ல மாட்டோம்.

51 இதோ, இரெபேக்காள் உன் முன் இருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டு போ. ஆண்டவர் சொன்னபடியே அவள் உன் தலைவருடைய புதல்வனுக்கு மனைவி ஆகக்கடவாள் என்று மறுமொழி சொன்னார்கள்.

52 ஆபிரகாமின் ஊழியன் இதைக் கேட்டதும் தெண்டனிட்டு விழுந்து ஆண்டவரைத் தொழுதான்.

53 பிறகு அவன் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் ஆடைகளையும் எடுத்து இரெபேக்காளுக்குக் கொடுத்தான்; அவள் சகோதரர்களுக்கும் தாய்க்கும் விலையயுர்ந்த அன்பளிப்புகளையும் கொடுத்தான்.

54 பின் அவர்கள் (அனைவரும்) ஒன்றாக உணவருந்தி விருந்து கொண்டாடி அங்கே இரவைக் கழித்தார்கள். அவன் அதிகாலையில் துயில் விட்டெழுந்து, என் தலைவரிடம் போக எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று வேண்ட,

55 இரெபேக்காளுடைய சகோதரர்களும் தாயும் அவளை நோக்கி, பெண் பத்து நாட்களேனும் இருக்கட்டுமே; அதன் பின் புறப்பட்டுப் போகலாம் என்று மறுமொழி கூறினார்.

56 அவன்: ஆண்டவர் என் பிரயாணம் வெற்றியடையச் செய்தாரே; ஆதலால். நீங்கள் என்னைத் தாமதப்படுத்தாதீர்கள். என் தலைவரிடத்திற்கு நான் போகும்படி விடை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

57 அதற்கு அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் விருப்பம் இன்னதென்று அறிந்து கொள்வோம் என்றனர்.

58 அப்படியே அவளைக் கூப்பிட்டனர். அவள் வந்தபோது: இம் மனிதனோடு கூடப் போகிறாயா என்று கேட்டனர். அவள்: நல்லது, போகிறேன் என்றாள்.

59 எனவே, அவர்கள் அவளையும், அவள் பணிப் பெண்ணையும், ஆபிரகாமின் ஊழியனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் அனுப்புகையில், தங்கள் சகோதரிக்கு நன்மைகள் பெருக வேண்டி:

60 எங்கள் சகோதரியாகிய நீ ஆயிரமாயிரம் மக்களுக்குத் தாயாகும் பேறு பெறுவாய். உன் சந்ததியாரும் தங்கள் பகைவரின் (நகர) வாயில்களை உடைமையாக்கிக் கொள்வார்களாக என்றனர்.

61 அப்போது இரெபேக்காளும் அவள் பணிவிடைக்காரிகளும் ஒட்டகங்கள் மீது ஏறி, அம் மனிதனைத் தொடர்ந்து செல்ல, அவன் தன் தலைவரின் ஊரை நோக்கி விரைந்து நடக்கத் தொடங்கினான்.

62 தென்னாட்டில் வாழ்ந்து வந்த ஈசாக் அந்நேரத்தில், வாழ்கிறவரும் காண்கிறவரும் என்று சொல்லப்படும் கிணற்றுக்குப் போகும் வழியில் உலாத்திக் கொண்டிருந்தான்.

63 பொழுது சாய்ந்த போது, அவன் தியானம் பண்ண வெளியே போயிருக்கையில், தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க, தூரத்தில் ஒட்டகங்கள் வருவதைக் கண்டான்.

64 இரெபேக்காளும் ஈசாக்கைக் கண்டவுடனே ஒட்டகத்தை விட்டிறங்கி, ஊழியனை நோக்கி:

65 அதோ வெளியிலே நம்மை எதிர்கொண்டு வரும் அந்த மனிதர் யார் என்று வினவினாள். அதற்கு அவன்: அவரே என் தலைவர் என்றான். அவள் உடனே முக்காடிட்டுத் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.

66 ஊழியன் போய், தான் செய்தவற்றையெல்லாம் ஈசாக்கிற்கு விவரித்துச் சொன்னான்.

67 ஈசாக் இரெபேக்காளைத் தன் தாயாகிய சாறாளின் கூடாரத்துக்கு அழைத்துக் கொண்டுபோய், அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்டான். அவள் மீது அவன் கொண்டிருந்த அன்பு, எவ்வளவென்றால், தாயின் மரணத்தினாலே அவனுக்கு ஏற்பட்டிருந்த துயரமும் அதனால் பெரும்பாலும் தணிந்து போயிற்று.

அதிகாரம் 25

1 ஆபிரகாம் செத்துராள் என்னும் வேறொரு மனைவியை மணந்து கொண்டார்.

2 இவள் அவனுக்கு ஜாமிரான், ஜெக்சான், மதான், மதீயான், ஜெஸ்போக், சூயே என்பவர்களைப் பெற்றாள்.

3 ஜெக்சான் சாபாவையும் தாதானையும் பெற்றாள். அசுரீம், லாத்துசீம், லோமீம் என்பவர்கள் தாதானுக்குப் பிறந்த புதல்வர்கள்.

4 மதீயானுக்கும் எப்பா, ஒப்பேர், ஏனோக், அபிதா, எல்தா என்பவர்கள் பிறந்தார்கள். இவர்கள் அனைவரும் செத்துராளின் புதல்வர்.

5 ஆபிரகாம் தம் மகன் ஈசாக்குக்குத் தம் செல்வங்கள் எல்லாவற்றையும் கொடுத்தார்.

6 ஆனால், அவருக்கிருந்த வேறு மனைவியரின் பிள்ளைகளுக்கு (வேண்டிய) சொத்துக்களைக் கொடுத்து, இவர்களைத் தம் புதல்வனான ஈசாக்கிடத்தினின்று பிரித்து, தாம் உயிரோடிருக்கும் போதே கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பி விட்டார்.

7 ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த பின்,

8 முதியவனாகி நிறைந்த வாழ்நாட்களைக் கடந்து உடல் வலிமை இழந்து, நல்ல கிழப் பருவத்தில் இறந்து, தம் முன்னோரோடு சேர்க்கப்பட்டார்.

9 அவர் புதல்வர்களாகிய ஈசாக், இஸ்மாயேல் என்பவர்கள் மம்பிறே என்ற நகரத்துக்கெதிரே ஏத்தையனாகிய சேயாரின் மகன் எபிரோனுடைய நிலத்தில் இருந்த இரட்டைக் குகையிலேயே அவரை அடக்கம் செய்தார்கள்.

10 அவர் அந்த நிலத்தைத்தான் எத்தின் புதல்வரிடமிருந்து வாங்கியிருந்தார். அதிலே அவரும் அவர் மனைவி சாறாளும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

11 அவர் இறந்த பின், வாழ்கிறவரும் காண்கிறவரும் என்று சொல்லப்படும் கிணற்றுக்குப் பக்கமாய்க் குடியிருந்த அவர் புதல்வனான ஈசாக்கைக் கடவுள் ஆசீர்வதித்து வந்தார்.

12 சாறாளின் ஊழியக்காரியும் எகிப்து நாட்டினளுமான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மாயேலின் தலைமுறை அட்டவணையும்,

13 அவன் புதல்வர்களுடைய பெயரும், சந்ததியுமாவன: இஸ்மாயேலின் மூத்த புதல்வன் நபயோத்; அவனது ஏனைய புதல்வர்கள் கேதார், அப்தேல், மாப்சாம்,

14 மஸ்மா, துமா, மாசா, ஆதார், தேமா,

15 ஜெத்தூர், நாப்பீஸ், கெத்மா ஆகியோர்.

16 அவர்கள் பன்னிருவரும் தத்தம் கோத்திரத் தலைவர்களாய் விளங்கினர். தத்தம் கோட்டைகளுக்கும் நகரங்களுக்கும் தத்தம் பெயரையே இட்டனர்.

17 இஸ்மாயேல் உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் நூற்று முப்பத்தேழு ஆண்டுகள். அவன் அப்பொழுது உடல் வலுவிழந்து இறந்து தன் முன்னோருடன் சேர்க்கப்பட்டான்.

18 அவன் ஏவிலா முதல் ஆசிரியாவுக்குப் போகிற வழியில் எகிப்து நாட்டிற்கு எதிராகக் காணப்படும் சூர் வரையிலும் வாழ்ந்து வந்தவன். அவன் இறந்த போது அவன் சகோதரர் எல்லாரும் அவனைச் சூழ்ந்திருந்தனர்.

19 ஆபிரகாமின் புதல்வனான ஈசாக்கின் வம்சங்கள் ஆவன: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.

20 ஈசாக் நாற்பது வயதான போது, மெசொபொத்தாமியாவில் வாழ்ந்து வந்த சீரிய நாட்டானாகிய பத்துவேலின் புதல்வியும் லாபானின் தங்கையுமான இரெபேக்காளை மணம் புரிந்தான்.

21 ஈசாக், மலடியாய் இருந்த தன் மனைவிக்காக ஆண்டவரை வேண்டிக்கொண்டதினால் அவர் அம்மன்றாட்டைக் கேட்டு, இரெபேககாளுக்கு மகப்பேறு அளித்தருளினார்.

22 ஆனால், அவளுடைய கருப்பத்தில் உருவாகியிருந்த இரண்டு குழந்தைகள் தாயின் வயிற்றில் தானே ஒன்றோடொன்று போர்புரியக் கண்டு, அவள்: அது நடக்குமென்றிருந்தால், நான் கருத்தாங்கியதனால் பயன் என்ன என்று கூறி, ஆண்டவருடைய திருவுள்ளம் இன்னதென்று அறியும்படி போனாள்.

23 அவர் அவளை நோக்கி: உன் வயிற்றிலே இரண்டு குடிகள் உண்டு. அவ்விரண்டும் உன் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட நாள் முதல் வெவ்வேறாய்ப் பிரிந்து போகும். ஒரு குடியை மற்றொரு குடி மேற்கொள்ளும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்தேயிருப்பான் என்றருளினார்.

24 பேறுகாலமான போது, இரட்டைப் பிள்ளைகள் வயிற்றில் இருந்தன என்பது மெய்யாயிற்று.

25 முதன் முதல் வெளிப்பட்ட பிள்ளை பிங்கல நிறமும் மயிர் செறிந்த தோலும் உடையவன். ஆதலால் அவனுக்கு எசாயூ என்று பெயர் சூட்டப்பட்டது.

26 இரண்டாவது பிள்ளை தன் சகோதரனின் காலைக் கையாலே பிடித்துக் கொண்டு உடனுக்குடன் வெளிப்பட்டதனால், அவனுக்கு யாக்கோபு என்னும் பெயரை இட்டனர். அவ்விரு பிள்ளைகளும் பிறந்த போது ஈசாக் அறுபது வயதுள்ளவனாய் இருந்தான்.

27 இருவரும் வளர்ந்து இளைஞரான போது, அவர்களில் எசாயூ வேட்டையாடுவதிலும் பயிர்த் தொழிலிலும் வல்லவனானான். யாக்கோபோ, கபடமற்ற மனிதனாய்க் கூடாரங்களில் வாழ்ந்து வந்தான்.

28 ஈசாக் எசாயூக்கு மிகவும் அன்பு செய்தான்; ஏனென்றால், அவனுடைய வேட்டை மிருகங்களை விரும்பிச் சாப்பிட்டு வந்தான். இரெபேக்காளோ, யாக்கோபின் மீது அன்பு பாராட்டி வந்தாள்.

29 ஒருநாள் யாக்கோபு ஒருவிதத் தின்பண்டம் செய்துகொண்டிருக்கும் பொழுது எசாயூ காட்டிலிருந்து மிகவும் களைப்புற்றவனாய் அவனிடம் வந்து:

30 இந்தச் செந்நிறத் தின்பண்டத்திலே எனக்குக் கொஞ்சம் கொடு. நான் மிகவும் சோர்வுற்று இருக்கிறேன் என்றான். (அவனுக்கு எதோம் என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.)

31 யாக்கோபு அவனை நோக்கி: தலைச்சனுக்குரிய உனது உரிமையை எனக்கு விற்று விடுவாயா என, அவன்:

32 இதோ, சாகிறேனே! தலைச்சனுக்குரிய உரிமைகளால் எனக்கு என்ன பயன் வரப்போகிறது என்று மறுமொழி சொல்லக் கேட்டு, யாக்கோபு:

33 அப்படியானால் முதலில் எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு என்றான். எசாயூ ஆணையிட்டு, தலைச்சனுக்குரிய தன் உரிமையை விற்று விட்டான்.

34 இதன் பின் அவன் அப்பத்தையும் மேற்படித் தின்பண்டத்தையும் எடுத்து உண்டு குடித்தான். தலைச்சனுக்குரிய உரிமையை விற்று விட்டதை ஒரு பொருட்டாய் எண்ணாமல் அப்பாலே சென்றான்.

அதிகாரம் 26

1 ஆபிரகாமின் காலத்தில் நெடுநாள் மழை பெய்யாததனால் அப்பொழுது நாட்டிலே பஞ்சம் உண்டானது கண்டு, ஈசாக் பிலிஸ்தியர் அரசனான அபிமெலெக்கைக் காண ஜெரரா நாடு சென்றான்.

2 அப்போது ஆண்டவர் அவனுக்கு முன் தோன்றி: நீ எகிப்து நாட்டிற்குப் போகாமல், நாம் உனக்குத் காண்பிக்கும் நாட்டிலே குடியிரு.

3 அதில் நீ அந்நியனாய்க் குடியிருப்பாய். நாம் உனக்குத் துணையாய் இருப்போம்; உன்னை ஆசீர்வதிப்போம்; ஏனென்றால், உன் தந்தையாகிய ஆபிரகாமுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, அந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் சந்ததிக்கும் தருவோம்.

4 உன் சந்ததியை விண்மீன்களைப் போல் பெருகச் செய்வோம். உன் வம்சத்தாருக்கு அந்நாடுகளை எல்லாம் தந்தருள்வோம். பூமியிலுள்ள எல்லா இனத்தாரும் உன் சந்ததியில் ஆசீர்வதிக்கப்படுவர்.

5 எனென்றால், ஆபிரகாம் நம்முடைய சொல்லுக்கு அமைந்து, நம் விதிகளையும் கட்டளைகளையும் அனுசரித்து நம் திருச்சடங்குகளையும் கட்டளைகளையும் நிறைவேற்றி வந்தான் என்று திருவுளம் பற்றினார்.

6 அவ்வாறே ஈசாக் ஜெரரா நாட்டில் குடியிருந்தான்.

7 அவ்விடத்து மக்கள் அவன் மனைவியைப் பற்றி அவனை விசாரித்தபோது: அவள் என் சகோதரி என்றான். ஏனென்றால், அவள் அழகுள்ளவள்; ஆதலால், அம்மக்கள் அவள் பொருட்டுத் தன்னைக் கொல்வார்களென்று நினைத்து, அவன் தன் மனைவியென்று சொல்ல அவன் துணியவில்லை.

8 நாட்கள் பல சென்றன. அவனும் அவ்விடத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்தான். (ஒருநாள்) பிலிஸ்தியரின் அரசனான அபிமெலெக் சன்னல் வழியாய்ப் பார்த்த போது, ஈசாக் தன் மனைவி இரெபேக்காளோடு சரசமாய் விளையாடுவதைக் கண்டான்.

9 அப்போது அவன் அவனை வரவழைத்து: அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே; பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் பொய் சொன்னாய் என்று கேட்டான். அதற்கு அவன்: அவள் பொருட்டு எனக்குச் சாவு வரும் என்ற பயத்தினால் தான் என்று பதில் கூற, அபிமெலெக்:

10 நீ ஏன் எங்களை இப்படி ஏமாற்ற வேண்டும்? குடிகளில் யாரேனும் உன் மனைவியோடு சேர்ந்தானென்று வைத்துக்கொள்வோம்: அப்போது நீ எங்கள் மீது பெரும்பழியல்லவா சுமக்கப் பண்ணியிருப்பாய் என்றான்.

11 இவ்வாறு பேசிய பின்: இந்த மனிதனுடைய மனைவியைத் தொடுபவன் உறுதியாகச் சாவான் என்று அபிமெலெக் தன் குடிகள் அனைவரையும் எச்சரித்தான்.

12 ஈசாக் அந்த நாட்டிலே விதை விதைத்தான். ஆண்டவர் அவனை ஆசீர்வதித்தபடியால், அவ்வாண்டு நூறு மடங்கு பலனை அடைந்தான்.

13 அதலால் அவன் பெருஞ் செல்வம் திரட்டியதுமன்றி வரவர அவை பெருகிப் பலுகினபடியால், இறுதியில் அவன் மிகுந்த செல்வாக்குள்ளவனானான்.

14 அது தவிர, அவனுக்கு ஆட்டு மந்தையும், மாடு முதலிய மந்தைகளும், வீட்டிலே பல பணிவிடைக்காரரும் இருந்தபடியால், பிலிஸ்தியர் அவன் மீது பொறாமை கொண்டு,

15 அவன் தந்தையாகிய ஆபிரகாமின் வேலைக்காரர் வெட்டியிருந்த கிணறுகள் எல்லாவற்றையும் அவர்கள் ஒருநாள் மண்ணைப் போட்டுத் தூர்த்து விட்டுப் போனார்கள்.

16 (பொறாமை எவ்வளவு வளர்ந்து வந்ததெனில்,) அபிமெலெக் கூட ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட வலிமை உடையவனாய் இருக்கின்றமையால், எங்களை விட்டுப் போவது மேல் என்றான்.

17 எனவே, அவன் புறப்பட்டுப் போய் ஜெரரா பள்ளத்தாக்கிலே குடியேறினான்.

18 அங்கே அவன் தந்தையாகிய ஆபிரகாமின் வேலைக்காரர் முன்னாளில் வெட்டியிருந்த வேறு கிணறுகள் (காணப்பட்டன). ஆபிரகாம் இறந்த பின் பிலிஸ்தியர் அவற்றைத் தூர்த்தப் போட்டிருந்தனர். அவற்றை ஈசாக் மீண்டும் வெட்டி, தன் தந்தை அவற்றிற்கு ஏந்கனவே இட்டிருந்த பெயர்களின்படியே தானும் அவற்றிற்குப் பெயரிட்டான்.

19 பின் அவன் வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீருற்றைக் கண்டார்கள்.

20 ஆனால், ஜெரராவின் மேய்ப்பர், இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்கின் மேய்ப்பர்களோடு சச்சரவு பண்ணினார்கள்.

21 ஈசாக், (அவ்வாறு) நிகழ்ந்ததைப் பற்றி, அந்த நீரூற்றுக்கு, 'அவதூறு' என்று பெயரிட்டான்.

22 அவன் அவ்விடத்தை விட்டு, அப்பால் சென்று வேறொரு கிணற்றை வெட்டினான். இம்முறை கலகம் ஒன்றும் நேரிடவில்லை. அதன் பொருட்டு: ஆண்டவர் இப்பொழுது நம்மை விரிவடையச் செய்தார் என்று சொல்லி, அதற்கு 'விசாலம்' என்று பெயரிட்டான்.

23 பின் அவன் அவ்விடத்திலிருந்து பெற்சபேய்க்குப் போனான்.

24 அன்றிரவு ஆண்டவர் அவனுக்குமுன் தோன்றி: உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நாமே. அஞ்சாதே. ஏனென்றால், நாம் உன்னோடு இருக்கிறோம். நாமே உன்னை ஆசீர்வதித்து, நமது ஊழியனாகிய ஆபிரகாமின் பொருட்டு உனது சந்ததியைப் பெருகச் செய்வோம் என்றார்.

25 இதைப் பற்றி ஈசாக் அங்கு ஒரு பீடம் எழுப்பி, ஆண்டவருடைய திருப்பெயரைத் தொழுது தன் கூடாரத்தை அடித்தான். பின் ஒரு கிணற்றை வெட்டுமாறு தன் வேலைக்காரருக்குக் கட்டளை இட்டான்.

26 அபிமெலெக்கும், அவன் நண்பனான ஒக்கொஜாத்தும், படைத் தலைவனான பிக்கோலும் ஜெரராவிலிருந்து தன்னிடம் வந்திருந்த போது, ஈசாக் அவர்களை நோக்கி:

27 நீங்கள் என்னிடம் வருவானேன்? எவனை நீங்கள் என்னிடம் விரோதித்து உங்கள் கூட்டத்தினின்று தள்ளிவிட்டீர்களோ, அவன் நானன்றோ என, அவர்கள் மறுமொழியாக:

28 ஆண்டவர் உம்மோடு இருக்கிறாரென்று கண்டோம். ஆதலால், எங்களுக்கும் உமக்குமிடையே ஆணையிட்டு உடன்படிக்கை செய்ய வேண்டுமென்று தீர்மானித்தோம்.

29 அதாவது, நாங்கள் உமக்கு உரியவகைகளில் யாதொன்றையும் தொடாமல், உம்மைத் துன்புறுத்தக் கூடிய எதையும் செய்யாமல், அண்டவருடைய நிறைவான ஆசீரை அடைத்துள்ள உம்மைச் சமாதானத்தோடு அனுப்பி விட்டது போல், நீரும் எங்களுக்கு யாதொரு தீமையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதைக் குறித்தேயாம் என்றனர்.

30 அவன் அவர்களுக்கு ஒரு விருந்து செய்து, (யாவரும்) உண்டு குடித்து முடிந்த பின்,

31 அதிகாலையில் இவர்கள் எழுந்து, ஒருவருக்கொருவர் சத்தியம் பண்ணிக் கொடுத்தார்கள். பின் ஈசாக் அவர்களைத் தங்கள் இடத்திற்குச் சமாதானத்துடன் அனுப்பி விட்டான்.

32 அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர், தாங்கள் வெட்டியிருந்த கிணற்றைக் குறித்துச் செய்தி கொண்டு வந்து: (ஐயா,) தண்ணீரைக் கண்டோம் என்றனர்.

33 ஆதலால் அவன் அதற்கு 'மிகுதி' என்று பெயரிட்டான். எனவே அந்நகருக்கு பெற்சபே என்னும் பெயர் அந்நாள் முதல் இந்நாள் வரை வழங்கி வருகிறது.

34 எசாயூ நாற்பது வயதான போது, ஏத் என்னும் ஊரிலிருந்த பேறியின் புதல்வி யூதீத்தையும், அவ்வூரில் (குடியிருந்த) ஏலோனின் புதல்வி பசெமோத்தையும் மணந்து கொண்டான்.

35 அவர்கள் இருவரும் ஏற்கெனவே ஈசாக்கையும் இரெபேக்காளையும் மனம் நோகச் செய்திருந்தனர்.

அதிகாரம் 27

1 ஈசாக் முதியவனானதனால் அவன் கண்கள் கெட்டுப் பார்வை அற்றுப் போயின. ஒரு நாள் அவன் தன் மூத்த மகன் எசாயூவைக் கூப்பிட்டு, என் மகனே, என்று அழைக்க எசாயூ: இதோ வருகிறேன், என்று பதில் கூறினான்.

2 தந்தை அவனை நோக்கி: நானோ கிழவன். என் மரணம் எப்பொழுது வருமென்று அறிந்திலேன்.

3 ஆகையால், உன் ஆயுதங்களாகிய அம்புக் கூட்டையும் வில்லையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்று, வேட்டையில் அகப்பட்டதைக் (கொண்டுவந்து) எனக்கு விருப்பமான சமையலை நீ அறிந்துள்ளபடி சமைத்து,

4 நான் உண்ணும்படியும், சாகுமுன் முழு அன்புடன் உன்னை ஆசிர்வதிக்கவும், (அதை) என்னிடம் கொண்டு வா என்றான்.

5 இரேபேக்காள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். எசாயூ தந்தையின் கட்டளையை நிறைவேற்றும்படி காட்டிற்குப் புறப்பட்டுப் போனவுடனே, அவன் தன் மகன் யாக்கோபை நோக்கி:

6 உன் தந்தை, உன் தமையன் எசாயூவுக்குச் சொன்னதை நான் கேட்டேன். அது என்னவெனில்:

7 நீ போய் வேட்டையாடி, வேட்டையில் கிடைத்ததைச் சமைத்துக் கொண்டு வந்தால், நான் அதை உண்டு, எனக்குச் சாவு வருமுன் ஆண்டவர் திரு முன் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றார்.

8 ஆதலால், மகனே, என் சொல்லைக் கேள்.

9 நீ ஆட்டு மந்தைக்கு ஓடிப் போய் இரண்டு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டுவா. நான் அவற்றை உன் தந்தை விரும்பக் கூடிய சுவையுள்ள கறிவகைகளாகச் சமைப்பேன்.

10 நீ அவற்றை அவருக்குக் கொடுப்பாய். உண்டு முடித்த பின், சாகுமுன் அவர் உன்னை ஆசிர்வதிக்கக் கடவார் என்று சொன்னாள்.

11 அவளுக்கு மறுமொழியாக அவன்: என் தமையனாகிய எசாயூ உரோமமுள்ள உடலுடையவன் என்று அறிவீர்.

12 ஒரு வேளை என் தந்தை என்னைத் தடவிப் பார்த்து அதைக் கண்டு பிடித்துக் கொள்வாராயின், அவரை நான் ஏமாற்றத் துணிந்தேனென்று நினைப்பாரே; அப்படியானால், என்மேல் ஆசீரையல்ல சாபத்தையே நான் வருவித்துக் கொள்வேனென்று அஞ்சுகிறேன் என்றான்.

13 தாய் அவனை நோக்கி: அந்தச் சாபம் என்மேல் வரட்டும், மகனே, என் பேச்சை மட்டும் தட்டாமல் நீ போய், நான் சொல்லியவற்றைக் கொண்டுவா என்றாள்.

14 அவன் போய், அவற்றைக் கொணர்ந்து தாயிடம் கொடுக்க, அவள் அவன் தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள கறிவகைகளைத் தயார் செய்தாள்.

15 பின் வீட்டிலே தன்னிடம் இருந்த எசாயூவின் உடைகளில் மிக நல்லவற்றை எடுத்து அவனுக்கு அணிவித்து,

16 அவன் கைகளிலும் உரோமமற்ற கழுத்திலும் வெள்ளாட்டுத் தோலைக் கட்டி,

17 கறி வகைகளையும், தான் சுட்ட அப்பங்களையும் அவனிடம் கொடுத்தாள்.

