அந்தச் சிறிய மலைக் குகையின் வாசலில் சரியாக மொத்தம் பத்து இடையர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓர் இடையனின் கரத்தில் பிறந்து ஏழு நாட்களான ஒரு செம்மறிக் குட்டி இருக்கிறது. அவர்களது முகத்தில் ஒருவிதப் பரவசம் தெரிகிறது. குகைக்குள் யாரையோ அவர்கள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மென்மையாக வீசிக் கொண்டிருக்கும் காற்றில் உள்ள கடுங்குளிரும் கூட அவர்களது கவனத்தைத் திருப்ப வல்லதாக இல்லை. நான் அவர்களிடையே நுழைந்து, ஒவ்வொருவராகக் கடந்து குகையினுள் எட்டிப் பார்க்கிறேன். அதன் தரை ஈரமாயிருந்தாலும் சுத்தமாயிருக்கிறது. மிக லேசான மாட்டுச் சாணம் மற்றும் கோமிய வாடை காற்றில் கலந்திருக்கிறது.
குகையின் உட்பகுதியில் அந்தக் கன்னிகை அமர்ந்திருக்கிறார்கள். சில வெளிப்பாடுகளிலும், படங்களிலும் நான் கண்டுள்ளது போல அவர்கள் முழந்தாளிட்டிருக்கவில்லை. அவர்கள் அருகில் ஒரு முன்னிட்டி இருக்கிறது. அதன் மறுபுறத்தில் அர்ச். சூசையப்பர் நின்று கொண்டிருக்கிறார். இடையர்களிடம் காணப்படும் அதே பரவசம் அவரது கண்களிலும் காணப்படுகிறது. ஆனால் அதில் எல்லையற்ற தாழ்ச்சியும், சிநேகமும், பிரமிப்பும் கலந்திருக்கிறது. அவரது முகம் வெகு கனிவாயிருக்கிறது. இதோ முன்னிட்டியில் துணிகள் விரிக்கப்பட்டு, கந்தைகளில் பொதியப்பட்டவராக ஒரு சிறு குழந்தை படுத்திருக்கிறார். யாருக்காக பிதாப்பிதாக்களும், தீர்க்கதரிசிகளும், நல்ல மனத்தோரும் காத்துக் கொண்டிருந்தார்களோ, அவர் இதோ ஒரு பச்சிளங் குழந்தையாக வைக்கோலின் மீது படுத்திருக்கிறார். எல்லையற்ற தேவசிநேகத்தின் ஊற்றானவர் கேடுகெட்ட மனிதர்கள் மேல் தாம் கொண்ட நேசத்தின் கட்டுக்களால் மோட்சத்திலிருந்து கட்டி இழுத்து வரப்பட்டு, இதோ, எதுவும் அறியாதவரைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரது திரு விழிகளில் கண்ணீர் வழிந்து காய்ந்திருப்பது நன்கு தெரிகிறது. குளிரோ, பசியோ, பாடுகளின் நினைவோ, அல்லது என் கணக்கற்ற பாவ துரோகங்களோ, எதை நினைத்து அவர் அழுதிருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை.
என் இரட்சகரின் திருமாதா என் சர்வேசுரனை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். அளவற்ற நேசமும், கனிவும், ஒருவிதமான துயரமும் அவர்களது பார்வையில் தென்படுகின்றன. ஏன் இந்தத் துயரம் என்பது எனக்கு விளங்கவில்லை. இதோ, மாதாவின் கண்கள் என்னை நோக்கித் திரும்புகின்றன. என்னைச் சூழ்ந்திருக்கிற சகலத்தையும் மறக்கச் செய்து விடுகிற ஒரு தெய்வீகப் புன்னகை அவர்களது இதழ்களில் மலர்கிறது. மிக மிக மென்மையான தலையசைப்பால் அவர்கள் என்னை அழைக்கிறார்கள். மாசற்ற தெய்வீகப் பேரழகால் பிரகாசிக்கிற அந்தத் திருமுகம் என்னைப் பேச்சற்றவனாகச் செய்கிறது. பிரியதத்தத்தினால் நிரம்பி வழியும் அவர்களது ஆத்துமத்தின் ஈடிணையற்ற பேரழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல அந்தத் திருமுகம் இருக்கிறது. அந்தப் பூரண பரிசுத்ததனத்தின் எல்லைக்குள் பிரவேசிக்கத் திராணியற்று நான் அங்கேயே நின்று விடுகிறேன்.
