கோபம்!

கோபம் என்பது ஆத்துமத்தின் ஆசாபாசங்களுள் ஒன்றாக இருக்கிறது. ஒருவர் தன் செயலால் நம்மை நோகச் செய்கிறார் என்று நாம் எண்ணுகிறோம். இது நிஜமானதாகவோ, அல்லது வெறுமனே நம் கற்பனையாகவோ கூட இருக்கலாம். ஆனாலும், அப்படி நம்மை நோகச் செய்தவருடன் நாம் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். இந்த விருப்பத்தில் இருந்துதான் கோபம் பிறந்து வருகிறது. பழிவாங்குவதற்கான விருப்பத்தின் மீது நாம் வெற்றி கொள்ளாத போது அது பாவமாகவும், ஒரு தீமையாகவும் ஆகிறது. 

அது பிறர்சிநேகத்திற்கும், நீதிக்கும் எதிரானதாகும். ஆயினும் எல்லா விதமான கோபமும் தீமை அல்ல. அவ்வப்போது ஏற்படுகிற சிடுசிடுப்பான உணர்வு கோபம் என்னும் தீமையாக இருப்பதில்லை. எனவே அது பாவமில்லாமல் இருக்கக் கூடும். நல்லதும், புண்ணியத் தன்மை உள்ளதுமான ஒரு கோபமும் உண்டு. ஒரு முறையான காரணத்திலிருந்து இத்தகைய கோபம் புறப்பட்டு வருகிறது. தேவாலயத்திலிருந்து வாங்குவோரையும் விற்போரையும் நம் ஆண்டவர் சாட்டைகளால் அடித்து விரட்டிய செயல் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு.

ஒரு குறிப்பிட்ட ஆள், அல்லது ஆட்களின் மீது நம் இருதயத்தில் வன்மம் அல்லது சீற்றம் கொள்கிற போதும், வார்த்தையாலோ, செயலாலோ யாருக்காவது தீங்கு செய்ய வேண்டும் என்று திட்டமிடும் போதும், நம்மை நோகச் செய்தவரை அவமானப் படுத்தும் நோக்கத்தோடு பேசும்போதும், நாம் கோபத்துக்கு இடம் கொடுக்கிறோம். ஒருவரை அடிக்கும் அளவுக்கு, அல்லது காயப் படுத்தும் அளவுக்கு நாம் பரபரப்பும், கிளர்ச்சியும் அடையும் போதும், வேறொருவரோடு வாய்ச் சண்டையிலும் சச்சரவிலும் ஈடுபடும் போதும், சிடுசிடுப்பான முகபாவத்தாலோ, பேசாமல் மெளனம் சாதிப்பதாலோ அடுத்தவருக்கு எதிரான நம் மனக்கசப்பை வெளிப்படுத்தும் போதும், கோபம் என்னும் குற்றத்திற்கு நாம் ஆளாகிறோம். நம் இருதயத்தில் நாள்கணக்கில், அல்லது மாதக்கணக்கில், அல்லது வருடக் கணக்கிலும் கூட வன்மத்திற்கும், வெறுப்புக்கும் இடம் கொடுத்து, இரக்கம், நட்பு ஆகியவற்றின் அடையாளங்களைத் தவிர்த்து வாழும்போது கோபம் என்னும் பாவத்தைக் கட்டிக் கொள்கிறோம். நம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நமக்குக் கீழ் பணிபுரிகிறவர்களை அளவுக்கு மீறித் தண்டிக்கிற போதும் இதே பாவத்தை நாம் கட்டிக் கொள்கிறோம். அந்தரங்கத்திலோ, வெளியரங்கமாகவோ தானே விரும்பி தேவதூஷணம் சொல்கிறவன் சர்வேசுரனுக்கு எதிராகக் கூட கோபம் என்னும் பாவத்தைக் கட்டிக் கொள்கிறான்.

கோபம் அழிவை ஏற்படுத்துவதும், மிக அதிகமாகக் காயப்படுத்தக் கூடியதுமான தீமையாகும். கோபப்படும் போது நாம் அறிவை இழந்து விடுகிறோம். அது சர்வேசுரனிடமிருந்து நம்மை அந்நியமாக்குகிறது; நண்பர்களையும், உறவினர்களையும் நம்மிடமிருந்து அகற்றி விடுகிறது; அது நம் புத்தியை மூடி மறைக்கிறது. அதன் புத்திக்கு ஒவ்வாத பிடிவாத குணத்தினால், மற்றவர்களின் உரிமையை நாம் காலடியில் போட்டு மிதித்து விடுகிறோம்.

கோபம் சமாதானத்தை அழித்து, அழிவுக்குரிய போர்களை உருவாக்குகிறது; எல்லா வகையான தீமைகளுக்கும், பகைகளுக்கும், நீடிய சச்சரவுகளுக்கும், அவமானங்களுக்கும், வஞ்சத்திற்கும், அபாண்டங்களுக்கும், முரண்பாடுள்ள பிணக்குகளுக்கும், தேவ தூஷணத்திற்கும், வெறுப்புக்கும், பழிவாங்குதலுக்கும், கொலைக்கும் காரணமாக அமைகிறது. இவை எல்லாமும் சேர்ந்து பிறர்சிநேகத்தைக் கொன்று விடுவதோடு, சர்வேசுரனிடமிருந்து நமக்கு வரக்கூடிய மிகப் பெரும் கொடையாகிய வரப்பிரசாதத்திற்குப் பெரும் தடைகளாகவும் இருக்கின்றன.