18 அவன் அவற்றைக் கொண்டு போய்: அப்பா! என்று அழைத்தான். அதற்கு ஈசாக்: காது கேட்கிறது, மகனே, நீ யார் என்று கேட்க,

19 யாக்கோபு: நான் உமது மூத்த மகனாகிய எசாயூ தான். நீர் எனக்குக் கட்டளையிட்டபடி செய்துள்ளேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் (பொருளை) உண்ணும் என்றான்.

20 ஈசாக் மறுபடியும் தன் மகனை நோக்கி: மகனே, இது உனக்கு இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி அகப்பட்டது என, அவன்: ஆண்டவர் அருளால் நான் விரும்பியது உடனே எனக்குக் கிடைத்தது என்று மறுமொழி சொன்னான்.

21 ஈசாக்: மகனே, கிட்ட வா, நீ என் மகன் எசாயூ தானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப் பார்த்தே உறுதி கொள்வேன் என்றான்.

22 யாக்கோபு தந்தை அருகில் வந்தான். ஈசாக் அவனைத் தடவிப் பார்த்து: குரல் யாக்கோபின் குரல்; கைகளோ எசாயூவின் கைகள் என்று சொல்லி,

23 (ஆட்டு) மயிர்களால் மூடியிருந்த அவனுடைய கைகள் மூத்தவனுடைய கைகளைப் போன்று தோன்றினதால், அவன் இன்னானென்று அறியாமல் அவனை ஆசீர்வதித்து:

24 நீ என் மகன் எசாயூ தானா என்று வினவ. அவன்: நான் தான் எனப் பதில் கூறினான்.

25 அப்பொழுது ஈசாக்: நீ பிடித்த வேட்டையைச் சமைத்திருக்கிறாயே, அதைக் கொண்டு வா, மகனே! அதன் பின்னே நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றான். அப்படியே முன் வைக்கப்பட்ட கறியை உண்டான். உண்டு முடித்த பின், (யாக்கோபு) தன் தந்தைக்குத் திராட்சை இரசமும் கொணர்ந்து கொடுத்தான். அதைக் குடித்து முடித்ததும், (ஈசாக்) மகனை நோக்கி:

26 மகனே, என் கிட்ட வந்து என்னை முத்தம் செய் என்றான்.

27 அவன் கிட்டப் போய் அவனை முத்தமிட, ஈசாக் அவனது ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து: இதோ, என் மகன் விடுகின்ற மணம் ஆண்டவர் ஆசீர்வதித்த விளை நிலத்தின் வாசனை போல் இருக்கின்றதே!

28 கடவுள் கருணை புரிந்து உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் செழுமையையும், மிகுந்த தானியத்தையும், திராட்சை இரசத்தையும் தந்தருள்வாராக.

29 நாடுகள் உனக்குப் பணிபுரியவும், மக்கள் உன்னை வணங்கவும் கடவர். நீ உன் சகோதரர்களுக்குத் தலைவனாய் இரு. உன் தாயாருடைய மக்களும் உனக்குமுன் பணியக் கடவார்கள். உன்னைச் சபிப்பவன் சபிக்கப்பட்டவனாகவும், உன்னை ஆசீர்வதிப்பவன் ஆசிகளால் நிறைந்தவனாகவும் இருக்கக்கடவான் என்று ஆசீர்வதித்தான்.

30 ஈசாக் இவ்வார்த்தைகளைச் சொல்லி முடிக்குமுன்பே யாக்கோபு வெளியே போனான்.

31 போனவுடனே எசாயூ வந்து, தான் சமைத்திருந்த வேட்டைப் பொருட்களைத் தந்தைக்கு முன் வைத்து: அப்பா, எழுந்திரும். உமது மகனுடைய வேட்டைப் பொருட்களை உண்ணும். பிறகு என்னை ஆசிர்வதியும் என்றான்.

32 ஈசாக் அவனை நோக்கி: என்ன! நீ யார்? என, அவன்: நான் உம்முடைய மூத்த மகனாகிய எசாயூ என்றான்.

33 ஈசாக் மிகவும் வியப்புற்று, அதிக ஆச்சரியம் அடைந்தவனாய் அப்படியானால் வேட்டையாடிச் சமைத்தவற்றை என்னிடம் கொண்டு வந்தவன் யார்? நீ வருமுன் அவை எல்லாவற்றையும் நான் உண்டு, அவனை ஆசிர்வதித்தேன். அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே இருப்பான் என்றான்.

34 எசாயூ தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு, கோப வெறி கொண்டு அலறினான்; பின் ஏங்கித் தயங்கி: அப்பா, என்னையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றாள்.

35 அதற்கு அவன்: உன் தம்பி கபடமாய் வந்து உனக்கு உரித்தான ஆசீரைப் பெற்றுச் சென்று விட்டானே என்று சொன்னான்.

36 அதைக் கேட்ட எசாயூ யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனென்றால், அவன் இரு முறை என்னை வஞ்சித்துள்ளான். மூத்த மகனுக்குரிய என் உரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்கு உரிய ஆசீரையும் கவர்ந்து விட்டான் என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி: நீர் எனக்காக வேறு ஓர் ஆசிர் வைத்துக் கொள்ளவில்லையோ என்று கேட்டான்.

37 அதற்கு, ஈசாக்: நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் சகோதரர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனைத் தானியத்தினாலும் திராட்சை இரசத்தினாலும் நிரப்பியுள்ளேன். அவை தவிர என் மகனே, நான் உனக்குச் செய்யத் தக்கது என்ன என, எசாயூ அவனை நோக்கி:

38 அப்பா, உம்மிடம் ஒரே ஆசீர்தானோ இருக்கிறது? என்னையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் என்றான்; இதனைச் சொல்லி அலறிப் பதறி அழுதான்.

39 ஈசாக் மனமுருகி: உன் ஆசீர் பூமியின் செழுமையிலும் வானத்திலிருந்து பெய்யும் பனியிலும் இருக்கும்.

40 நீ உன் வாளினாலே வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்குப் பணிபுரிவாய். ஆனால் ஒரு காலம் வரும். (அப்பொழுது) நீ அவனுடைய அதிகாரத்தின் நுகத்தடியை உன் கழுத்தினின்று உதறித் தள்ளி விடுவாய் என்றான்.

41 யாக்கோபு தந்தையின் ஆசிரைப் பெற்றிருந்ததினால் (அதுமுதல்) எசாயூ அவன் மீது தீராப் பகை வைத்திருந்தான். என் தந்தைக்காகத் துக்கிக்கும் நாள் வரும்; அப்போது நான் என் தம்பி யாக்கோபைக் கொன்று விடுவேன் என்று தன் உள்ளத்தில் உறுதி பூண்டான்.

42 இவை இரெபேக்காளுக்கு அறிவிக்கப்பட்டவுடனே, அவள் தன் மகன் யாக்கோபை அழைத்து: இதோ, உன் தமையன் எசாயூ உன்னைக் கொல்வதாக மிரட்டிப் பேசினான்.

43 ஆகையால், மகனே, நீ என் வார்த்தையைக் கேட்டு எழுந்திருந்து, ஆரான் ஊருக்கு என் தமையனாகிய லாபானிடம் ஓடிப்போய்,

44 உன் அண்ணணுடைய கோபம் தணியும் வரை சில நாள் அவனிடம் இருக்கக்கடவாய்.

45 தனக்கு விரோதமாய் நீ செய்ததை அவன் மறந்து கோபம் தீர்ந்த பின் நான் உனக்குச் சொல்லியனுப்பி, உன்னை அங்கிருந்து இவ்விடத்திற்கு அழைத்துக் கொள்வேன். நான் ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் ஏன் இழந்து போக வேண்டும் என்றாள்.

46 பின் இரெபேக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் புதல்வியர் பொருட்டு என் வாழ்வே எனக்குச் சலிப்பாயிருக்கிறது. யாக்கோபும் இந்நாட்டுப் பெண்ணைக் கொண்டானாயின், உயிர் வாழ்ந்தும் பயனென்ன என்று சொன்னாள்.

அதிகாரம் 28

1 ஆகையால், ஈசாக் யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்து: நீ கானானியப் பெண்ணைக் கொள்ள வேண்டாம்.

2 புறப்பட்டு, சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவுக்குப் போய், உன் தாயாரின் தந்தையாகிய பத்துவேலின் வீட்டிலே உன் மாமனாகிய லாபானின் புதல்வியரில் ஒருத்தியை மணந்து கொள்வாய்.

3 எல்லாம் வல்ல கடவுளே உன்னை ஆசீர்வதித்து, நீ பல இனங்களுக்குத் தந்தையாகும்படி உன்னைப் பலுகிப் பெருகச் செய்து, ஆபிரகாம் பெற்ற ஆசிரை அவர் உனக்கும் உனக்குப் பின் உன் வழிவருவோர்க்கும் அருள்வாராக.

4 அதனால், நீ அகதியாய் நடமாடும் பூமியையும், அவர் ஆபிரகாமுக்குத் திருவாக்கருளிக் கொடுத்த நாட்டையும் உரிமையாக்கிக் கொள்வாயாக என்றான்.

5 ஈசாக் யாக்கோபை அவ்விதமாய் அனுப்பிவிட்ட பின், அவன் புறப்பட்டு, சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவுக்குப் போய், தன் தாயார் இரெபேக்காளின் தமையனும், சீரியா நாட்டினனான பத்துவேலின் புதல்வனுமான லாபானிடம் சேர்ந்தான்.

6 ஈசாக் யாக்கோபை ஆசீர்வதித்து, திருமணத்தின் பொருட்டு சீரியாவிலுள்ள மெசொப்பெத்தாமியாவுக்கு அனுப்பிவிட்டதையும், அவனை ஆசீர்வதித்த பின்: நீ கானான் (நாட்டுப்) புதல்வியரிடையே பெண்கொள்ள வேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,

7 யாக்கோபு தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து சீரியாவுக்குப் போனதையும் எசாயூ கண்டதனாலும்,

8 கானான் நாட்டுப் பெண்களின் மேல் தன் தந்தை வெறுப்பாயிருக்கிறாரென்று தன் சொந்த அனுபவத்தால் அறிந்ததனாலும்,

9 எசாயூ இஸ்மாயேலரிடம் சென்று, தான் முன் கொண்டிருந்த மனைவியரையன்றி, இன்னும் ஆபிரகாமின் புதல்வனான இஸ்மாயேலின் புதல்வியும் நபயோத்தின் சகோதரியுமான மகெலேத்தை மணந்து கொண்டான்.

10 யாக்கோபோ, பெற்சபேயிலிருந்து புறப்பட்டு, ஆரானை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

11 அவன் ஓரிடத்தில் வந்து, சூரியன் மறைந்தபடியால், அங்கே இளைப்பாற விரும்பி, அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலையணையாகத் தன் தலையின் கீழ் வைத்துக் கொண்டு, அங்கேயே துயில் கொள்ளுமாறு படுத்துக் கொண்டான்.

12 அப்போது அவன் கண்ட கனவாவது: ஓர் ஏணி பூமியிலே ஊன்றியது; அதன் மேல் நுனியோ வானத்தை எட்டுவதாய் இருந்தது. அதன் மேல் கடவுளுடைய தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.

13 அதற்கு மேல் ஆண்டவர் வீற்றிருந்து அவனை நோக்கி: நாம் உன் தந்தை ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளுமாகிய ஆண்டவர். நீ படுத்துக் கொண்டிருக்கிற இப்பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தந்தருள்வோம். உன் சந்ததியோ நிலப் புழுதிக்கு ஒக்கும்.

14 நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பலுகுவாய். உன்னிலும், உன் சந்ததியிலும் பூமியின் எல்லா இனத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவர்.

15 நீ எவ்விடம் போனாலும் உனக்கு நாம் காவாலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வோம். மேலும் நாம் உனக்குச் சொல்லியதையெல்லாம் நிறைவேற்று மட்டும் உன்னைக் கைவிட மாட்டோம் என்றார்.

16 யாக்கோபு தூக்கம் தெளிந்து: மெய்யாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்! என்று கூறித் திகிலடைந்து:

17 இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியதாய் இருக்கிறது! இதுவே இறைவனின் இல்லம், வானக வாயில் என்றான்.

18 பிறகு யாக்கோபு காலையில் எழுந்து, தலையணையாகத் தான் வைத்திருந்த கல்லை எடுத்து நினைவு தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெயை வார்த்து,

19 லூசா என்று வழங்கப்பட்ட அந்த இடத்திற்குப் பெத்தெல் என்று பெயரிட்டான்.

20 மேலும்: கடவுளாகிய ஆண்டவர் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியில் என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும் உடுக்க உடையும் எனக்குத் தந்தருள்வாராயின்,

21 நானும் என் தந்தையின் வீட்டிற்கு நலமுடன் திரும்பிச் செல்வேனாயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார்.

22 அன்றியும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கோயில் எனப்படும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் நான் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன் என்று நேர்ந்து கொண்டான்.

அதிகாரம் 29

1 ஆகையால் யாக்கோபு (அங்கிருந்து) புறப்பட்டு, கீழ்த்திசை நாடு போய்ச் சேர்ந்தான்.

2 அங்கே வயல் வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டான். அந்தக் கிணற்றிலிருந்து தான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும். அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.

3 ஆடுகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தபின் மேய்ப்பர்கள் கல்லைப் புரட்டுவார்கள். அவை வேண்டிய மட்டும் குடித்து முடிந்ததும், மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின் மேல் தூக்கி வைப்பது வழக்கம்.

4 யாக்கோபு மேய்ப்பர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் எந்த ஊர் என, அவர்கள்:

5 நாங்கள் ஆரானூர் என்றார்கள். மீண்டும் அவன்: நாக்கோரின் மகனான லாபானை அறிவீர்களா என்று வினவ, அவர்கள்: அறிவோம், என்றனர்.

6 அவர் நலமுடன் இருக்கிறாரா என்று (யாக்கோபு) கேட்க, (அவர்கள்:) அவன் நலமாய்த் தான் இருக்கிறான். அதோ! அவன் மகள் இராக்கேல் தன் மந்தையோடு வருகிறாள் என்றனர்.

7 அப்பொழுது யாக்கோபு: இன்னும் பொழுது சாய அதிக நேரம் செல்லும். இது மந்தைகளைக் கொண்டு போய்ப் பட்டியில் சேர்க்கிற நேரம் அல்லவே. ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுங்கள். பின் அவைகளை இன்னும் மேய விடலாம் என்றான்.

8 அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் ஒன்று சேருமுன் அப்படிச் செய்யலாகாது. அவை சேர்ந்த பின், கிணற்று வாயினின்று கல்லைப் புரட்டி ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்று சொன்னார்கள்.

9 இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இராக்கேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள். ஏனென்றால், அவளே மந்தையை மேய்த்து வந்தாள்.

10 யாக்கோபு அவளைக் கண்டவுடனே, அவள் தன் மைத்துனி என்றும், ஆடுகள் தன் மாமன் லாபானுடையவை என்றும் தெரிந்து கொண்டு, கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டி, மந்தைக்குத் தண்ணீர் காட்டினான்.

11 பின் இராக்கேலை முத்தம் செய்து உரத்த சத்தமிட்டு அழுதான்.

12 பின், தான் அவள் தந்தைக்குச் சகோதரனும் இரெபேக்காளுடைய மகனுமென்று அவளுக்குத் தெரிவித்தான். அதைக் கேட்டு அவள் ஓடிப்போய்த் தன் தந்தையிடம் சொன்னாள்.

13 தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன், லாபான் அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனை அரவணைத்துப் பன்முறை முத்தம் செய்து தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனான். மேலும் அவன் பிரயாணத்தின் காரணங்களைக் கேள்விப் பட்டதும் யாக்கோபை நோக்கி:

14 நீ என் எலும்பும் மாமிசமுமானவன் அன்றோ என்றான். அங்கே ஒருமாத காலம் முடிந்த பின், லாபான் யாக்கோபை நோக்கி:

15 நீ என் சகோதரன் என்பதற்காகச் சும்மா எனக்கு வேலை செய்யலாமா? நீ சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல் என்றான்.

16 லாபானுக்கு இரண்டு புதல்விகள் இருந்தனர். மூத்தவளுடைய பெயர் லீயாள்; இளையவள் பெயர் இராக்கேல். ஆனால் லீயாள் பீளைக்கண் உடையவள்.

17 இராக்கேலோ வடிவழகும் முக எழிலும் உள்ளவள்.

18 யாக்கோபு இவள்மேல் விருப்பம் கொண்டு: உம்முடைய இளைய புதல்விக்காக நான் உம்மிடம் ஏழாண்டுகள் வேலை செய்கிறேன் என்றான்.

19 அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய ஆடவனுக்குக் கொடுப்பதைவிட உனக்குக் கொடுப்பது மேல். என்னோடு தங்கியிரு என்றான்.

20 அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் இராக்கேலை முன்னிட்டு வேலை செய்து வந்தான். ஆனால், அவள் மீது அவன் வைத்திருந்த அன்பின் மிகுதியால் அவ்வேழாண்டுகள் அவனுக்குக் கொஞ்ச நாளாகவே தோன்றின.

21 பின் யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் மனைவியோடு சேரும் பொருட்டு அவளை எனக்குத் தாரும். ஏனென்றால், குறித்த காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்றான்.

22 அவன் நண்பர்களைப் பெருங்கூட்டமாக விருந்துக்கழைத்துத் திருமண விழாவைக் கொண்டாடி முடித்தான்.

23 ஆனால், அந்தி வேளையிலே அவன் தன் புதல்வி லீயோளை அழைத்துக் கொண்டுபோய் அவனிடம் விட்டான்.

24 அவளுக்கு ஊழியம் செய்ய ஜெல்பாளைக் கொடுத்தான்.

25 யாக்கோபு வழக்கப்படி லீயாளோடு படுத்திருந்தது, காலையிலே அவள் லீயாளென்று கண்டு, தன் மாமனாரை நோக்கி: நீர் எனக்கு இப்படி ஏன் செய்தீர்? இராக்கேலுக்காக அல்லவா நான் உமக்கு வேலை செய்தேன்? என்னை இப்படி வஞ்சிப்பானேன் என்றான்.

26 அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளைய பெண்ணைக் கொடுப்பது இவ்விடத்தில் வழக்கமல்லவே.

27 (ஆகையால்) நீ இவளோடு கூடி வாழ்ந்து ஏழு நாட்களை நிறைவேற்று. பின் இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் இராக்கேலையும் உனக்குக் கொடுப்பேன் என்றான்.

28 யாக்கோபு அவ்வாறே செய்ய இசைந்தான். அந்த ஏழு நாட்களுக்குப் பின் இராக்கேலை மணமுடித்தான்.

29 லாபான் இவளுக்குப் பாளாளைப் பணிப்பெண்ணாகத் தந்திருந்தான்.

30 யாக்கோபு தான் அத்தனை நாள் ஆசித்திருந்த பெண்ணைக் கொண்ட பின், முந்தினவளைக் காட்டிலும் பிந்தினவளை அதிகமாய் நேசித்து, இன்னும் ஏழாண்டுகள் லாபானிடம் பணிபுரிந்து வந்தான்.

31 ஆனால், யாக்கோபு லீயாளை அற்பமாய் எண்ணுகிறானென்று ஆண்டவர் கண்டு, அவள் கருத்தாங்கும்படி செய்தார். இவள் தங்கையோ மலடியாய் இருந்தாள்.

32 லீயாள் கருத்தாங்கி ஒரு புதல்வனைப் பெற்றாள். ஆண்டவர் எனது தாழ்மையைக் கண்டருளினார்; இனி மேல் என் கணவர் எனக்கு அன்பு செய்வார் என்று கூறி, அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.

33 மீண்டும் (அவள்) கருத்தாங்கி ஒரு புதல்வனை ஈன்றபோது: நான் அற்பமாய் எண்ணப்பட்டிருப்பதை ஆண்டவர் அறிந்தமையால், இவனையும் எனக்குத் தந்தருளினார் என்று சொல்லி, அவனுக்குச் சிமையோன் என்று பெயரிட்டாள்.

34 அவள் மூன்றாம் முறை கருவுற்று இன்னொரு புதல்வனைப் பெற்றாள். இனிமேல் என் கணவர் என் மீது அன்பாய் இருப்பார். அவருக்கு மூன்று மக்களைப் பெற்றேனன்றோ? என்று, இதை முன்னிட்டு அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.

35 அன்றியும், நான்காம் முறையாக கருவுற்று ஒரு புதல்வனைப் பெற்றாள். இப்பொழுது ஆண்டவரைத் துதிப்பேன் என்று சொல்லி, அதன் பொருட்டு அவனை யூதா என்று அழைத்தாள். பின் அவளுக்குப் பிள்ளை பேறு நின்று போயிற்று.

அதிகாரம் 30

1 இராக்கேல் தான் மலடியாய் இருந்தது கண்டு, தன் சகோதரியின் மேல் பொறாமை கொண்டு, தன் கணவனை நோக்கி: நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும். இல்லாவிடில் நான் சாவேன் என்றாள்.

2 யாக்கோபு அவள் மீது சினம் கொண்டு: உன்னைக் கடவுள் மலடியாக்கினதற்கு நான் பொறுப்பாளியா? என்றான்.

3 அவள்: என் பணிப்பெண் பாளாள் என்னோடு இருக்கிறாள். நீர் அவளோடு கூடியிரும். அவள் பெற்று என் மடியிலே கொடுக்க, அவளாலே நான் பிள்ளைகளை அடையக் கடவேன் என்று கூறி,

4 அவனுக்குப் பாளாளை மனைவியாகக் கொடுத்தாள்.

5 இவள், யாக்கோபோடு சேர்ந்து கருவுற்று ஒரு புதல்வனைப் பெற்றாள்.

6 இராக்கேலும்: ஆண்டவர் என் வழக்கைத் தீர்த்து, என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு புதல்வனைத் தந்தார் என்று சொல்லி, இதன் பொருட்டு அவனுக்குத் தான் என்னும் பெயரை இட்டாள்.

7 பாளாள் மீண்டும் கருத்தரித்து வேறொரு (புதல்வனையும்) பெற்றாள்.

8 இவனைக் குறித்து இராக்கேல்: ஆண்டவர் என் தமக்கையோடு என்னைப் போராடச் செய்திருக்க, நான் வெற்றி கொண்டேன் என்று கூறி, அவனை நெப்தலி என்று அழைத்தாள்.

9 லீயாள் தனக்குப் பிள்ளைப் பேறு நின்று விட்டதென்று கண்டு, தன் வேலைக்காரி ஜெல்பாளைக் கணவன் பால் ஒப்புவித்தாள்

10 இவள் கருத்தரித்து ஒரு புதல்வனைப் பெற்ற போது, லீயாள்:

11 இது நல்லதாயிற்று என்று கூறி, குழந்தைக்குக் காத் என்று பெயரிட்டாள்.

12 ஜெல்பாள் மேலும் வேறொரு புதல்வனைப் பெற்றாள்.

13 லீயாள்: இது என் பாக்கியமாயிற்று. இதனால் பெண்கள் என்னைப் பேறு பெற்றவள் என்பார்கள் என்று கூறி, அவனை ஆசேர் என்று அழைத்தாள்.

14 கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயல் வெளிகளுக்குப் போயிருந்த போது, தூதாயிக் கனிகளைக் கண்டெடுத்து, அவற்றைத் தன் தாய் லீயாளிடம் கொண்டு வந்தான். இராக்கேல் அவளை நோக்கி: உன் மகனுடைய தூதாயிப் பழங்களில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

15 அதற்கு அவள்: நீ என்னிடத்தினின்று என் கணவரை அபகரித்துக் கொண்டது உனக்குச் சொற்பமாகத் தோன்றுகிறதோ? இன்னும் என் மகனுடைய தூதாயிக் கனிகளையும் பறிக்கவிருக்கிறாயோ என, இராக்கேல்: உன் மகனுடைய தூதயிப் பழங்களுக்குப் பதிலாக அவர் இன்றிரவு உன்னோடு கூடியிருக்கட்டும் என்றாள்.

16 மாலை வேளையில் யாக்கோபு காட்டினின்று திரும்பி வரும் போதே, லீயாள் அவனுக்கு எதிர் கொண்டுபோய்: நீர் என்னோடு, கூடியிருக்க வேண்டும். ஏனென்றால், என் மகனுடைய தூதாயிப் பழங்களை விலையாகக் கொடுத்து உம்மை நான் (வாங்கிக்) கொண்டேன் என்றாள். அவன் அவ்விதமே அன்றிரவு அவளோடு கூடியிருந்தான்.

17 கடவுள் அவளுடைய மன்றாட்டுக்களை நன்றாகக் கேட்டார். எனவே, அவள் கருத்தரித்து ஐந்தாம் புதல்வனைப் பெற்று:

18 நான் என் வேலைக்காரியை என் கணவருக்குக் கொடுத்தமையால், கடவுள் எனக்குச் சம்பாவனை தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.

19 மீண்டும் லீயாள் கருவுற்று ஆறாம் புதல்வனைப் பெற்று:

20 கடவுள் எனக்கு நன்கொடை தந்தருளினார். இம் முறையும் என் அன்பர் என்னுடன் இருப்பார். நான் அவருக்கு ஆறு புதல்வரைப் பெற்றேனன்றோ, என்று கூறி, அதனாலே அவனுக்குச் சாபுலோன் என்னும் பெயரைச் சூட்டினாள்.

21 மேலும் அவள் ஒரு புதல்வியைப் பெற்றாள். அவள் பெயர் தீனாள்.

22 பின் ஆண்டவர் இராக்கேலை நினைத்தருளினார்; அவள் மன்றாட்டுக்களுக்குச் செவி கொடுத்து, அவள் கருத்தரிக்கச் செய்தார்.

23 ஆதலால் அவள் கருவுற்று ஒரு புதல்வனைப் பெற்று கடவுள் என் நிந்தையை நீக்கினார் என்றும்,

24 ஆண்டவர் இன்னொரு புதல்வனை எனக்குத் தருவாராக என்றும் கூறி, குழந்தையை சூசை என்று அழைத்தாள்.

25 சூசை பிறந்த பின் யாக்கோபு தன் மாமனை நோக்கி: என் சொந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்பிப் போக எனக்கு விடை கொடுத்து அனுப்புவீராக.

26 நான் போகும் படி என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும். அவர்களுக்காக நான் ஊழியம் செய்தேன். நான் உமக்குச் செய்துள்ள சேவை இன்னதென்று உமக்குத் தெரியுமே என்றான்.

