அர்ச்சியசிஷ்ட சாமிநாதர் செபமாலையைப் பெற்றுக் கொண்ட நிகழ்வு!


ஆல்ஜென்ஸியர் பாவங்களில்  மூழ்கி   இருந்த   காலத்தில், அர்ச்சியசிஷ்ட சாமிநாதர் அவர்கள் மனம் திரும்பி வாழ, ஜெபிப்பதற்காக   தூலுஸ் என்ற பட்டணத்தருகே இருந்த ஒரு காட்டுக்குச் சென்று மூன்று  நாள்கள்  இரவும், பகலும் இடைவிடாது  மன்றாடினார். அம்மூன்று நாட்களும் கடின  தவ முயற்சிகளை செய்வதும், அழுது மன்றாடுவதுமாக இருந்தார். சாட்டையால் அவர் தம்மையே எவ்வளவு அடித்துக் கொண்டாரென்றால் அவரது உடல் புண்ணாகி  இறுதியில் மயக்கமுற்று விழுந்தார்.

அப்போது தேவ அன்னை மூன்று சம்மனசுக்களுடன் தோன்றி, ‘‘சாமி  நாதா,’’  எந்த ஆயுதத்தை கொண்டு உலகத்தை சீர்திருத்த பரிசுத்த தமதிருத்துவம் விரும்புகிறது என்பதை அறிவாயா?’  என்று கேட்டார்கள். அதற்கு   அவர்,    ‘ஓ   என் அன்னையே! என்னைவிட உங்களுக்கே மிக நன்றாகத் தெரியும்‘  என்றார்.

இதற்குப்  பதிலாக  தேவஅன்னை,  ‘இந்த வகையானப் போராட்டத்தில்  கபிரியேல் தூதன்  கூறிய  மங்கள  வார்த்தைதான் வெற்றிதரும்  கருவியாக உள்ளது.  புதிய  ஏற்பாட்டின் அடித்தளக்கல் அதுவே. இந்தக்  கடினப்பட்ட ஆன்மாக்களை  அணுகி, அவர்களை கடவுள்  பக்கம் திருப்ப  வேண்டுமானால், என்னுடைய ஜெபமாலையைப்  பிரசங்கி’  என்றுக் கூறினார்கள்.

புனித  சாமிநாதர்  புத்துயிர் பெற்றவராய் ஆலய  மணிகளை ஒலிக்கச் செய்தார்.  மக்கள்  திரண்டனர். பிரசங்கிக்க  ஆரம்பித்ததும் பயங்கர   புயற்காற்று  எழுப்பியது.  பூமி   குலுங்கியது.  கதிரவன் மங்கியது. இடி முழக்கமும், மின்னலும் காணப்பட்டன. அங்கு வைக்கப்பட்ட மாதாவின்    படம்  தன்   கரத்தை  வான்நோக்கி மும்முறை உயர்த்தியது.

புனிதரின்  வேண்டுதலால், புயல் அமர்ந்தது. பிரசங்கத்தைத் தொடர்ந்தார். ஜெபமாலையின்  முக்கியத்துவத்தையும், பலனையும்  தூலுஸ் நகரவாசிகள் ஏற்றுக் கொண்டார்கள். பழைய  துர்ப்பழக்கங்களை விட்டுவிட்டார்கள். இவ்வாறு ஜெபமாலைப் பக்தி ஆரம்பமாகிறது.

ஜெபமாலையை ஜெபிப்பவர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுகிறார்கள்.  தேவ அன்னையின் பிரசன்னத்தை உணர்கிறார்கள்.  தீய வழிகளை விட்டு நல்வழியில் வாழ்கின்றனர். பேய்கள்  மனிதரை  விட்டு ஓடுகின்றன. பக்தியுடன் ஜெபமாலை செபிக்கும்  ஒவ்வொரு முறையும் 153 வெண்மலர்களை தேவ அன்னையின் தலையில் சூடுகிறோம்.

