கத்தோலிக்கத்தின் சிறப்பு மற்றும் புனிதர்கள் பக்தி!

கத்தோலிக்கத்தின் போதனைகள் அனைத்தும் உண்மை சத்தியம். கத்தோலிக்கத்தின் கோட்பாடுகள்; திருச்சபையின் நிலைப்பாடுகள் உறுதியானவை உண்மையானவை. புனிதர்கள் வழி பக்தியைக்குறித்து பிரிவினை சபையினரின் நிலைப்பாடுகளைப்பற்றி நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. பாருங்கள் நம் இயேசு தெய்வம் என்ன சொல்கிறார்.

. “உங்களை ஏற்றுக்கொள்பவன் என்னையே ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்பவன் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான் “ அப்படியானால், அவர்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர் என்னவென்று சொல்வார்.

(கீழே நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் ஆதாரங்களோடு தரப்பட்டுள்ளது)

“ இதோ உன் தாய் “ என்று தன் தாயை நமக்குத் தந்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை மதிக்கமாட்டேன். அவர் தாயை எம் தாயாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றால் அவர்களை நம் தெய்வம் எப்படி ஏற்றுக்கொள்வார்.

“ யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும்; யாருடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ அவை மன்னிப்பின்றி விடப்படும் “ என்று இயேசு தெய்வம் சொல்லியதை மதிக்காமல் நாங்கள் நேரிடையாக பாவசங்கீர்த்தனம் செய்வோம் என்று சொல்வோரின் பாவங்களை இயேசு கிறிஸ்து எப்படி மன்னிப்பார்.

“ இதை என் நினைவாகச் செய்யுங்கள் “ என்று இயேசு தெய்வம் திவ்ய திருப்பலியை ஏற்படுத்தினார். அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று மறுதலித்தால் அவர்களைப்பார்த்து இயேசு என்ன சொல்வார்.

மேற்கண்ட விளக்கங்கள் எதற்காக குறிப்பிடுகிறோம் என்றால் இப்போது கத்தோலிக்கத்தில் ஒரு சில இடங்களில் மாதா பக்தி, புனிதர்கள் பக்தியில் ஒரு சில இடங்களில் தயக்க மற்றும் தேக்க நிலை உள்ளது.. மற்றவர்களுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்? ஒரு சில அருட்தந்தையர்கள் நம்முடைய சுரூப வணக்கங்களைப்பற்றி தவறாக நிலைப்பாடுகள் கொண்டுள்ளார்கள். சிலர் மறையுரைகளில் மறந்தும் கூட மாதாவைப்பற்றி பேசுவதில்லை. ஜெபங்களைப் பற்றி பேசுபவர்கள் ஜெபமாலையைப் பற்றி பேசுவதில்லை.

அதாவது அவர் என்ன சொல்வாரோ? இவர் என்ன சொல்வாரோ என்ற அச்சம். ஆண்டவரின் வார்த்தைகளை மதிக்காதவர்களைப் பற்றி நமக்கு ஏன் கவலை?

நம்முடைய பாதையும், பயணமும் மிகச் சரியானவை. ஒவ்வொன்றும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை. நம் இயேசு ஆண்டவர் தன் திருச்சபையை ஏற்படுத்தி அதற்கு அவரே ஒரு தலைவரையும் ஏற்படுத்தி 2000 ஆண்டுக்ளாக வழி நடத்துகிறார். இதுவும் இயேசு தெய்வம் கூறிய வார்த்தைகளே “உன் பெயர் பாறை; அதன் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்”. இதையும் ஏற்றுக்கொள்ளாமல் பிரிந்து சென்று ஆளுக்கொரு சபை ஏற்படுத்துவார்கள். அவர்களைப்பார்த்து நாம் பயப்படவேண்டும்?. கவலை கொள்ள வேண்டும்.

“ மக்கள் போய்விடுவார்கள்” அதனால் நாமும் அவர்களைப்போலே எல்லாம் செய்வோம். ஏன் போனால் போகட்டுமே..இயேசு கிறிஸ்துவே சொல்லிவிட்டார் “ இறுதி வரை நிலைத்திருப்பவன் பேறு பெற்றவன்” இருப்பவர்களைக் காப்பாற்றுவோம். அது போதும்.

நம்முடைய எல்லா வழிபாட்டிற்கும், சடங்கிற்கும், நம் உயிருள்ள விசுவாசத்திற்கும் நம் பரிசுத்த வேதாகமத்திலேயே விடை இருக்கிறது. நாம் சரியாகத்தான் இருக்கிறோம். சரியாகத்தான் வழி நடத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறோம்.

நம் பாரம்பரிய வழிபாடுகள், நம் விசுவாசம் எந்த புயலுக்கும், எந்த வெள்ளத்திற்கும் அசைந்து கொடுக்காமல் கற்பாறையின் மீது வீடுகட்டிய அறிவாளியைப்போன்று எப்போதும் இருக்க வேண்டும். வெளியே சென்றவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து எப்போது வேண்டுமானாலும் நம் தாய்திருச்சபைக்கு வரட்டும்; அதில் இனையட்டும்.அதற்காக அவர்களுக்காக ஜெபிப்போம்.

நம் ஆண்டவர் இயேசுவின் உயிருள்ள வார்த்தைகள் இங்கே,

இயேசு சீடர்களை நோக்கி,

"உங்களை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்.

இறைவாக்கினரை இறைவாக்கினராக ஏற்றுக்கொள்பவன் இறைவாக்கினரின் கைம்மாறு பெறுவான். நீதிமானை நீதிமானாக ஏற்றுக்கொள்பவன் நீதிமானுடைய கைம்மாறு பெறுவான்.

"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."

மத்தேயு 10 : 40-42

“ நோயாளிகளைக் குணமாக்குங்கள், இறந்தோரை உயிர்ப்பியுங்கள், தொழுநோயுற்றோரைச் சுகமாக்குங்கள், பேய்களை ஓட்டுங்கள்; இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள் “

மத்தேயு 10:8

பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்.

அருளப்பர் (யோவான்) 20 : 22-23

இயேசு தம் தாயையும் அருகில் நின்றதம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார்.

பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டார்.

அருளப்பர் 19 : 26-27

" இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் "

லூக்காஸ் 22: 19

மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் 'பாறை.' இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.

மத்தேயு 16: 18

கத்தோலிக்கர்களாகிய நாம் மற்றவர்களின் கேள்வியை கண்டு அஞ்சவோ குழப்பம் அடையவோ தேவையில்லை. நம் கத்தோலிக்க திருச்சபையை நம்ப வேண்டும்; விசுவசிக்க வேண்டும்.

இதற்கு மாதாவின் தலை சிறந்த புண்ணியங்களான கேள்வியற்ற கீழ்படிதல், உயிருள்ள விசுவாசம், ஆழ்ந்த தாழ்ச்சி இவைகளை கடைபிடித்தால் அத்தகையோரின் கேள்விகளை ஒரு பொருட்டாவே நினைக்க மாட்டோம்.

“ இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !