கொடூரமான மனவுறுத்தல்

நரகத்தில் மனச்சாட்சி எப்போதும் புழுப்போல் அரித்துக் கொண்டிருக்கும் என்று சுவிசேஷம் கூறுகிறது. இந்த மனவுறுத்தல் ஓய்வு ஒழிவின்றி நரகவாசிகளை வாதிக்கும். சற்று சிந்தித்துப் பாருங்கள். மனிதனை அவனது பாவங்களிலிருந்து விடுவிப்பதற்குக் கடவுள் மிகப் பெரும் நிபந்தனைகளை விதிக்கவில்லை . 

அவன் ஏழு மலை, ஏழு கடல் தாண்டிச் செல்ல வேண்டும் என்று அவர் சொல்ல வில்லை. அல்லது இரத்தம் வரும்படி தன்னை அவன் எப்போதும் அடித்துக் காயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடவில்லை. “நீங்கள் போய், உங்கள் குருக்களிடம் உங்களைக் காண்பியுங்கள்" (லூக்.17:14) என்று மட்டும்தான் அவர் கட்டளையிட்டார்.

சபிக்கப்பட்டவன் தன் நித்திய நிர்ப்பாக்கியத்துக்குத் தானே காரணம் என்று நினைப்பான். அவனுடைய பாவங்களை மன்னிக்க அவனுக்கு மிக அருகாமையில் இரக்கத்தோடும் கருணையோடும், தண்டிப்பதற்காக அன்றி, மன்னிப்பதற்காக மட்டுமே பாவசங்கீர்த்தனத் தொட்டியருகில் ஒரு குரு எப்போதுமே காத்துக் கொண்டிருந்தார். அவரோ அவனுடைய பாவங்களில் ஒன்றையும் வெளியே சொல்லாதபடி பாவசங்கீர்த்தனத்தின் உடைபடாத முத்திரையினால் கட்டுண்டிருந்தார். 

அவன் உத்தம மனஸ்தாபம் கூட இன்றி, வெறும் அடிமை மனஸ்தாபத்தோடாவது (உத்தம மனஸ்தாபம் என்பது, நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற முறையில், இவ்வளவு நல்லவரும், நம் முழு அன்பிற்கும் தகுதியானவருமான கடவுளை நம் பாவத்தால் நோகச் செய்தோமே என்ற எண்ணத்தால் நம்மை நிரப்புகிற துக்கமும், பாவத்தின்மீது கொள்ளும் வெறுப்பும் ஆகும். அடிமை மனஸ்தாபம் என்பது, பாவத்தின் காரணமாக கடவுள் நம்மைத் தண்டித்து, நித்திய நரகத்தில் தள்ளுவார் என்ற எண்ணத்தால் நம்மை நிரப்பும் துக்கம் ஆகும். இது ஒரு மகனின் மனஸ்தாபமாக இல்லாமல், ஓர் அடிமையின் மனஸ்தாபமாக இருக்கிறது.) பாவ சங்கீர்த்தனம் செய்ய முன்வந்திருந்தால், அவன்மீது தமது திவ்விய இரத்தத்தைப் பொழிந்து, அவனுடைய ஆன்மாவிலுள்ள சாவான பாவக் கறைகளைக் கழுவிப் போக்க சேசுநாதர் ஏக்கத்தோடு அவனுக்காகக் காத்திருந்தார். 

திருச் சபையும் தனது பிரசங்கங்கள், போதனைகள், புத்தகங்கள், இன்னும் பல வகையான நல்ல ஏவுதல்களைக் கொண்டு மனந்திரும்பும்படி அவனை அழைத்துக்கொண்டேயிருந்தது. ஆனால் அவனோ காரணமேயின்றி அவற்றை ஆண்டவரையும், அவருடைய நல்ல வரப்பிரசாத உதவிகளையும் அலட்சியம் செய்தான். அவனுடைய மரண வேளையிலும் கூட, இதோ அவனுடைய பங்குக் குரு அவனை நெருங்கி, அவன் மனஸ்தாபம் கொள்ளவும், நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவும் தூண்டும்படி எவ்வளவோ முயன்றார். இந்த இறுதி வரப்பிரசாதத்தையும் அவன் மூர்க்கனாய்த் தள்ளி விட்டு, பெரும் பாதகனாய்ப் பாவத்தில் மரித்தான். 