27 லாபான் அவனை நோக்கி: நான் உன் முன்னிலையில் தயவு பெறக்கடவேன். உன் பொருட்டே ஆண்டவர் என்னை ஆசீர்வதித்தார் என்று நான் எனது சொந்த அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.

28 (ஆகையால்) உனக்கு நான் செலுத்த வேண்டிய வெகுமதி இவ்வளவென்று நீயே சொல் என்றான்.

29 அதற்கு அவன்: நான் உமக்குப் பணிவிடை செய்த முறையும் உமது சொத்து என் திறமையினாலே விரத்தியடைந்த விதமும் நீர் அறிவீரன்றோ?

30 நான் உம்மிடம் வருமுன் நீர் சொற்பச் சொத்தே உடையவராயிருந்தீர். இப்பொழுதோ பெருஞ் செல்வாராயினீர். நான் வரவே, ஆண்டவர் உம்மை ஆசீர்வதித்தார். இனிமேலாவது நான் என் சொந்தக் குடும்பத்திற்குப் பொருள் ஈட்டுவது முறையல்லவா என்றான்.

31 அதற்கு லாபான்: உனக்கு என்ன வேண்டும் சொல் என, அவன்: எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை. ஆயினும், நான் சொல்லுகிறபடி செய்விரானால், மறுபடியும் உமது மந்தைகளை மேய்த்துப் பாதுகாப்பேன்.

32 அதாவது, நீர் போய் உமது எல்லா மந்தைகளையும் பார்வையிட்டு, அவற்றில் வெவ்வேறு நிறமாயிருக்கிற ஆடுகளைப் பிரித்து விடும். புள்ளிபட்ட ஆடுகளையும் தனியே புரியும். இனிமேல், செம்மறியாடுகளிலும் வெள்ளாடுகளிலும் வெள்ளையும் கறுப்பும் கலந்த குட்டிகளும், புள்ளி புள்ளியாய் இருக்கும் குட்டிகளும் எனக்குச் சம்பாத்தியமாய் இருக்கட்டும்.

33 எனக்குரிய பங்கைச் சரிபார்க்க நீர் வரும் போது என் கபடின்மை என் பக்கமாய்ச் சாட்சி சொல்லும். அந்நாளிலே செம்மறியாடுகளிலும் வெள்ளாடுகளிலும் எவை புள்ளி புள்ளியும் பல நிறமும் இல்லாதவையோ அவை என்னைத் திருடனென்று சொல்லிக் காட்டுமே என்றான்.

34 அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என,

35 அன்றே அவன் புள்ளியும் மறுவுமுள்ள வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும், வெள்ளாட்டுக் கிடாய், செம்மறியாட்டுக் கிடாய்களையும் வெவ்வேறாகப் பிரித்து வைத்தான். வெள்ளை அல்லது கறுப்பு ஆகிய ஒரே நிறமாய் இருந்த மந்தைகளையோ, தன் மக்களுடைய காவலில் ஒப்புவித்ததுமல்லாமல்,

36 தான் வாழ்ந்து வந்த ஊருக்கும் தன் மற்ற மந்தைகளை மேய்த்து வந்த தன் மருமகனுக்கும் இடையிலே மூன்று நாள் வழித்தூரம் இருக்கும்படியும் செய்தான்.

37 அது கண்டு யாக்கோபு போப்பில், வாதுமை, பிலாத்தன் என்னும் மரங்களின் பசிய மிலாறுகளை வெட்டி, அவற்றில் இடையிடையே பட்டையைச் சீவி உரித்தான். இப்படி அவன் சீவி உரித்த இடங்கள் வெள்ளையாகவும், சீவி உரிக்காத இடங்கள் பச்சையாகவும் தோன்றுவதனால் மேற்சொல்லிய மிலாறுகள் இருநிறமுள்ளவை ஆயின.

38 மேலும், தன் மந்தைகள் (நீர்) குடிக்க வரும்போது, ஆடுகள் மேற்படி வரியுள்ள மிலாறுகளை எதிரில் கண்டு பொலிந்து சினைப்படும் பொருட்டு, அவன், நீர் வார்க்கப்படும் தொட்டிகளில் அம்மிலாறுகளைப் போட்டு வைத்தான்.

39 இதனால் நிகழ்ந்ததென்னவெனில்: பொலியும் நேரத்தில் (இரு நிறமான) மிலாறுகளைக் கண்டு பொலிந்த ஆடுகள் புள்ளியும், வரியும், கலப்பு நிறமுள்ள குட்டிகளை ஈன்று வந்தன.

40 யாக்கோபு பல நிறமான குட்டிகளை வெவ்வேறாகப் பிரித்து வைத்து, மிலாறுகளைக் கிடாய்களின் பார்வைக்கு நேராகத் தொட்டிகளில் வைப்பான். பின், மந்தைகள் வெவ்வேறாகப் பிரிந்திருந்தமையால், சுத்த வெள்ளை அல்லது சுத்தக் கறுப்பு நிறமுள்ளவை லாபானுக்கும், மற்றவை யாக்கோபுக்கும் உரியனவாகும்.

41 ஆதலால், முதல் பருவத்திலே பொலியும் போது வரியுள்ள மிலாறுகளைக் கண்டே ஆடுகள் சூல் கொள்ளும் பொருட்டு, யாக்கோபு கிடாய்களுக்கும் ஆடுகளுக்கும் எதிராக இரு நிறமுள்ள மிலாறுகளைப் போட்டு வைப்பான்.

42 பின்பருவத்துப் பொலிவுக்கோ, சூல் கொள்ளும் தன்மையுள்ள ஆடுகளின் பார்வைக்கு எதிரே யாக்கோபு மிலாறுகளைப் போட்டு வைக்க மாட்டான். அவ்வாறே முன் பருவத்தின் ஈற்று லாபானைச் சேரும்; பின் பருவத்தின் ஈற்று யாக்கோபுக்குச் சொந்தமாகும்.

43 இவ்வாறு யாக்கோபு பெரும் செல்வந்தனானான்; திரளான மந்தைகளுக்கும் வேலைக்காரர் வேலைக்காரிகளுக்கும் உரிமையாளன் ஆனான்.

அதிகாரம் 31

1 ஒரு நாள் லாபானின் மக்கள் தங்களுக்குள்ளே பேசி: நம் தந்தைக்கு உண்டான சொத்துக்களையெல்லாம் யாக்கோபு அபகரித்து, அவருடைய சொத்தைக் கொண்டே, தான் செல்வந்தனாகிப் புகழ் உடையவனானான் என்று சொன்னதை யாக்கோபு கேட்டிருந்ததுமல்லாமல்,

2 லாபானின் முகத்தைப் பார்த்தால், அது முன்புபோல் இல்லாமல் வேறுபட்டிருந்ததையும் கண்டான்.

3 மேலும், ஆண்டவர் முன்பே தன்னை நோக்கி: உன் மூதாதையரின் நாட்டிற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிச் செல்வாய்; நாம் உன்னோடு இருப்போம் என்று கூறிய வார்த்தைகள் மீது சிந்தையைச் செலுத்தினான்.

4 இராக்கேலும் லீயாளும் தான் மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த காட்டிற்கு வரும்படி ஆளனுப்பினான்.

5 பிறகு அவர்களை நோக்கி: உங்கள் தந்தையின் முகம் என் பால் முன்பு போலன்றி வேறுபட்டுப் போயிற்றென்று கண்டேன். என் தந்தையின் கடவுளோ என்னோடு இருக்கிறார்.

6 உங்கள் தந்தைக்கு என்னால் இயன்ற மட்டும் உழைத்தேனென்று உங்களுக்குத் தெரியுமே.

7 உங்கள் தந்தையோ என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்து முறையும் மாற்றினார். ஆனால், என்னை நட்டப் படுத்தும்படி கடவுள் அவருக்கு இடம் கொடுத்திலர்.

8 உள்ளபடி: புள்ளியுள்ள குட்டிகள் உனக்குச் சம்பளமாய் இருக்கும் என்று அவர் சொன்ன போது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளையே ஈன்று வந்தன. அவர் அதை மாற்றி: சுத்த வெள்ளை நிறமுள்ள குட்டியெல்லாம் உன் சம்பளத்திற்கு வைத்துக் கொள்வாய் என்ற போதோ, ஆடுகளெல்லாம் வெள்ளைக் குட்டிகளையே ஈன்றன.

9 இவ்விதமாய்க் கடவுளே உங்கள் தந்தையின் பொருளை எடுத்து எனக்குத் தந்தருளினார்.

10 அதாவது, ஆடுகளுக்குக் கருத்தாங்கும் பருவம் வந்த போது, நான் ஒரு கனவு கண்டேன். அதிலே ஆடுகளோடு பொலியும் கிடாய்கள் புள்ளியும், வரியும் கலப்பு நிறமும் உள்ளவனவாய் இருக்கக் கண்டேன்.

11 அக்கனவில், கடவுளுடைய தூதர்: யாக்கோபே, என்று என்னை அழைத்ததற்கு, நான்: இதோ இருக்கிறேன் என, அவர்:

12 உன் கண்களை ஏறெடுத்துப் பெட்டைகளோடு பொலியும் எல்லாக் கிடாய்களும் பல புள்ளியும் வரியும் பற்பல நிறமும் உடையனவாய் இருப்பதைப் பார் ஏனென்றால், லாபான் உனக்குச் செய்யும் யாவையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

13 நீ பெத்தலிலே ஒரு கல்லுக்கு அபிஷுகம் பண்ணி நமக்கு நேர்த்திக் கடனைச் செய்திருக்கிறாய்; இதோ! பெத்தலிலே உனக்குத் தோன்றின கடவுள் நாமே. ஆகையால், நீ உடனே எழுந்திருந்து இந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு, உன் தாய் நாடு திரும்பிச் செல் என்று திருவுளம் பற்றினார் (என்றான்.)

14 அதற்கு இராக்கேலும் லீயாளும்: எங்கள் தந்தை வீட்டுப் பொருட்களிலும் மரபுரிமைச் சொத்துக்களிலும் யாதேனும் எங்கள் கையில் உண்டோ?

15 அவர் எங்களை அன்னியப் பெண்கள் போல் பாவித்து, விலைக்கு விற்று, விற்ற விலையையும் செலவழிக்க வில்லையா?

16 ஆனால், கடவுள் எங்கள் தந்தையின் சொத்துக்களை எடுத்து, அவற்றை நமக்கும் நம் புதல்வர்களுக்கும் ஒப்புவித்தார். ஆகையால், கடவுள் உமக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்யும் என்றனர்.

17 அப்போது யாக்கோபு எழுந்திருந்து, தன் மக்களையும் மனைவியரையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.

18 மெசொப்பொத்தாமியாவில் ஈட்டிய பொருள் அனைத்தையும், மந்தைகள் முதலிய எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, கானான் நாட்டிலிருந்த தன் தந்தை ஈசாக்கினிடத்திற்குப் பயணமானான்.

19 லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க வெளியே போயிருந்தான். அவ்வேளை இராக்கேல் தன் தந்தையின் விக்கிரகங்களைத் திருடிக் கொண்டு போனாள்.

20 யாக்கோபோ, தான் ஓடிப் போகிற செய்தியைத் தன் மாமனாருக்குத் தெரிவிக்க மனம் துணியவில்லை.

21 அவன் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டு, நதியைத் தாண்டிக் கலயாத் மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

22 மூன்றாம் நாளிலே, யாக்கோபு ஓடிப்போனான் என்னும் செய்தி லாபானுக்குத் தெரிவிக்கப்பட்டது.

23 அப்பொழுது அவன் தன் சகோதரர்களைக் கூட்டிக் கொண்டு, ஏழு நாட்களாக அவனைப் பின்தொடர்ந்து கலயாத் மலையிலே அவனைக் கண்டு பிடித்தான். அன்றிரவு கனவில் (அவன்) கடவுளைக் கண்டான்.

24 அவர் அவனை நோக்கி: நீ யாக்கோபிடம் கடுமையாய் யாதொன்றும் பேச வேண்டாம் என எச்சரித்தார்.

25 யாக்கோபு ஏற்கனவே மலையிலே கூடாரம் அடித்திருந்தான். லாபானும், தன் சகோதரர்களுடன் அவனைக் கண்ட பொழுது அதே கலயாத் மலையிலே தன் கூடாரத்தை அடித்தான்.

26 அவன் யாக்கோபை நோக்கி: நீ இப்படிச் செய்யலாமா? எனக்குச் சொல்லாமல், சண்டையில் பிடிபட்ட பெண்களைப் போல் என் புதல்வியரைக் கொண்டு போகலாமா?

27 எனக்கு அறிவிக்காமல், நீ திருட்டுத் தனமாய் ஓடிப் போகத் தீர்மானித்ததேன்? எனக்கு அதைத் தெரிவித்திருந்தால், நான் சங்கீதம் மேள தாளம் தம்புரு முழக்கத்துடன் ஆனந்தமாய் அனுப்பி விட்டிருக்க மாட்டேனா?

28 என் புதல்வியரையும், (அவர்கள்) புதல்வர்களையும் நான் முத்தம் செய்ய முடியாதபடி செய்துவிட்டது ஏன்? நீ அறிவீனனாகவே நடந்து கொண்டாய்.

29 இப்போதோ, உனக்குத் தீமை செய்ய எனக்கு வல்லமை உண்டு. ஆனால், நேற்று உன் தந்தையின் கடவுள் என்னை நோக்கி: நீ யாக்கோபோடு யாதொன்றும் கடுமையாய்ப் பேசாதே என எச்சரித்தார்.

30 உன் உறவினரிடத்திற்குப் போகவும், உன் தந்தையின் வீட்டைத் திரும்பப் பார்க்கவும் விரும்பினாய், போகலாம்; ஆனால், என் தேவர்களை ஏன் திருடிக் கொண்டு போகிறாய் என்றான்.

31 யாக்கோபு அவனுக்கு மறுமொழியாக: உமக்குத் தெரியாமல் நான் புறப்பட்டதற்குக் காரணம், ஒருவேளை நீர் உமது புதல்விகளைக் கட்டாயப்படுத்தி இருக்க வைத்து விடுவீரென்று அஞ்சியே இப்படி வந்து விட்டேன்.

32 ஆனால், நான் திருடினதாக நீர் என் மீது குற்றம் சாட்டுகிறீரே, (இதைக் குறித்து நான் சொல்வதைக் கேளும்:) உமது தெய்வங்களை எவனிடம் கண்டுபிடிப்பீரோ அவன் நமது சகோதரர் முன் சாகடிக்கப்படக் கடவான். சோதித்துப் பாரும்; உம்முடைய பொருட்களில் ஏதாவது என் வசம் அகப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளும் என்றான். அவன் இவ்வாறு பேசும் போது, இராக்கேல் விக்கிரகங்களைத் திருடிக் கொண்டு வந்தாளென்று அவன் அறியாதிருந்தான்.

33 அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லீயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் நுழைந்து பார்த்து ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை. பின் அவன் இராக்கேலின் கூடாரத்திற்குப் போன போது,

34 அவள் மிக விரைவாக அந்த விக்கிரகங்களை எடுத்துத் தன் ஒட்டகச் சேணத்தின் கீழே ஒளித்து வைத்து, அதன் மேல் உட்கார்ந்து கொண்டாள். லாபான் கூடாரமெங்கும் சோதித்தும் அவற்றைக் கண்டு பிடிக்கவில்லை.

35 அவள் தந்தையை நோக்கி: நான் தங்கள் முன்னிலையில் எழுந்திருக்கவில்லையென்று நீர் கோபம் கொள்ள வேண்டாம். ஏனென்றால், பெண்களுக்குள்ள வீட்டு விலக்கக் காலத்தை இப்பொழுது அடைந்திருக்கிறேன் என்றாள். இவ்வாறு, அவன் கவனமாய்ச் சோதித்த போதிலும், ஏமாந்து போனான்.

36 அப்பொழுது யாக்கோபு மிகவும் சினந்து லாபானோடு வாக்குவாதம் செய்து: நீர் என்னை இவ்வளவு பகைத்து வருவதற்கு நான் என்ன குற்றம் அல்லது துரோகம் செய்தேன்?

37 என் தட்டு முட்டுக்களையெல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உம் வீட்டுப் பொருளில் எதையேனும் கண்டு பிடித்தீரோ? கண்டுபிடித்திருந்தால், அதை உமது சகோதரர்களுக்கும் எனது சகோதரர்களுக்கும் முன் இங்கே வையும்; இவர்களே உமக்கும் எனக்கும் நீதி வழங்கட்டும்.

38 இதற்காகத் தானா நான் உம்மோடு இருபது ஆண்டுகளாக இருந்தேன்? உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினைப்படாமல் இருக்கவில்லையே. உம்முடைய மந்தைக் கிடாய்களில் ஒன்றையும் நான் உண்ணவில்லையே.

39 கொடிய விலங்குகளால் பீறுண்டவைகளை நான் உமக்குத் தெரிவிக்காமல், அவற்றிற்கும் ஈடு செய்து வந்தேனே. ஆனால், களவு போன எல்லாவற்றையும் நீர் என் கையில் கேட்டு வாங்கிக் கொண்டீரே.

40 நான் பகலில் வெயிலாலும் இரவில் பனியாலும் வருந்தி உழன்றேன். அதன் பொருட்டு, தூக்கம் என் கண்களுக்குத் தூரமாய் இருந்ததே.

41 இவ்விதமாய் நான் உமது வீட்டில் உமது புதல்விகளுக்காகப் பதினாலாண்டும், உமது மந்தைகளுக்காக ஆறாண்டும், ஆக இருபதாண்டுகள் உம்மிடம் பணிபுரிந்து வந்தேன். நீரோ, என் சம்பளத்தைப் பத்து முறையும் மாற்றி வந்தீரன்றோ?.

42 என் தந்தையாகிய அபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் பயபக்தியும் என்னை மீட்டுக் காப்பாற்றின. இல்லா விட்டால், நீர் இப்போது என்னை வெறுமையாக அனுப்பி விட்டிருந்தாலும் இருக்கலாம். ஆனால், கடவுள் எனது துன்பத்தையும் என் கடின உழைப்பையும் நினைவு கூர்ந்து நேற்று உம்மைக் கண்டித்திருக்கிறார் என்றான்.

43 அதற்கு லாபான்: இவர்கள் என் புதல்வியர்; (இவர்கள்) பிள்ளைகள் என் பிள்ளைகள். இந்த மந்தை என் மந்தை. அப்படியிருக்க, என் புதல்வியர்க்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நான் என்னசெய்யக் கூடும்?

44 நல்லது, வா; நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம். அது உனக்கும் எனக்குமிடையே சாட்சியமாக இருக்கட்டும் என்று மறுமொழி சொன்னான்.

45 யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதனை நினைவுத்தூணாக நிலை நிறுத்தி, தன் சகோதரர்களை நோக்கி:

46 கற்களைக் கொண்டு வாருங்கள் என்றான். அவர்கள் கற்களை வாரி எடுத்துக் கொண்டு வந்து ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின் மேல் (அவர்கள்) உணவருந்தினார்கள்.

47 அதற்கு லாபான் 'சாட்சிய மேடை' என்றும், யாக்கோபு 'நடு நிலைக் குவியல்' என்றும் தத்தம் மொழிச் சிறப்பிற்கு ஏற்ப வெவ்வேறு விதமாய்ப் பெயரிட்டனர்.

48 பின்னர் லாபான்: இம்மேடை இன்று உனக்கும் எனக்கும் சாட்சியமாகுக என்றான். ஆதலால் அதன் பெயர் கலயாத் - அதாவது, சாட்சிய மேடை - எனப் பட்டது.

49 மீண்டும் அவன்: நாம் ஒருவரையொருவர் பிரிந்த பின், ஆண்டவரே நம்மைக் கண்காணித்து, உனக்கும் எனக்கும் நடுவராய் நின்று நீதி வழங்கக் கடவார்.

50 நீ என் புதல்விகளைத் துன்பப்படுத்தி அவர்களைத் தவிர வேறு பெண்களைக் கொள்வாயானால், எங்கும் நிறைந்து (நம்மை) நோக்குகின்ற கடவுளையன்றி நமது வார்த்தைகளுக்கு வேறு சாட்சியில்லை என்றான்.

51 மீண்டும் அவன் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் கல்மேடையும், உனக்கும் எனக்கும் நடுவாக நான் நிறுத்தி வைத்த இந்தக் கற்றூணும் சாட்சியாய் நிற்கின்றன.

52 ஆம், (உனக்குத் தீமை செய்ய) நான் அவற்றைக் கடந்து போவேனாகிலும், நீ எனக்குப் பொல்லாப்புச் செய்ய அவற்றைத் தாண்டி வருவாயாகிலும், இம்மேடையும் இந்தத் தூணும் சாட்சியாய் இருக்கும்.

53 அபிரகாமின் கடவுளும் நாக்கோரின் கடவுளும் அவர்கள் மூதாதையரின் கடவுளுமாயிருக்கிறவரே நமக்கு நடுவராய் இருந்து நீதி வழங்கக் கடவார் எனறான். அப்பொழுது யாக்கோபு தன் தந்தை ஈசாக்கின் பயபக்தியின் மீது ஆணையிட்டான்.

54 பின்பு மலையின் மேல் பலிசெலுத்தி உணவு அருந்தும்படி தன் சகோதரர்களை அழைத்தான். அவர்கள் சாப்பிட்ட பின் அங்கேயே தங்கினார்கள்.

55 லாபானோ, இருட்டோடே எழுந்திருந்து, தன் புதல்வர்களையும் புதல்விகளையும் முத்தம் செய்து அவர்களை ஆசீர்வதித்தான். பின் அவன் தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.

அதிகாரம் 32

1 பின்னர் யாக்கோபு தான் தொடங்கின பிரயாணத்தைத் தொடர்ந்தான். கடவுளின் தூதர்கள் வழியில் அவனை எதிர்கொண்டு வந்தார்கள்.

2 அவன் அவர்களைக் கண்டபோது: இதுதான் கடவுளின் படை என்று கூறி, அந்த இடத்திற்கு மகனாயீம் - அதாவது, பாளையம் - என்று பெயரிட்டான்.

3 பின் அவன் ஏதோம் நாட்டிலுள்ள செயீர் பகுதியில் வாழ்ந்து வந்த தன் தமையன் எசாயூவிடம் ஆட்களை அனுப்பி:

4 நீங்கள் என் தலைவன் எசாயூவிடம் போய், உம் தம்பி யாக்கோபு அனுப்பும் செய்தியாவது: நான் லாபானிடம் அகதியாகச் சஞ்சரித்து இந்நாள் வரையிலும் அவனிடம் தங்கியிருந்தேன்.

5 மாடுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் எனக்கு உண்டு. இப்போது உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத் தக்கதாய், என் தலைவனான உமக்குத் தூது அனுப்பலானேன் எனச் சொல்லுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.

6 அவர்கள் (போய்) யாக்கோபிடம் திரும்பி வந்து: நாங்கள் உம் தமையனார் எசாயூவிடம் போனோம். அவர் இதோ நானூறு பேருடன் விரைந்து உம்மைச் சந்திக்க வருகிறார் என்றனர்.

7 யாக்கோபு மிகவும் அஞ்சித் திடுக்கிட்டு, தன்னுடன் இருந்த ஆட்களையும், ஆடு மாடு ஒட்டகங்களாகிய மந்தைகளையும் இரண்டாகப் பிரித்து:

8 எசாயூ ஒரு பிரிவைத் தாக்கி அதை முறியடித்தாலும், மற்ற பிரிவாவது தப்புமே என்றான்.

9 மேலும் யாக்கோபு: என் தந்தை ஆபிரகாமின் கடவுளும் என் தந்தை ஈசாக்கின் கடவுளுமாயிருக்கிற ஆண்டவரே, நீர் என்னை நோக்கி: உன் சொந்த நாட்டிற்கும் உன் பிறந்த பூமிக்கும் திரும்பிப் போ; நாம் உன்னை ஆசீர்வதிப்போம் எனத் திருவாக்கருளினீரன்றோ?

10 அடியேனுக்கு நீர் செய்து வந்துள்ள எல்லாத் தயவுக்கும், நிறைவேற்றின சத்தியத்திற்கும் நான் தகுதியுள்ளவனல்லன். நான் கோலும் கையுமாய் (இந்த) யோர்தான் (நதியைக்) கடந்தேனே; இப்போதோ, இரண்டு பரிவாரங்களோடு திரும்பி வரலானேன்.

11 என் தமையனாகிய எசாயூவின் கையினின்று என்னைக் காத்தருளும். அவனுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன். ஒரு வேளை அவள் வந்து, பிள்ளைகளையும் தாயையும் அழிக்கக் கூடும்.

12 நீர் அடியேனுக்கு நன்மை புரிவதாகவும், என் சந்ததியை எண்ணப்படாத கடலின் மணலைப் போலப் பெருகச் செய்வதாகவும் திருவாக்களித்தீரன்றோ (என்று மன்றாடினான்).

13 அன்றிரவும் அவன் அங்கேயே தூங்கி, தனக்குச் சொந்தமானவற்றிலே தமையனாகிய எசாயூவுக்குக் காணிக்கையாக

14 இருபது வெள்ளாட்டுக் கிடாய்களோடு இருநூறு வெள்ளாடுகளையும், இருபது செம்மறிக் கிடாய்களோடு இருநூறு செம்மறியாடுகளையும்,

15 பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும் அவற்றின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும் இருபது காளைகளையும், இருபது கோவேறு கழுதைகளையும், பத்துக் கழுதைக் குட்டிகளையும் பிரித்தெடுத்து, ஊழியக்காரர் கையில்

16 ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாய் ஒப்புவித்து: நீங்கள் மந்தைக்கு முன்னும் பின்னுமாய் இடம் விட்டு எனக்கு முன் ஓட்டிக் கொண்டு போங்கள் என்று சொன்னான்.

17 பின் (யாக்கோபு) முந்திப் போகிறவனை நோக்கி: என் தமையனாகிய எசாயூ உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடைய ஆள்? அல்லது, நீ எங்கே போகிறாய்? அல்லது, நீ ஓட்டிப் போகிற மந்தை யாருடையது என்று அவன் உன்னைக் கேட்டால், நீ:

18 இவை உம் அடியானாகிய யாக்கோபினுடையவை. அவர், தம் தலைவனாகிய எசாயூக்கு இவற்றைக் காணிக்கையாக அனுப்பினார். அவரும் எங்கள் பின்னால் வருகிறார் என்று பதில் சொல்வாய் என்றான்.