உடனே இதோ மாதா தன் திருவாய் மலர்ந்து, “வா” என்கிறார்கள். அந்த ஒற்றை வார்த்தையில் மீண்டும் துணிவு பெற்றவனாக மகா பரிசுத்த கன்னிகையாகிய என் நேசத் தாயாரிடம் நான் அண்டிச் செல்கிறேன். ஓ! யார் இவர்கள்?! திரியேக சர்வேசுரனுக்கு நேரடி சொந்தமல்லவா இவர்கள்?! பரலோகமும், பூலோகமும் இவர்களுக்காகத்தான் படைக்கப்பட்டன என்று ஒரு குரல் என்னிடம் சொல்வதை என்னால் கேட்க முடிகிறதே! ஆதியிலும், யுகங்களுக்கு முன்னும் சர்வேசுரனின் உத்தமப் பிரதிபலிப்பாக அவரால் படைக்கப்பட்ட ஆதிசிருஷ்டியான பரலோக, பூலோக இராக்கினிதானே இவர்கள்? பின் ஏன் இந்த தரித்திரக் கோலம்? அவர்களை மூடியிருக்கிற மேல்மாந்தை சாயம் போயும், ஓரங்கள் நைந்து கிழிந்தும் காணப்படுகிறதே!
என் எண்ண ஓட்டங்களை அலட்சியம் செய்கிற மாதா, “பவுலுஸ், என் சிறிய மகனே, இவரைப் பார்! ” என்கிறார்கள் தனது திவ்ய மகவைச் சுட்டிக் காட்டியபடி. நான் அவரைப் பார்க்கிறேன். அந்தச் சிறு மகவு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. காஸ்டெல்லா ரோஜா மலர்களால் செய்யப்பட்ட ஓர் அழகிய மலர்க் குவியல் போலத் தோன்றுகிறார் அவர். 33 வருடங்களுக்குப் பிறகு துளைக்கப்பட இருக்கும் ஒரு கரத்தின் அழகிய சிறு விரல்கள் கெட்டியாக மூடியிருக்க, மறுகரத்தால் தமது திருத்தாயாரின் இடது கைச் சுட்டுவிரலை இறுகப் பற்றியபடி உறங்குகின்றார் என் தேவன்.
இவரா? என்னையும் என்னைச் சுற்றியுள்ள சர்வத்தையும், சூரிய சந்திரர்களையும், அண்ட சராசரங்களையும் சிருஷ்டித்து ஆண்டு நடத்தி வருகிற சர்வேசுரன் இவர்தானா? என் அறிவு இதை நம்ப சிரமப்படுகிறது. ஆனால் படிக நீரைப் போலத் தெளிவாயிருக்கிற என் விசுவாசமோ, “ஆம் பவுலுஸ்! இவரே உன் தேவன், இவரே உன் இறுதிக்கதி ” என்று உரக்க அறிவிக்கிறது.
என்ன இது? கொடிய பாவங்களின் கனாகனத்தால் கல்லாக உறைந்து போயிருக்கிற என் அருவருப்பான இருதயத்திலும் நேசத்தின் சுவடுகள் தெரிகின்றதே! என் மனச்சான்று, பிறர் கண்களுக்கு மறைவான ஒரு மனித உருவாக என் எதிரில் நின்று என்னைக் குற்றஞ் சாட்டுகிறதே!
என்னையும் அறியாமல் என் கண்கள் ஊற்றெடுக்கக் காண்கிறேன். நீர் நிரம்பிய விழிகளோடு என் சர்வேசுரனை உற்று நோக்குகிறேன். அவரது திருமுக மண்டலத்தில் துயரத்தின் ரேகைகள் தென்படுகின்றன. அவை ஒரு மெல்லிய சிணுங்கலாக அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. உடனே அவருடைய திருமாதா அவரை வாரியயடுத்துத் தமது திருமார்போடு அணைத்துக் கொள்கிறார்கள்.
நான் முதன் முறையாகப் பேசத் தொடங்கி, என் மாதாவிடம், “அம்மா, அவர் ஏன் அழுகிறார்?” என்று கேட்கிறேன். மாதா என்னைப் பார்க்கிறார்கள். பிறகு, திருவாய் மலர்ந்து, “பவுலுஸ், என் சிறிய மகனே! அவர் அழுவதன் காரணம் உனக்குத் தெரியாதா? அவரது கண்ணீருக்கு நீயே காரணம். எத்தனை முறை, எப்படியயல்லாம் உன் பாவத்தால் நீ அவரை நோகச் செய்திருக்கிறாய் என்று யோசித்துப் பார். அவர் உன் முழு நேசத்திற்கும் முற்றும் உரியவர் அல்லவா? ஆனால் நன்கு யோசித்துப் பதில் கூறு: உண்மையாகவே எப்போதாவது அவரை நீ நேசித்திருக்கிறாயா? அவருக்குப் பதிலாக உலகத்தையும், புலன்களின் இன்பத்தையும் நீ தெரிந்து கொண்டதில்லையா? “நான் நேசிக்குமளவுக்கு நீர் அழகுள்ளவராக இல்லை. அந்தப் பெண்ணை விட, அல்லது இந்தப் பொருளை விட அதிகமான அளவுக்கு நீர் என் நேசத்திற்கு உரியவராக இல்லை ” என்று உன் செயல்களால் நீ அவரிடம் எப்போதும் கூறவில்லையா? பவுலுஸ், பரிதாபத்திற்குரிய என் சிறு மகனே! சகல அசுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தால் நீ பாதிக்கப்படாதபடி என் மேற்போர்வைக்குள் உன்னை மூடி, என் கரங்களில் உன்னைச் சுமந்து செல்ல நான் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன். ஆனால் நீ பெரியவனாயிருக்கிறாய். உன்னைத் தூக்கிச் செல்ல முடியாதபடி உன் ஆத்துமத்தின் பாரம் என்னைத் தடுக்கிறது. ஓ! நீ மீண்டும் ஒரு சிறு குழந்தையாய் மாறினால் அல்லோ தாவிளை?” என்கிறார்கள் வேதனையோடு.