பாவியானவன் இதையெல்லாம் நினைத்துப் புலம்பியழுவான். சர்வேசுரன் இரக்கமாய்க் கொடுத்த வரப்பிரசாதத்துக்கு இணங்கி நடந்திருந்தால் சுலபமாய் இரட்சணியம் அடைந்திருக்கலாம் என்றும் இடைவிடாமல் நினைத்து, சொல்ல முடியாத துயரம் அனுபவிப்பான். "ஐயோ! ஒரேயொரு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்திருந்தால், இந்த நிர்ப்பாக்கிய நரகத்திலிருந்து தப்பித்திருப்பேனே! இப்போது எல்லாம் முடிந்து போயிற்றே!" என்று அங்கலாய்ப்பான். அவனுடைய கண்ணீரால் பலன் எதுவும் இருக்காது.

நித்திய பேரின்பத்தை மிக எளிதாக அடைந்திருக்கக் கூடிய நிலையில், கிட்டத்தட்ட “ஒன்றுமில்லாமையாயிருக்கிற” ஒரு பொருளுக்காக, அல்லது ஒரு இன்பத்திற்காக, நித்தியத்திற்கும் சபிக்கப்படுவதுதான் நரக ஆத்துமங்களின் மிகக் கசப்பான துயரமாக இருக்கிறது என்று அர்ச். தாமஸ் அக்வீனாஸ் கூறுகிறார்.

சவுல் அரசனின் மகன் ஜோனத்தான், தந்தையின் கட்டளையை மீறி, சில துளிகள் தேனைச் சுவைத்ததற்காக மரணத் தீர்வையடைந்தான். அப்போது, தனது பரிதாபத்திற்குரிய நிலையில் அவன், “கொஞ்சம் தேனை எடுத்துச் சுவை பார்த்தேன், இதோ, அதனால் சாகிறேன்'' என்று புலம்பினான் (1 அரசர். 14:43).

'ஒரு சில தேன் துளிகளுக்காக,' அதாவது கடந்து போகிற ஒரு இன்பத்திற்காக, நித்திய சாவுக்குத் தாங்கள் உள்ளானதைக் காணும் போது, நரகத் தீர்ப்படைந்தவர்கள் ஜோனத்தானை விட இன்னும் எவ்வளவோ அதிகமாகப் புலம்பியழுவார்கள்.

அற்பமான ஒரு தின்பண்டத்திற்காகத் தன் தலைச்சன் உரிமையையும், தந்தையின் தலைச்சன் மகனுக்குரிய ஆசீர்வாதங்களையும் இழந்து போனான் ஏசா (ஆதி.25:29-33). 

“அவன் அப்பத்தையும், மேற்படித் தின்பண்டத்தையும் எடுத்து உண்டு குடித்தான். தலைச்சனுக்குரிய உரிமையை விற்று விட்டதை ஒரு பொருட்டாக எண்ணாமல் அப்பால் சென்றான்” என்று ஆதியாகமம் (25:34) கூறுகிறது. 

ஆனால் அதே ஏசா, தன் பரம்பரை உரிமையைப் பெறும் நேரம் வந்தபோது, அதில் பெரும் பகுதி தன் சகோதரனுக்குத் தரப்பட்டு விட்டதையும், தனக்கு மிகச் சிறிய பகுதியே எஞ்சியதையும் கண்டு, 'கோப வெறி கொண்டு அலறினான் (ஆதி.27:34-38). ஆனால் தங்கள் மோட்ச வாரிசுரிமையை ஒரு சாதாரணத் தின்பண்டத்திற்காக, அதாவது அற்ப சந்தோஷங்களுக்காக விற்று விட்டு, நித்திய வாதைகளைத் தாங்கள் சம்பாதித்துக் கொண்டது பற்றி நரக தண்டனை அடைந்தவர்கள் இன்னும் எவ்வளவோ அதிக மாக அலறிப் பதைத்து அழுவார்கள்!