19 அதேவிதமாய் யாக்கோபு இரண்டு மூன்று வேலைக்காரர்களையும், மந்தைகளை ஓட்டிப் போகிற மற்று முள்ளோர்களையும் நோக்கி: நீங்களும் எசாயூவைக் காணும் போது அவ்விதமாகவே அவரிடம் சொல்லுங்கள்.

20 மேலும்: இதோ உம் அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார். ஏனென்றால், அவர்: முன்னே வெகுமதிகளை அனுப்பித் தமையனாரைச் சமாதானப் படுத்திக் கொண்ட பின்பே அவருடைய முகத்தில் விழிப்பேன் என்றும், அப்பொழுது அவர் ஒருவேளை என்மேல் இரக்கமாய் இருப்பார் என்றும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பினான்.

21 அவ்விதமே காணிக்கைகள் யாக்கோபுக்குமுன் கொண்டு போகப் பட்டன. அவனோ, அன்றிரவு பாளையத்தில் தங்கினான்.

22 பின் அவன் அதிகாலையிலே துயில் விட்டெழுந்து, தன் புதல்வர் பதினொருவரையும், இரு மனைவியரையும் இரண்டு வேலைக்காரிகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு, ஜாபோக் ஆற்றின் துறையைக் கடந்தான்.

23 பின்னர் தனக்கு உண்டான யாவையும் ஆற்றைக் கடக்கப் பண்ணி, தான் (மட்டும்) பிந்தித் தனித்திருந்தான்.

24 அப்பொழுது ஓர் ஆடவன் பொழுது விடியுமட்டும் அவனோடு போராடிக் கொண்டிருந்தான்.

25 யாக்கோபை வெல்லத் தன்னாலே கூடாதென்று கண்ட அந்த ஆடவன் அவன் தொடை நரம்பைத் தொட்டான். தொடவே, அது மரத்துப் போயிற்று.

26 அப்பொழுது ஆடவன்: என்னைப் போகவிடு; பொழுது புலரப் போகிறது என, யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடேன் என்று மறுமொழி சொன்னான்.

27 ஆடவன்: உன் பெயர் என்ன என, அவன்: நான் யாக்கோபு என்றான்.

28 அப்பொழுது அவர்: உன் பெயர் இனி யாக்கோபு இல்லை; இஸ்ராயேல் எனப்படும். ஏனென்றால், நீ கடவுளோடு போராடி மேற்கொண்டாயென்றால், மனிதர்களை மேற்கொள்வாயென்று சொல்லவும் வேண்டுமா என்றார்.

29 யாக்கோபு அவரை நோக்கி: உம் பெயர் என்ன? அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று வினவ, அவர்; என் பெயரை நீ கேட்பதென்ன என்று பதில் சொல்லி, அந்த இடத்திலேயே அவனை ஆசீர்வதித்தார்.

30 அப்பொழுது யாக்கோபு: நான் கடவுளை நேரிலே கண்டிருந்தும் உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பானுவேல் என்று பெயரிட்டான்.

31 அவன் பானுவேலுக்கு அப்பால் சென்றவுடனே சூரியன் உதித்தது. அவனோ, கால் நொண்டி நொண்டி நடந்தான்.

32 அதன் பொருட்டு, இஸ்ராயேல் மக்கள் இந்நாள் வரை தொடைச் சந்து நரம்பை உண்பதில்லை. ஏனென்றால், (முன் சொல்லப்பட்ட ஆடவனால்) யாக்கோபின் நரம்பு தொடப்படவே, அது சூம்பிப் போயிற்று.

அதிகாரம் 33

1 யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க, எசாயூ நானூறு ஆடவரோடு வருவதைக் கண்டான். உடனே லீயானுடைய பிள்ளைகளையும், இராக்கேலுடைய பிள்ளைகளையும், இரண்டு வேலைக்காரிகளுடைய பிள்ளைகளையும் வெவ்வேறாகப் பிரித்து வைத்து,

2 முதல் வரிசையில் வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லீயாளையும் அவளுடைய பிள்ளைகளையும், இறுதியில் இராக்கேலையும் சூசையையும் நிறுத்தி,

3 தான் அவர்களுக்கு முன் நடந்து சென்று தமையனை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரை மட்டும் குனிந்து அவனை வணங்கினான்.

4 அதைக் கண்டு எசாயூ தம்பிக்கு எதிர் கொண்டு ஓடி, அவனை அரவணைத்து, அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டு அழுதான்.

5 பின் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு: இவர்கள் யார், உன்னுடையவர்களா என்று கேட்க, அவன்: கடவுள் அடியேனுக்குத் தந்தருளின பிள்ளைகள் என்று பதில் சொன்னான்.

6 அந்நேரத்தில் வேலைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் அணுகி வந்து வணங்கினர்.

7 லீயாளும் அவளுடைய பிள்ளைகளும் அணுகி, அப்படியே தெண்டனிட்டு வணங்கினர். பின் கடைசியாக சூசையும் இராக்கேலும் கிட்ட வந்து வணங்கினர்.

8 அப்போது எசாயூ யாக்கோபை நோக்கி: எனக்கு எதிர்கொண்டு வந்த அந்த மந்தைகள் என்ன என, யாக்கோபு: என் தலைவன் உம் கண்களில் அடியேனுக்குத் தயவு கிடைப்பதற்காகத் தான் என்று பதில் சொன்னான்.

9 அவன்: தம்பி, எனக்கு வேண்டிய பொருள் உண்டு. உன்னுடையது உனக்கிருக்கட்டும் என, யாக்கோபு:

10 அப்படிச் (சொல்ல) வேண்டாமென்று (உம்மை) மன்றாடுகிறேன். ஆனால், உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததாயின், இச் சொற்பமான காணிக்கையை என் கையினின்று ஏற்றுக் கொள்வீர். ஏனென்றால், நான் உம்மைக் கண்டது கடவுளைக் கண்டது போலாயிற்று.

11 நீர் எனக்குத் தயவு செய்து, எல்லா நன்மைகளுக்கும் காரணராகிய கடவுள் எனக்கு அருளி உமக்கு நான் கொண்டு வந்த ஆசீரை நீர் ஏற்றுக் கொள்வீர் (என்றான்). அவன், தன் தம்பி இவ்வாறு வற்புறுத்திக் கேட்டமையால், (அவற்றைக்) கட்டாயமாய் ஏற்றுக் கொண்டு: நாம் சேர்ந்து போகலாம், வா;

12 நானும் உனக்கு வழித்துணையாய் இருப்பேன் என்றான். அதற்கு யாக்கோபு:

13 தலைவ, சிறு குழந்தைகளும், சினை ஆடுகளும் பசுக்களும் என்னுடன் இருப்பதை நீர் அறிவீர். அவற்றை நான் அதிகமாய் வருத்தி ஓட்டுவேனாயின், மந்தையெல்லாம் ஒரே நாளில் மாய்ந்துபோமன்றோ?

14 நீர் அடியேனுக்கு முன்னே செல்வீர். நானோ, பிள்ளைகளின் நடைக்குத் தக்காற் போல், செயீருக்கு நீர் (வந்து) சேருமளவும் மெல்ல மெல்ல உம் காலடிகளைப் பார்த்து நடந்து வருகிறேன் என்றான்.

15 அதற்கு எசாயூ: என்னுடனிருக்கிற ஆடவர்களில் சிலரேனும் உனக்கு வழித்துணையாக இருக்கட்டும் என்று மன்றாட அவன்: தேவையில்லை; உமது முன்னிலையில் எனக்குத் தயவு கிடைத்தாலே போதும் என்றான்.

16 ஆகையால், எசாயூ அன்று தானே புறப்பட்டு, தான் வந்த வழியே செயீருக்குத் திரும்பினான்.

17 யாக்கோபும் சொக்கோட்டுக்கு வந்து சேர்ந்தான். அங்கே தனக்கென்று ஒரு வீடு கட்டினான்; தன் மந்தைகளுக்காகக் கூடாரங்களையும் அடித்தான். இதனால் அந்த இடத்திற்குச் சொக்கோட் அதாவது கூடாரம் என்று பெயரிட்டான்.

18 அவன் சீரிய மெசொப்பொத்தாமியாவிலிருந்து திரும்பின பின், கானான் நாட்டைச் சேர்ந்த சிக்கிமரின் நகரமாகிய சாலேமை அடைந்து அதன் அருகில் வாழ்ந்தான்.

19 அப்பொழுது, தான் கூடாரங்களை அடித்திருந்த நிலத்தின் ஒரு பாகத்தைச் சிக்கேமின் தந்தையாகிய ஏமோர் புதல்வர் கையிலே நூறு ஆட்டுக் குட்டிகளை விலைக்குக் கொடுத்து (வாங்கிக்) கொண்டான்.

20 பின் அங்கே அவன் ஒரு பீடத்தைக் கட்டி, அதன் மேல் இஸ்ராயேலின் எல்லாம் வல்ல கடவுளைத் தொழுதான்.

அதிகாரம் 34

1 லீயாளுடைய புதல்வியாகிய தீனாள் அந்நாட்டுப் பெண்களைப் பார்க்க விரும்பி வெளியே புறப்பட்டுப் போனாள்.

2 ஏவையனான ஏமோரின் புதல்வனும் அந்நாட்டின் தலைவனுமாய் இருந்த சிக்கேம் அவளைக் கண்டு மோகம் கொண்டு, அவளைக் கவர்ந்து சென்று அவளுடன் கூடிக் கன்னிப் பெண்ணாய் இருந்த அவளைக் கட்டாயமாய்க் கற்பழித்தான்.

3 அவன் மனம் அவள் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தது. அவன் அவளுடைய துயரத்தை இனிய சொற்களாலும் வேடிக்கைகளாலும் ஆற்றித் தேற்றினான்.

4 மேலும் தன் தந்தையாகிய ஏமோரைப் போய்ப் பார்த்து: இந்தப் பெண்ணை எனக்கு மனைவியாகப் பெற்றுத்தர வேண்டும் என்றான்.

5 யாக்கோபு இதைக் கேள்விப்பட்ட போது, அவன் புதல்வர் அந்நேரம் வீட்டிலில்லை; மந்தைகளை மேய்க்கும் அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திரும்பி வரும் வரை யாக்கோபு பேசாமல் இருந்தான்.

6 சிக்கேமின் தந்தையாகிய ஏமோர் யாக்கோபோடு பேசும் பொருட்டுப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது யாக்கோபின் புதல்வர்கள் காட்டிலிருந்து வந்தார்கள்.

7 அவர்கள் நிகழ்ந்ததைக் கேள்வியுற்றதும்: சிக்கேம் யாக்கோபின் புதல்வியோடு சேர்ந்தது செய்யத் தகாத மதி கெட்ட செயல் என்றும், அதனாலே இஸ்ராயேலுக்கு மானக்கேடு உண்டானது என்றும் சொல்லி, மனம் கொதித்துச் சினம் கொண்டார்கள்.

8 அப்பொழுது ஏமோர் அவர்களை நோக்கி: என் புதல்வனாகிய சிக்கேமின் மனம் உங்கள் பெண் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருக்கிறது. அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.

9 நீங்கள் எங்களோடு கலந்து, உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுங்கள்; எங்கள் பெண்களை உங்களுக்குக் கொடுப்போம்.

10 எங்களோடு நீங்கள் குடியிருங்கள். இந்நாடு உங்கள் ஆதீனத்தில் இருக்கிறது. அதிலே நீங்கள் பயிர் செய்தும் வியாபாரம் செய்தும் அதனை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்றான்.

11 சிக்கேமும், தீனாளுடைய தந்தையையும் சகோதரர்களையும் நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும். நீங்கள் எதைத் தீர்மானித்துக் கேட்பீர்களோ அதை நான் தருகிறேன்.

12 பரிசத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்; வெகுமதிகளையும் கேளுங்கள். நீங்கள் எவ்வளவு கேட்டாலும், நான் மனமாரத் தருவேன். அந்தப் பெண்ணை மட்டும் எனக்கு மனைவியாகக் கொடுங்கள் என்றான்.

13 யாக்கோபின் புதல்வர்கள் தங்கள் சகோதரிக்கு வந்த அவமானத்தைப் பற்றிச் சீற்றம் கொண்டவர்களாய்ச் சிக்கேமையும் அவன் தந்தையையும் பார்த்துக் கபடமாய்க் கூறிய மறுமொழியாவது:

14 நீங்கள் கேட்டபடி செய்ய எங்களால் முடியாது. விருத்தசேதனம் செய்யப்படாத ஆடவனுக்கு எங்கள் சகோதரியைக் கொடுக்கவே மாட்டோம். அது எங்களுக்குள்ளே பெரிய அவமானமும் அடாத செயலும் ஆகும்.

15 ஆனால், நீங்களும் உங்களுக்குள் இருக்கும் ஆண் மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்து கொண்டு எங்களைப் போல் ஆக இசைந்தால், நாங்கள் உங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.

16 அப்போது உங்களுக்கும் எங்களுக்குமிடையே கொள்வனை கொடுப்பனை இருக்கும். நாங்கள் உங்களோடு குடியிருந்து ஒரே இனமாயிருப்போம்.

17 நீங்கள் விருத்தசேதனம் செய்ய இசையாவிட்டாலோ, நாங்கள் எங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போவோம் என்றனர்.

18 அவர்கள் சொன்ன வார்த்தை ஏமோருக்கும் அவன் மகன் சிக்கேமுக்கும் நியாயமாய்த் தோன்றியது.

19 அந்த இளைஞன் அவர்கள் கேட்டபடி செய்யத் தாமதிக்கவில்லை. ஏனென்றால், அவன் அந்தப் பெண்ணை (அவ்வளவு) அதிகமாய் நேசித்ததுமல்லாமல், அவனே (தன்) தந்தை வீட்டார் அனைவருக்குள்ளும் சிறந்தவனாயுமிருந்தான்.

20 அவனும் அவனுடைய தந்தையும் நகை வாயிலுக்கு வந்து, மக்களை நோக்கி:

21 இந்த மனிதர்கள் நம்மோடு சமாதானமாய் இருக்கிறார்கள். நம் நாட்டில் குடியிருக்க மனமுள்ளவர்கள். பரந்து விரிந்த இந்த நாட்டிற்குக் குடிகள் போதவில்லை. அவர்கள் விருப்பப்படி பயிரிட்டாலும் இடலாம்; வியாபாரம் செய்தாலும் செய்யலாம். அவர்கள் பெண்களை நாம் மனைவியாக்கிக் கொண்டு, நம் பெண்களை அவர்களுக்குக் கொடுப்போம்.

22 இவ்வளவு நன்மைக்கும் தடையாயிருப்பது என்னவென்றால், அந்த இனத்தார் விருத்தசேதனம் செய்து கொள்ளுதல் வழக்கம். அவர்களைப் போல, நம்மிலுள்ள ஆண் மக்களும் நுனித்தோலை வெட்டிக் கொள்ள வேண்டுமாம்.

23 செய்தால் தான், அவர்களுடைய சொத்துக்களும், மந்தைகளும், மற்றும் எல்லாப் பொருட்களும் நம்மைச் சேரும். நாம் அவர்களுக்குச் சம்மதிப்போமாகில் அவர்களும் (நம்மோடு) கூடி வாழ, (நாம்) ஒரே இனமாய் இருப்போம் என்று சொன்னார்கள்.

24 இதைக் கேட்டு, எல்லாரும் சரியென்று ஒத்துக் கொண்டமையால், ஆண் மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.

25 மூன்றாம் நாளிலே அவர்களுக்கு அதிக வலி உண்டான போது, யாக்கோபின் புதல்வரும் தீனாளின் சகோதரருமான சிமையோன், லேவி என்னும் இவ்விருவரும் தத்தம் வாளை எடுத்துக் கொண்டு, துணிவுடன் அந்நகருக்குள் புகுந்து, ஆண்கள் யாவரையும் வெட்டிப் போட்டு,

26 ஏமோரையும் சிக்கேமையும் கூடக் கொலை செய்து, தங்கள் சகோதரி தீனாளைச் சிக்கேமின் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய் விட்டனர்.

27 இவர்கள் வெளியே போன பின், யாக்கோபின் ஏனைய புதல்வர்கள் வந்து, வெட்டுண்டவர்கள் மேல் பாய்ந்து, (தங்கள் சகோதரி) கற்பழிக்கப்பட்ட பாதகத்திற்குப் பழிவாங்க, ஊர் முழுவதையும் கொள்ளையிட்டனர்.

28 ஊராரின் ஆடு மாடு கழுதைகளையும், வீடுகளிலுள்ள எல்லாத் தட்டு முட்டுக்களையும், இருந்தவை எல்லாவற்றையும் கொள்ளையிட்டனர்.

29 அவர்களுடைய பிள்ளைகளையும் பெண்களையும் அடிமைகளாகச் சிறைப்பிடித்துக் கொண்டு போயினர்.

30 அவர்கள் அஞ்சா நெஞ்சுடன் அவையெல்லாம் செய்து முடித்த பின் யாக்கோபு சிமையோனையும் லேவியையும் நோக்கி: உங்களாலே என் புத்தி கலங்கிப் போயிற்று. இந்நாட்டில் குடியிருக்கிற கானானையரிடத்திலும் பெரேசையரிடத்திலும் என் பெயரைக் கெடுத்து விட்டீர்கள். நாம் கொஞ்சப் பேராய் இருக்கிறோம். அவர்கள் ஒன்றாய்க் கூடி என்னை அடித்துப் போடுவார்கள். நான் வெட்டுண்டு போனால் என் குடும்பம் அழியுமே என்றான்.

31 அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப் போல் நடத்தலாமோ என்று மறுமொழி கூறினர்.

அதிகாரம் 35

1 அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தெலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் அண்ணன் எசாயூவுக்கு அஞ்சி ஓடிய போது உனக்குத் தோன்றின கடவுளுக்கு (அவ்விடத்தில்) ஒரு பீடத்தைக் கட்டு என்றார்.

2 அதைக் கேட்டு யாக்கோபு தன் வீட்டார் அனைவரையும் அழைத்து: உங்களுக்குள் இருக்கிற அன்னிய தேவர்களை அகற்றி விட்டு உங்களைத் தூய்மைப்படுத்தி உங்கள் உடைகளை மாற்றக்கடவீர்கள்.

3 எழுந்து வாருங்கள்; பெத்தெலுக்குப்போய், என் துயர நாளிலே என் மன்றாட்டைக் கேட்டருளி எனக்கு வழித்துணையாய் இருந்த கடவுளுக்கு அவ்விடத்திலே ஒரு பலிப் பீடத்தை அமைப்போம் என்றான்.

4 அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த எல்லா அன்னிய விக்கிரகங்களையும் அவற்றின் காதணிகளையும் அவன் கையில் கொடுத்தனர். அவன் அவற்றைச் சிக்கேம் நகருக்கு வெளியே இருந்த ஒரு தரபிரண்ட் மரத்தின் கீழே புதைத்தான்.

5 பின் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களைச் சுற்றிலுமிருந்த எல்லா நகர மக்களுக்கும் தெய்வீகமான ஒரு பயங்கரம் உண்டானதனாலே, அவர்களைப் பின் தொடர எவரும் துணியவில்லை.

6 இவ்வாறு யாக்கோபும், அவனோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள பெத்தெல் எனப்படும் லூசானுக்கு வந்து சேர்ந்தனர்.

7 யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிப் பீடத்தைக் கட்டி, தன் சகோதரனிடமிருந்து தப்பியோடின நாளில் அங்கே கடவுள் தனக்குக் காட்சி கொடுத்த காரணத்தால், அந்த இடத்திற்குக் கடவுளின் வீடு என்று பெயரிட்டான்.

8 அப்பொழுது இரெபேக்காளின் பணிப்பெண்ணாகிய தெபொறாள் இறந்தாள்; பெத்தெலுக்கு அண்மையிலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அடக்கம் பண்ணப் பட்டாள். எனவே, அவ்விடத்திற்கு அழுகைக் கருவாலி என்னும் பெயர் வழங்கிற்று.

9 யாக்கோபு சீரிய மெசொப்பொத்தாமியவிலிருந்து திரும்பி வந்த பின் கடவுள் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனை ஆசீர்வதித்து:

10 இன்று முதல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படாமல், இஸ்ராயேல் எனப்படுவாய் என்று, அவனுக்கு இஸ்ராயேல் என்று பெயரிட்டருளினார்.

11 மேலும், அவர் அவனை நோக்கி: நாம் எல்லாம் வல்ல கடவுள். நீ பலுகிப் பெருகக் கடவாய். இனங்களும் மக்களும் கூட்டங்களும் உன்னிடமிருந்து உற்பத்தியாகும். அரசர்களும் உன் சந்ததியில் உதிப்பார்கள்.

12 ஆபிரகாம் ஈசாக்குக்கு நாம் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததிக்கும் கொடுப்போம் என்று சொல்லி,

13 அவனை விட்டு மறைந்துபோனார். அப்போது யாக்கோபு

14 தனக்கு ஆண்டவர் திருவாக்கருளிய அந்த இடத்தில் ஒரு கற்றூணை நினைவுச் சின்னமாக நாட்டி அதன் மேல் பானப்பலியை ஊற்றி, எண்ணையையும் வார்த்தான்.

15 அந்த இடத்திற்குப் பெத்தெல் என்று பெயரிட்டான்.

16 பின் அவன் அவ்விடத்தினின்று புறப்பட்டு, வசந்த காலத்திலே எபிறாத்தாவுக்குப் போகும் வழியை வந்தடைந்தான். அங்கே இராக்கேலுக்குப் பேறுகால வேதனை உண்டானது.

17 அப்பேறுகால வருத்தத்தால் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில், மருத்துவச்சி அவளை நோக்கி: நீர் பயப்பட வேண்டாம். ஏனென்றால், இப்புதல்வனையும் பெற்றடைவீர் என்றாள்.

18 ஆனால், வேதனை மிகுதியினாலே உயிர் பிரியப் போகும் வேளையில் அவள் தன் பிள்ளைக்குப் பெனோனி- அதாவது, என் வேதனைப் புதல்வன்- என்று பெயரிட்டாள். தந்தையோ, அவனைப் பெஞ்சமின்- அதாவது, வலக்கை மகன்- என்று அழைத்தான்.

19 இராக்கேல் அப்போது உயிர் நீத்தாள்; எப்பிறாத்தா ஊருக்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டாள்.

20 யாக்கோபு அவளுடைய கல்லறையின் மேல் ஒரு தூணை நாட்டி வைத்தான். இந்நாள் வரையிலும் அது இராக்கேலுடைய கல்லறையின் நினைவுத் தூண் (என்று அழைக்கப்படுகிறது).

21 அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, மந்தைக் கோபுரத்திற்கு அப்பால் தன் கூடாரத்தை அடித்தான்.

22 அவன் அந் நாட்டில் குடியிருந்த காலத்தில், ஒரு நாள் ரூபன் தன் தந்தையின் மறு மனைவியாகிய பாலாளோடு படுத்தான். அது யாக்கோபுக்குத் தெரியாமற் போகவில்லை. அவனுடைய புதல்வர் பன்னிரண்டு பேர்.

23 (அதாவது,) லீயாளின் மக்கள்: மூத்த மகன் ரூபன்; பிறகு சிமையோன், லேவி, யூதா, இசக்கார், ஜபுலோன் என்பவர்கள்.

24 இராக்கேலின் மக்கள்: சூசையும் பெஞ்சமினும்.

25 இராக்கேலின் வேலைக்காரியாகிய பாலாளின் மக்கள்: தானும் நெப்தலியும்.

26 லீயாளுடைய வேலைக்காரி ஜெல்பாளின் புதல்வர்கள்: காத்தும் ஆசேரும். இவர்கள் சீரிய மெசோப்பொத்தாமியா நாட்டில் யாக்கோபுக்குப் பிறந்தனர்.

27 யாக்கோபு ஆர்பேயின் நகராகிய மம்பிறேய்க்கு, தந்தையாகிய ஈசாக்கிடம் வந்தான். அது அபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிறோன் என்னும் ஊர்.

28 ஈசாக்கின் வாழ்நாள் மொத்தம் நூற்றெண்பது ஆண்டுகள்.

29 அவன் முதிர் வயதினால் வலுவிழந்து மரணம் அடைந்தான். தன் முன்னோரோடு சேர்க்கப்பட்டபோது அவன் முதுமையும் ஆயுள் நிறைவும் உள்ளவனாய் இருந்தான். அவன் புதல்வராகிய எசாயூவும் யாக்கோபும் அவனை அடக்கம் செய்தனர்.

அதிகாரம் 36

1 ஏதோம் எனப்பட்ட எசாயூவின் தலைமுறை அட்டவணையாவது:

2 எசாயூ கானான் நாட்டுப் பெண்களில் ஏலோனின் புதல்வியான ஆதாளையும், ஏவையனான செபெயோனின் புதல்வி அனாள் பெற்ற மகளாகிய ஒலிமாளையும் மணந்தான்.

3 மீண்டும் இஸ்மாயிலின் புதல்வியும் நபயோத்தின் சகோதரியுமான பசெமாத்தை மனைவியாகக் கொண்டான்.

4 ஆதாள் எலிபாசைப் பெற்றாள். பசெமாத் இராகுயேலைப் பெற்றாள்.

5 ஒலிபமாள் ஜெகூஸ், இயேலோன், கொறே முதலியோரைப் பெற்றாள். இவர்கள் எசாயூவுக்குக் கானான் நாட்டில் பிறந்த புதல்வர்கள்.

6 பின் எசாயூ தன் மனைவிகளையும், புதல்வர் புதல்விகளையும், தன் வீட்டைச் சேர்ந்த எல்லா மனிதரையும், பொருட்களையும், மந்தைகளையும், கானான் நாட்டில் சம்பாதித்திருந்த யாவற்றையும் சேர்த்துக் கொண்டு, தன் தம்பி யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனான்.

7 ஏனென்றால், அவர்கள் இருவரும் மிகுந்த செல்வம் படைத்தவர்களாய் இருந்ததனால், அவர்கள் ஒன்றாய்க் குடியிருக்கக் கூடாமற் போயிற்று. அவர்களுடைய மந்தை, கணக்கில் அடங்காமல் இருந்ததனால், அவர்கள் குடியிருந்த நாடு இனி அவர்களுக்குப் போதாதிருந்தது.

8 ஆகையால், எசாயூ செயீர் என்னும் மலையில் குடியேறினான். அவனுக்கு ஏதோம் என்றும் பெயர்.