அந்த வார்த்தைகள் தந்த வலியால் குரலெடுத்துக் கதறி அழத் தொடங்குகிறேன். என் கண்கள் வெள்ளமென நீரைப் பெருக்குகின்றன. மாதாவோ என் கண்ணீருக்கு அணையிடாமல் மெளனமாக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு நானே என்னைத் தேற்றிக் கொண்டு, என் தாயை நோக்கி, “சரி அம்மா, இனி நான் பாவம் செய்ய மாட்டேன். உமது திருச்சுதனே என் வாழ்வின் மையமாகவும், என் ஏக நேசமாகவும் இருப்பார். ஆனாலும் என் பலத்தால் இது முடியாதாகையால் ஒன்றே ஒன்றை மட்டும் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்” என்கிறேன்.
தேவமாதா பதிலுக்கு, “நீ மட்டுமல்ல பவுலுஸ், என் சிறு பிள்ளைகளில் அநேகர் உண்மையில் இப்படித்தான் நினைக்கிறார்கள். உண்மையில் அவர்களது வாழ்நாட்களின் ஒரு கணம் முதலாகக் கூட நான் அவர்களை விட்டு விலகிச் செல்வதில்லை என்பதில் அவர்கள் தெளிவான உறுதியோடு இருக்கக் கடவார்களாக. என் முன்னிலையில், எனக்கு மிக அருகில் இருந்து கொண்டுதான் அவர்கள் பாவங்களைக் கட்டிக் கொள்கிறார்கள். அவர்களது பாவங்களின் கொடிய துர்நாற்றத்தால் நான் வதைக்கப்படும் போதும் கூட, சர்வேசுரனைப் போலவோ, அவர்களது காவல் தூதர்களைப் போலவோ கூட நான் அவர்களை விட்டு விலகிச் செல்வதில்லை. ஏனெனில் தாய்மை என்னும் பரிசுத்த பந்தத்தால் நான் அவர்களோடு கட்டுண்டிருக்கிறேன். என் பரிதாபத்திற்குரிய பிள்ளைகள் இந்த உண்மையை எப்போதும் மனதில் கொண்டிருந்தால் அவர்கள் ஒருபோதும் பாவம் செய்ய மாட்டார்கள்” என்கிறார்கள்.
மாதாவுக்கு நன்றி சொல்லி விட்டு, திவ்ய பாலனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து அவரை ஆராதிக்கிறேன். அதன் பின் மாதாவிடமும், சூசையப்பரிடமும் விடைபெற்றுக் கொண்டு குகையை விட்டு வெளியே வருகிறேன். இதற்கு முன் நான் ஒருபோதும் அனுபவித்திராத அமரிக்கையான சந்தோமும், சமாதானமும் என் ஆத்துமத்தை நிறைத்திருக்கின்றன. இதோ, உலகம் இன்னமும் அதே அசுத்தங்களோடுதான் இருக்கிறது. பசாசும் கர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல என்னை விழுங்கி விடும்படி என்னைச் சுற்றி வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் எனக்குப் பயமில்லை. அந்தப் பசாசின் தலையை நொறுக்கி நசித்துப் போடும் வல்லமையுள்ள தேவமாதா இதோ என்னோடு இருக்கிறார்கள். நான் வலப்புறமோ இடப்புறமோ சாயாதபடி அவர்களே என்னை நேராக நடப்பித்து, இறுதியில் மோட்சத்திலிருக்கிற தமது திருச்சுதனிடம் பத்திரமாக என்னைக் கூட்டிக் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள். அவர்களால் ஆகாதது ஒன்றுமில்லை. ஏனெனில் தேவ மனிதனை கருத்தாங்கி ஈன்றெடுக்கும்படி இஸ்பிரீத்துசாந்துவானவரின் தெய்வீகத்தோடு இரண்டறக் கலந்து, தேவ மனுஷியாக இருக்கிறவர்கள் அவர்கள். அதையும் விட மேலாக, அவர்கள் ஒரு சிருஷ்டியாக உண்டாக்கப்பட்ட கடவுளின் தாய்மையாகவும், மனுவுருவாகப் படைக்கப்பட்ட தேவ ஞானமாகவும் இருக்கிறார்கள் என்று ஏனோ நான் நம்புகிறேன். ஆகையால் நான் அச்சப்பட யாதொரு முகாந்தரமும் இல்லை.