"நீதிமான்கள் தங்களை வருத்தித் துன்பப்படுத்தித் தங்கள் வேலைகளின் பலனை அபகரித்தவர்களுக்கு விரோத மாய் மகா தைரியத்தோடு எழுந்து நிற்பார்கள். அதைப் பாவிகள் கண்டு கலங்கி மிகவும் பயந்து தங்கள் எண்ணத்துக்கு விரோதமாய் அவர்கள் இரட்சிக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்து, மனஸ்தாபப்பட்டு மனநொந்து பெருமூச்சு விட்டு தங்களுக்குள்ளே: ‘இவர்களையல்லோ பல முறை நிந்தித்தோம், சகல நிந்தைக்கும் பாத்திரவான்கள் என்று எண்ணினோம். புத்தியீனரான நாம் அவர்கள் சீவியம் பைத்தியமென்றும், அவர்கள் மரணம் இழிவானதென்றும் நினைத்தோமே. இதோ அவர்கள் சர்வேசுரனுடைய மக்களாகப் பாவிக்கப்பட்டு பரிசுத்தரோடு கூட்டப்பட்டிருக்கிறார்கள். 

நாமல்லோ சத்தியத்தின் மார்க்கத்தை விட்டு அகன்று திரிந்தோம்... அக்கிரமப் பாவ வழியில் நடந்து தவித்தோம்... கர்த்தருடைய வழியையோ நாமறிந்ததில்லை. ஆங்காரத்தினால் நமக்கு வந்த பலனென்ன? ஆஸ்திகளின் மகத்துவத்தால் நமக்கு வந்த லாபமென்ன? சகலமும் நிழலைப் போலவும், ஓட்டமாயோடும் தூதனைப் போலவும், அலைந்தாடும் சமுத்திரத்தைக் கடக்கும் கப்பல் போலவும் கடந்து போயின.....' என்று பாவிகள் நரகத்திலே சொல்லிக் கொள்ளுவார்கள்" (ஞான. 5:1-14).

மன்னிக்கப்படாத ஒவ்வொரு பாவத்தையும், அதற்குரிய நீதியுள்ள தண்டனையையும், தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ளவும், புண்ணியத்தில் நிலைத்திருக்கவும், மோட்சத்தை சம்பாதித்துக் கொள்ளவும் அவர்களுக்கு இருந்த எண்ணற்ற, சாதாரண, அசாதாரண வழிகளையும், திவ்விய கன்னிகையால் தங்களுக்கு வாக்களிக்கப் பட்டவையும், தங்கள் மீது பொழியப்பட்டவையுமான அநேக நன்மைகளைத் தாங்கள் பயன்படுத்தாமல் விட்டு விட்டதையும் நினைவுகூர்வது அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட வாதையாக இருக்கிறது! 

மிக எளிதாக மீட்டு இரட் சிக்கப்பட்டிருக்க தங்களுக்கு வாய்ப்புகள் இருந்திருந்தும், இப்போது இனி மீட்கப்பட முடியாதபடி நித்தியத்திற்கும் தாங்கள் இழக்கப்பட்டு விட்டதை நினைப்பதும், தாங்கள் செய்த, ஆனால் ஒருபோதும் கடைப்பிடிக்காத பல நல்ல பிரதிக்கினைகளை நினைத்துப் பார்ப்பதும் அவர்களுக்கு எப்படிப்பட்ட சித்திரவதையாக இருக்கிறது!

சகோதரரே! உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஒரே ஒரு சாவான பாவம் செய்தவுடனே மரித்து, அநேகர் நரகத்தில் விழுந்திருக்க, ஆண்டவர் உங்களை இந்த நிமிடம் வரை உயிரோடு வைத்திருக்கிறார் என்பதைப் பற்றி அவருக்கு நன்றி செலுத்தியபடி, அவரது குருவிடம் உங்கள் பாவங் களை அறிக்கையிட்டு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அசட்டைத்தனத்தால் கடவுளின் இரக்கத்தையும் நேசத்தையும் ஏளனம் செய்யாதபடி எச்சரிக்கையாயிருங்கள். இன்றே மனந்திரும்புங்கள். ஏனெனில் நாளை என்பது ஒருவேளை உங்களுக்கு இல்லாமலே போய்விடலாம்.

"(நரகமானது) நித்திய காலத்துக்கும் எவ்வளவோ பயங்கரமும், அவலட்சணமும், கலக்கமும், அலங்கோலையும் நிறைந்துள்ள இடம்" (யோபு. 10:22).


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...