9 செயீர் மலையிலிருக்கும் ஏதோமியரின் (குலத்) தந்தையாகிய எசாயூவின் சந்ததிகளும், அவன் புதல்வர்களின் பெயர்களுமாவன:

10 எசாயூவின் (முதல்) மனைவியான ஆதாளின் மகன் எலிபாசும், அவன் (இரண்டாம்) மனைவியாகிய பசெமாத்தின் மகன் இராகுயேலுமாவர்.

11 எலிபாசுக்குப் பிறந்த புதல்வர்: தேமான், ஓமார், செப்போ, காட்டம், கேனசு.

12 எசாயூவின் புதல்வனான எலிபாசுக்குத் தாமினாள் என்னும் மறுமனைவியும் இருந்தாள். இவள் அவனுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்களே எசாயூவின் மனைவியான ஆதாளின் புதல்வர்கள்.

13 இராகுயேலின் புதல்வர்: நகாட், ஜாரா, சம்மா, மேசா. இவர்களே எசாயூவின் மனைவியான பசெமாத்தின் புதல்வர்கள்.

14 செபெயோன் புதல்வி அனாளின் மகளும் எசாயூவின் மனைவியுமான ஒலிபமாளுக்கோ, ஜெகூஸ், இயேலோன், கொறே என்பவர்கள் பிறந்தனர்.

15 எசாயூவின் புதல்வருள்ளே தலைவர்களாய் இருந்தவர்கள் யாவரென்றால்: எசாயூவின் மூத்த மகனான எலிபாசின் புதல்வர்களாகிய தெமான், ஓமார், செப்போ, கெனேஸ்.

16 கொறே, காட்டம், அமலேக் ஆகிய இவர்கள் அனைவரும் எலிபாசுக்குப் பிறந்த எதோமியத் தலைவர்கள். இவர்களே ஆதாளின் மக்கள்.

17 எசாயூவின் புதல்வனான இராகுவேலின் மக்களில், நகாட், ஜாரா, சம்மா, மெசா ஆகியோர் இராகுவேலின் புதல்வரும் எசாயூவின் மனைவியான பசெமாத்தின் மக்களுமான ஏதோமியத் தலைவர்கள்.

18 எசாயூவின் மனைவி ஒலிபமாளின் புதல்வர்களோ: ஜெகூஸ், இயேலோன், கொறே. இவர்கள் அனாளின் புதல்வியும் எசாயூவின் மனைவியுமான ஒலிபமாளுடைய சந்ததியின் தலைவர்களாம்.

19 இவர்களே ஏதோம் எனப்பட்ட எசாயூவின் சந்ததி. இவர்களே அவர்களுள் இருந்த தலைவர்கள்.

20 அந்த நாட்டின் குடிகளாய் இருந்த ஓறையனான செயீரின் புதல்வர் யாரெனில்: லொத்தானும், சொபாலும், செபெயோனும்,

21 அனாவும், டிசோனும், எசேரும், டிசானும் ஆவர். இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த செயீரின் புதல்வராகிய ஒறையாத் தலைவர்களாவர்.

22 லொத்தானுக்குப் பிறந்த புதல்வர்கள்: ஓரியும் எமானுமாவர். தமினாள் லொத்தானின் சகோதரியாவாள்.

23 சொபாலின் புதல்வர்கள்: அல்வானும், மனகாட்டும், ஏபாலும், செப்போவும், ஒனாமுமாவர்.

24 செபெயோனின் புதல்வர்களோ: அயாவும், அனாவும் ஆவர். இந்த அனாவே தன் தந்தை செபெயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது பாலைவனத்தில் வெப்ப நீரூற்றுக்களைக் கண்டுபிடித்தான்.

25 இவனுக்கு டிசோன் என்னும் ஒரு புதல்வனும், 'ஒலிபமாள் என்னும் ஒரு புதல்வியும் பிறந்தனர்.

26 டிசோனின் புதல்வர்கள்: ஆதாமும், எசெபானும், ஜெத்திராமும், காரானும் ஆவர்.

27 எசேரின் புதல்வர்: பாலனும், ஜவானும், அக்கானும்.

28 டிசானோ: ஊஸ், ஆராம் என்ற (இரு) புதல்வரைப் பெற்றான்.

29 ஓறையரின் தலைவர்கள் யாவரெனில்: லொத்தான், சொபால், செபெயோன், அனா, டிசோன், எசேர், டிசான் ஆவர்.

30 இவர்களே செயீர் நாட்டில் ஆட்சி புரிந்த ஓறையரின் தலைவர்களாம்.

31 இஸ்ராயேல் புதல்வர்மேல் எந்த அரசனும் அரசாள்வதற்கு முன், எதோம் நாட்டில் ஆண்டு வந்த அரசர்கள் யாவரென்றால்:

32 (முதலில்) பேயோரின் புதல்வனாகிய பேலா.

33 இவன் தலைநகரின் பெயர் தெனபா. பேலா இறந்த பின், பொஸ்றா நகரத்தானும் ஜாராவின் புதல்வனுமான ஜோபாத் ஆண்டு வந்தான்.

34 ஜோபாதும் இறந்த பின்னர், தேமானரின் நாட்டானாகிய ஊசாம் அரசாண்டான்.

35 இவனும் இறந்தபின், பதாதின் புதல்வனாகிய ஆதாத் அரசாண்டான். இவனே மேவாப் நாட்டில் மதியானியரைத் தோற்கடித்தான்.

36 இவனது தலைநகரின் பெயர் ஆவிட். ஆதாத் இறந்தபின், மஸ்றேக்கா ஊரானாகிய செமிலா பட்டம் பெற்றான்.

37 இவன் இறந்த பின், ரொகொபொட் நதியருகில் வாழ்ந்தவனான சாவூல் ஆண்டு வந்தான்.

38 இவன் இறந்த பின், அக்கொபோரின் புதல்வனான பலனான் ஆட்சியைக் கைக்கொண்டான்.

39 இவனுக்குப்பின், ஆதார் ஆண்டு வந்தான். இவனது தலை நகரின் பெயர் பௌ. இவன் மனைவி பெயரோ, மேத்தபேல். இவள் மெசாபுக்கு மகளான மத்திரேத்தின் புதல்வி.

40 தங்கள் வம்சங்களின் படியும், உறைவிடங்களின்படியும், பெயர்களின்படியும் எசாயூவின் சந்ததியில் உதித்த தலைவர்களின் பெயர்களாவன: தம்னா, ஆஸ்வா, ஜேட்டேட்,

41 ஒலிபமா, ஏலா, பினோன்,

42 கெனேஸ், தெமான், மப்சார்.

43 மக்தியேல், கீறாம். இவர்கள் ஏதோமின் தலைவர்களாய்த் தங்கள் சொந்த நாட்டிலே அரசாண்டு வந்தனர். இந்த ஏதோமியர்களுக்குக் (குலத்) தந்தை எசாயூ.

அதிகாரம் 37

1 யாக்கோபு, தன் தந்தை அகதி போல், அலைந்து திரிந்த கானான் நாட்டில் குடியேறினான்.

2 அவன் சந்ததியில் வரலாறு இதுவே: சூசை பதினாறு வயதிலே தன் சகோதரருடன் தந்தையின் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் தன் தந்தையின் பிற மனைவிகளாகிய பாளான், செல்பாள் என்பவர்களுடைய புதல்வரோடு கூட இருந்தான். அப்படியிருக்க, ஒரு நாள் அவன் தன் சகோதரரின் மிக அக்கிரமமானதொரு தீச்செயலைத் தந்தையிடம் வெளிப்படுத்தினான்.

3 சூசை முதிர்ந்த வயதில் தனக்குப் பிறந்தமையால், இஸ்ராயேல் அவனை எல்லாப் புதல்வரையும் விட அதிகமாய் நேசித்து வந்தான். (அதனால்) அவனுக்குப் பல நிறமுள்ள ஓர் அங்கியைச் செய்து கொடுத்திருந்தான்.

4 தங்கள் தந்தை அவனை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு, இவன் சகோதரர் இவனோடு ஒருபோதும் அன்பாய்ப் பேசாமல், இவனைப் பகைத்து வந்தனர். ஒரு நாள் சூசை தான் கண்ட ஒரு கனவைத் தன் சகோதரருக்குத் தெரிவித்தான். இதனால் (அவர்கள்) அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தனர்.

5 அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட கனவைக் கேளுங்கள்.

6 நாம் வயலிலே அறுத்த அரிகளைக் கட்டுவது போலத் தோன்றியது. அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு எழுந்து நிற்பது போலவும்,

7 உங்கள் அரிக்கட்டுக்கள் என் அரிக்கட்டைச் சுற்றித் தொழுவது போலவும் கண்டேன் என்றான்.

8 அப்பொழுது அவன் சகோதரர் அவனை நோக்கி: நீ எங்களுக்கு அரசனாக இருப்பாயோ? உன் அதிகாரத்துக்கு நாங்கள் கீழ்ப்பட்டிருப்போமோ என்று பதில் கூறினர். இவ்விதக் கனவுகளும், பலபல வார்த்தைகளும் மிகுந்த பொறாமையும் பகையும் உண்டாகக் காரணமாயின.

9 மேலும் அவன் தான் கண்ட வேறொரு கனவையும் தன் சகோதரர்களுக்கு அறிவித்தான். சூரியனும் சந்திரனும் பதினொரு விண்மீன்களும் தன்னை வணங்கினது போல் கனவில் கண்டதாகச் சொன்னான்.

10 இதை அவன் தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் தெரிவித்த போது, அவனுடைய தந்தை அவனைக் கண்டித்து: நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும் உன் சகோதரர்களும் இவ்வுலகில் உன்னை வணங்க வேண்டுமோ என்றான்.

11 இதன் பொருட்டும் அவன் சகோதரர் அவன் மீது பொறாமை கொண்டனர். தந்தையோ மௌனமாயிருந்து, இக்காரியத்தைத் தன் மனத்துள் வைத்துச் சிந்திக்கலானான்.

12 அப்படியிருக்கையில், அவன் சகோதரர் சிக்கேமில் தங்கித் தந்தையின் மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

13 இஸ்ராயேல் சூசையை நோக்கி: உன் சகோதரர்கள் சிக்கேமில் ஆடு மேய்க்கிறார்கள். அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன், வா என்று கூற, அவன்: இதோ போகத் தயாராய் இருக்கிறேன் என்றான்.

14 தந்தை: நீ போய், உன் சகோதரரும் மந்தைகளும் நலமோவென்று விசாரித்து, நடக்கும் காரியங்களை என்னிடம் தெரிவிப்பாய் என்றான். அவன் எபிறோன் பள்ளத்தாக்கிலிருந்து அனுப்பப்பட்டுச் சிக்கேமுக்குப் போனான்.

15 அப்பொழுது ஒரு மனிதன், அவன் வெளியிலே வழி தவறித் திரிவதைக் கண்டு: என்ன தேடுகிறாய் என்று அவனைக் கேட்டான்.

16 சூசை: என் சகோதரர்களைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே மந்தைகளை மேய்க்கிறார்கள்? சொல் என்றான்.

17 அதற்கு அம் மனிதன்: அவர்கள் இவ்விடத்தை விட்டுப் போய் விட்டார்கள். ஆனால், தொட்டாயீனுக்குப் போவோமென்று அவர்கள் சொல்லக் கேட்டேன் என்றான். ஆதலால், சூசை தன் சகோதரரைத் தேடித் தொட்டாயீனிலே அவர்களைக் கண்டுபிடித்தான்.

18 அவர்கள் அவன் தூரத்திலே வரக் கண்டு' அவன் தங்களுக்கு அண்மையில் வருமுன்னே அவனைக் கொல்லச் சதி செய்து,

19 ஒருவரொருவரை நோக்கி, கனவு காண்கிறவன் அதோ வருகிறான்.

20 நாம் அவனைக் கொன்று இந்தப் பாழ்கிணற்றில் போட்டு விட்டு, பிறகு, ஒரு கொடிய மிருகம் அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம். அப்போதல்லவோ அவனுடைய கனவுகள் எப்படி முடியுமென்று விளங்கும் என்றனர்.

21 ரூபன் இவற்றைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவிக்கக் கருதி, சகோதரரைப் பார்த்து:

22 நீங்கள் அவனைக் கொல்ல வேண்டாம்; அவன் இரத்தத்தைச் சிந்தவும் வேண்டாம். அவனைப் பாலை வனத்திலுள்ள பாழ்கிணற்றில் போட்டு விட்டால் உங்கள் கை சுத்தமாகவே இருக்கும் என்றான். ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்துத் தந்தையிடம் அவனைச் சேர்க்கும்படியாகவே அவ்விதம் பேசினான்.

23 சூசை தன் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடனே, அவன் அணிந்திருந்த பல நிறமுள்ள பெரிய அங்கியை அவர்கள் வலுக்கட்டாயமாய்க் கழற்றி,

24 தண்ணீரில்லாத பாழ் கிணற்றிலே அவனைத் தள்ளி விட்டனர்.

25 பின் அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது கலயாத்திலிருந்து வந்து கொண்டிருந்த இஸ்மாயேலியரின் கூட்டத்தைக் கண்டனர். அவர்கள் எகிப்துக்கு வாசனைத் திரவியங்களையும், பிசினையும், வெள்ளைப் போளத்தையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றி வந்தனர்.

26 அப்போது யூதா தன் சகோதரர்களை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதினால் நமக்கு என்ன பயன்?

27 நமது கைகளைச் சுத்தமாய் வைத்துக் கொள்ளும்படி நாம் அவனை இந்த இஸ்மாயேலியருக்கு விற்று விடுவது நலம். ஏனென்றால், அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறான் என்று சொல்ல, அவன் சகோதரர் அவன் சொன்ன திட்டத்திற்கு உட்பட்டனர்.

28 ஆகையால், மதியானியராகிய இந்த வியாபாரிகள் (தங்களைக்) கடந்து போகையில், அவர்கள் சூசையைப் பாழ்கிணற்றினின்று தூக்கியெடுத்து, (அந்த) இஸ்மாயேலியருக்கு அவனை இருபது வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்கள் அவனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.

29 (இதை அறியாத) ரூபன் பாழ் கிணற்றிற்குத் திரும்பிப் போய்ப் பார்த்து, சூசை (அங்கு) இல்லையென்று கண்டு, தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,

30 தன் சகோதரிடம் திரும்பி வந்து: இளைஞனைக் காணோமே; நான் எங்கே போவேன் என்றான்.

31 பின் அவர்கள் சூசையின், அங்கியை எடுத்து, தாங்கள் அடித்திருந்த ஒரு வெள்ளாட்டுக் குட்டியின் இரத்தத்திலே அதைத் தோய்த்து, தங்கள் தந்தையிடம் அனுப்பி:

32 இதை நாங்கள் கண்டெடுத்தோம். இது உமது புதல்வனுடைய அங்கியோ அல்லவோ, பாரும் என்று சொல்லச் சொன்னார்கள்.

33 தந்தை அதைக் கண்டதும்: இது என் மகனுடைய அங்கி தானே! ஏதோ ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதே! ஐயோ, சூசை ஒரு காட்டு விலங்கிற்கு இரையாய்ப் போனானே என்று சொல்லி,

34 தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, கோணி உடுத்தி, பல நாட்களாய்த் தன் மகனுக்காக வருந்திக் கொண்டிருந்தான்.

35 அவன் புதல்வர் புதல்வியர் அனைவரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்த போது, அவன் எந்த ஆறுதலான வார்த்தைக்கும் செவி கொடாமல்: நான் துக்கத்தோடே பாதாளத்தில் இறங்கி என் மகனிடத்திற்குப் போகிறேன் என்றான். அவன் இவ்விதமாய் சூசையைப் பற்றி அழுது புலம்பிக் கொண்டிருக்கையில்,

36 மதியானியர் எகிப்தை அடைந்து பாரவோனின் அண்ணகனும் படைத்தலைவனுமான புத்திபாரிடம் சூசையை விற்றனர்.

அதிகாரம் 38

1 அக்காலத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுப் புறப்பட்டு, ஓதொல்லாம் ஊரானாகிய கீராஸ் என்னும் ஒரு மனிதனிடம் போய்க் குடியிருந்தான்.

2 அங்கே சூயே என்னும் கானானிய மனிதனுடைய புதல்வியைக் கண்டு அவளை மணமுடித்து அவளோடு வாழ்ந்து கொண்டிருக்கையில்,

3 அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்று, அவனுக்குக் கேர் என்று பெயரிட்டாள்.

4 அவள் மீண்டும் கருவுற்று, பிறந்த மகனை ஓனான் என்று அழைத்தாள்.

5 பின் மூன்றாம் புதல்வனையும் பெற்று, அவனைச் சேலா என்று அழைத்தாள். இவனுக்குப் பின் அவளுக்கு வேறு பிள்ளை இல்லை.

6 யூதா தன் மூத்த மகனாகிய கேர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தான்.

7 யூதாவின் மூத்த மகனாகிய கேர் ஆண்டவர் முன்னிலையில் பெரும் பாவியானதால், ஆண்டவர் அவனை அழித்து விட்டார்.

8 அப்போது யூதா தன் மகன் ஓனானை நோக்கி: நீ உன் அண்ணன் மனைவியை உன் மனைவியாக ஏற்று, அவளோடு உன் தமையனுக்கு மகப்பேறு உண்டு பண்ணு என்றான்.

9 அந்தச் சந்ததி தன் சந்ததியாய் இராதென்று அறிந்து, அவன் தன் தமையன் மனைவியோடு படுக்கையில், தன் தமையனுக்கு மகப்பேறு உண்டாகாதபடிக்குத் தன் விதையைத் தரையிலே விழவிட்டு வந்தான்.

10 அவன் செய்தது பெரிய அக்கிரமமென்று ஆண்டவர் அவனையும் அழித்துவிட்டார்.

11 ஆதலால், யூதா தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் மகன் சேலா பெரியவனாகு மட்டும் நீ உன் தந்தை வீட்டிலே விதைவையாய்த் தங்கியிரு என்றான். அவன் அவ்வாறு சொன்னதற்குக் காரணம் ஏதென்றால், சேலாவும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று பயந்திருந்தது தான். அவள் அப்படியே தன் தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தாள்.

12 நெடுநாட்களுக்குப் பின், சூயேயின் புதல்வியான யூதாவின் மனைவி இறந்தாள். அவன், துக்கம் தீர்ந்து ஆறுதலான பின்னர், தன் மந்தைகளின் மேய்ப்பனான ஓதொல்லாம் ஊரானாகிய கீராஸ் என்பவரோடு தம்னாஸிலே ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பவர்கள் இடத்திற்குப் போனான்.

13 அப்போது: உன் மாமனார் தம் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கத் தம்னாஸீக்குப் போகிறார் என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.

14 அவள், சேலா பெரியவனாகியும் தனக்குக் கணவனாகக் கொடுக்கப்படவில்லை என்று மனவருத்தம் கொண்டு, தன் கைம்பெண்மைக்குப் பொருந்திய உடைகளைக் கழற்றி விட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, புதிய ஆடைகளை அணிந்தவளாய் தம்னாஸீக்குப் போகும் வழியில் ஒரு சந்திப்பில் உட்கார்ந்தாள்.

15 அவள், யாரும் தன்னை அறியா வண்ணம் முக்காடிட்டுக் கொண்டதனால், யூதா அவளைக் கண்டு, அவள் ஒரு வேசி என்று கருதி, அவள் கிட்டப் போனான்;

16 அவள் தன் மருமகளென்று அறியாமல்: நான் உன்னோடு படுக்க விரும்புகிறேன்; இசைகிறாயா என்றான். அதற்கு அவள்: நீர் என்னோடு படுப்பதற்கு எனக்கு என்ன தருவீர் என்றாள். அவன்:

17 என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் கொடுத்தால், நான் உம் ஆசைக்கு உட்படுவேன் என, யூதா:

18 அடைமானமாக எதைத் தரக் கேட்கிறாய் என்று வினவினான். அவள்: உம்முடைய மோதிரமும், கைக்காப்பும், கைக்கோலும் தர வேண்டும் என்றாள். இந்த ஒரே சேர்க்கையால் அவள் கருவுற்றாள்.

19 பின் அவள் எழுந்து போய், தன் உடையைக் களைந்து விதவைக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டாள்.

20 பெண்ணிடம் தான் கொடுத்திருந்த அடைமானத்தை வாங்கிக் கொண்டு வருமாறு, யூதா ஓதொல்லாம் ஊரானாகிய மேய்ப்பன் கையிலே ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்தனுப்பினான். அவன் (போய்) அவளைக் காணாமல், அங்கிருந்த ஆடவர்களை நோக்கி:

21 வழிச் சந்திப்பிலே அமர்ந்திருந்த வேசி எங்கே என்று கேட்க, அவர்கள்: ஏது! இவ்விடத்தில் வேசி இல்லையே என்றனர்.

22 அவன் யூதாவிடம் திரும்பி வந்து: நான் அவளைக் கண்டதுமில்லை, அவ்விடத்து மனிதரும், அவ்விடத்தில் யாதொரு வேசியும் எப்போதாகிலும் அமர்ந்ததுமில்லை என்று சொன்னார்கள் என்று சொல்ல, யூதா:

23 போனால் போகட்டும். எப்படியும் அவள் நம் மீது குற்றம் சாட்ட நிச்சயம் இயலாது. நான் ஆட்டுக் குட்டியை அனுப்பவுதாகச் சொல்லியிருந்தேன்; அப்படியே அனப்பினேன், நீயோ, அவளைக் காணவில்லை என்றான்.

24 மூன்று மாதம் சென்ற பின்னர்: உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். அதனால் அவள் கருவுற்றிருக்கிறாள் போலும் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவன்: அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்றான்.

25 மரணத் தண்டனை (நிறைவேற்றும்) இடத்திற்கு அவளைக் கூட்டிக் கொண்டு போகையில், அவள் அந்த அடைமானத்தைத் தன் மாமனாரிடம் அனுப்பி: இந்தப் பொருட்களுக்கு உடையவன் எவனோ, அவனாலே நான் கருவுற்றேன். இந்த மோதிரமும், இந்தக் கைக்காப்பும், இந்தக் கைக்கோலும் யாருடையவை என்று பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.

26 யூதா அவற்றைப் பார்த்தறிந்து: அவள் என்னைக் காட்டிலும் நீதியுள்ளவள். அவளை நான் என் மகன் சேலாவுக்குக் கொடுக்காமல் போனேனே என்றான். ஆயினும், அதன் பின் அவன் அவளோடு படுக்கவேயில்லை.

27 அவளுக்குப் பேறு காலம் நெருங்கிய போது, அவள் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் காணப்பட்டன.

28 அவள் பெறுகிற வேளையிலே ஒரு பிள்ளை கையை நீட்டிக் காண்பித்தது. மருத்துவச்சி அதிலே கருஞ்சிவப்பு நூலைக் கட்டி: இது முதலில் வெளிப்படும் என்றாள்.

29 ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக் கொண்ட பின்பு, மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது மருத்துவச்சி: நீ எவ்வளவு சமர்த்தாய்ச் சவ்வைக் கிழித்துக் கொண்டு வந்தாய் என்றாள். அதன் பொருட்டு அந்தப் பிள்ளைக்குப் பாரேஸ் என்னும் பெயரிட்டாள்.

30 பின் கருஞ் சிவப்பு நூல் கையிலே கட்டப்பட்டிருந்த அவன் சகோதரன் வெளிப்பட்டான். இவனை ஜாரா என்று அழைத்தாள்.

அதிகாரம் 39

1 சூசை எகிப்து நாட்டிற்குக் கொண்டு போகப் பட்ட போது, பாராவோனின் அண்ணகனும் படைத் தலைவனுமான புத்திபார் என்னும் எகிப்து நாட்டினன் அவனை, அவ்விடத்திற்குக் கொண்டு வந்த இஸ்மாயேலியரிடம் விலைக்கு வாங்கினான்.

2 ஆண்டவர் சூசையோடு இருந்தார். எனவே, அவன் எடுத்த காரியங்களிலெல்லாம் வெற்றிக் கிட்டியது. அவன் தன் தலைவனின் வீட்டிலேயே இருந்தான்.

3 ஆண்டவர் அவனோடு இருக்கிறாரென்றும், அவன் எது செய்தாலும் அதை ஆண்டவரே (முன்னின்று) நடத்தி வாய்க்கச் செய்கிறாரென்றும் அவன் தலைவன் தெளிவாய்க் கண்டறிந்தான்.

4 சூசை மீது தயவு வைத்து, அவனை எல்லாவற்றிற்கும் மேலாளனாக நியமித்தான். ஆதலால், சூசை தன் கையில் ஒப்புவிக்கப்பட்ட வீட்டையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தி, தன் தலைவனுக்கு நல்லூழியம் செய்து வந்தான்.

5 ஆண்டவர் சூசையின் பொருட்டு எகிப்தியனுடைய வீட்டை ஆசீர்வதித்து, வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டான செல்வங்களையெல்லாம் பெருகச் செய்தார்.

6 ஆதலால், தான் உண்ணும் உணவைத் தவிர, மற்றொன்றைப் பற்றியும் அவன் கவலைப்படாதிருந்தான். சூசையோ அழகிய தோற்றமும் எழிலுள்ள முகமும் உடையவனாய் இருந்தான்.

7 நெடுநாள் சென்ற பின், சூசையினுடைய தலைவனின் மனைவி அவன் மேல் ஆசை வைத்து: என்னோடு படு என்றாள்.

8 அவன் அந்தத் தீச் செயலுக்கு ஒரு சிறிதும் இணங்காமல், அவளை நோக்கி: இதோ, என் தலைவர், வீட்டிலுள்ள எல்லாவற்றையும் என் கையில் ஒப்புவித்திருக்கிறார். அவர் தமக்கு உள்ளவற்றைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை.

9 இவ்விடத்தில் உள்ளவையெல்லாம் என் வசமாக்கினார். நீர் அவருடைய மனைவியாய் இருக்கிறபடியால், உம்மைத் தவிர, வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை. அப்படியிருக்க, நான் இந்தத் தீச் செயலுக்கு உடன்பட்டு, என் கடவுளுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது முறையா என்றான்.

10 அவள் நாள்தோறும் அவ்விதமாய்ப் பேசி அவனைக் கட்டாயப் படுத்தின போதிலும், இளைஞன் அவளோடு படுக்க இசையவில்லை.