புனித  பிரான்ஸிஸின் நாட்குறிப்பில்,  ஒரு  இளஞ்சகோதரர்  பற்றிக் குறிப்பிடுகிறார்.  இவர்   தினமும்  பகல்  உணவுக்கு முன்  ஒரு  ஜெபமாலை சொல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒருநாள்  சொல்ல முடியவில்லை. பகல்  உணவுக்கு மணி  அடித்ததால், தலைவரிடம்  உத்தரவு  பெற்று, தன் அறைக்குச்சென்று ஜெபமாலை சொல்ல துவங்கினார். நெடுநேரமாக அவரைக் காணாததால்,  தலைமைச்  சகோதரர் இன்னொரு சகோதரரை அனுப்பினார்.அவர்  வந்து  பார்க்கையில், அந்த  சகோதரர் ஒரு விண்ணக ஒளியில்  மூழ்கி, தேவ   அன்னையை நோக்கியவாறு காணப்பட்டார். இருசம்மனசுக்களும் காணப்பட்டனர்.  அருள்நிறை   மந்திரத்தை   சொன்ன  ஒவ்வொரு  முறையும் ஒரு அழகிய  ரோஜாமலர் அவர்  வாயிலிருந்து  வெளிவந்தது.  சம்மனசுக்கள் அம் மலர்களை தேவ அன்னைக்கு சூட,  அவர்களும்  புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு முழுஜெபமாலை சொல்லி முடியும்  வரையிலும் தேவஅன்னை அங்கேயே  இருந்தார்கள்.

தேவ  அன்னை  புனித  சாமிநாதருக்கு  ஜெபமாலையை  கொடுத்து, அதை  தினமும்   சொல்ல  வேண்டுமென்றும், மற்றவர்களுக்கும்  அவ்வாறே சொல்லும்படி செய்ய  வேண்டும்  என்று கட்டளையிட்டார்கள்.  தேவ இரகசியங்கள்   அடங்கியிருக்கும்  நம்   புனிதத்திற்கேதுவான   ஞான  திரவியங்களை  நாம்   ஒருபோதும் முற்றும்  அறிந்து   கொள்ள  முடியாது.   இயேசுக்   கிறிஸ்துவின்  வாழ்வு, மரணம்   இவைப்பற்றிய  தியானம் அதைச்  செய்கிறவர்களுக்கு  மிக  ஆச்சரியமான  பலன்களை  விளைவிக்கும் ஊற்றாகி   இருக்கிறது.   அவற்றில்    காணப்படும்   நமதாண்டவரின்   பலவித புண்ணியங்களும்  அவருடைய வாழ்வின்  பலநிலைகளும் மிக  அற்புதமான முறையில்  நம்மனதிற்குப் புத்துணர்ச்சி ஊட்டி பராக்குகளைத்   தவிர்ப்பதில் நமக்கு உதவியாயிருக்கின்றன.

கூட்டு   ஜெபமாலை   பெரிய  நன்மைகளைக்   கொடுக்கிறது.   நாம் கூட்டாய்ச் சேர்ந்து செபிக்கும்போது தனிமையில் ஜெபிப்பதைவிட நம்மனம் அதிகவிழிப்புடன்  இருக்கிறது.   கூட்டத்தில்  ஒருவர்   நன்றாக   ஜெபியாமல் இருந்தாலும்    அதிக    நன்றாகச்     செபிக்கும்     இன்னொருவரின் ஜெபம் அக்குறையை  நிறைவாக்குகிறது.  இவ்விதம்   பலமுள்ளவர்கள்,  பலவீனரைத் தாங்கிக்   கொள்கிறார்கள்.   தனியே   ஜெபமாலை  சொல்லும்போது   ஒரு ஜெபமாலையின்  பலன்தான் கிடைக்கிறது.   ஆனால்  30 பேருடன்  சேர்ந்து செபிக்கும் போது முப்பது ஜெபமாலைப் பலன்களைப் பெறுகிறோம். ஜெபமாலை நாம் அன்னைக்கு அணிவிக்கும் வாடாமாலை. அம்மாலையை ஒவ்வொரு  நாளும்  சூட்டும்  போது அன்னையும்  மகிழ்ச்சி அடைகிறாள். நமக்கு வெற்றிகளையும், புகழையும் கொடுக்கிறாள். ஒவ்வொரு செயலிலும், காரியங்களிலும் நம்மை  அரவணைத்துப் பாதுகாத்து  கொண்டு வருவதை    உணர்கிறோம்.     அன்னைக்கு    ஜெபமாலையை அன்புடன், பக்தியுடன் அவள்  கழுத்தில் தினமும் அணிவிப்போம். வெற்றிமாலையான ஜெபமாலை நம் வாழ்வில்  உன்னதமானது  என்று உணர்ந்து  பிறரையும் ஜெபமாலை செபிக்கத் தூண்டுவோம்.

ஜெபமாலை ஜெயமாலை