11 இப்படியிருக்க ஒரு நாள், சூசை, செய்ய வேண்டிய சிலவேளைகளை முன்னிட்டுத் தனியே வீட்டுக்குள் இருக்கையில்,

12 அவள் அவன் ஆடையின் ஓரத்தைப் பற்றி இழுத்து: என்னோடு படு என்றாள். அவன் அவள் கையிலே தன் மேலாடையை விட்டு விட்டு வெளியே ஓடிப் போனான்.

13 அவன் ஆடை தன் கையிலே இருக்கிறதென்றும் அவள் தன்னை அசட்டை செய்தானென்றும் அவள் கண்டு, தன் வீட்டாரைக் கூப்பிட்டு:

14 (என் கணவர்) நம்மை அவமானப்படுத்துவதற்காகவோ அந்த எபிரேய மனிதனை வீட்டிற்குக் கொண்டு வந்தார்? இதோ, (சூசை) என்னோடு படுப்பதற்காக என் அறைக்குள் நுழைந்தான்.

15 ஆனால், நான் கூச்சலிட்டதைக் கேட்டு, அவன் தன் ஆடையை என் கையில் விட்டு விட்டு வெளியே ஓடிப் போய் விட்டான் என்றாள்.

16 பின் அவள், தான் சொல்லுவது உண்மை என்று எண்பிக்க அந்த ஆடையைத் தன்னிடம் வைத்திருந்து தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வந்த போது அதை அவனுக்குக் காட்டி:

17 நீர் கொண்டு வந்த எபிரேய வேலைக்காரன் என்னோடு சரசம் பண்ணும்படி என்னிடத்திற்கு வந்தான்.

18 அப்போது நான் கூச்சலிட்டதைக் கேட்டதும், அவன் தன் ஆடையை என் கையிலே விட்டு விட்டு வெளியே ஓடிப்போனான் என்று முறையிட்டாள்.

19 அறிவற்ற அந்தத் தலைவன் மனைவி சொல்லிய சொற்களை உண்மையென்று உடனே நம்பி, கடுஞ் சினம் கொண்டு,

20 அரச கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் எந்தச் சிறையில் விலங்கு பூண்டிருந்தார்களோ, அதிலே சூசையை ஒப்புவித்தான். அவன் அதனில் அடைக்கப்பட்டான்.

21 கடவுளோ, சூசையோடு இருந்து, அவன் மீது இரக்கம் கொண்டு, சிறைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.

22 இவன் சிறைச்சாலையில் கட்டுண்டிருந்த யாவரையும் அவன் கையிலே ஒப்புவித்தான் அங்கே அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சூசையே செய்து வந்தான்.

23 சூசையின் பொறுப்பில் எல்லாவற்றையும் ஒப்புவித்த பின், சிறைத் தலைவன் யாதொன்றையும் குறித்துக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், கடவுள் சூசையோடு இருந்து, அவன் செய்வதையெல்லாம் நடத்தி வருகிறாரென்று கண்டுணர்ந்தான்.

அதிகாரம் 40

1 இவை நிகழ்ந்த பின், எகிப்து மன்னனுக்குப் பானம் அமைப்போர் தலைவனும் அப்பம் படைப்போர் தலைவனும் ஆகிய அண்ணகர் இருவர் தங்கள் மன்னனுக்கு எதிராகக் குற்றஞ் செய்தனர்.

2 பாரவோன் தன் பானத் தலைவனும் அப்பத் தலைவனும் ஆகிய இருவர் மீதும் கடுங்கோபம் கொண்டு,

3 அவர்களை சூசை அடைபட்டிருந்த படைத் தலைவனின் சிறையிலே காவலில் வைத்தான். சிறைத் தலைவனோ, அவர்களை சூசைப் பொறுப்பில் ஒப்புவித்தான்.

4 இவன் அவர்களை விசாரித்து வருவான். அவர்கள் சிறை சேர்ந்த சில நாட்களுக்குப் பின்,

5 இருவரும் ஒரே இரவில் தங்களுக்கு நேரிட இளருந்தவற்றைக் குறித்து வெவ்வேறு கனவு கண்டனர்.

6 காலையில் சூசை அவர்களிடம் வந்த போது, அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டு:

7 உங்கள் முகம் இன்று முன்னை விட அதிகத் துக்கமாய் இருக்கக் காரணம் என்ன என்று அவர்களை வினவ, அவர்கள்:

8 நாங்கள் கனவு கண்டோம்; அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வாரில்லை என்று பதில் கூறினர். சூசை அவர்களை நோக்கி: கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்குரியதல்லவா? நீங்கள் கண்டவற்றை என்னிடம் விவரித்துச் சொல்லுங்கள் என்றான்.

9 அப்பொழுது முதலில் பானத் தலைவன் தான் கண்டதைச் சொல்லத் தொடங்கினான்: ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் இருக்கக் கண்டேன்.

10 அதிலே மூன்று கிளைகள் இருந்தன. அவை வரவரத் தளிர்த்து அரும்பிப் பூத்துப் பழங்கள் பழுக்கக் கண்டேன்.

11 என் கையிலே பாரவோனுடைய பானப்பாத்திரம் இருந்தது, நான் பழங்களைப் பறித்து என் கையிலிருந்த பாத்திரத்தில் பிழிந்து, (அப்) பானத்தைப் பாரவோனுக்குக் கொடுத்தேன் என்றான்.

12 சூசை அவனை நோக்கி: உன் கனவின் பொருளாவது: மூன்று கிளைகளும் மூன்று நாட்களாம்.

13 அவை கழிந்த பின் பாரவோன் உன் சேவையை மனத்தில் கொண்டு, மீண்டும் முந்தின பதவியிலே உன்னை வைப்பார். நீ முன் செய்து வந்தது போல், உன் பதவியின் முறைப்படி அவருக்குப் பானப் பாத்திரத்தைக் கையில் கொடுப்பாய்.

14 உன் காரியம் இப்படி நன்மைக்கு வந்த பின்போ, நீ என்னை மறவாமல் தயவு காட்டிப் பாரவோன் என்னை இச் சிறையிலிருந்து விடுதலையாக்கும்படி பரிந்து பேச வேண்டும்.

15 ஏனென்றால், நான் எபிரேயருடைய நாட்டிலிருந்து வஞ்சகமாய்க் கொண்டு வரப்பட்டு, யாதொரு குற்றமுமில்லாமல் இக் காவற் கிடங்கிலே அடைக்கப் பட்டிருக்கிறேன் என்றான்.

16 அப்பத் தலைவனும், அந்தக் கனவின் பொருளை (சூசை) அறிவுக்குப் பொருத்தச் சொல்லியதைக் கண்டு, அவனை நோக்கி: நானும் கனவிலே மூன்று மாவுக் கூடைகளை என் தலையில் வைத்திருந்தேன்.

17 மேற் கூடையிலே எல்லாவிதப் பலகாரங்களையும் வைத்திருந்தேன். பறவைகள் வந்து அவற்றைத் தின்றன என்றான்.

18 அதந்கு சூசை: அக்கனவின் பொருளாவது: மூன்று கூடைகளும் வரவிருக்கிற மூன்று நாட்களாம்.

19 அம்மூன்று நாட்களுக்குப் பின், பாரவோன் உனது தலையை வெட்டி உன்னை ஒரு தூக்கு மரத்திலே தொங்க வைப்பார். அப்பொழுது பறவைகள் வந்து உனது உடலைக் கிழித்துத் தின்னும் என்றான்.

20 அம்மூன்று நாட்களுக்குப் பின், பாரவோன் உனது தலையை வெட்டி உன்னை ஒரு தூக்கு மரத்திலே தொங்க வைப்பார். அப்பொழுது பறவைகள் வந்து உனது உடலைக் கிழித்துத் தின்னும் என்றான்.

21 பானத் தலைவனாயிருந்தவனைத் தனக்குப் பானப் பாத்திரம் கையில் கொடுக்கும்படி (வரச் சொல்லி), அவன் பதவியிலே அவனை மீண்டும் அமர்த்தினான்.

22 மற்றவனையோ, தூக்கு மரத்தில் தூக்கிலிட்டான். இவ்வாறு சூசை பொருள் சொல்லியபடியே எல்லாம் நிகழ்ந்தது.

23 தனக்கு நல்ல காலம் வந்திருப்பினும், பானத் தலைவன் கனவின் பொருளை விவரித்துக் காட்டிய சூசையை நினையாமல் மறந்து விட்டான்.

அதிகாரம் 41

1 இரண்டு ஆண்டுகளுக்குப் பின், பாரவோன் ஒரு கனவு கண்டான். அது என்னவென்றால்: தான், நதிக் கரையில் நிற்பதாகக் கண்டான்.

2 நதியிலிருந்து அதிக அழகும் கொழுமையுமுள்ள ஏழு பசுக்கள் கரையேறி வந்து சதுப்பு நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்தன.

3 பிறகு மெலிந்து நலிந்திருந்த வேறு ஏழு பசுக்கள் நதியிலிருந்து எறிவந்து, கரையிலே பசும்புல் இருந்த இடங்களில் மேய்ந்து கொண்டிருந்தன.

4 இவை அழகிய மேனியும் கொழுமையுமுள்ள ஏழு பசுக்களையும் விழுங்கி விட்டன. இதைக் கண்டு பாரவோன் விழித்துக் கொண்டான்.

5 மறுபடியும் அவன் தூங்கினான். தூக்கத்திலே மற்றொரு கனவு கண்டான். அதாவது: ஒரே தாளிலிருந்து செழுமையும் அழகுமுள்ள ஏழு கதிர்கள் ஓங்கி வளர்ந்திருந்தன.

6 பின், வாடிச் சாவியாய்ப் போயிருந்த வேறு ஏழு கதிர்களும் வெளிப்பட்டு,

7 முந்திய செழுமையும் அழுகுமுள்ள நல்ல கதிர்களை விழுங்கி விட்டன. பாரவோன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான்.

8 பொழுது விடிந்த போது, அஞ்சித் திடுக்கிட்டு, எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்துக் கனவை விவரித்துச் சொன்னான். ஆனால், அதன் பொருளைச் சொல்ல ஒருவராலும் கூடாது போயிற்று.

9 அப்போது பானத்தலைவன், முன் தனக்கு நேரிட்டதை நினைத்து, பாரவோனை நோக்கி: என் குற்றத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

10 நம் அரசர் தம் ஊழியர் மீது கோபம் கொண்டு, அடியேனையும் அப்பத் தலைவனையும் படைத் தலைவரின் காவற் கிடங்கிலே அடைக்கக் கட்டளையிட்ட காலத்தில்,

11 அவனுக்கும் எனக்கும் இனி நிகழப் போவதைக் காட்டும் வெவ்வேறு கனவை நாங்கள் இருவரும் கண்டோம்.

12 அங்கே படைத்தலைவரின் ஊழியனாகிய எபிரேய இளைஞன் ஒருவன் இருந்தான். நாங்கள் அவனிடம் கனவுகளைத் தெரிவித்தோம்.

13 அவன் எங்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நிறைவேறின, உண்மையிலேயே, நான் திரும்ப என் பதவியை பெற்றேன்; மற்றவன் கழுமரத்திலே தூக்கப் பட்டான் என்றான்.

14 அதைக் கேட்டு அரசன் சூசையை அழைத்து வரக் கட்டளையிட்டான். காவற் கிடங்குகளிலிருந்து அவனை விரைவில் கொண்டு வந்து, சவரம் பண்ணிப் புத்தாடை அணிவித்து, அரசன் முன் நிறுத்தினர்.

15 அரசன் அவனை நோக்கி: நான் கனவுகள் கண்டேன். அவற்றின் பொருளைச் சொல்ல ஒருவருமில்லை. நீயோ, அப்படிப்பட்டவற்றிற்கு மிக்க அறிவு நுணுக்கத்தோடு பொருள் சொல்ல வல்லவன் என்று கேள்விப் பட்டேன் என்றான்.

16 சூசை மறுமொழியாக: நானல்ல, கடவுளே பாரவோனுக்குச் சாதகமான விளக்கம் அளிப்பார் என்றான்.

17 அப்பொழுது பாரவோன் தான் கண்டதை விவரிக்கத் தொடங்கினான்: நான் நதிக்கரையில் நிற்பது போல் கண்டேன்.

18 மிக அழகும் செழுமையுமிக்க ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளிப்பட்டு, சதுப்பு நில மேய்ச்சல்களில் பசும் புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது,

19 வேறு ஏழு பசுக்கள் அவற்றைத் தொடர்ந்து வந்தன. இவை எவ்வளவு மெலிந்து நலிந்திருந்தன. என்றால், அவற்றைப்போல் எகிப்து நாடெங்கும் நான் ஒரு போதும் கண்டதில்லை.

20 இவை முன் சொன்ன பசுக்களை விழுங்கி விட்டன.

21 ஆயினும், சிறிதுகூட வயிறு புடைக்காமல் முன்போலவே எலும்பும் தோலுமாகத் தள்ளாடிக் கொண்டிருந்தன. நான் அந்நேரம் விழித்துக் கொண்டு, மறுபடியும் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்தவனாய்,

22 வேறொரு கனவு கண்டேன்: செழுமையும் அழகுமுள்ள ஏழு கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்திருந்தன.

23 பின் வாடிச் சாவியாய்ப் போயிருந்த வேறு ஏழு கதிர்கள் தாளினின்று முளைத்தன.

24 இவை முன் சொன்ன எழிலும் செழுமையும் உள்ள நல்ல கதிர்களை விழுங்கிவிட்டன. இக்கனவை நான் மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால், அதன் பொருளைச் சொல்ல எவனாலும் இயலவில்லை என்றான்.

25 அதற்கு சூசை: அரசரின் இரு கனவுகளும் ஒன்றுதான், கடவுள் எது செய்யக் கருதியிருக்கிறாரோ, அதைப் பாரவோனுக்கு அறிவித்திருக்கிறார்.

26 அழகிய ஏழு பசுக்களும், நிறைந்த மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களும் ஏழு வளமான ஆண்டுகளாம். அவ்விரண்டு கனவுகளுக்கும் கருத்து ஒன்றே.

27 இவற்றின் பின் (கரையில்) ஏறிய எலும்பும் தோலுமான ஏழு பசுக்களும், சாவியாய் விளையாத ஏழு கதிர்களும் வரவிருக்கும் பஞ்சத்திற்குரிய ஏழு ஆண்டுகளாம்.

28 அவை எந்த முறைப்படி நிறைவேறுமென்று கேட்டால்,

29 இதோ எகிப்து நாடெங்கும் மிக வளமான ஏழு ஆண்டுகள் வரப் போகின்றன;

30 அதன்பின் வேறு ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும். அது எப்படிப்பட்ட பஞ்சமென்றால், முந்தின வளமுள்ள ஆண்டுகள் மறக்கப்பட்டுப் போம். அது நாடு முழுவதையும் பாழாக்கும்.

31 வறுமையின் மிகுதியால் செழிப்பின். மிகுதி தோல்வியுறும்.

32 நீர் கண்ட இரண்டாவது கனவும் மேற்சொன்ன நிகழ்ச்சியைக் குறித்ததேயாம். அது கடவுளால் செய்யப்படுமென்றும், மிக விரைவில் நிறைவேறுமென்றும் சொல்வதற்கு ஆதாரமாய் இருக்கிறது.

33 ஆதலால், அரசர் இப்போது செய்ய வேண்டியது யாதெனில், அவர் அறிவும் திறமையுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, அவனை எகிப்து நாட்டிற்குத் தலைவனாய் நியமிக்கக் கடவார்.

34 இவன் எல்லா நாடுகளிலும் செயலர்களை நியமித்து, நல்ல விளைச்சலுள்ள மேற்படி ஏழாண்டுகளில் விளைச்சலின் ஐந்திலொரு பகுதியை வாங்கி,

35 இப்போதே வரவிருக்கும் ஆண்டுகளிலே களஞ்சியங்களில் சேமித்து வைக்கக்கடவான். இவ்விதமாய், விளையும் தானியங்களெல்லாம் பாரவோன் அதிகாரத்தால் நகரங்களிலே சேகரிக்கப் பட்டிருக்க வேண்டும்.

36 அவவிதமாய், எகிப்தை வருத்தும் ஏழாண்டுப் பஞ்சத்திற்காகத் தானியங்கள் தயாராயிருந்தால், நாடு பஞ்சத்தினால் பாழாகாது என்றான்.

37 இந்த வார்த்தை பாரவோனுக்கும் அவன் அமைச்சர் அனைவருக்கும் பிரியமாயிற்று.

38 அவன் அவர்களை நோக்கி: தெய்வ ஞானத்தால் நிறைந்த இந்த மனிதனைப்போல் வேறொருவன் கிடைக்கக் கூடுமோ என்று சொல்லி, பின் சூசையை நோக்கி:

39 நீர் கூறிய எல்லாவற்றையும் கடவுளே உமக்குத் தெரிவித்திருக்க, உம்மிலும் அதிக ஞானமுடையவனேனும், உமக்கு ஒத்தவனேனும் எனக்குக் கிடைக்கக் கூடுமோ?

40 நீரே என் அரண்மனைக்குத் தலைவனாய் இருப்பீர். உமது கட்டளைக்கு மக்கள் எல்லாரும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். அரியணையைப் பொறுத்த மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன் என்றான்.

41 மீண்டும் பாரவோன் சூசையை நோக்கி: இதோ எகிப்து நாடு முழுவதற்கும் உம்மைத் தலைவனாக நியமிக்கிறேன் என்று சொல்லி,

42 தன் கையினின்று முத்திரை மோதிரத்தைக் கழற்றி அதை அவன் கையில் போட்டு, மெல்லிய பட்டு நூலால் நெய்யப்பட்ட ஓர் ஆடையை அவனுக்கு உடுத்தி, பொன் கழுத்தணியை அவன் கழுத்திலே மாட்டி,

43 அவனைத் தன் இரண்டாம் தேரின்மேல் ஏற்றி: இவரைத் தெண்டனிட்டுப் பணியுங்கள். இவரே எகிப்து நாடு முழுவதற்கும் தலைவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று கட்டியக்காரன் கூறும்படி (கட்டளையிட்டான்).

44 மேலும், அரசன் சூசையை நோக்கி: நான் பாரவோன்; உம்முடைய உத்தரவின்றி எகிப்து நாடெங்கும் எவனாவது கையையோ காலையோ அசைக்கக் கூடாது என்றான்.

45 பின், (பாரவோன்) அவனுடைய பெயரையும் மாற்றி, எகிப்திய மொழியில் அவனைப் பூபாலன் என்று அழைத்து, எலியோப்பொலிஸின் குருவாகிய புத்திபாரே என்பவன் புதல்வியான ஆஸ்னேட்டை அவனுக்கு மனைவியாக அளித்தான். அப்போது சூசை எகிப்து நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.

46 (அவர் அரசனாகிய பாரவோனின் அரண்மனையில் பணி ஏற்ற போது அவருக்கு வயது முப்பது). அவர் எகிப்திலுள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்த்து வந்தார்.

47 அதற்குள்ளே ஏழாண்டுகளின் மிகுதியான விளைச்சல் தொடங்கியது. அரிக்கட்டாய் அறுக்கப்பட்ட பயிரின் தானியங்கள் களஞ்சியங்களில் சேர்க்கப்பட்டன.

48 அவ்வண்ணமே மிகுதியான தானியங்களை அந்தந்த நகரங்களில் சேர்த்து வைத்தார்கள்.

49 கோதுமை எவ்வளவு மிகுதியாக விளைந்ததென்றால், கடற்கரை மணலுக்கு ஒப்பாகவும் அளவுக்கு அடங்காத திரளாகவும் இருந்தது.

50 பஞ்சம் வருமுன்னே, சூசைக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களை எலியோப்பொலிஸின் குருவாகிய புத்திபாரேயின் புதல்வியாகிய ஆஸ்னேட் அவனுக்குப் பெற்றாள்.

51 சூசை: எல்லாத் துன்பங்களையும் எம் தந்தையின் வீட்டையும் கடவுள் மறக்கச் செய்தார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசேஸ் என்று பெயரிட்டார்.

52 பின்: நான் வறியவனாய் இருந்த இந்த நாட்டிலே கடவுள் என்னை விருத்தியாக்கினார் என்று சொல்லி, இளையவனுக்கு எபிராயிம் என்று பெயரிட்டார்.

53 எகிப்தில் உண்டான வளமான ஏழாண்டுகளும் முடிந்த பின், சூசை முன்னறிந்து சொல்லியபடி,

54 ஏழாண்டுப் பஞ்சம் தெடங்கியது. உலகமெங்கும் பஞ்சம் உண்டாயிற்று; ஆயினும், எகிப்து நாடெங்கும் உணவு கிடைத்தது.

55 பஞ்சம் சூழ்ந்த போது, எகிப்திய மக்கள் உணவுக்காகப் பாரவோனிடம் வந்து ஓலமிட, அவன்: சூசையிடம் சென்று, அவர் உங்களுக்குச் சொல்கிறபடி செய்யுங்கள் என்று அவர்களை அனுப்பி வந்தான்.

56 வரவர எல்லா நாடுகளிலும் பஞ்சம் அதிகமாகிவிட்டது. ஆகையால், சூசை களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விலைக்குக் கொடுத்து வந்தார். ஏனென்றால், அவர்களும் பஞ்சத்தால் வருந்தினார்கள்.

57 அன்றியும், பிற நாட்டாரும் பஞ்சத்தின் கொடுமையை முன்னிட்டுத் தானியங்களை விலைக்கு வாங்குவதற்கு சூசையிடம் வந்தார்கள்.

அதிகாரம் 42

1 எகிப்தில் தானியம் விற்கப்படுவதை யாக்கோபு கேள்விப்பட்டு, தன் புதல்வர்களை நோக்கி: நீங்கள் கவலையின்றி இருக்கலாமா?

2 எகிப்திலே கோதுமை விற்கப் படுகிறது என்று கேள்வி. நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நீங்கள் அவ்விடத்திற்குப் போய், நமக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு வாருங்கள் என்றான்.

3 ஆகையால், சூசையின் சகோதரர் பத்துப் பேரும் தானியம் வாங்கும் பொருட்டு எகிப்துக்குப் போனார்கள்.

4 ஆனால், பெஞ்சமினுக்கு வழியில் ஏதேனும் மோசம் வரக்கூடுமென்று அவனுடைய சகோதரருக்குச் சொல்லி, யாக்கோபு அவனைப் போக விடாமல் வீட்டிலே நிறுத்திக் கொண்டான்.

5 யாக்கோபின் புதல்வர்கள், (தானியம்) வாங்கப் போன மற்றும் பலரோடு எகிப்து நாட்டிற்குள் புகுந்தனர். உண்மையிலே கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியது.

6 சூசையோ எகிப்து நாட்டுக்குத் தலைவராய் இருந்தார். அவர் விருப்பப்படியே மக்களுக்குத் தானியங்கள் விலைக்குக் கொடுக்கப்படும். அவருடைய சகோதரர்கள் வந்து, தரையில் விழுந்து தம்மை வணங்கும் பொழுது,

7 அவர் அவர்களை இன்னொரென்று தெரிந்து கொண்டார். ஆயினும்; அறியாதவரைப் போல் மிகக் கடுமையுடன் அவர்களோடு பேசி: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று வினவினார். அவர்கள்: கானான் நாட்டிலிருந்து உயிர் பிழைக்கத் தேவையான உணவுப் பொருட்கள் வாங்கும்படியாக வந்தோம் என்று மறுமொழி கூறினர்.

8 சூசை அவர்களைத் தம் சகோதரர் என்று கண்டுகொண்டார். ஆயினும் அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை.

9 ஆகையால், தாம் முன்பு கண்ட கனவுகளை நினைவுகூர்ந்து அவர்களை நோக்கி: நீங்கள் ஒற்றர்கள். நாடு எங்கே வலுவிழந்து இருக்கிறதென்று பார்க்க வந்திருக்கிறீர்கள் என்றார்.

10 அதற்கு அவர்கள்: தலைவ, அப்படி அல்ல. உம் அடியார்களாகிய நாங்கள் தானியம் வாங்கவே வந்துள்ளோம்.

11 நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் சமாதானப் பிரியர். அடியோர் யாதொரு துரோக்கத்தையும் சிந்தித்தவர்கள் கூட அல்லர் என்றனர்.

12 அவர்: அப்படி அல்ல. இந்நாட்டில் அரண் இல்லாத இடங்களைப் பார்த்தறியும்படி வந்திருக்கிறீர்கள் என்று சொன்னார்.

13 அப்பொழுது அவர்கள்: அடியோர் பன்னிரண்டு சகோதரர்கள். நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் மக்கள். எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கிறான். மற்றொருவன் காலமானான் என்றனர்.

14 சூசை: நான் முன்பு சொன்னது உண்மையே. நீங்கள் ஒற்றரே தாம்.

15 நான் இப்போதே உங்களைச் சோதிக்கப் போகிறேன். பாரவோனின் உயிர் மேல் ஆணை! உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுப் போவதில்லை.

16 அவனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். நீங்கள் சொன்னது மெய்யோ பொய்யோ என்று நான் சான்று பெறும் வரை நீங்கள் விலங்கிலே கிடக்கவேண்டும். இல்லாவிட்டால், பாரவோனின் உயிர்மேல் ஆணை: நீங்கள் ஒற்றர்கள் தான் என்றான்.

17 அப்படியே அவர்களை மூன்று நாள் காவலிலே வைத்தார்.

18 மூன்றாம் நாள் அவர்களைச் சிறையிலிருந்து அழைப்பித்து: நான் சொல்லுகிறபடி செய்யுங்கள்; செய்தால் பிழைக்கலாம். ஏனென்றால், நான் தெய்வ பயம் உள்ளவன்.

19 நீங்கள் உண்மையிலேயே குற்றம் அற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறையில் கட்டுண்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, வாங்கின தானியத்தை உங்கள் வீட்டுக்குக் கொண்டு போகலாம்.

20 பின்னர் உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். வந்தால், நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். அப்படியெனின், நீங்கள் சாக மாட்டீர்கள் என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.

21 அப்போது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: இந்த ஆபத்து நமக்கு நேர்ந்தது முறையே. ஏனென்றால், நம் சகோதரனுக்குத் துரோகம் செய்துள்ளோமே! அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக் கொண்ட போது, அவனுடைய மனத் துயரைக் கண்டும் நாம் கேளாமல் போனோமே! அதனாலல்லவா இந்தத் துன்பம் நமக்கு வந்தது என்றனர்.

22 அவர்களில் ஒருவனான ரூபன் அவர்களை நோக்கி, சிறுவனுக்கு விரோதமாய்த் தீங்கு யாதொன்றும் செய்யாதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமல் போனீர்களே! இதோ, அவனுடைய இரத்தம் நம்மைப் பழி வாங்குகிறது என்றான்.

23 சூசை மொழிபெயர்ப்பாளனைக் கொண்டு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆதலால், தங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியாதிருந்தனர்.

24 அப்போது அவர் சிறிதுநேரம் ஒதுங்கிப் போய் அழுதார். பின் திரும்பி வந்து, அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில், சிமையோனைப் பிடித்து, அவர்கள் கண் முன்பாகவே கட்டுவித்தார்.

25 பின் அவர்களுடைய சாக்குகளைக் கோதுமையால் நிரப்பவும், அவனவன் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே இட்டு வைக்கவும், வழிக்கு வேண்டிய உணவுகளைக் கொடுக்கவும் தம் ஊழியருக்குக் கட்டளை இட்டார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.

26 அவர்கள் தங்கள் கழுதைகளின்மேல் தானியத்தை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்கள்.

27 பின் அவர்களில் ஒருவன் சாவடியில் தன் கழுதைக்குத் தீனி போட வேண்டித் தன் சாக்கைத் திறக்கவே, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கக் கண்டு தன் சகோதரரை நோக்கி:

28 என் பணம் திரும்ப வைக்கப்பட்டுள்ளது; இதோ சாக்கிலே இருக்கிறது என்றான். அவர்களோ திடுக்கிட்டு மயங்கிக் கலங்கி, ஒருவரோடொருவர்: கடவுள் நமக்கு இவ்வாறு செய்திருப்பது என்னவோ என்றனர்.

29 பின், அவர்கள் கானான் நாட்டிலே தங்கள் தந்தையாகிய யாக்கோபிடம் வந்து சேர்ந்து, தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் சொல்லத் தொடங்கினர்.

30 அதாவது, அந்நாட்டின் தலைவர், நாங்கள் ஒற்றர் என்று எண்ணி எங்களிடம் கொடூரமாய்ப் பேசினார்.

31 நாங்களோ, அவரைப் பார்த்து: நாங்கள் குற்றமற்றவர்கள்; வஞ்சகர் அல்லர்.

32 நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரண்டு சகோதரர். ஒருவன் காலமானான். இளையவன் கானான் நாட்டிலே எங்கள் தந்தையோடு இருக்கிறான் என்று சொன்னோம்.

33 அவர்: நீங்கள் குற்றமற்றவரா இல்லையா என்பதை நான் உறுதிப்படுத்தப் போகிறேன். எவ்வாறென்றால், உங்கள் சகோதரர்களுள் ஒருவனை நீங்கள் என்னிடம் விட்டு வையுங்கள். பின் உங்கள் குடும்பத்துக்கு வேண்டிய தானியங்களை வாங்கிக் கொண்டு போங்கள்.

34 உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அதன் மூலம் நீங்கள் ஒற்றர் அல்லர் என்று நானும் கண்டுகொள்வேன்; நீங்களும் காவலில் வைக்கப்பட்ட சகோதரனைப் பெற்றுக் கொள்ளலாம். பின் உங்கள் விருப்பப்படி எதையும் வாங்கலாம் என்றார் என்றனர்.

35 அவர்கள் இவற்றைச் சொல்லி தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டிய போது, அவனவன் சாக்கின் வாயிலே அவனவன் பணமுடிப்பு காணப்பட்டது. அதைக் கண்டு அவர்கள் எல்லாருக்கும் திகில் உண்டாயிற்று.

36 தந்தை யாக்கோபு மக்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாகச் செய்தீர்கள்! சூசை உயிர் இழந்தான்; சிமையோனோ விலங்குண்டு கிடக்கிறான்; பெஞ்சமினையும் கூட்டிக் கொண்டு போகவிருக்கிறீர்களே! இந்தத் தீமைகளெல்லாம் என் மேல் சுமந்தன என்றான்.

37 அதற்கு ரூபன்: நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டு வராதிருப்பேனாகில், என் இரு புதல்வர்களையும் கொன்று விடும். அவனை என் கையில் ஒப்புவியும்; நான் அவனை உமக்குத் திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பேன் என்றான்.

38 அவனோ: என் மகன் உங்களோடு போகவிடேன். இவன் தமையன் இறந்து போனான்; இவன் ஒருவனே எஞ்சி இருக்கிறான். நீங்கள் போகிற ஊரிலே இவனுக்கு மோசம் ஏதும் நேரிட்டால், நீங்கள் நரைமயிருள்ள என்னை மனச் சஞ்சலத்துடனே பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றான்.

அதிகாரம் 43

1 இதற்குள்ளாகப் பஞ்சம் நாடு முழுவதிலும் மிகக் கடுமையாய் இருந்தது. எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட தானியம் செலவழிந்த போது, யாக்கோபு தன் புதல்வர்களை நோக்கி:

2 நீங்கள் திரும்பப் போய் நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள் என்றான்.

3 அதற்கு யூதா: அந்த மனிதர் ஆணையிட்டு, உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்துக் கொண்டு வராவிட்டால் நீங்கள் என் முகத்திலே விழிக்கவே கூடாது என்று எங்களுக்குக் கூறி விட்டார்.

4 ஆதலால், நீர் அவனை எங்களோடு அனுப்ப இசைந்தால் தான் நாங்கள் அனைவரும் சேர்ந்து சென்று உமக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு வருவோம்.

5 நீர் அவனை அனுப்ப இசையாவிட்டால், நாங்கள் போகமாட்டோம். ஏனென்றால், நாங்கள் உமக்குப் பல முறை சொல்லியுள்ளது போல், அந்த மனிதர்: உங்கள் இளைய சகோதரன் வராவிட்டால் நீங்கள் என் முகத்தில் விழிக்க முடியாது என்று திட்டவட்டமாய்ப் பேசினார் என்று மறுமொழி சொன்னான்.

6 அது கேட்டு, இஸ்ராயேல் அவர்களை நோக்கி: உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் உண்டென்று நீங்கள் அவருக்கு ஏன் அறிவித்தீர்கள்? அஃது எனக்குத் துன்பமாய் முடிந்ததே என்று முறையிட்டான்.

7 அவர்கள்: அந்த மனிதர் நம் பரம்பரையைக் குறித்து விவரமாய்க் கேட்டார். உங்கள் தந்தை உயிரோடு இருக்கிறாரா? உங்களுக்கு வேறு சகோதரன் உண்டா? என்று வினவினதற்கு, நாங்கள் தக்கபடி பதில் சொன்னோம். உங்கள் சகோதரனை உங்களோடு கூட இங்கே கொண்டு வாருங்களென்று அவர் சொல்லப் போகிறாரென்பதை நாங்கள் அறிந்திருக்கக் கூடுமோ என்று மறுமொழி கூறினர்.

8 மேலும் யூதா தன் தந்தையை நோக்கி; நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி நாங்கள் புறப்பட்டுப் போகவே வேண்டும். தம்பியை என்னோடு அனுப்பும்.

9 நானே அவனுக்குப் பொறுப்பு நான் அவனை உம்மிடம் கொண்டு வந்து ஒப்புவிக்காமல் இருப்பேனாயின், எந்நாளும் நான் உமக்கு விரோதமான பாதகம் செய்தவனாய் இருக்கக் கடவேன்.

10 நாங்கள் தாமதியாதிருந்திருப்போமாயின், இதற்குள்ளே இரண்டாம் முறை போய்த் திரும்பி வந்திருக்கலாமே என்றான்.

11 அதைக் கேட்டு, அவர்கள் தந்தை இஸ்ராயேல் அவர்களை நோக்கி: அவ்வளவு அவசியமானால் நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். ஆனால், இந்த நாட்டில் கிடைக்கும் உயர்ந்த பொருட்களிலே சிலவற்றை உங்கள் பெட்டிகளிலே கொண்டு போங்கள். கொஞ்சம் குங்கிலியம், தேன், பிசின், தைலம், வெள்ளைப் போளம், தெரெபிண்ட் கொட்டைகள், வாதுமைப் பருப்பு ஆகியவற்றை அம்மனிதருக்குக் காணிக்கையாகக் கொண்டு போங்கள்.

12 மேலும், இருமடங்கு பணத்தைக் கையிலே வைத்துக் கொள்வதுமன்றி, சாக்குகளில் கிடைத்த பணம் ஒரு வேளை தவறுதலாய் வந்திருக்குமோ என்னவோ என்றெண்ணி, அதையும் திரும்பக் கொண்டு போங்கள்.

13 உங்கள் தம்பியையும் அழைத்துக் கொண்டு அந்த மனிதரிடம் மறுபடியும் போங்கள்.

14 எல்லாம் வல்ல என் கடவுள் அந்த மனிதர் முன்னிலையில் உங்களுக்குத் தயவு கிடைக்கும்படியும், சிறைக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள உங்கள் சகோதரனும் இந்தப் பெஞ்சமினும் உங்களோடு கூடத் திரும்பி வரும்படியும் அருள் செய்வாராக. நானோ, பிள்ளைகளை இழந்த ஏழை போல் இருப்பேனே (என்றான்).

15 அவர்கள் அவ்வாறே செய்து, காணிக்கைகளையும் இருமடங்கு பணத்தையும் எடுத்துக் கொண்டு, பெஞ்சமினையும் உடன் அழைத்துக் கொண்டு, எகிப்துக்குப் போய் சூசையின் முன் வந்து நின்றனர்.

16 சூசை அவர்களையும் அவர்களுடன் பெஞ்சமினையும் கண்டவுடன், தன் வீட்டுக் கண்காணிப்பாளனை நோக்கி: நீ இம்மனிதர்களை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு போய், மிருகங்களை அடித்துப் பெரியதொரு விருந்து தயார் செய். எனென்றால், இவர்கள் நண்பகல் உணவை இன்று என்னோடு உண்பார்கள் என்றார்.

17 அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டவற்றைச் செய்து, அம்மனிதர்களை வீட்டினுள் அழைத்துப் போனான்.

18 அவர்கள் அங்கே போய்த் திடுக்கிட்டுப் பயந்து, ஒருவரொருவரோடு பேசி: முன் நம்முடைய சாக்குகளில் நாம் கொண்டு போன பணத்தின் பொருட்டு அவர் நம் மேல் இல்லாத குற்றம் சாட்டி, நம்மையும் கழுதைகளையும் கட்டாயமாய்ப் பிடித்துச் சிறைப்படுத்தும்படி அல்லவோ அழைப்பித்திருக்கிறார் என்றனர்.

19 ஆகையால், அவர்கள், வீட்டு வாயிற்படியிலேயே கண்காணிப்பாளனை அணுகி:

20 ஐயா, எங்களுக்குச் செவிமடுக்க வேண்டுகிறோம். முன் ஒருமுறை நாங்கள் தானியம் வாங்கும் படி வந்திருந்தோம்.

21 அவற்றை வாங்கிக் கொண்டு சாவடி போய்ச் சேர்ந்து எங்கள் சாக்குகளைத் திறந்த போது, சாக்குகளின் வாயிலே பணம் இருக்கக் கண்டோம். அதே நிறையின்படி அதைத் திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.

22 அன்றியும் எங்களுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு வேறு பணமும் கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் இட்டவர் இன்னாரென்று எங்களுக்கே தெரியாது என்றனர்.

23 அதற்கு அவன்: அமைதியாய் இருங்கள். அஞ்சாதீர்கள். உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர் உங்கள் சாக்குகளில் அந்தப் பணத்தை வைத்திருப்பார். ஏனென்றால், நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை நான் சரியாய்ப் பெற்றுக் கொண்டேன் என்று சொல்லி, சிமையோனை அழைத்து வந்து அவர்களிடம் விட்டான்.

24 மேலும், அவன் அவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் தங்கள் கை கால்களைக் கழுவிய பின், அவன் அவர்களுடைய கழுதைகளுக்குத் தீனிப் போட்டான்.

25 அவர்களோ, நண்பகல் வேளையில் சூசை வரப்போகிறாரென்று காணிக்கைகளைத் தயார் செய்து கொண்டு காத்திருந்தனர். ஏனென்றால், தாங்கள் அங்கேயே உணவு அருந்தப் போவதாகக் கேள்விப் பட்டிருந்தனர்.

26 ஆகையால், சூசை வீட்டுக்கு வந்த போது, அவர்கள் தங்கள் காணிக்கைகளைக் கையிலேந்தி அவருக்கு ஒப்புக்கொடுத்து, குப்புற விழுந்து வணங்கினர்.

27 அவரோ, சாந்தத்தோடு அவர்களுக்குப் பதிலுபசாரம் செய்து: நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த முதிர் வயதான உங்கள் தந்தை இப்பொழுது நலமாய் இருக்கிறாரா? இன்னும் உயிரோடிருக்கிறாரா என்று விசாரித்தார்.

28 அவர்கள்: தங்கள் அடியானாகிய எங்கள் தந்தை நலமுடன் இருக்கிறார்; இன்னும் உயிரோடிருக்கிறார் என்று பதில் கூறித் தெண்டனிட்டு வணங்கினர்.

29 சூசை கண்களை ஏறெடுத்துத் தம் உடன்பிறந்த சகோதரனாகிய பெஞ்சமினைப் பார்த்து நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த உங்கள் இளைய தம்பி இவன்தானோ என்று கேட்டபின்: தம்பி, கடவுள் உனக்கு அருள் புரிவாராக என்றார்.

30 சூசை தம் தம்பியைக் கடதும் மனம் நெகிழ்ந்தார், தம் கண்களில் கண்ணீர் பெருகக் கண்டு விரைந்து பக்கத்திலுள்ள தம் அறைக்குள் சென்று அழுதார்.

31 பின் முகத்தைக் கழுவிக் கொண்டு திரும்பவும் வெளியே வந்து: உணவு பரிமாறுங்கள் என்றார்.

32 அது பரிமாறப்பட்டதும், சூசை தனிப்படவும், அவர் சகோதரர்கள் தனியாகவும், கூடச் சாப்பிட இருந்த எகிப்தியர் தனியாகவும் (உட்கார்ந்தனர்). ஏனென்றால் எகிப்தியர் எபிரேயரோடு சாப்பிட மாட்டார்கள்; அப்படிச் சாப்பிடுவது தீட்டென்று எண்ணுவார்கள்.

33 அப்படியே சூசை முன் அவர்களில் மூத்தவன் தன் உரிமைப்படி முதலாகவும், மற்றவர் அவரவர் வயதின்படி வரிசையாகவும் அமர்ந்தனர்.

34 அவர்கள் மிகவும் வியப்புற்று, அவரால் தங்களுக்குப் பரிமாறப்பட்ட பங்குகளை வாங்கிக் கொண்டனர், உண்மையிலேயே, அவர்களுடைய பங்குகளைக் காட்டிலும் பெஞ்சமினுக்குக் கிடைத்த பங்கு ஐந்து மடங்கு அதிகமாய் இருந்தது. அவர்கள் அவரோடு திருப்தியாகப் பானமும் பருகினார்கள்.

அதிகாரம் 44

1 சூசை தம் வீட்டுக் கண்காணிப்பாளனை நோக்கி: அவர்களுடைய சாக்குகள் கொள்ளுமளவுக்குத் தானியத்தால் நிரப்பி, அவனவன் பணத்தை (அவனவன்) சாக்கின் வாயில் வைத்துக் கட்டிவிடு.

2 இளையவனுடைய சாக்கின் வாயில் எனது வெள்ளிக் கோப்பையையும், தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் வைத்துக் கட்டுவாயாக என்று கட்டளை இட்டார். சூசை சொன்னவாறே அவனும் செய்தான்.

3 காலையில் சூரியன் உதித்ததும் அவர்கள் தங்கள் கழுதைகளோடு அனுப்பி வைக்கப்பட்டனர்.

4 அவர்கள் நகரை விட்டுச் சிறிது தூரம் போயிருப்பர். அப்பொழுது சூசை தம் வீட்டுக் கண்காணிப்பாளனை அழைத்து: நீ எழுந்து அம்மனிதர்களைப் பின் தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்வதென்ன?

5 நீங்கள் திருடிவந்துள்ள பாத்திரம் எனது தலைவர் குடிக்க உபயோகிக்கும் கோப்பை; அதிலேயே அவர் சகுனம் பார்த்தும் வருகிறார். நீங்கள் மிக முறையற்ற செயலைச் செய்துள்ளீர்கள் என்று சொல்வாய் என்றார்.

6 அவனும் அப்படியே செய்தான்; அவர்களைப் பிடித்து, தலைவர் சொல்லக் கட்டளையிட்ட வார்த்தைகளை எல்லாம் சொன்னான்.

7 அதற்கு, அவர்கள்: ஐயா, தாங்கள் இப்படிப் பேச வேண்டியதேன்? அடியோர்கள் அத்தகைய தீச்செயலைச் செய்திருப்போம் என்று நினைத்தல் முறையா?

8 நாங்கள் சாக்குகளில் வாயில் கண்டெடுத்த பணத்தைக் கானான் நாட்டினின்று உம்மிடம் கொண்டு வந்தோமே! அப்படியிருக்க, நாங்கள் உம் தலைவர் வீட்டிலே தங்கமாவது வெள்ளியாவது திருடிக் கொண்டு போவோமென்று எண்ணுவது எப்படி?

9 உம் அடியோர்களுக்குள்ளே எவனிடம் அது காணப்படுமோ அவன் கொலையுண்ணக் கடவான்; நாங்களும் எங்கள் தலைவருக்கு அடிமைகளாகக் கடவோம் என்று பதில் சொன்னார்கள்.

10 அது கேட்டு, அவன்: உங்கள் தீர்மானப்படியே ஆகட்டும். அது எவனிடத்தில் அகப்படுமோ அவன் எனக்கு அடிமையாகக் கடவான்; மற்றவர்கள் குற்றம் அற்றவர்களாய் இருப்பீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னான்.

11 அப்பொழுது அவர்கள் விரைந்து சாக்குகளைத் தரையில் இறக்கி வைத்து, அவனவன் தன் தன் சாக்கைத் திறந்தான்.

12 மூத்தவன் சாக்கு முதல் இளையவன் சாக்கு வரை அவன் சோதித்த போது, அந்தக் கோப்பை பெஞ்சமின் சாக்கிலே காணப்பட்டது.

13 அப்பொழுது அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, கழுதைகளின் மேல் சுமையை ஏற்றி நகருக்குத் திரும்பினர்.

14 சகோதரர் பின் தொடர, யூதா சூசையிடம் வந்தான். (சூசை அது வரை அங்கேயே இருந்தார்.) எல்லாரும் அவருக்கு முன் தரையில் விழுந்தனர்.

15 சூசை அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் இப்படிச் செய்யத் துணிந்தீர்கள்? சகுனச் சாத்திரத்தில் என்னைப் போன்ற மனிதன் இல்லையென்று நீங்கள் அறியாதிருக்கிறீர்களோ என்று வினவினார்.

16 யூதா அவனை நோக்கி: தங்களுக்கு அடியோர்கள் என்ன மறுமொழி சொல்லுவோம்? அல்லது என்ன தான் பேசுவோம்? எவ்வித நியாயந்தான் கூறக்கூடும்? கடவுளே அடியோர்களின் அக்கிரமத்தை விளங்கப் பண்ணினார்! இதோ நாங்களும், எவனிடத்தில் கோப்பை கண்டெடுக்கப்பட்டதோ அவனும் தங்களுக்கு அடிமைகளானோம் என்று சொன்னான். அது கேட்டு சூசை:

17 அப்படிப்பட்ட செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக. கோப்பையைத் திருடியவனே எனக்கு அடிமையாகக் கடவான். நீங்களோ, சுதந்திரமுள்ளவர்களாய் உங்கள் தந்தையிடம் போங்கள் என்றார். அதன் மேல்,

18 யூதா இன்னும் அவனன்டை நெருங்கி, துணிந்து: துரை அவர்களே, அடியேன் கூறவிருக்கும் வார்த்தைக்கு அருள் கூர்ந்து செவிமடுப்பீராக. என்மீது கோபம் கொள்ள வேண்டாம். ஏனென்றால், நீர் பாரவோனுக்கு இரண்டாவதாய் இருக்கிறீர்; எனது தலைவராய் இருக்கிறீர்.

19 உங்களுக்குத் தந்தையாவது (வேறு) சகோதரனாவது உண்டோ என்று உம் அடியோர்களை நீர் கேட்டீரே,

20 அதற்கு, நாங்கள் எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும் அவருக்கு முதிர்ந்த வயதில் பிறந்த ஓர் இளைஞனும் உண்டென்றும், இவனுடைய தமையன் இறந்து விட்டானென்றும், இவன் ஒருவன் மட்டுமே பெற்ற தாய்க்குப் பிள்ளையாய் இருப்பதனால் தந்தை இவன் மேல் அளவுகடந்த அன்பு கொண்டிருக்கிறாரென்றும் துரை அவர்களுக்குச் சொன்னோம்.

21 அப்பொழுது: அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அவனைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று உம் அடியோர்களுக்குச் சொன்னீர்.

22 நாங்கள் அந்த இளைஞன் தன் தந்தையை விட்டுப் பிரிய இயலாது; பிரிந்தால் அவர் இறந்து போவார் என்று சொன்னதற்கு, நீர்:

23 உங்கள் இளைய தம்பி உங்களோடு வராவிட்டால் என்னைக் காணமாட்டீர்கள் என்று அடியோர்களுக்குச் சொன்னீர்.

24 ஆகையால், நாங்கள் உமது ஊழியனாகிய எங்கள் தந்தையிடம் சேர்ந்து, தாங்கள் சொல்லிய யாவற்றையும் அவரிடம் விவரமாய்ச் சொன்னோம்.

25 அப்போது எங்கள் தந்தை: நீங்கள் திரும்பப் போய் நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கி வாருங்கள் என்றார்.

26 நாங்கள்: போக இயலாது; எங்கள் இளைய தம்பி எங்களோடு கூட வந்தால் புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாதே நாங்கள் அந்தப் பெரிய மனிதரின் முகத்தில் விழிக்கவும் துணியோம் என்றோம்.

27 அவர்: இராக்கேல் என்னும் என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளை (மட்டும்) பெற்றாளென்று உங்களுக்குத் தெரியுமே.

28 ஒருவன் வெளியே புறப்பட்டான். அவனை ஒரு கொடிய மிருகம் தின்று விட்டதென்று சொன்னீர்கள். இதுவரை அவன் காணப்படவேயில்லை.

29 இப்பொழுது நீங்கள் இவனை அழைத்துப் போகும் வழியில் இவனுக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டால், நரைத்த கிழவனாகிய என்னைத் துயரத்தினால், இறக்கச் செய்வீர்கள் என்றார்.

30 ஆகையால், நான் இளையவனை விட்டு உம் ஊழியராகிய எங்கள் தந்தையிடம் போய்ச் சேர்ந்தால், தம் உயிருக்குயிரான சிறுவன், எங்களோடு இல்லாதிருப்பதைக் கண்டு அவர் இறந்து போவார்.

31 இப்படி உம் அடியோர்கள் நரைத்த கிழவரைத் துயரத்தால் இறக்கச் செய்தவர்கள் ஆவோமன்றோ?

32 நானே நியாயப்படி உம் அடிமையாய் இருக்கக் கடவேனாக. (ஏனென்றால்,) அவனுக்குப் பொறுப்பு ஏற்றவன் நானே; அவனைத் திரும்ப கூட்டி வராவிட்டால், என் தந்தைக்கு எந்நாளும் பாதகம் செய்தவனாய் இருப்பேனென்று வாக்குறுதி கொடுத்தவனும் நானே.

33 ஆகையால், அடியேன் சிறுவனுக்குப் பதிலாய்த் தங்களுக்கு ஊழியம் செய்யும் அடிமையாய் இருப்பேன். சிறுவனையோ, அவனது சகோதரர்களோடு கூடப் போக விடும்படி மன்றாடுகிறேன்.

34 உண்மையில் நான் சிறுவனை விட்டுத் தந்தையிடம் போகவே மாட்டேன். போனால், தந்தைக்கு நேரிடும் அவதியைக் கண்ணால் எப்படிக் காண்பேன் என்றான்.

அதிகாரம் 45

1 (அப்பொழுது) சூசை தம் அருகே நின்ற அத்தனை பேருக்கு முன்பாகத் தம்மை அடக்கிக் கொள்ளக் கூடாமல், தாமும் தம் சகோதரரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்கையில் பிறர் ஒருவரும் இல்லாதிருக்கும் வண்ணம், மற்றவர்கள் எல்லாரும் வெளியே போகும்படி கட்டளையிட்டார்.

2 பின், எகிப்தியரும் பாரவோன் வீட்டாரும் கேட்கும் அளவுக்குத் தேம்பி அழுது,

3 தம் சகோதரர்களை நோக்கி: நானே சூசை! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா என்று அலறிக் கேட்டார். ஆனால், தம் சகோதரர்கள் திகிலடைந்து பதில் சொல்ல இயலாமலிருப்பது கண்டு,

4 அவர் அவர்களை அன்போடு நோக்கி: என் அண்டை வாருங்கள் என்றார். அவர்கள் பக்கத்தில் வந்த போது, அவர்: நீங்கள் எகிப்துக்குச் செல்வோரிடத்தில் விற்ற உங்கள் சகோதரனாகிய சூசை நான் தான்! அஞ்சாதீர்கள்.

5 நான் இந்நாட்டிற்கு வந்து சேருமாறு நீங்கள் என்னை விற்று விட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். ஏனென்றால், உங்கள் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, கடவுளே உங்களுக்கு முன்னே என்னை எகிப்துக்கு அனுப்பியருளினார்.

6 பூமியிலே பஞ்சம் தொடங்கி இரண்டாண்டு ஆயிற்று. இன்னும் ஐந்தாண்டுகள் வரையிலும் உழவும் அறுவடையும் நடந்தேறா.

7 ஆதலால், பூமியிலே உங்கள் இனம் ஒழியாமல் இருக்கும் படியாகவும் நீங்கள் வேண்டிய உணவுகளைப் பெற்றுப் பிழைக்கும்படியாகவும் அல்லவா கடவுள் உங்களுக்கு முன் என்னை இவ்விடத்திற்கு வரச் செய்தார்?

8 உங்கள் திட்டத்தால் அல்ல, கடவுள் திருவுளத்தாலே இவ்விடத்திற்கு நான் அனுப்பப்பட்டேன். அவரே என்னைப் பாரவோனுக்குத் தந்தையைப் போலவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து நாடு முழுவதற்கும் ஆட்சியாளராகவும், இருக்கச் செய்துள்ளார்.

9 நீங்கள் விரைவில் என் தந்தையிடம் சென்று சொல்ல வேண்டியதாவது: உம் புதல்வனாகிய சூசை உமக்குத் தெரிவிப்பது ஏதென்றால்: கடவுள் என்னை எகிப்து நாடு முழுவதற்கும் ஆட்சியாளராகச் செய்தார். நீர் சாகா வண்ணம் என்னிடம் வாரும்.

10 யெசேன் நாட்டில் குடியிருப்பீர். நீரும், உமது புதல்வர்களும், உம் புதல்வர்களின் புதல்வர்களும், உமது ஆடுமாடுகளோடும், உமக்குச் சொந்தமான (மற்ற) யாவற்றோடும் என் அண்மையிலே இருக்கலாம்.

11 (இன்னும் ஐந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும்.) உமக்கும், உம் குடும்பத்தாருக்கும், உமக்குள்ள யாவற்றிற்கும் சாவும் அழிவும் வராமல் உங்களை நான் பாதுகாத்து உணவளித்து வருவேன் என்று சொல்லச் சொன்னார் என்று சொல்லுங்கள்.

12 இதோ, உங்களோடு பேசுகிற வாய் என் வாய் தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பெஞ்சமின் கண்களும் காண்கின்றன.

13 நான் எகிப்திலே அடைந்துள்ள மாட்சி அனைத்தையும் என் தந்தைக்குச் சொல்லுங்கள். விரைந்து போய், அவர் என்னிடம் வருமாறு செய்யுங்கள் என்று கூறினார்.

14 பிறகு, தம் தம்பியாகிய பெஞ்சமினை அரவணைத்துக் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். இவனும் அப்படியே அவர் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.

15 பின், சூசை தம் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு, ஒவ்வொருவனையும் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார். இதன் பின்னரே அவர்கள் அவரோடு உரையாடத் துணிந்தனர்.

16 சூசையின் சகோதரர்கள் வந்துள்ளனர் என்ற செய்தி அரசனின் அரண்மனையில் வெளிப்படையாய்க் கூறப்பட்டவுடனே, பாரவோனும் அவன் வீட்டிலுள்ளோரும் அகமகிழ்ந்தனர்.

17 பாரவோன் சூசையை நோக்கி: நீர் உம் சகோதரர்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: நீங்கள் மிருகங்களின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குப் போய்,

18 அவ்விடமிருந்து உங்கள் தந்தையையும் இனத்தாரையும் கூட்டிக் கொண்டு என்னிடத்திற்கு வாருங்கள்; நான் உங்களுக்கு எகிப்தின் நன்மையெல்லாம் தருவேன்; நீங்கள் பூமியின் வளத்தைச் சாப்பிடுவீர்கள் என்பதாம் என்றான்.

19 மீண்டும் பாரவோன் சூசையை நோக்கி: உம் சகோதரர் தங்கள் பிள்ளைகளையும் மனைவிகளையும் அழைத்து வருவதற்காக எகிப்து நாட்டினின்று வண்டிகளைக் கொண்டுபோகும்படி அவர்களுக்குச் சொல்வதுமன்றி: நீங்கள் போய்த் தந்தையை அழைத்துக் கொண்டு கூடிய விரைவில் வந்து சேருங்கள்;

20 உங்கள் தட்டு முட்டுக்களில் ஒன்றையும் விட்டுவிடாதீர்கள்; ஏனென்றால், எகிப்தின் செல்வமெல்லாம் உங்களுடையதாகும் என்றும் சொல்ல வேண்டும் என்றான்.

21 இஸ்ராயேலின் புதல்வர்கள் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தனர். சூசை பாரவோன் கட்டளைப்படி அவர்களுக்கு வண்டிகளையும் வழிக்கு உணவுகளையும் கொடுத்தார்.

22 அன்றியும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் இரண்டு ஆடைகளும் கொடுத்தார். பெஞ்சமினுக்கோ, முந்நூறு வெள்ளிக் காசுகளையும், விலையேறப் பெற்ற ஐந்து ஆடைகளையும் கொடுத்தார்.

23 அப்படியே தம் தந்தைக்கு ஐந்து ஆடைகளையும் முந்நூறு வெள்ளிக் காசுகளையும் அனுப்பினதுமல்லாமல், எகிப்திலுள்ள சிறந்த சரக்குகளைக் கொண்டு, போவதற்குப் பத்துக் கழுதைகளையும், பயணத்திற்குக் கோதுமையையும், உணவு வகைகளையும் சுமப்பதற்குப் பத்துப் பெண் கழுதைகளையும் அவர்களோடு அனுப்பி வைத்தார்.

24 பின் அவர் தம் சகோதரர்களுக்குப் போக விடையளித்து, அவர்களை விட்டுப் பிரியும் போது: நீங்கள் போகும் வழியிலே சச்சரவு பண்ணாதீர்கள் என்று சொல்லி அனுப்பினார்.

25 அவர்கள் எகிப்திலிருந்து போய்க் கானான் நாட்டில் தங்கள் தந்தை யாக்கோபிடம் சேர்ந்து:

26 உம் மகன் சூசை உயிரோடிருக்கிறார்; அவரே எகிப்து நாட்டிற்கெல்லாம் தலைவர் என்று சொல்லி, சூசை சொல்லச் சொன்னவற்றையெல்லாம் அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு ஆழ்ந்த தூக்கத்தினின்று கண் விழித்தவன் போல் ஆனான். ஆயினும், அவற்றை அவன் நம்பாதிருந்தான்.

27 இறுதியிலே, அவர்கள் செய்திகளையெல்லாம் ஒழுங்காக விவரித்துச் சொன்னதும் சூசை அனுப்பின வண்டிகளையும் சரக்குகள் யாவற்றையும் கண்டதும் அவன் புத்துயிர் பெற்றவன் ஆனான்:

28 ஆ! என் மகன் சூசை இன்னும் உயிரோடிருந்தால் எனக்குப் போதும், நான் இறக்குமுன் போய் அவனைக் காண்பேன் என்றான்.

அதிகாரம் 46

1 பின், இஸ்ராயேல் தனக்குள்ள யாவற்றையும் சேர்த்துக் கொண்டு பயணமாகி, பிரமாணிக்கக் கிணறு என்னும் இடம் வந்து சேர்ந்தான். அவ்விடத்தில் தன் தந்தையாகிய ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தான்.

2 அன்றிரவு கடவுள் அவனுக்குத் தோன்றி: யாக்கோப், யாக்கோப் என்று அழைப்பதைக் கேட்டு, அவன்: இதோ இருக்கிறேன் என்று பதில் கூறினான்.

3 கடவுள்: உன் தந்தையின் எல்லாம் வல்ல கடவுள் நாமே. அஞ்சாதே. எகிப்து நாட்டிற்குப் போ. ஏனென்றால், அங்கே உன்னைப் பெருங்குடியாக வளரச் செய்வோம்.

4 நாம் உன்னோடு அவ்விடத்திற்கு வருவோம். நாம் அவ்விடத்திலிருந்து திரும்பி வரும் போது உன்னை கூட்டி வருவோம். சூசை தன் கையாலே உன் கண்களை மூடுவான் என்றார். யாக்கோபு பிரமாணிக்கக் கிணறு என்னும் இடத்திலிருந்து எழுந்தான்.

5 அப்பொழுது அவன் புதல்வர்கள், அவனையும் அவன் பிள்ளைகளையும் மனைவிகளையும் முதிர்ந்த வயதினனாகிய அவனுக்குப் பாரவோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக்கொண்டான்.

6 கானான் நாட்டில் அவன் சம்பாதித்திருந்த சொத்துக்கள் யாவற்றையும் கூடச் சேர்த்துக் கொண்டான். யாக்கோபு அவற்றோடும் தன் இனத்தார் எல்லோரோடும் எகிப்துக்குப் போனான்.

7 அவன் புதல்வரும் பேரரும் புதல்வியரும் (அவன்) இனத்தார் அனைவரும் அவனோடு போனார்கள்.

8 இஸ்ராயேல் தன் புதல்வரோடு எகிப்தை அடைந்த போது அவனுடைய புதல்வர்களின் பெயர்களாவன: மூத்த புதல்வன் ரூபன்.

9 ரூபனின் புதல்வர்: ஏனோக், பால்லு, எஸ்ரோன், கர்மி என்பவர்களாம்.

10 சிமையோனின் புதல்வர்: ஜமுயேல், ஜமீன், அகோத், ஜக்கீன், சோகார், கானானையப் பெண்ணின் மகனான சவுல் என்பவர்களாம்.

11 லேவியின் புதல்வர்: யெற்சோன், காவாத், மெராரி என்பவர்களாம்.

12 யூதாவின் புதல்வர்: கேர், ஓனான், சேலா, பாரேஸ், ஜாரா என்பவர்களாம். கேரும் ஓனானும் கானான் நாட்டிலே இறந்து போயினர். எஸ்ரோன், ஆமுல் என்பவர்கள் பாரேஸீக்குப் பிறந்த புதல்வர்களாம்.

13 இசாக்காரின் புதல்வர்: தோலா, புவா, ஜோப், செமிரோன் என்பவர்களாம்.

14 சரேத், எலோன், ஜயேலேல் என்பவர்கள் சாபுலோனின் புதல்வர்.

15 இவர்களை லீயாள் என்பவள் சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவிலே பெற்றாள். தீனாள் அவளது புதல்வி, அவளுக்குப் பிறந்த புதல்வர் புதல்வியர் எல்லாரும் முப்பத்து மூன்று பேர்.

16 காத்தின் புதல்வர்: செப்பியோன், அஃகி, சூனி, எசபோன், கேறி, அரோதி, ஆரேலி என்பவர்களாம்.

17 அசேரின் புதல்வர்: ஜமினே, ஜெசுவா, ஜெசுவி, பெரியா என்பவர்களாம். சாராள் இவர்களுடைய சகோதரி. எபேரும், மேற்கியேலும் பெரியாவின் புதல்வர்.

18 இவர்கள், லாபான் தன் புதல்வியாகிய லீயாளுக்குக் கொடுத்த ஜெல்பாளுடைய பிள்ளைகள். அவள் இந்தப் பதினாறு பேர்களையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.

19 சூசை, பெஞ்சமின் என்பவர்கள், யாக்கோபின் மனைவி இராக்கேலின் புதல்வர்கள்.

20 சூசைக்கு எகிப்து நாட்டிலே புதல்வர் பிறந்தனர். எலியோப்பொலிசின் குருவாகிய புத்திபாரே என்பவரின் புதல்வியான ஆஸ்னேட், அவர்களை அவருக்குப் பெற்றனள். அவர்கள்: மனாசே, எபிராயிம் என்பவர்களாம்.

21 பெஞ்சமினின் புதல்வர்: பேலா, பேக்கோர், அஸ்பேல், ஜெரா, நாமான், எக்கி, ரோஸ், மொபீம், ஓபீம், ஆரேத் என்பவர்களாம்.

22 இவர்களே இராக்கேல் யாக்கோபுக்குப் பெற்ற பதினான்கு புதல்வர்களாம்.

23 தானுக்கு ஊசீம் என்னும் (ஒரே புதல்வன்) இருந்தான்.

24 நெப்தலியின் புதல்வர்: ஜசியேல், கூனி, ஜெசேல், சல்லேம் என்பவர்களாம்.

25 இவர்கள், லாபான் தன் புதல்வியாகிய இராக்கேலுக்குக் கொடுத்த பாளாளின் புதல்வர். இவர்களை அவள் யாக்கோபுக்குப் பெற்றாள். அவர்கள் மொத்தம் ஏழு பேர்களாம்.

26 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவிகளைத் தவிர, அவனுடைய சந்தானப் புதல்வராயிருந்து எகிப்தில் குடிபுகுந்தோர் எல்லாரும் அறுபத்தாறு பேர்.

27 எகிப்து நாட்டிலே சூசைக்குப் பிறந்த புதல்வர்களோ இரண்டுபேர். (ஆகவே,) எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லாரும் எழுபது பேர்களாம்.

28 யேசேன் நாட்டில் சூசை தம்மை வந்து சந்திக்கவேண்டுமென்று சொல்லும்படி யாக்கோபு யூதாவை அவனுக்குத் தூதராக அனுப்பினார்.

29 இவன் அவ்விடம் சேர்ந்ததும், சூசை தம் தேரைத் தயார் செய்து, அதன் மேல் ஏறித் தந்தைக்கு எதிர் கொண்டு போய், அவனைக் கண்டவுடன் அவன் கழுத்தின் மீது விழுந்து அணைத்து அணைத்து அழுதார்.

30 அப்பொழுது தந்தை சூசையை நோக்கி: (அப்பா மகனே!) உன் முகத்தை நான் கண்டு விட்டேன்! எனக்குப் பின் உன்னை உயிருடன் இவ்வுலகில் விட்டுவைப்பேன்! ஆதலால், எனக்கு இப்பொழுதே சாவு வந்தாலும் மகிழ்ச்சி தான் என்றான்.

31 அவரோ, தம் சகோதரரையும், தம் தந்தையின் குடும்பத்தாரையும் பார்த்து: நான் பாரவோனிடம் போய்: கானான் நாட்டிலிருந்து என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.

32 அவர்களோ ஆடு மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும், தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குச் செய்தி சொல்லுவேன்.

33 அவர் உங்களை வரவழைத்து: உங்கள் தொழில் என்ன என்று வினவும் போது, நீங்கள் மறுமொழியாக:

34 சிறு வயது முதல் இந்நாள் வரை உமது அடிமைகளாகிய நாங்கள் எங்கள் முன்னோர்களைப் போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம் என்று சொல்லுங்கள். நீங்கள் யேசேன் நாட்டில் குடியிருக்கும்படியாகவே அவ்விதம் சொல்லுங்கள். ஏனென்றால், ஆடு மேய்ப்பவர்களை எகிப்தியர் மிகவும் வெறுக்கின்றனர் என்றார்.

அதிகாரம் 47

1 பின் சூசை பாரவோனிடம் போய்: என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடுமாடு முதலியவற்றோடும், தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். இதோ, அவர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.

2 பின், கடைசியில் பிறந்த தம் சகோதரரில் ஐந்து பேரை அரசன் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தினார்.

3 அவன் அவர்களை நோக்கி: உங்கள் தொழில் என்ன என, அவர்கள்: உமது அடிமைகளாகிய நாங்கள் எங்கள் முன்னோரைப் போல் ஆடு மேய்ப்பவர்கள்.

4 உம் நாட்டிலே குடியிருக்க வந்தோம். ஏனென்றால், கானான் நாட்டிலே மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டதால், அடியோர்களின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போயிற்று. அடியோர்கள் யேசேன் நாட்டில் தங்கியிருக்கும்படி உத்தரவளிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம் என்றனர்.

5 அப்பொழுது அரசன் சூசையை நோக்கி: உம் தந்தையும் உம்முடைய சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்களே, எகிப்து நாடு உமது பார்வையில் இருக்கிறது.

6 சிறந்த இடத்தில் அவர்கள் குடியேறும்படி செய்யும். யேசேன் நாட்டையே அவர்களுக்குச் சொந்தமாய்க் கொடும். அவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீராயின், என் மந்தைகளைப் பேணுவதற்கு அவர்களைத் தலைவராக நியமிக்கலாம் என்றான்.

7 அதன் பின், சூசை தம் தந்தையை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினார். யாக்கோபு அரசனுக்கு ஆசிமொழி கூறின பின்,

8 பாரவோன் அவனை நோக்கி: உமது வயதென்ன என்று வினவினான்.

9 அதற்கு அவன்: என் அலைந்து திரிந்த வாழ்வின் காலம் நூற்று முப்பதாண்டுகள்; அது கொஞ்சமுமாய், கேடுகள் நிறைந்ததுமாய் இருந்துள்ளதுமன்றி, என் முன்னோருடைய அலைந்த வாழ்வின் ஆயுட்காலத்தை வந்து எட்டவுமில்லை என்று பதில் கூறிய பின்,

10 அரசனை ஆசீர்வதித்து வெளியே போனான்.

11 பின் சூசை, பாரவோன் கட்டளையிட்டிருந்த படி, தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டிலே வளமான நாடாகிய இறாம்சேசை உரிமையாய்க் கொடுத்தார்.

12 மேலும், அவர்களையும், தம் தந்தை வீட்டார் அனைவரையும் பராமரித்து, அவரவர்களுக்கு உணவும் அளித்து வந்தார்.

13 ஏனென்றால், பூமியெங்கும் உணவு கிடைக்கவில்லை. பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது. குறிப்பாக, அஃது எகிப்திலும் கானான் நாட்டிலும் கொடியதாய் இருந்தது.

14 சூசை அந்நாட்டாருக்குத் தானியம் விற்று, அதனால் வந்த பணமெல்லாம் சேர்த்து அரசனின் கருவூலத்தில் சேர்த்து வைத்து வந்தார்.

15 தானியம் வாங்க வகையில்லாமல் போன போது, எகிப்தியர் எல்லாரும் சூசையிடம் வந்து: எங்களுக்கு உணவு தாரும். பணம் இல்லையென்பதனால், உம்முன் நாங்கள் சாக வேண்டுமோ என்றனர்.

16 அதற்கு அவன்: உங்களிடம் பணம் இல்லாவிட்டாலும், உங்கள் ஆடு மாடு முதலியவற்றைக் கொண்டு வாருங்கள்; அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியங்களைத் தருவேன் என்று பதில் சொல்லக் கேட்டு,

17 அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்த போது, சூசை குதிரைகளையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு, அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்குத் தானியங்களைக் கொடுத்தார். இப்படி மிருகங்களைக் கைம்மாறாகப் பெற்று, அவர்களை அந்த ஆண்டு காப்பாற்றி வந்தார்.

18 அடுத்த ஆண்டிலே அவர்கள் மறுபடியும் வந்து, அவரை நோக்கி: பணமும் செலவழிந்து போயிற்று; ஆடுமாடு முதலியவையும் இனி மேல் இல்லை. இதைத் துரை அவர்களுக்குத் தெரிவிக்காது இருப்பது முறையல்ல. இனி என்ன? உடலும் எங்கள் நிலங்களும் போக எங்களிடம் மீதியானது வேறொன்றும் இல்லையென்று தங்களுக்குத் தெரியும்.

19 உமது கண்முன் நாங்கள் ஏன் சாக வேண்டும்? எங்கள் நிலங்களும் நாங்களுமே உமது உடைமைகளாய் இருப்போம். அரசருக்கு அடிமைகளாக எங்களை வாங்கி, எங்களுக்குத் தானியம் கொடும். கொடாவிட்டால், நாங்களும் சாக, நிலமும் பாழாய்ப் போகும் என்றனர்.

20 அப்படியே சூசை எகிப்தியருடைய நிலங்களையெல்லாம் வாங்கிக் கொண்டார். ஏனென்றால், பசி பொறுக்க மாட்டாமல், அவர்கள் தங்கள் நிலம் சொத்து எல்லாவற்றையும் விற்று விட்டனர். அவை பாரவோனுக்குச் சொந்தமாயின.

21 (பூமி மட்டுமல்ல) ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரையிலும் உள்ள குடிகளெல்லாம் (அரசனுக்கு அடிமைகளானார்கள்).

22 குருக்களுடைய நிலத்தை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், அது அரசனாலே (மானியமாக) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருந்ததனாலும், அவர்களுக்கு அரசாங்கமே தானியங்களைக் கொடுத்து வந்ததனாலும், அவர்கள் தங்கள் நிலங்களை விற்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

23 அப்பொழுது சூசை மக்களை நோக்கி: இன்று முதல் பாரவோன் உங்களையும் உங்கள் நிலங்களையும் உடைமையாகக் கொண்டிருக்கிறார். அது உங்களுக்குத் தெரியும். இப்போது, உங்களுக்கு விதைத் தானியம் கொடுக்கிறேன்; வாங்கி, நிலத்தில் விதையுங்கள்.

24 அது விளைந்தால் விளைச்சலில் ஐந்திலொரு பாகம் அரசருக்குச் செலுத்துவீர்கள். மற்ற நான்கு பங்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும், உங்களுக்குச் சொந்தமானதாகவும் இருக்கட்டும் என்று சொன்னார்.

25 அதற்கு அவர்கள்: எங்கள் உயிரே தங்கள் கைகளில் இருக்கிறது. துரை அவர்கள் கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்தால் போதும். நாங்கள் மகிழ்ச்சியோடு அரசருக்குப் பணிவிடை செய்வோம் எனப் பதில் கூறினார்.

26 அது முதல் இந்நாள் வரை எகிப்து நாடெங்கும் ஐந்திலொரு பாகம் அரசர்களுக்குச் செலுத்துவது வழக்கம். இது தேசச் சட்டம் போல் ஆயிற்று. குருக்களுடைய நிலங்களுக்கு மட்டும் அத்தகைய வரி இல்லை.

27 இஸ்ராயேல், எகிப்திலே- அதாவது, யேசேன் நாட்டிலே- குடியிருந்து, அதனை உரிமை கொண்டு, அங்கே மிகவும் பலுகிப் பெருகி வந்தான்.

28 யாக்கோபு பதினேழாண்டு எகிப்தில் இருந்தான். அவன் வாழ்நாள் மொத்தம் நூற்று நாற்பத்தேழு ஆண்டுகள்.

29 அவன், தன் மரண நாள் நெருங்கி வருவதைக் கண்டு, தன் மகன் சூசையை வரவழைத்து, அவரை நோக்கி: என் மேல் உனக்கு அன்பிருக்குமாயின், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, என்னை எகிப்தில் அடக்கம் செய்வதில்லையென்று சத்தியமாய்ச் சொல்லக் கருணை கொள்வாயாக.

30 நான் என் மூதாதையரோடு (மரணத்) துயில் கொள்ள விரும்புகின்றேன். எனவே, நீ என்னை இந்நாட்டிலிருந்து கொண்டு போய், என் முன்னோர்களின் கல்லறையிலே என்னையும் அடக்கம் பண்ணுவாயாக என்றான். அதற்கு சூசை: நீர் கட்டளையிட்டபடியே செய்வேன் என்றார்.

31 அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். அவர் ஆணையிட்டுக் கொடுக்கவே, இஸ்ராயேல், படுக்கையின் தலைமாட்டுப் பக்கம் திரும்பிக் கடவுளைத் தொழுதான்.

அதிகாரம் 48

1 இதன் பின்னர், அவர் தம் தந்தையின் உடல் நலம் சரி இல்லை என்று சூசைக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், தம் இரு புதல்வர்களாகிய மனாசேயையும் எபிராயிமையும் அழைத்துக் கொண்டு பயணமானார்.

2 இதோ உம் புதல்வர் சூசை உம்மிடம் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்குச் சொல்லவே, அவன் திடம் கொண்டு எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தான்.

3 பின், தன் கிட்ட வந்த (சூசையை) நோக்கி: எல்லாம் வல்ல கடவுள் கானான் நாட்டிலுள்ள லூசாவிலே எனக்குக் காட்சியளித்து என்னை ஆசீர்வதித்து:

4 நாம் உன்னைப் பலுகிப் பெருகச் செய்வோம். உன்னைக் கூட்டமான பெருங்குடியாகச் செய்வோம். இந்நாட்டை உனக்கும், உனக்குப் பின் உன் சந்ததியாருக்கும் நித்திய உரிமையாகத் தருவோம் என்றருளினார்.

5 ஆகையால், நான் எகிப்துக்கு வந்து உன்னிடம் சேருவதற்கு முன்னே உனக்கு இந்நாட்டிலே பிறந்த இரண்டு மக்களும் எனக்குப் புதல்வர்களாய் இருப்பார்கள். ரூபன் சிமையோன் போன்று எபிராயிமும் மனாசேயும் என்னுடையவர்கள் என்று எண்ணப்படுவார்கள்.

6 இவர்களுக்குப் பின் நீ பெறும் மற்ற புதல்வர்களோ, உன்னுடையவர்களாய் இருப்பார்கள். அவர்கள் தத்தம் சகோதரருடைய பெயரால் அழைக்கப்பட்டு, அவரவர்களுக்கு உரிய உரிமையில் பங்கு பெறுவார்கள்.

7 ஏனென்றால், நான் மெசொப்பொத்தாமியாவைவிட்டு வருகையில், வழியிலே எனது இராக்கேல் கானான் நாட்டில் இறந்தாள். அப்பொழுது வசந்த காலம். நான் எபிறாத்தாவுக்கு அண்மையில் இருந்தேன். பெத்லகேம் என்று அழைக்கப்படுகிற எபிறாத்தா ஊருக்குப் போகும் பாதை ஓரத்திலே அவளை அடக்கம் செய்தேன் என்றான்.

8 பின் அவன் சூசையின் புதல்வர்களைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டதற்கு, சூசை:

9 இவர்கள் இந்நாட்டிலே கடவுள் எனக்குத் தந்தருளின புதல்வர்கள் என்று சொல்ல, அவன்: அவர்களை என் அருகில் கொண்டு வா; நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்றான்.

10 உள்ளபடி, முதிர் வயதினால் இஸ்ராயேலின் கண்கள் மங்கலாய் இருந்தன. எனவே, அவன் நன்கு பார்க்கக் கூடாதவனாய் இருந்தான். அவர்களைத் தன் அருகிலே சேர்ப்பித்த போது, அவன் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டான்.

11 பின் தன் மகனை நோக்கி: நான் உன்னையும் காணும் பேறு பெற்றேன்; உன் புதல்வர்களையும் காணும்படி கடவுள் அருள் செய்துள்ளார் என்றான்.

12 சூசை யாக்கோபின் மடியிலிருந்த தன் பிள்ளைகளைப் பின்னிடச் செய்து, தாமே தரைமட்டும் குனிந்து வணங்கினார்.

13 பின், சூசை எபிராயிமைத் தம் வலப் பக்கத்திலே வைத்து இஸ்ராயேலின் இடக் கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடப் பக்கத்திலே வைத்து இஸ்ராயேலின் வலக்கைக்கு நேராகவும் நிறுத்தினார்.

14 யாக்கோபோ, தன் இரு கைகளையும் குறுக்கீடாக அமைத்துக் கொண்டு, வலக்கையை இள